அவ(ள்)தாரம் | 10 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 10 | தேவிபாலா

“இன்னும் ஒரு மணி நேரத்துல நீ யாருன்னு உன் குடும்பத்துக்கு ஆதாரத்தோட சொல்றேன்..!”

சிதம்பரத்துக்கு மூச்சே நின்றது! பூதத்தின் குரலில் இருந்த தீவிரம், முகத்தில் இருந்து தெறித்த அனல், அந்த கண்களில் மின்னிய வெறி, எல்லாமே சிதம்பரத்தை மிரள வைத்தது..! முப்பது வருஷ காலத்தில் பூதத்தைப் பக்கத்தில் இருந்து பார்த்தவர் சிதம்பரம்..! இந்த மாதிரி தன்னை பாதிக்கும் வெறி பிடித்த நிமிஷங்களில், பூதம் எந்த முடிவுக்கும் போகக்கூடிய ஆள்..! தன் மகன், பாரதியைக் காதலிப்பதால் பல விபரீதங்களைச் சந்திக்க வேண்டி வரும் என பூதத்துக்குத் தெரியும்..! அதை நான் ஆதரித்தால் என் குடும்பத்தை பூதம் சல்லி சல்லியாக உடைக்கும்..! கூடாது..!

“உன் மகளை காதலிக்கற அருளை, நான் சொல்ற இடத்துல வச்சு, பகிரங்கமா நீ அவமானப்படுத்தணும்..!”

“அய்யோ..! அந்த நல்ல பையனையா..?”

சிதம்பரம் எதுவும் பேசாமல் நகர, “என்ன, பதிலே இல்லை..? என் வேலையை நான் இப்பவே தொடங்கலாமா..? உன் கதையை கேரளாலேருந்து தொடங்கட்டுமா..? இல்லை ஆந்திராலேருந்து ஆரம்பிக்கட்டுமா..? எப்படி வசதி..?”

வியர்வையைத் துடைத்து கொண்டார் சிதம்பரம்..!

“நான் பாரதிகிட்ட பேசி இதைத் தடுக்கறேன்..!”

“உன் மகள் உன்னை ஆயிரம் கேள்விகள் கேப்பா..! அதுக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா..?”

“அது என் வேலை..!”

“இல்லை, முதல்ல நீ தடுத்து நிறுத்து..! அவ கேக்க மாட்டா..! அடுத்த உன் ஸ்டெப் என்ன தெரியுமா..? அருளை பப்ளிக்ல வச்சு நீ, அசிங்கப்படுத்தணும்..! இடத்தை நாளைக்கு காலைல சொல்றேன்..! நீ செய்யலைனா, உன் கடந்தகாலச் சரித்திரம், நதிமூலம், ரிஷிமூலத்தோட வெளில வரும்.! நீ போகலாம்..!”

சிதம்பரம் வீடு வந்து சேர்வதற்குள் பாதி உயிர் போயிருந்தது..! முகம்கூடக் கழுவாமல் படுத்து விட்டார்..! கௌசல்யா தேனீருடன் வந்தாள்..!

“என்ன..? உங்களுக்கு ஒடம்புக்கு முடியலியா..?”

“வேலை நிறைய..! என்னைக் கொஞ்சம் தனியா விடு..!”

“டாக்டர் கிட்டப் போகணுமா..? நான் வாசுகிக்கு ஃபோன் பண்ணட்டுமா..?”

“எனக்கு ஒண்ணும் இல்லைனா நீ கேக்க மாட்டியா..? விடேன் கௌசல்யா..!”

இரவு ஏழு மணிக்கு பாரதி வந்து விட்டாள்..! மேகலா வீட்டில் தான் இருந்தாள்..! அம்மா, பாரதியிடம் விவரம் சொல்ல,

“நான் பேசிக்கறேன், விடு..!”

இரவு பாரதி சப்பாத்தி தயார் செய்து, அதில் கொஞ்சம் பால், நாட்டு சர்க்கரை போட்டு ஊற வைத்து அப்பாவுக்கு எடுத்து வந்தாள்..!

“அப்பா..! சூடா இருக்கு..! சாப்பிடுங்க..!”

“எனக்குப் பிடிக்கலைம்மா..!”

