தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 9 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத்  தொட்டுவிடத் தொடரும் | 9 | தனுஜா ஜெயராமன்

ஹோட்டல் மூன்லைட் இன்டர்நேஷ்னல் என்ற பித்தளை போர்ட் பளபளக்கும் கேட்டில் நுழைந்து காரை பார்க் செய்தான்.

அம்ரிதா வந்திருப்பாளா? சதிகாரி நிச்சயம் வந்திருப்பாள். இதே வேலையாக அலைபவள் தானே…என நினைத்தபடி உள்ளே நுழைந்தான்.

ரிஸப்ஷனில் …சோபாவில் அமர்ந்து கண்களால் துழாவினான்… அவளை காணவில்லை…

காத்திருந்தான்… ஒரு மணிநேரம் கடந்தும் அவள் வராதது எரிச்சலாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் நெருப்பு மேல் நிற்பது போல் இருந்தது… கிளம்ப யத்தனித்தவன் சோபாவிலிருந்து எழ… கண்ணாடி டோரை திறந்து கொண்டு அவள் உள்ளே வருவது தெரிந்தது.. கூடவே அவளது கையை பிடித்தபடி அந்த சிறுவன்…

பகீரென்றது.… இவள் ஏன் குழந்தையை இங்கே அழைத்து வருகிறாள்… ஏதோ தவறாக தோன்ற… கவலையுடன் சோபாவில் சரிந்தான்.

என்ன ஒரு மணிநேரமா காத்திருக்க போல என்றாள் அலட்சியத்துடன்..

காத்திருப்பது இவளுக்கு தெரிந்திருக்கிறது … இருந்தாலும் வேண்டுமென்றே தான் செய்கிறாள்.. இவளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்… இவளுக்கு மற்றவர்கள் உணர்வுகளுடன் விளையாடுவது புதிதா என்ன… என்று தோன்றியது..

எதுவும் பேசாமல் எழுந்து வா…ரெஸ்டாரண்ட்டுக்கு போகலாம்… என்றான் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு… அங்கே ஓரமாக மற்றவர் பார்வையில் படாத மாதிரியான டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்தான்.

அம்ரிதா.… எதிரில் அமர்ந்து கொண்டு குறும்புடன் அவனையே பார்த்து கொணடிருந்தாள். பக்கத்தில் அந்த சிறுவன் உட்கார்ந்திருந்தான். அவனும் முகேஷேயே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

அம்ரிதாவின் அதீத மேக்கப்பும் அவளது தந்திர பார்வையும் என்னவோ போலிருந்தது.

அவளது ஊடுருவும் பார்வையை தவிர்த்து ..சொல்லு… என்றான் கோபமாக.

நீ தான் சொல்லணும்.… நீ தானே என்னை வரச்சொன்ன…

விளையாடாத அம்ரிதா…

என்னது நான் விளையாடுறேனா? அட இதுவும் நல்லாயிருக்கே என்றாள் திமிராக..

எதுக்கு என்னை ஃபாலோ பண்ற..போன் பண்ணி டார்ச்சர் பண்ற…உனக்கு என்ன வேணும்…

நீ தான்…

டாமிட்..… மறுபடியும் விளையாடாத ..

நீ விளையாடின விளையாட்டு தான் பக்கத்துல உட்கார்ந்திருக்கே… என கபகபவென சிரித்தாள்.

அதிர்ந்தவனாக யாராவது பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கர்சீப்பால் முகத்தை ஒற்றி எடுத்தான்… கோபத்துடன் உளறாத…என்றான் கடுமையாக

என்னது நான் உளர்றேனா…

வெலவெலத்து போய் அமர்ந்திருந்தான்.

இல்லைன்னு உன்னால உறுதியா சொல்லமுடியுமா?

சற்று நேரம் வாயடைத்து போனான்.

தைரியத்தை வரவழைத்து கொண்டு, இப்ப உனக்கு என்ன வேணும்?

