அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் : நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம்

 அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் : நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம்

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வ தற்கு தேசிய அளவில் நீட் தேர்வு  நடத்தப்படுகிறது.

மத்திய அரசு நீட் தேர்வுக்கான திருத்த சட்டம் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவற்றின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன் நிறுத்தி உள்ளது.

தேசிய அளவில் நீட் தேர்வு  நடத்தப்படுவதால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கிராமப்புற விளிம்புநிலை மாணவர்கள் தேசிய அளவிலான தேர்வுகளை சந்திக்கும் கல்வித் திறனைப் பெறமுடியாத நிலையில் இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே மருத்துவ சேர்க்கைகளில் மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இந்த நோக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய முதல்- அமைச்ச ராக இருந்த கருணாநிதி நுழைவுத் தேர்வுகளை அகற்றி தமிழக மாணவர்களுக்காக தனிச் சட்டம் கொண்டுவந்தார். அந்தச் சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கப்படுவது உறுதியானது. ஆனால் நீட் தேர்வு அமலான பிறகு அது பறிபோய்விட்டது.

தமிழக மாணவர்களின் எதிர்காலம் வீணாவதால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தத் தீர்மானம் இதுவரை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் படாமலேயே இருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரைச் சந்தித்து இது தொடர்பாக பேசினார். அதன் பிறகும் கவர்னர் அந்தச் சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதன்பிறகு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் சந்தித்து நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மனு கொடுக்க அனுமதி கேட்டனர். ஆனால் தமிழக எம்.பி.க்களை அமித்ஷா சந்திக்க மறுத்துவிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத் தியது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதுபற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் தொடரும். அதைத் தொடர்ந்து முன் எடுத்து செல்வோம்” என்று அறிவித்தார்.

மேலும் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் ஒருமித்த நிலைப் பாட்டை இயற்றுவதற்கு  அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்கு மாறு நேற்று முறைப்படி கடிதங்கள் அனுப்பப்பட்டன. 13 கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு அனுப்பப்பட்டது.

இன்று 8-ந்தேதி  நடந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க உரையாற்றினார்.

“தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் பிரதமரை 17.6.2021 அன்று நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தான் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை 13.9.2021 அன்று நம் சட்டமன்றத்தில் ஒருமன தாக நிறைவேற்றினோம். அப்படி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருக்கிறார். ஒரு சட்டமன்றம் தனக்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும் போது ஆளுநர் மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம்.

ஆகவே நான் நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பவில்லை. மாநில உரிமையும் சட்டமன்றத்தின் சட்ட இயற்றும் அதிகார மும் கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலை உருவான தால்தான் அவசரமாக அவசியத் துடன் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.

இன்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் ஒரு வரைவு தீர்மானத்தை உங்களிடம் எடுத்துரைப்பார். நம் அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பாற்றிட வேண் டும் என்பதுதான். ஆகவே இந்த வரைவு தீர்மானத்தின் மீது தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தமிழக கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இன்று காலை 10.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற 13 கட்சிப் பிரதிநிதிகள் விவரம் வருமாறு:-

1. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி (தி.மு.க.)

2. விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.)

3. செல்வபெருந்தகை (காங்கிரஸ்)

4. சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்)

5. ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)

6. ஜி.கே.மணி (பாட்டாளி மக்கள் கட்சி)

7. வானதி சீனிவாசன் (பா.ஜனதா)

8. பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்)

9. ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)

10. வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)

11. சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.)

12. தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு)

13. நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு).

கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்தன. அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் 13 கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்தன. பா.ஜக. மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. கூட்டத்தில் அடுத்தக்கட்டமாக நீட் தேர்வை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இதற்காக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கத் திட்டமிட் டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.