பயணங்கள் தொடர்வதில்லை | 8 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 8 | சாய்ரேணு

8. தூக்குக் கூஜா

ப்ரிஜேஷும் அவர்களைப் பார்த்துவிட்டான். பார்த்தான் என்பதைவிட, அவனுடைய கண்கள் அவர்கள் மீது படிந்து விலகின என்று சொல்வதே நிஜம். அவனுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை. யாரையும் அடையாளம் தெரிந்துகொள்ளும் மனநிலையிலும் அவன் இல்லை.

கையில் சிறிய பக்கெட் போல் ஏதோ இருந்தது. அதை மட்டும் இறுகப் பிடித்திருந்தான்.

தர்ஷினி அவனை விடுவதாக இல்லை. வேகமாக நடந்து அவனுக்கு நேரே சென்று நின்றுகொண்டாள். “ப்ரிஜேஷ்! இங்கே என்ன பண்றீங்க? எப்போ ட்ரெயின்லேர்ந்து இறங்கினீங்க? ஸ்ரீஜாவைப் பார்த்தீங்களா?” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

ப்ரிஜேஷ் ஒருவிநாடி தடுமாறினான். உடனே “ஹாய்! சுப்பாமணி அனுப்பிச்ச பார்ட்டியா நீ? எக்ஸலெண்ட்” என்றான் விரிந்த புன்னகையுடன்.

“வாட் டூ யூ மீன்? நீங்க சுப்பாமணியைப் பார்த்தீங்களா? இங்கேயா இருக்கார் அவர்?” என்று கேட்டாள் தர்ஷினி.

“சுப்… சுப்பாமணி… எங்க…” என்று குழறினான் ப்ரிஜேஷ். “அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் டார்லிங்! சுப்பாமணிகிட்ட நீ ரிப்போர்ட் எல்லாம் பண்ணத் தேவையில்லை. வா, ட்ரெயினுக்குப் போயிடலாம்” என்றான் தட்டுத் தடுமாறி.

“என்ன பேத்தறான் இவன்?” என்றாள் தர்ஷினி.

“கொஞ்சம் இங்கேயே இரு” என்ற தர்மா ப்ரிஜேஷைத் தள்ளாத குறையாக இழுத்துக் கொண்டு அருகிலிருந்த ரெஸ்ட் ரூமுக்குச் சென்றான். ஐந்து நிமிடங்களில் அவர்கள் திரும்பிவந்தபோது ப்ரிஜேஷ் தெளிந்திருந்தான். முகத்திலிருந்து சொட்டிய நீரைத் தன் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்.

தர்ஷினிக்குச் சிரிப்பு வந்தது. “அடிச்சியா?” என்றாள் கிசுகிசுப்பாக.

“அதெல்லாம் எதுக்கு இப்போ? இனிமே பயல் ஒழுங்கா பேசுவான்” என்றான் தர்மா.

தர்ஷினி மறுபடியும் ப்ரிஜேஷை ஏறிட்டாள். “ப்ரிஜேஷ், சொல்லு. சுப்பாமணியை எங்கேயாவது பார்த்தியா? அதாவது, கெட்-டுகெதருக்கு அப்புறம்?”

“அந்த மண்ணாங்கட்டி கெட்-டுகெதருக்கு நான் வரலைன்னு எவ்வளவோ சொன்னேன். சுப்பாமணி கேட்க மாட்டேன்னுட்டாரு. அங்கே போனா, என்னை மிரட்டறாரு” என்றான் ப்ரிஜேஷ்.

“மிரட்டறாரா? என்னன்னு? எப்படி?” தர்ஷினி கேட்க, ப்ரிஜேஷ் தலையை உலுக்கிக் கொண்டான்.

“அதை விடுங்க… நாங்க வரணும்னா எங்களுக்கு இன்னொரு மெக்… அதாவது…” என்று ப்ரிஜேஷ் தயங்கினான். அடி பலம் போலும்.

