பயணங்கள் தொடர்வதில்லை | 9 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 9 | சாய்ரேணு

9. தாள்-பென்சில்

லையலையாய் அதிர்ச்சி தாக்க, அருகிலிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தார்கள் தர்மாவும் தர்ஷினியும்.

“அந்த… ட்ராக்கில் கிடக்கறதாச் சொன்னது… சுப்பாமணியா?” விழிகள் விரியக் கேட்டாள் தர்ஷினி.

“சு… சுப்பாமணி… எப்படி? நீங்க… உங்களுக்கு…” என்று தடுமாறினான் தர்மா.

தன்யா “ஆப்வியஸ்” என்றாள் சோர்வான குரலில். “நாம நினைச்சது தப்பு. அவங்களை வந்து அழைச்சுப் போனது உண்மையான ரயில்வே அதிகாரி தான்” என்றாள்.

“ஹௌ கான் இட் பீ..? ஓங்கோல் ஸ்டேஷன்ல யாருக்குமே ஒரு அதிகாரி வந்ததோ, இவங்களை… ஓ..!” என்று புரிந்துகொண்டவனாக நிறுத்தினான் தர்மா.

தர்ஷினி மெதுவாகத் தன் கைப்பையிலிருந்து ஆன்ட்ராய்ட் டேப்லட்டையும் ஸ்டைலஸையும் எடுத்துக் குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தாள்.

“யெஸ். அவர் நெல்லூர் ஸ்டேஷனிலிருந்து வந்த ஆஃபீஸர்” என்றாள் ஸ்ரீஜா. அவள் உதடு மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. “ப்ளீஸ், தன்யா…” என்று இழுத்தாள்.

“ஓ, ஷ்யூர். நீங்க டீ சாப்பிடுங்க. நான் இவங்களுக்கு எக்ஸ்ப்ளெயின் பண்றேன்.” என்று தண்மையாகச் சொன்னாள் தன்யா.

ஸ்ரீஜா தன் கேபினுக்குச் சென்று படுத்தால் போதும் என்று எண்ணியிருப்பாள் போலும். அவள் முகம் லேசாகச் சுருங்கியது. தன்யாவை முறைத்துப் பார்த்தாள்.

தன்யா பார்வைகளுக்கெல்லாம் அயர்பவள் அல்லவே..! அதே அமைதியுடன் ஸ்ரீஜாவை ஏறிட்டாள்.

ஸ்ரீஜா தோல்வியுற்றவளாக தான் அமர்ந்திருந்த சோபா போன்ற நாற்காலியிலேயே கால்களை மடக்கிக் கொண்டாள். எதிரே இத்தனை நேரம் அலட்சியப்படுத்தியிருந்த டீக்கோப்பையை எடுத்துக் கொண்டாள்.

டேப்லட்டிலிருந்த தன் குறிப்புகளைப் பார்த்தவாறே “தன்யா! நெல்லூரிலிருந்து கொஞ்சம் லேட் ஆனாலும் இரண்டு இருபத்திரெண்டுக்குக் கிளம்பிட்டோம். அங்கிருந்தே மழை ஸ்டார்ட் ஆகிடுச்சு. சுப்பாமணி கதவுக்கருகில் நின்னுட்டிருந்தவர் வழுக்கி விழுந்திருக்கணும்னு நினைக்கறேன். இரண்டரை மணியிலிருந்து ட்ராக் செக் பண்ற ஆர்டர் கொடுத்திருக்காங்கன்னு வெச்சுப்போம். அதெப்படி சுப்பாமணியை அதுக்குள்ள கண்டுபிடிச்சாங்க, ஐ மீன், அது சுப்பாமணிதான்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க? எப்படி ஸ்ரீஜாவைக் கரெக்டா கூட்டிப் போனாங்க? டைம் எலிமெண்ட் புரியலியே?” என்று கேட்டாள் தர்ஷினி.