“டாக்டர் கிட்டப் போகலாம்னா எங்கிட்ட கோவப்படறார் பாரதி..! ஊருக்குப் போய்வந்த பிறகு, அப்பா சரியா இல்லை..! மேகலா சங்கதி, நீ பணம் தொலைச்சு மீண்ட சங்கதி எல்லாம் அப்பாவைப் பாதிச்சிருக்கு..! பேசாம அருள் தம்பியைக் கூப்பிடு பாரதி..!”

சிதம்பரம் படக்கென நிமிர்ந்தார்..!

“யாருடீ அருள்..? எதுக்கெடுத்தாலும் அருளா..? ஏன் அவனைக் கூப்பிடறீங்க..? இந்த வீட்ல வேற யாரும் இல்லையா..?”

பாரதி திரும்பிப் பார்த்தாள்..!

“என்னங்க பேசறீங்க..? அந்த அருள் தம்பி இல்லைனா, நம்ம மேகலா கதி என்ன..? இல்லை, பாரதிதான் தப்பிச்சிருப்பாளா..? நீங்களா பேசறீங்க..? நமக்கொரு நன்றி வேண்டாமா..? முதலாளி மகன் வேற..!”

“அதனால தான் சொல்றேன், வேண்டாம்னு..! நீ கொஞ்சம் வெளில இரு..! நான் பாரதி கூட பேசணும்..! போ..!”

அவர் கத்த, அம்மா மிரண்டு வெளியேற, அவரே எழுந்து கதவைச் சாத்தினார்..!

“பாரதி..! நீ இனிமே அருளைச் சந்திக்க வேண்டாம்..!”

“என்னப்பா..? பெரிய இடத்து மிரட்டலா..?”

“கேள்வி கேக்காதே பாரதி..! அது, எதுவா வேணும்னாலும் இருக்கட்டும்..! உங்கம்மாவை வச்சிட்டு எல்லாம் பேச முடியாது..! இப்பக்கூட முதலாளியைக் கடவுள்னு சொல்ற கட்டத்தை அவ தாண்டலை..! ஆனா அவரோட இன்னொரு முகத்தை நீயும் பார்த்தாச்சு..! வேண்டாம்..! அருள், அவர் மகன்..!”

“அப்பா..! அருளே அப்படி நினைக்காதப்ப, நீங்க ஏன் கவலைப்படணும்..?”

“நான் அங்கே இன்னமும் வேலை பாக்கறேன்மா..! அந்த ஆள் சாதாரண நபர் இல்லை..! ஆயிரம் ஆனாலும் சொந்த மகனை அவர் எதுவும் செய்ய மாட்டார்..! ஆனா நம்ம நிலை அதில்லை..! நீங்க மூணு பேரும் பெண் குழந்தைகள்…! வேண்டாம்மா..! நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை..!”

“உங்க பதட்டத்துக்கு என்னப்பா கூடுதல் காரணம்..?”

“நீ அருளைக் காதலிக்கறதுதான் காரணம்..! அந்த பையனும் உன்னை விரும்பறான்..! உன்னை விடாம கண்காணிக்கற என் முதலாளியோட ஆள், அருளோட பட்டறைல நீங்க பேசினதை, பதிவு பண்ணி அவருக்கு அனுப்பியிருக்கான்..! அந்த ஆடியோவை நானும் கேட்டேன் பாரதி..! வேண்டாம்மா..! உன்னை எதிரியா நினைக்கற முதலாளி, அவர் மகன் உன்னைக் காதலிக்கறதை எப்படி ஏத்துப்பார்..? இது ரிஸ்க் இல்லையா..?”

“அதனால என்னப்பா..?”

“அவர் எந்த எல்லைக்கும் போவார் பாரதி..!”

“அப்பா நீங்க கேட்டது ஆடியோ மட்டும்தான்..! யாருக்கும் சொல்லாததை, அருளுக்குக்கூடத் தெரியாததை, இப்ப உங்களுக்குக் காட்டறேன்..!”

தன் செல்ஃபோனை அவள் இயக்க, ஆட்கள் பட்டறைக்குள் நுழைந்து ஷட்டரை இறக்குவதில் தொடங்கி, அவளைக் கொல்ல ஆயுதங்களுடன் பாய்ந்து வர, அவர்களை அருள் பந்தாடும் காட்சி! சினிமாவில் கூட இத்தனை ஆக்ரோஷமான ஒரு சண்டைக் காட்சியை பார்த்திருக்க முடியாது!