“சரி…”

“சுப்பாமணி சரின்னு ஒத்துக்கிட்டார். ஆனா… ப்ளாக்கார்ட் வரவேயில்லை. நெல்லூர் ஸ்டேஷன் போயிடுச்சு, ஓங்கோலும் வந்துடுச்சு, ஆளைக் காணோம். அவர் கூப்பேல போய்ப் பார்த்தேன்… அங்கே இல்லை…”

“இரு, எப்போ போய்ப் பார்த்த நீ?” என்று இடைமறித்தாள் தர்ஷினி.

“நடுவுல” என்றான் ப்ரிஜேஷ்.

“நெல்லூருக்கும் ஓங்கோலுக்கும் நடுவுலன்னு சொல்றான் போலிருக்கு” என்றான் தர்மா.

ப்ரிஜேஷ் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

“சந்திரசேகரோட பேசிட்டிருக்கலாம்னு திரும்பிட்டேன். ஒருவேளை ஓங்கோலில் இறங்கியிருக்காரா எங்களுக்காகன்னு பார்க்கத்தான் வந்தேன்.”

“உன் ஃப்ரெண்ட்ஸ்?”

“கஸின்ஸ். தூங்கிட்டாங்க. எனக்குத் தூக்கம் வரலை” என்றான் ப்ரிஜேஷ்.

“இந்த ஸ்டேஷனுக்கு ஸ்ரீஜா வந்தாங்களா? பார்த்தியா?” என்றான் தர்மா.

“ஸ்ரீஜா? நான் பார்க்கலை” என்றான் ப்ரிஜேஷ்.

“எப்போ இறங்கின நீ?”

“ஓங்கோல் வந்தவுடனே கீழே இறங்கிப் பார்த்தேன். அவர் தட்டுப்படலை. அப்புறம் ஸ்டேஷனிலேயே சுற்றிட்டிருந்தேன். யாரோ என் மேலே இடிச்சுட்டாங்க, தடுமாறிச் சேரில் சரிஞ்சவன் அப்படியே தூங்கிப் போயிருக்கேன். திடீர்னு எழுந்து பார்த்தா, ட்ரெயினைக் காணும். பயந்துட்டேன். அப்போதான் ஹௌரா மெயில் ஸ்டேஷனைத் தாண்டி நிற்குதுன்னு சிலர் பேசிட்டுப் போறதைக் கேட்டேன். நல்ல மழை பெஞ்சு விட்டிருந்தது தெரிஞ்சது. ஒருவேளை சுப்பாமணி இறங்கிட்டு, மழையினால் ட்ரெயினுக்குத் திரும்ப வரமுடியாமல் இருக்காரோ, அதான் மற்றவங்க ட்ரெயினை நிறுத்திருக்காங்களோன்னு நினைச்சு, அவர் வரதுக்காக இங்கேயே வெயிட் பண்ணிட்டிருக்கேன்.”

ப்ரிஜேஷ் ஓரளவு தெளிவாகவே பேசினானாயினும் அவன் கண்கள் சிவந்திருந்தன. உடலிலும் சிறு நடுக்கம் இருந்தது.

தன்யாவும் தர்ஷினியும் அவனையே பார்த்தார்கள். அவன் கையிலிருந்தது லிக்கர் பாட்டில் வைக்கும் ஐஸ் பக்கெட் என்று புரிந்தது.

“சரி, இங்கேயே வெயிட் பண்ணு. நாங்க ட்ரெயினுக்குப் போகும்போது உன்னையும் கூட்டிப் போறோம்” என்றான் தர்மா.

ப்ரிஜேஷ் அருகே இருந்த இருக்கையில் ஒரு விடுதலை உணர்வோடு அமர்ந்தான். தன்யாவும் தர்ஷினியும் அவனைவிட்டு விலகினார்கள்.

“இப்போ என்ன பண்ண? ஆஃபீஸ்க்குப் போய் ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்க்கலாமா?” என்றான் தர்மா.

தர்ஷினி கைகாட்டினாள். அந்த அறையில் மூன்று ரயில்வே ஆஃபீஸர்கள் கவலையுடன் விவாதித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

“ஆன்வர்ட்” என்றான் தர்மா புன்னகையுடன்.