“நம்ம ட்ரெயின் கிளம்பின பின்னாடிதான் ட்ராக் செக்கிங் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கு, கரெக்ட். ஆனா நெல்லூர்ல ஒரு விஷயம் நடந்தது. அதாவது சுப்பாமணி ஸ்டேஷன்ல இறங்கி ஸ்டேஷன் மாஸ்டர்கிட்டயும் கார்ட்கிட்டயும் கொஞ்ச நேரம் பேசிட்டிருந்திருக்கார். தன்னைப் பற்றி, தான் செய்யற வேலைகளைப் பற்றி, கம்பெனியில் தன்னுடைய பொசிஷனைப் பற்றி யாரைப் பார்த்தாலும் பேசறது அவரோட வழக்கம் போலிருக்கு…”

“மூணரை வாக்கில் நெல்லூர்-ஓங்கோல் வழியில் ட்ராக்கில் ஒரு பாடி கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதில் அடையாளம் கண்டுபிடிக்கற மாதிரி எதுவுமே இல்லை. சாதாரண பேண்ட்-சட்டை, காலி பாக்கெட்கள். ஆனா உயிர்போய் வெகுநேரமாகலை. உடல் உடனே நெல்லூர் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே ஸ்டேஷன் மாஸ்டர் உடனே அது சுப்பாமணின்னு அடையாளம் கண்டு, அவர் ஸ்பெஷல் கோச்சில் வந்தவர்ன்னும் ரீகால் பண்ணியிருக்கார். அப்போ பார்த்து அவருக்கு இன்ஃபர்மேஷன் வந்திருக்கு, ட்ரெயின் ஓங்கோலுக்குக் கொஞ்சம் தூரத்தில் ஸ்டாப் ஆகிட்டதா. இது போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, ஸ்பெஷல் கோச்சிலிருந்து யாராவது ஒருவரை அடையாளம் காட்ட உடனே கூட்டிவரச் சொல்லியிருக்காங்க. உடனே ட்ராக்கிங் ஆஃபீஸர் நேரா ட்ரெயினுக்கு வந்து ஸ்ரீஜா கிட்ட விஷயத்தைச் சொல்லிக் கூட்டிப் போயிருக்காங்க.”

கவனமாகக் கேட்டுக் குறிப்புகள் எடுத்துக் கொண்ட தர்ஷினி “இந்த விஷயம் ஏன் ஓங்கோல் ஸ்டேஷனுக்குத் தெரிவிக்கப்படலை..?” என்று கேட்டாள்.

தன்யா இதற்குப் பதிலளிக்காமல் ஸ்ரீஜாவைப் பார்த்தாள். ஸ்ரீஜா அவர்கள் பக்கமே திரும்பாது தலைகுனிந்து டீயைக் குடித்துக் கொண்டிருந்தாள்.

இத்தனை நேரம் நின்றுகொண்டிருந்த தர்மா அருகிலிருந்த ஒரு மேஜைக்கெதிரில் அமர்ந்தான். ப்ரிஜேஷையும் அருகில் அமர்த்திக் கொண்டான். சற்றுத் தொலைவில் சந்திரசேகரும் தேவசேனாபதியும் அமர்ந்திருந்தார்கள். டைனிங் காரின் வாயிலில் கேடரிங் குழுவின் தலைவர் நின்றுகொண்டிருந்தார்.

யாரும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

ஒரு கனத்த மௌனத்திற்குப் பிறகு, ஸ்ரீஜா தலையை நிமிர்த்தினாள். “நான் என்ன சொல்லணும்னு நீங்க எல்லோரும் எதிர்பார்க்கறீங்க? எனக்குத் தெரிஞ்சது எல்லாத்தையும்தான் தன்யா சொல்லிட்டாங்களே!” என்றாள்.