“அவங்க வெறியோட உள்ளே நுழைஞ்சதுமே, என் மொபைலை அங்கே ஒரு இடத்துல ‘ஆன்’ பண்ணி வச்சிட்டேன்..! பார்த்தீங்களா..? அது அருளோட வொர்க்ஷாப்னு எனக்கு தெரியாது..! அங்கே நான் ஒதுங்கலைனா, என்னை பின் தொடர்ந்து வெளில வந்த ஆட்கள், மழைல, ரோட்ல வச்சு என் உயிரை எடுத்திருப்பாங்க..! இப்பவும் தெய்வம் தான் என்னை அருள் கிட்ட கொண்டு போய் சேர்த்திருக்கு..! அப்பா..! நானும் மேகலாவும் முழுசா உங்க முன்னால நிக்கறோம்னா, அதுக்கு அருள் தானேப்பா காரணம்..? அப்படிப்பட்ட ஒரு மனுஷனை காதலிச்சா தப்பா..? நீங்க கேக்கலைனாலும் என் காதலை நானே சொல்லியிருப்பேன்..! இது பெருமைப்படற சங்கதிப்பா..!”

அப்பா அழுது விட்டார்!

“அவர் என்ன சொல்லி உங்களை மிரட்டறார்..? எப்படீப்பா நீங்க அவர் கிட்ட மாட்டியிருக்கீங்க..?”

அவர் தடுமாறி போனார்..!

“என்னால சொல்ல முடியலியேம்மா..!”

“சொல்லுங்கப்பா..! அருள் நிச்சயமா உதவி செய்வார்..! உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கார்..!”

“என் குழந்தைகள் உயிர் எனக்கு முக்கியம்..! உங்க காதலை உடைக்கலைனா, அவர் உங்க உயிர்களுக்குக் கெடு வைக்கறார்மா..! அதனால அவர் சொல்ற இடத்துல வச்சு, அருளை நான் பகிரங்கமா அவமானப்படுத்தணும்னு நிபந்தனை..!”

“அதுக்கு நான் ஒரு நாளும் விடமாட்டேன்..!”

“அது நடக்கலைனா, உங்கள்ள ஒருத்தரையோ, இல்லை மூணு பேரையுமோ, நான் இழக்க வேண்டி வரும்..! வேண்டாம்மா..! எனக்கு அதைத் தாங்கற சக்தி இல்லை..! நீயே இனி அருள் உன்னை சந்திக்க வேண்டாம்னு சொல்லிடும்மா..!”

அவர் கை கூப்பினார்..!

வெளியே அம்மா தவிப்புடன் இருந்தாள்..! மேகலா அதைவிட..! அம்மா வாசுகிக்கு ஃபோன் செய்து, தன் குழப்பத்தைச் சொல்ல,

“காலைல நான் வர்றேன்மா..! நீ எதுவும் கேட்டு அப்பாவைக் குழப்பாதே..!”

பாரதி கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தாள்..! சகலத்தையும் அருளுக்கு ஃபோன் செய்து சொன்னாள்..!

“இதப்பாரு பாரதி..! இதுல இனிமே நீ தலையிடாதே..! உங்கப்பா வயசானவர்..! அளவுக்கு மீறி அவரைக் குழப்பினா, நாளைக்கு முதலுக்கே மோசம் வந்துடும்..! எதையும் கண்டுக்காதே..! எங்கப்பா சொன்னபடி உங்கப்பா என்னை பகிரங்கமா அசிங்கப்படுத்தற ஒரு சூழ்நிலைக்கு வரட்டும்..!”

“உங்களுக்கு பைத்தியமா அருள்..?”

“இல்லை..! நான் தெளிவாத்தான் இருக்கேன்..! நான் சொல்றதை மட்டும் நீ கேளு பாரதி..! நான் பாத்துக்கறேன்..!”

காலையில், ஏழு மணிக்கு ஃபோன் செய்தார் பூதம்!