*

“இல்லை சார், நீங்க சொன்னமாதிரி யாரும் இங்கே வரலை” என்றார் அந்த அதிகாரி. நல்லவேளையாக அவர் தமிழர். தர்மாவுக்குத் தெரிந்த சொற்பம் ஹைதராபாத் தெலுங்கை வைத்துக் கொண்டு ஓங்கோலில் சமாளிக்க முடியவில்லை. அவன் நீட்டியிருந்த விஸிட்டிங் கார்ட் மேஜைமீது கவனிக்கப்படாமல் கிடந்தது.

“ஸ்ரீஜா என்ற பெண்ணை ரயில்வே ஆஃபீஸர்தான் வந்து கூட்டிப் போயிருக்கார்” என்றாள் தர்ஷினி.

“இந்த ஸ்டேஷனிலிருந்து நாங்க யாரையும் அனுப்பலை” என்றார் இன்னொரு ஆஃபிஸர் தெலுங்கில்.

“சாரி, நாங்க வரும்போது நீங்க ஏதோ டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தீங்க…” என்று தர்ஷினி நூல்விட்டுப் பார்த்தாள்.

‘அதைக் கேட்க நீ யார்?’ என்பதுபோல் அவர்கள் தெலுங்கில் பார்க்க, “கொஞ்சம் வெளியில் வெயிட் பண்ணுங்க” என்று அபயமளித்தார் அந்தத் தமிழ் அலுவலர்.

*

நிற்கமுடியாமல் தவித்து, அவர்கள் கால்மாறி நின்ற நேரம் வெளியே வந்தார் அவர்.

“உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்” என்றார் தர்மா அளித்த விஸிட்டிங் கார்டைப் பார்த்தவாறே.

“ஒரே நேரத்தில் ஸ்பெஷல் கோச்சிலிருந்து ரெண்டுபேர் காணாமப் போயிருக்காங்க என்பது கொஞ்சம் கவலை தருது” என்றான் தர்மா.

“அந்த மனிதர் ஏதாவது காரணமா இறங்கிப் போயிருக்கலாம். அந்தப் பெண்ணைப் பற்றித்தான் பயமாயிருக்கு. போலி ஆஃபீஸர் ஒருத்தர் வந்து கூட்டிப் போனதா சொல்றீங்களே!” என்று ஆரம்பித்தார் அவர்.

“சார், அவர் ஐடி கார்ட் காட்டியிருக்கார்” என்றாள் தர்ஷினி.

“டைம் அ டஸன்” என்று தோள்களைக் குலுக்கினார். “கடத்திட்டுப் போயிருப்பாங்களோ?”

“இங்கே அவங்களைத் தெரிஞ்சவங்க யாரும் கிடையாதே!”

“மெட்ராஸிலிருந்தே ஃபாலோ பண்ணி வந்திருக்கலாம். போலீஸில் ஒரு புகார் கொடுத்துடுங்க” என்றார்.

தர்ஷினி தலையாட்டினாள்.

“நீங்க பேசிட்டிருந்த விஷயத்திற்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா சார்? ரொம்பக் கவலையா இருந்தீங்களே?” என்று கேட்டான் தர்மா.

“சரியான விடாக்கண்டர்களா இருக்கீங்களே” ஒரு அபூர்வப் புன்னகை பூத்தார். “ட்ராக்கில் ஒரு பாடி கிடக்குன்னு எங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்திருக்கு” என்றார்.

தர்மாவும் தர்ஷினியும் அதிர்ந்தார்கள்.

“என்ன சார் இவ்வளவு காமா சொல்றீங்க? அது ஸ்ரீஜாவா இருந்தா? சுப்பாமணி தானா இறங்கிப் போயிருக்கார் சார், ஸ்ரீஜா அப்படி இல்லை! நீங்களே ஃப்வுல் ப்ளே இருக்குமோன்னு சொன்னீங்க, இவ்வளவு முக்கியமான விஷயத்தை…”

“ரிலாக்ஸ்” என்றார் அந்த அதிகாரி. “அது நிச்சயம் உங்க ஸ்ரீஜா இல்லை. இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டப்போ மணி மூணே முக்கால். உங்க லேடி நாலரைக்கு மேலேதானே இறங்கிப் போயிருக்காங்க?” என்று கேட்டார்.