அப்படி வா வழிக்கு… இப்ப எனக்கும் என் குழந்தைக்கும் ஆதரவுக்கு யாருமில்லை. நீ தான் எனக்கு உதவணும்…

நோ…என்னால எதுவும் செய்ய முடியாது…எனக்கு குடும்பம் இருக்கு…

முடியாதா…அப்படியெல்லாம் நீ சொல்லமுடியாது முகேஷ்…என்கிட்ட ஆதாரமிருக்கு…உன்னை முச்சந்தியில இழுக்க என்னால முடியும்…

பொறுமையாக… அம்ரிதா உனக்கு இப்ப என்ன வேணும்…

நான் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும். ஐந்து லட்சம் வேணும் அவசரமா…

ஓ மைகாட்.… அவ்ளோ பணம் என்கிட்ட கிடையாது…

உன் ஜாதகமே என் கைல சும்மா கதை விடாத… உன் வருமானம் எவ்வளவு சொத்து எவ்வளவு தேறும்னு எனக்கு தெரியும்….

ராட்சசி… எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறாள். இவளை ஜாக்கிரதையாக தான் கையாள வேண்டும் என்று மனது எச்சரிக்கை செய்தது.

ஒரு ஐம்பதாயிரம் தரேன்… என்கிட்ட இப்ப இவ்வளவு தான் இருக்கு. மீதியை ஏற்பாடு பண்ண டைம் வேணும் என்றான் விரக்தியுடன்…

சரி… இப்ப இதை குடு…மீதியை சீக்கிரம் கொடுத்துடணும்.. சரியா… என்றாள் கராறாக

பணம் என்ன எப்பவும் கையிலா வைச்சிட்டிருப்பேன். அகவுண்ட் நம்பர் அனுப்பு… நாளைக்கு அனுப்பி விடுறேன்…

நம்பலாமா…

ஆனா மொத்த காசை கொடுத்தபிறகு நீ திரும்பவும் என் பக்கம் தலைவைச்சி படுக்கக்கூடாது..

ம்… என்று …ஒரு மாதிரியாக சிரித்தாள்.

நான் தனியா தான் இருக்கேன்.. நீ எப்ப வேணாலும் என வீட்டுக்கு வரலாம் போகலாம்… என் அட்ரஸையும் உனக்கு அனுப்பறேன்… என மெசேஜை அவன் மொபைலுக்கு தட்டி விட்டாள்.

ச்சீ.… என்றான் வெறுப்புடன்

ரொம்ப தான் பிகு பண்றே… என அவன் கன்னத்தை செல்லமாக தட்டினாள். முகேஷிற்கு அறுவருப்பாக இருந்தது. அசூயையுடன் நகர்ந்து கொண்டான்.

சரி… நான் கிளம்புறேன்… அப்பாவுக்கு டாட்டா சொல்லுடா கண்ணா, என கொஞ்சினாள் குழந்தையை…

அதுவும் டாட்டா காட்டிவிட்டு சென்றது.

அம்ரிதாவும் அந்த சிறுவனும் கண்ணில் மறையும் வரை பார்த்தவன் அப்படியே சிலையாக அமர்ந்தான்..

ஓ மை காட்.. .இதற்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறதா? அது .அது.… ஒரு வேளை என் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் முகேஷின் மனதை துளைத்தது. ச்சே ச்சே இருக்காது… இவள் ஏதோ நாடகமாடுகிறாள் என மனதை சமாதானம் செய்து கொண்டான்.

இவள் எதற்கும் துணிந்தவள். .. இவள் வலையிலிருந்து எப்படி மீள்வது. இந்த சிக்கலை யாருக்கும் வலிக்காமல் அவிழ்ப்பது எப்படி என்பதை யோசிக்க ஆரம்பித்தான்.