“இதப்பாரு சிதம்பரம்..! எந்த அம்மன் கோயில்ல வச்சு உன் மகள் கிட்ட முதன்முதலா நான் அவமானப்பட்டேனோ, அதே கோயிலுக்கு இன்னிக்கு காலைல பத்து மணிக்கு அருளும் பாரதியும் வரப்போறாங்க..! வரவழைப்பேன்..! அங்கே வச்சு நீ என் பையனை அசிங்கப்படுத்தணும்..! இல்லைனா உன் மானம் கப்பலேறும்..! நீ வருவே..!”

அப்பா உடல் நடுங்க நிமிர, வாசுகி உள்ளே வந்து கொண்டிருந்தாள்..! மற்ற எல்லாரும் அவரவர் புறப்பட,

“எல்லாரும் இங்கே வாங்க..! நான் கொஞ்சம் பேசணும்..!”

“நீ என்னம்மா இந்த நேரத்துல..?”

“அப்பா..! நம்ம குடும்பத்துல அடுத்தடுத்து பாரதி, மேகலா ரெண்டு பேருக்கும் பிரச்னை..! உங்க முதலாளி மகன் அருள் தலையிட்டு நல்லது செஞ்சிருக்கார்..! ஆனாலும் உங்க கிட்ட நிறைய சோர்வு இருக்கு..! நீங்களும் பாரதியும் தனியா போய் நிறைய ரகசியம் பேசறீங்க..! ஏதோ பெரிய பிரச்னை இருக்குனு அம்மா பயப்படறாங்க..!”

“அப்படி எதுவும் இல்லைம்மா..!”

“இருக்குப்பா! முதலாளி தந்த பெரிய உத்யோகத்தை இவ மறுத்திருக்கா..! அதுக்கும் முன்னால கோயில்ல வச்சு அவரைக் கேள்வி கேட்டிருக்கா..! அவர் மீடியால கூட பெருந்தன்மையாத்தான் பேசினார்..! ஆனா பெரிய மனுஷங்களுக்கு இன்னொரு முகம் உண்டு..! அதை நீங்க மட்டும் பார்த்து பயந்து, பாரதிக்கு மட்டும் சொல்றீங்களா..? எங்களுக்கும் அது தெரியணும்பா..!”

“அப்படி எதுவும் இல்லைம்மா..! நாங்க தனியாப் பேசறது இதுதான்..! அருள் நல்ல பையன் தான்..! ஆனாலும் கோடீஸ்வரன் மகன்..! அவனைச் சந்திக்கறதை நீ தவிர்க்கணும்னு சொல்றேன்..! அது நம்ம குடும்பத்துக்கே நல்லதில்லை..! இதைத்தவிர எங்களுக்குள்ளே எந்த ரகசியமும் இல்லைம்மா..! ஆஃபீசுக்கு நேரமாச்சு..! நான் குளிச்சு கிளம்பணும்..! நீ இருந்து சாப்டுட்டு போ..!”

அப்பா உள்ளே போக,

“நீ என்னடீ எதுவும் பேசாம இருக்கே..?”

“அதான் அப்பா சொல்லிட்டாரே, அது தான் மேட்டர்..! எனக்கும் நேரமாச்சு..!”

அவளும் கழண்டு கொள்ள, அம்மா வாசுகி பக்கத்தில் வந்தாள்..!

“வாசுகி! அப்பா சொல்றதும், பாரதி அதை ஆமோதிக்கறதும் நம்பும்படி இருக்காடீ உனக்கு..?”

“என்னவோ உதைக்கற மாதிரித்தான் இருக்கும்மா..!”

“உங்கப்பா கண்ல ஒரு பயம் தெரியுது வாசுகி..! இந்த மாதிரி அந்த மனுஷனை நான் பார்த்ததில்லை..! இவளும் நிச்சயமா மழுப்பறா..!”

