அழகியும் நானும் (2002-2022) -தங்கர் பச்சான்

1 week ago
56

1986ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. என்னை உறங்கவிடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தார்கள்.

சண்முகமும் தனலட்சுமியும் என்னைச் செய்தது போலவே அழகியைக் கண்டவர் களையும் உறங்கவிடாமல் செய்தார்கள். ஒவ்வொருவரும் தனது தனலட்சுமியைத் தேடி அலைந்தது போல காலம் பிரித்து வைத்து சேர்ந்து வாழக் கிடைக்காமல் போன தங்களின் சண்முகத்தையும் தேடினார்கள். இன்னும்கூட தேடிக்கொண்டிருக்கிறார் கள். அதனால்தான் வெளியாகி, இருபது ஆண்டுகள் கடந்தும் ‘அழகி’ இன்றும் உயிர்ப் புடன் வாழ்கிறாள்.

ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க முனைந்ததற்காக நானும் நண்பரும் தயாரிப் பாளருமான உதயகுமார் அவர்களும் விவரிக்கமுடியாத மனவேதனைகளை சந்தித் தோம். நான் கடந்துவந்த வழிகளையும் அவமானங்களையும் மறக்க நினைத்தாலும் இயலவில்லை. திரைப்பட வணிகர்கள் இப்படத்தைப் புறக்கணித்து ஒதுக்கியதுபோல் மக்களும் செய்திருந்தால் நான் காணாமலேயே போயிருப்பேன். ஒவ்வொரு கால கட்டத்திலும் எத்தனையோ படங்கள் வெற்றிகளைக் குவிக்கின்றன. அவைகளெல் லாம் வணிக வெற்றியாகி மறக்கப்படுகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலங்கள் கடந்து மக்களின் மனங்களில் நிறைந்து என்றென்றும் வாழ்கின்றன.

என்னை சோர்ந்து விழாமல் தாங்கிப் பிடித்து வெற்றிப் படமாக்கி எந்நாளும் நினை வில் வாழும் படைப்பாக மாற்றியவர்கள் மக்கள் மட்டுமே. இம்மண்ணிலிருந்து இம்மொழியிலிருந்து இம்மக்களிடமிருந்துதான் ‘அழகி’ உருவானாள். இம்மூன்றி லிருந்தும்தான் நானும் உருவானேன்.

‘அழகி’யைப் பாராட்டுபவர்கள் இம்மண்ணைப் பாராட்டுங்கள்! இம்மொழியைப் பாராட்டுங்கள்! இம்மக்களைப் பாராட்டுங்கள். இம்மூன்றிலிருந்தும் எப்பொழுது ஒருவன் விலகிச் செல்கிறானோ அதன்பின் அவனிடமிருந்து பிறக்கும் அத்தனையும் உயிரற்ற படைப்புகளாகவே இருக்கும்.

முற்றிலும் வணிகமயமாகிப்போன பெருமுதலாளித்துவ வலைக்குள் சிக்கிக் கொண்டு என் மண்ணோடும் மொழியோடும் மக்களோடும் கிடந்து உயிர்ப்புள்ள படைப்புகளைத் தருவதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வெறும் வணிக வெற்றியை மட்டுமே குறிவைத்து ஓடிக்கொண்டிருக்கும் இத்திரையுலகத்தில் என்னைப் போன்ற சிலர் அவர்களுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பாமல் பயணிக்கின்றோம்.

‘அழகி’யின் வெற்றி என் படைப்பாற்றலுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. மக்களின் சுவையறியும் நுட்பத்திற்குக் கிடைத்த வெற்றி. என்னைப் பாராட்டு மழையில் மகிழ்வித்து வரும் முகமறிந்த, முகமறியா உள்ளங்களுக்கு எந்நாளும் நன்றி நவில கடமைப்பட்டுள்ளேன். தங்கள் அனைவரின் விருப்பத்திற்கேற்ப ஒரு தரமான சிறந்த படைப்புடன் சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். வெற்றி பெறும் எனும் உறுதியான நம்பிக்கையுடன்!

அன்போடு

தங்கர் பச்சான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31