சுதாவை நினைத்தால் பயமாக இருந்தது. அவளுக்கு தெரிந்தால் என்ன நினைப்பாள். அதை எப்படி எடுத்து கொள்வாள். தாங்குவாளே… என்ற கவலையில் மனது தவித்தது.

ஆனால் இந்த முடிச்சை அவிழ்த்தே தீரவேண்டும். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆகவேண்டும். என்ன செய்யலாம் என குழம்பியது.

ஹரிஷ் ….ஆம்.. ஹரிஷ் தான் சரியான சாய்ஸ்..அவன் தான் தனக்கு இதில் உதவ முடியும். இருவரையும் அறிந்தவன் அவன் தான். நம்பிக்கையானவன்..இந்த சிக்கலை விடுவிக்க அவனால் ஏதாவது உதவமுடியும் என தீர்மானித்தவனாக எழுந்தான்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்தவன்.. மொபைலை எடுத்து ஹரீஷிற்கு கால் செய்தான்.

சொல்லுடா… என்றான்

எங்க இருக்குற டா?

வேற எங்க….கழுத கெட்டா குட்டி சுவரு…ஆபிஸ்ல தாண்டா….

நா…நா….உங்கிட்ட கொஞ்சம் பேசணும்டா…

என்னடா எனிதிங் அர்ஜண்ட்…

அவசரம் ஒண்ணுமில்லைடா சாயங்காலம் பீச்சுக்கு வந்திடறீயா?

கண்டிப்பாக வரேன்டா.… என்னடா விஷயம் லைட்டா சொல்லேண்டா.… தலையை வெடிக்குது..

சாயங்காலம் பீச்சுல பார்ப்போம்டா… அப்ப விரிவா பேசிக்கலாம்… வந்திடுடா…என பதட்டத்துடன் போனை வைததான்…

ஹரிஷிடம் பேசியது மனசுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. மனபாரம் சற்று குறைந்தது போல இருந்தது.. ஆனாலும் ஆபிஸ் போக மனமில்லாமல் நேராக வீட்டிற்கு காரை ஓட்டினான்..

என்னடா இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட… என அதிசயமாக பார்த்த அப்பாவை ..தலையை வலிக்குதுப்பா… என சொல்லிவிட்டு பெட்ரூமில் நுழைந்தான்.

பெட்ரூமில் குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த சுதா.… என்னங்க சீக்கிரம் வந்துட்டீங்க..உடம்பு ஏதாவது சரியில்லையா? என நெற்றியை தொட்டவளை நேரடியாக பார்க்காமல்…ஒரு காபி குடேன்… என அவளை அனுப்பிவிட்டு கலங்கிய கண்களை துடைத்து கொண்டான்..

அப்பா என தாவிய மகளை கொஞ்சி விளையாடியதும் மனது லேசாகியது..

ஏங்க… சாயங்காலம் அகத்தீஸ்வரர் கோவில் போகலாமா? ப்ரதோஷம்ங்க… என்றாள் சுதா காபியை நீட்டியவாறு…

போலாம் சுதா… ஆனா சீக்கிரம் போய்ட்டு வந்துடலாம்.. ஏழு மணிக்கு ஹரிஷை பாக்குறேன்னு சொல்லியிருக்கேன்…

சரிங்க… என பத்து நிமிடத்தில் ரெடியாகி வந்தாள் சுதா..

சுதா கோவிலில் குழந்தையுடன் வலம் வர, அந்த ஈஸ்வரனை மனமுருக வேண்டிக் கொண்டவன், என்னை என் குடும்பத்தை இந்த ப்ரச்சனையிலிருந்து நீ தான் காப்பாத்தணும் ஈஸ்வரா… என ப்ரார்த்தித்தான். அருகிலேயே கோவில் மணியோசை கேட்க மனது சற்று அமைதியாகி பாரம் குறைந்தது போல உணர்ந்தவன்… மனதில் ஒரு திட்டம் தீட்டினான்.

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published.