“அம்மா..! முதலாளி, அப்பாவை ஒருவேளை மிரட்டறாரோ..? அந்த அருள் முதலாளிகூட இணக்கமா இல்லைனு ஊருக்கே தெரியும்..! அவன் தனியா பட்டறை வச்சு நடத்தறான்..! இவரை எதிர்த்து பல வேலைகளை செய்யறான்..! பாரதி கோயில்ல வச்சு, கேள்வி கேட்டப்ப இவன் கை தட்டியிருக்கான்மா..! தன்னை எதிர்க்கற மகனும், தன்னை மதிக்காத ஒரு பெண்ணும் கை கோர்த்துகிட்டா எந்த கோடீஸ்வரன் அதை தாங்குவான்..? அந்த ஆத்திரம் அப்பா மேல திரும்பியிருக்கு..! அதான் அப்பா இவ கிட்ட அருளை சந்திக்க வேண்டாம்னு சொல்றார்..!”

“இவ கேப்பாளா..?”

“கேக்கலைனா, அப்பா தலைல தான் அது விடியும்..! நம்ம குடும்பமும் பாதிக்கும்..!”

“நீ அவளுக்கு எடுத்து சொல்லு வாசுகி..!”

குளித்து விட்டு உடை மாற்றி அப்பா மகள் இருவரும் சாப்பிட வர,

“பாரதி..! நீ அப்பா சொல்றதைக் கேளு..! அருள் மேல நமக்கு நன்றி உணர்ச்சி நியாயம்தான்..! அதை விட முப்பது வருஷ முதலாளி விசுவாசம் அப்பாவுக்கு முக்கியமில்லையா..? யோசனை பண்ணு..! நமக்கு அப்பாவும் குடும்பமும் முக்கியம்..!”

பாரதி எதுவும் பேசாமல் புறப்பட்டு விட்டாள்!

“வழக்கம் போல கோயிலுக்கு போயிட்டுத்தானே ஆஃபீஸ் போறே பாரதி..? நானும் உன் கூட வரவா..?”

வாசுகி கேட்க,

“இல்லைக்கா..! நேரா ஆஃபீஸ் போறேன்..! வேலை நிறைய இருக்கு..!”

எனப் பொய் சொல்லி பாரதி, வண்டியை கோயில் பாதைக்குத் திருப்பினாள்! பத்து நிமிஷங்களில் அப்பா புறப்பட்டார்..!

கோயில் வாசலில் பாரதி வண்டியை நிறுத்தி விட்டு இறங்க, அருள் காத்திருந்தான்..! பாரதியிடம் ஒரு படபடப்பு தூக்கலாக இருந்தது..!

“எதுக்கு அருள் இந்த வேலை..? நீங்களும் புறப்படுங்க..! நானும் போறேன்..! அப்பா வந்துக்கிட்டே இருக்கார்..! உங்கப்பா உயிர் பயம் காட்டின காரணமா, எங்கப்பா உங்களை வேற வழியில்லாம் பகிரங்கமா அவமானப்படுத்த வந்துக்கிட்டேயிருக்கார்..! கண்ல ரத்தம் வடிய, எங்கப்பா இந்த காரியத்தை செய்யப்போறார்..! வேண்டாமே..!”

“உங்கப்பா அவர் பேச்சை கேக்கலைனா, எங்கப்பா தான் சொன்னதை செய்வார்..! நீ இதுல குறுக்கே வராதே..! நைசா கோயிலுக்குப் பின்புறம் பாரு..! அடியாட்கள் வந்தாச்சு..! கோயிலோட சிசிடீவி ஃபுட்டேஜ்ல இன்னிக்கு அனல் பறக்கும். இந்த அருள் எதுக்காவது ஒப்புக்கிட்டா அதோட பின்னணில வேறொரு காரணம் இருக்கும்..! பொறுத்திருந்து பாரு..! உங்கப்பா கம்பெனி கார்ல வர்றார் பாரு..! நான் சொல்ற மாதிரி என் கைகளைப் பிடி..! நான் பேசச்சொன்னதைப் பேசு..!”

சிதம்பரம் வந்து இறங்க, சற்று தள்ளி காருக்குள், பூதத்தின் வலது கை பாச்சா, கையில் ஒரு மினி காமிராவை உயர்த்தி வைத்தபடி தயாராக இருக்க, சிதம்பரம் சுற்றிலும் பார்த்தபடி உள்ளே வர, அருள் கைகளைப் பிடித்தபடி, அவனுடன் நெருக்கமாக பாரதி நிற்க, சிதம்பரம் நெருங்கி விட்டார்.

ஆட்டம் ஆரம்பமாகி விட்டது..!

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published.