ரூ.500 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு

 ரூ.500 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சாவூர், அருளானந்த நகரில் உள்ள அருணபாஸ்கர் என்பவரிடம் மரகதலிங்கம் இருப்பதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரிடம் விசாரித்ததில், சென்னையில் உள்ள அவரது தந்தை சாமி யப்பன், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மரகதலிங்கத்தை வங்கி லாக்கரில் வைத்திருப்பது தெரிந்தது. டிசம்பர் 30-ம் தேதி, மரகதலிங்கத்தை போலீசார் கைப்பற்றினர்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி., பொன்னி, ஏ.டி.எஸ்.பி.,க்கள் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோர், மரகதலிங்கத்தை, நேற்று கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும், சிலையின் தொன்மை குறித்து நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர். நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில், சிலையின் உயரம், எடை அளவிடப்பட்டது.

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில், சிலையை வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, நாகேஸ்வரன் கோவிலுக்கு சென்ற நீதிபதி, அங்கு மரகதலிங்கம் சிலையை வைக்கும் இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். எஸ்.பி., பொன்னி கூறியதாவது: “திருக்குவளை தியாகராஜர் சுவாமி கோவிலில் காணாமல் போன மரகதலிங்கம் தொடர்பாக சில ஆவணங்கள் கிடைத் துள்ளன. அதன் அடிப்படையில், முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையைத் துரிதப்படுத்த ஏ.டி.எஸ்.பி., ராஜாராமன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் வைக்கப் பட்டுள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார் அவர்.

தஞ்சையில் கைப்பற்றப்பட்ட மரகத லிங்கத்தின் புகைப்படத்தை தருமபுரம் ஆதீன மடத்தில் தொலைந்து போன மரகத லிங்கத்தின் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தனர். இதனை திருக்குவளை மரகதலிங்கத்தை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளளார்.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜர் கோயிலில் 2016-ல் மாயமான லிங்கமா? இதற்கிடையே, கடந்த 2016 அக்டோபர் 9-ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தியாகராஜர் கோயி லில் இருந்து மரகதலிங்கம் கொள்ளை போனது தொடர்பாக தருமபுர ஆதீன மடத்தின் கண்காணிப்பாளர் சவுரிராஜன் திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில், தற்போது மீட்கப்பட்டுள்ள மரகத லிங்கச் சிலை, கொள்ளை போன சிலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த சிலையை வைத்திருந்த சாமியப்பன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவர் குணம்அடைந்தவுடன் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்புவோம். விசாரணை முடிந்த பிறகு, குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார் கள். சாமியப்பனிடம் சிலை எப்படி வந்தது, சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.50 ஆயிரம் பரிசு பொக்கிஷமான பச்சை நிற மரகத லிங்கத்தை மீட்ட, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு புத்தாண்டு பரிசாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்ட வீடியோ பதிவில் “முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க ஸ்தலங்கள் லிங்கங் கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட ஆலயங்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு திருக்குவளையில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடப்பட்டது.

இதுகுறித்து சிலை தடுப்பு காவல் துறையினர் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டதில், தஞ்சையைச் சார்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகத லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது திருக்குவளையில் திருடப்பட்ட மரகத லிங்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்குவளை ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிலை தடுப்பு டி.ஐ.ஜி. இந்த லிங்கம் திருக்குவளை ஆலயத்திற்குச் சொந்தமானது என்பதை தங்களிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டதாகவும், இந்த லிங்கத்தை தங்களிடம் ஒப்படைத்து நித்திய பூஜைக்கு வழிவகை செய்யவேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் விடுத்துள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.