“ப்ளீஸ் டோண்ட் இன்ஸல்ட் அவர் இண்டலிஜென்ஸ்” என்றாள் தர்ஷினி கடுமையாக. “நீங்க சொன்னதை வெச்சுப் பார்த்தா நெல்லூர் ஸ்டேஷனுக்கு ஆறு, ஆறரை வாக்கில் போய்ச் சேர்ந்திருக்கீங்கன்னு வெச்சுக்கலாம். அங்கே நீங்க சுப்பாமணி உடலை அடையாளம் காட்டியிருக்கீங்க. அப்புறம் இப்போ மணி ஒன்பதைத் தாண்டியாச்சு. இன்னும் போலீஸ் இங்கே வரலை. இந்தக் கோச்சில் இருக்கறவங்க யாரையும் விசாரிக்கலை. ஏன், ஓங்கோல் ஸ்டேஷனில்கூட நெல்லூருக்கு அருகில் ஒரு உடல் கிடைச்சிருக்கு என்றவரை தகவல் கிடைச்சிருக்கே தவிர, அவர் ஹௌரா மெயிலில் வந்த ஒரு பிரயாணி என்ற விஷயம்கூடத் தெரியலை. இதுக்குப் பின்னாடி நீங்க இருக்கீங்க என்பதுகூட எங்களுக்குப் புரியாதா..?”

முதலில் சற்றுத் திமிராக அவளை நோக்கிய ஸ்ரீஜா போகப் போகத் தளர்ந்து, கடைசியில் தலைகுனிந்தாள். தர்ஷினி பேசி முடித்ததும் ஒரு பெருமூச்சு விட்டாள்.

“ஓகே. ஐ வில் டாக். உங்ககிட்ட இதையெல்லாம் நான் பேசணும்னு நான் ஏற்கெனவே நினைச்சதுதான். ஏற்கெனவே பட்ட அதிர்ச்சிகளிலிருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டுப் பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே க்ரௌட் பண்ணிட்டீங்க” என்றாள் தற்காப்பாக. பிறகு சுற்றிலும் பார்த்தாள். சந்திரசேகரும் தேவசேனாபதியும் புரிந்துகொண்டு வெளியேறினார்கள். கேடரிங் குழுத்தலைவர் கிச்சனுக்கு நகர்ந்தார்.

ப்ரிஜேஷ் இன்னும் பாதி மயக்க நிலையிலேயே இருந்தான். “லீவ் ஹிம்” என்றாள் ஸ்ரீஜா, அவனை நெருங்கப் போன தர்மாவிடம். அவளுக்குப் பொருத்தமேயில்லாத மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

“திடீர்னு ஒரு ஆஃபீஸர் வந்து, என்னைக் கூப்பிட்டபோது, கொஞ்சம் பயத்தோடுதான் அவரோடு போனேன். ஆனால் அவர் ஐடி காட்டினார். என் பிரதருக்கு ஃபோன் பண்ணிட்டுத்தான் அவரோடு போனேன். கீழே இறங்கியதும், எதிர்த்த ட்ராக்கில் ஒரு யூடிலிட்டி வெஹிக்கில் இருந்தது. அதில் இன்னும் இரண்டு ஆஃபீஸர்ஸ் இருந்தாங்க. ட்ராக்கில் கொஞ்சதூரம் போனதும், பக்கத்தில் ரோடு பிரிகிற இடம் வந்தது. அங்கே டிபார்ட்மெண்ட் ஜீப் நின்னுட்டிருந்தது. அதில் ஏறி வேகவேகமா நெல்லூர் ஸ்டேஷன் போனோம். அங்கே எனக்குச் சுப்பாமணியை… அவர் பாடியை… காட்டினாங்க…” ஸ்ரீஜாவின் உடல் சிலிர்த்தது.

“அது சுப்பாமணிதான்னு தெரிஞ்சதும், என் ப்ரதருக்கும், சங்கர் சாருக்கும் கால் பண்ணி, விஷயத்தைக் கன்வே பண்ணினேன். இந்த விஷயத்தை முடிஞ்சவரை யாருக்கும் தெரியாம மறைச்சுடறதுன்னு நாங்க முடிவு பண்ணினோம்…”

“ஏன்?” என்றான் தர்மா.

“கான் யூ ஆஸ்க்? இது கல்யாண விஷயம் மிஸ்டர் தர்மா. வருகிற வழியில் ஒரு மரணம் நிகழ்ந்தது என்பதைப் பிள்ளை வீட்டுக்காரங்க தெரிஞ்சுக்கிட்டாங்கன்னா அபசகுனமா நினைக்க மாட்டாங்களா?”

“அதுக்காக? உங்களுடைய… ஐ மீன்… உங்க சேர்மன்னுடைய ரிலேட்டிவ் இறந்திருக்கிறார். பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட மறைக்கறது சரி, அடுத்த ஸ்டேஷன்லேர்ந்துகூட மறைச்சு, ஐ திங்க் கேஸையே ஸ்குவாஷ் பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கறேன்…”

“ப்ளீஸ்! நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோங்க. இதில் வேறு சில காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு. சுப்பாமணியோட மரணம்… அது ஆக்ஸிடெண்ட் இல்லை!”

“நினைச்சேன், அவர்மீது எந்த அடையாளங்களும் இல்லைன்னு சொன்னபோதே” என்றாள் தன்யா.

அவர்கள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை என்பது ஸ்ரீஜாவுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது போலும். சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். “யெஸ், ஹி வாஸ் ஷாட். அதற்குப் பிறகு ட்ரெயின்லேர்ந்து தள்ளிவிடப் பட்டிருக்கார். இதுக்கு என்ன அர்த்தம்னு நான் சொல்ல வேண்டியதில்லை…” ஸ்ரீஜாவின் குரலில் பழைய கேலி தெரிய ஆரம்பித்தது.

தன்யாவின் முகத்தில் பழைய புன்சிரிப்புப் படர்ந்தது. “நம்ம ட்ரெயினில் உள்ள யாரோதான் கொலையாளி.”

*

“இப்போ புரியுதா, நாங்க ஏன் இந்த விஷயத்தை – தற்காலிகமா – மறைக்க முயன்றோம்னு? கல்யாணப் பெண்ணுடைய சொந்தக்காரங்கள்ள ஒருத்தர் ஒரு கொலையைப் பண்ண்ணியிருக்கார்… அதுவும் கல்யாணத்துக்கு வருகிற வழியில்… அதுக்காகப் பிரயாணம் எங்கேயோ ஓங்கோலில் நிறுத்தப்பட்டு எல்லோரும் போலீஸால் விசாரிக்கப்பட்டு, சந்தோஷமா இந்தப் பிரயாணத்தில் ஈடுபட்ட எல்லார்மேலும் சந்தேகம் விழுந்து…

“அதுக்குப் பதிலா நான் சஜஸ்ட் பண்றது – போலீஸ் இது ஒரு ஆக்ஸிடெண்ட்னு மெயிண்டெயின் பண்ணிக்கட்டும். ஹௌரா மெயிலோடு இந்தச் சம்பவம் சம்பந்தப்படுத்தப்படாது. சுப்பாமணி ஸ்டேஷன் மாஸ்டரால் அடையாளம் காட்டப்பட்டது ரெகார்ட்ஸில் வராது…”

இந்த இடத்தில் தன்யா ஏதோ சொல்ல ஆரம்பித்தவள், “ப்ளீஸ்!” என்று ஸ்ரீஜாவால் நிறுத்தப்பட்டாள். “இது எல்லாமே தற்காலிகமாத்தான். அதாவது நாம கொல்கத்தா போய்ச் சேருகிறவரை. அகெய்ன், நீங்க ஒத்துழைச்சா…”

“இதில் நாங்க ஒத்துழைக்கறது என்ன இருக்கு? லிஸன், ஸ்ரீஜா. சட்டவிரோதமான, தப்பான ஒரு செயலுக்கு நாங்க துணை போவோம்னு எதிர்பார்க்காதீங்க” என்றான் தர்மா காட்டமாக.

“ப்ளீஸ்!” என்றாள் ஸ்ரீஜா மறுபடியும். “நமக்கு நாற்பத்தியெட்டு மணி நேரம் போலீஸால் தரப்பட்டிருக்கு. இங்கே மழை காரணமா ட்ரெயின் பனிரெண்டு மணிநேரம் வரை நிற்க வாய்ப்பிருக்கு. இவ்வளவு மழையில் நாம ஊருக்குள் போய்த் தங்கறதைவிட, இங்கேயே வசதியாய்த் தங்கிக்கலாம். ப்ளஸ் கொல்கத்தா போய்ச் சேருகிற பயண நேரமும் இருக்கு. அதற்குள்ளே…” ஸ்ரீஜா சற்று நிறுத்தினாள்.

தர்மா, தன்யா, தர்ஷினி அவளையே பார்த்தார்கள்.

“…நீங்க மர்டரரைக் கண்டுபிடிச்சுட முடியுமா?” என்று முடித்தாள் ஸ்ரீஜா.

மௌனம்.

“உங்களுக்கு போலீஸோட ஹெல்ப் கிடைக்காது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், ஃபாரன்ஸிக்… இன்னும் அவங்க சேகரிக்கற எந்த க்ளூவும் உங்க கைக்கு வராது. இந்த மழையில் மொபைல் சிக்னல் போயிடுச்சு – நோ கால்ஸ், நோ இண்டர்நெட். விசாரணை மட்டும்தான் உங்களுக்குக் கிடைச்சிருக்கும் ஒரே டூல். உங்களால் முடியுமா? நாம கொல்கத்தா ரீச் ஆகும்போது மர்டரரைப் போலீஸில் ஹாண்ட்-ஓவர் பண்ண முடியுமா? அப்போ மற்ற எல்லோரும் இந்த… சம்பவத்தை… மறந்துடலாம். சந்தோஷமா கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணலாம்.”

ஸ்ரீஜா அவர்கள் மூவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

தன்யா எழுந்தாள். “வாட் ஆர் வீ வெயிட்டிங் ஃபார்?” என்றாள்.

*

சுப்பாமணி பயணம் செய்த கூப்பே.

இரண்டு பர்த்கள். கீழ்ப் பர்த்தில் ஒரு தலையணை மட்டும். போர்வைகூட மேலிருந்து எடுக்கப்படவில்லை.

மேல் பர்த்தில் இரண்டே லக்கேஜ்.

சுப்பாமணியையே உள்ளே அடக்கலாம் போன்று மிகப் பெரிய பெட்டி. சுப்பாமணியின் அவசரத் தேவைகள் அடைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராலர் பை.

உள்கதவின் கைப்பிடி, பர்த், ஜன்னலோர மேஜை, பெட்டி, பை என்று பல இடங்களில் ஏதோ பொடியைத் தூவிப் பிரஷ்ஷால் உதிர்த்துக் கொண்டிருந்த தர்ஷினி நிமிர்ந்தாள். “ப்ளாங்க்” என்றாள் ஒற்றைச் சொல்லாக.

இதுவரை வெளியே நின்றுகொண்டிருந்த தன்யாவும் தர்மாவும் உள்ளே நுழைந்தார்கள். தன்யா கீழ் பர்த்தில் பெட்டியை வைத்துத் திறக்க, தர்மா ஸ்ட்ராலர் பையில் கவனமானான்.

ஜன்னலுக்கு அருகில் தரையில் ஒரே ஒரு ரத்தத்துளி. அதைத் தர்ஷினி ஃபோட்டோ எடுத்துக் கொண்டாள்.

பெட்டியைக் குடைந்துவிட்டு, அதன் கைப்பிடியையே சிறிதுநேரம் பார்த்தாள் தன்யா. “ஷைனிங்” என்றாள்.

“புதுசு” என்றாள் வெளியே நின்றிருந்த ஸ்ரீஜா.

“நோ மார்க்ஸ்” என்றாள் தன்யா மறுபடியும்.

“யாரார் கிட்ட க்ளவுஸ் இருக்குன்னு பார்க்கணும்” என்றாள் தர்ஷினி.

“எல்லாருக்கும் ஷால், க்ளவுஸ் கொண்ட அமெனிட்டிஸ் பாக்கெட் கொடுக்கப்பட்டிருக்கு” என்றாள் ஸ்ரீஜா சோர்வாக.

“நான் சொல்றதை நீங்க புரிஞ்சுக்கலை. க்ளவுஸ் போட்ட கைகள் ஹாண்டில் பண்ணியிருந்தாலும், ஹாண்டில் பண்ணிய சுவடு தெரியும். ஆங்காங்கே சுப்பாமணியுடைய கைரேகைகளாவது இருக்கும். ப்ளாங்க்கா இருக்குன்னா, கைப்பிடிகள், மற்ற கைபட்ட இடங்கள் எல்லாம் சுத்தமாகத் துடைக்கப்பட்டிருக்கு” என்றாள் தன்யா.

“புரொஃபஷனல்” என்றாள் தர்ஷினி.

“இங்கே புரொஃபஷனல் கில்லர்ஸ் யாரும் இல்லை” என்றாள் ஸ்ரீஜா சூடாக.

“சரி, விஷயம் தெரிஞ்ச அக்கேஷனல் கில்லர்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீஜாவின் முறைப்பைப் பொருட்படுத்தாமல் தர்மாவின் பக்கம் திரும்பினாள் தர்ஷினி.

அவன் ஸ்ட்ராலர் பையிலிருந்து இரண்டு பொருட்களை வெளியே எடுத்து வைத்திருந்தான். ஒன்று காஸ்மெட்டிக்ஸ் கிட், மற்றொன்று சுப்பாமணியின் சற்றுப் பெரிய பர்ஸ்.

முதலில் பர்ஸிலிருந்த பொருட்களைச் சோதனை போட்டார்கள். கணிசமாகப் பணம். சுப்பாமணியின் ஆதார் மற்றும் சில ஐடி கார்ட்கள். கிளிப்பில் சில பேப்பர்கள். கிளிப்போடு இணைந்த பென்சில். தனியாக ஒரு டிக்கெட்.

“என்ன டிக்கெட் அது?”

“பழைய டிக்கெட். மூன்று வருஷத்துக்கு முந்தையது. நோட்ஸ் எழுத வெச்சிருப்பார்னு நினைக்கறேன். கிளிப்பைவிட்டு வெளியே வந்திருக்கு” என்றான் தர்மா. “கவனிக்க வேண்டிய விஷயம் – இந்த காஸ்மெடிக்ஸ் கிட்.”

“அதில் என்ன இருக்கு?” என்றாள் தன்யா.

“என்ன இல்லைன்னு கேளு. இதுக்குள்ளே ஒரு பிஸ்டல் இருந்தது. இப்போ இல்லை” என்றான்.

எல்லோரும் அதிர்ந்தார்கள்.

ஸ்ரீஜாவின் கரம் தன்னிச்சையாகக் குர்தி பாக்கெட்டுக்குள் சென்றது. அங்கே எப்போதும் இருக்கும் பிஸ்டல் இல்லை என்று உணர்ந்ததும் லேசாக நடுங்கியது.

பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்துத் தலைவாரிக் கொண்டு, தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்ளச் சிரமப்பட்டாள் ஸ்ரீஜா.

-பய(ண)ம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published.