தர்ஷினி தலையாட்டினாள். “பாடி யாருன்னு தெரிஞ்சுடுச்சா? ஆணா பெண்ணா?” என்று கேட்டாள்.

“இன்னும் எங்களுக்கு விவரங்கள் வரலை. நெல்லூர் ஸ்டேஷனிலிருந்து தகவல் வந்தது.”

“ஓ… அப்போ பாடி கிடைச்சது நெல்லூர் ஸ்டேஷனிலா?” என்றான் தர்மா.

“பக்கத்தில்… ஹௌரா மெயில் ட்ராக்குக்கு அடுத்த பாரலல் ட்ராக்கில் கிடைச்சிருக்கு. இன் ஃபாக்ட், இப்போ மழைக்காக ட்ராக்குகளை செக் பண்றோமில்லையா. லைன்மென் பார்வையில் பட்டிருக்கு. இல்லைன்னா, நாளைக்குக் காலைவரை, ஏன் அதுக்கும்மேலேகூடக் கிடைக்க ஆகலாம். ஒருவேளை அதுக்குள்ள ட்ரெயின் ஏதாவது மறுபடி அதுமேலே மோதக்கூடச் செய்யலாம்…” என்றார் அதிகாரி.

“ஓ! ட்ரெயின் மோதின ஆக்ஸிடெண்ட் கேஸா?”

“ஐ கெஸ்” மறுபடி தோள் குலுக்கல். இவர் மானரிஸமா இது? “தற்கொலையாகக்கூட இருக்கலாம்.”

*

ர்மாவும் தர்ஷினியும் ஸ்டேஷன் முழுவதும் தேடினார்கள். வெளியே நின்ற டாக்ஸி, ஆட்டோ ட்ரைவர்களிடம் விசாரித்தார்கள். யாரும் அவர்கள் சொன்ன அடையாளத்தில் ஸ்டேஷனைவிட்டு வெளியே வரவில்லை என்றார்கள் அவர்கள். விடாது மழையும் தூறலுமாக இருந்ததால் அவர்கள் கவனிக்காமல் விட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்கள்.

“ஆனா அந்த வாய்ப்பு ரொம்பக் கம்மி. அவங்க பிழைப்பு சம்பந்தப்பட்ட விஷயம் ஆச்சே” என்றான் தர்மா.

“அப்போ ஸ்ரீஜாவோ, சுப்பாமணியோ ஸ்டேஷனைவிட்டு வெளியே போகலை” என்றாள் தர்ஷினி யோசனையாக.

தர்மா தன் ரெயின் கோட்டைச் சற்று உதறினான். குற்றாலத்திற்குப் போட்டியாய் அதிலிருந்து ஒரு மினி அருவி கொட்டியது. “மழை விட்ட பாடில்லை. வா, ட்ரெயினுக்குப் போய்ப் பார்க்கலாம். ஒருவேளை சுப்பாமணி இதுக்குள் ரிடர்ன் பண்ணியிருக்கலாம்” என்றான்.

“வாட் அபவுட் ஸ்ரீஜா?”

“டெஃபினிட்லி ஃபவுல் ப்ளே. அவங்களைக் கூட்டிப் போன ரயில்வே அதிகாரி ஏமாத்துக்காரன்னு தெரிஞ்சுபோச்சே” என்றான் தர்மா.

*

ப்ரிஜேஷை எழுப்பி அழைத்துக் கொண்டு, தட்டுத் தடுமாறி ட்ரெயினை அடைந்தார்கள். வெளிச்சம் வந்திருந்தாலும், மழையில் பாதை தெளிவில்லாமல் இருந்தது.

ஸ்பெஷல் கோச்சில் ஏறி, டைனிங் காரை அடைந்தார்கள். அங்கே ஒரு மேஜையில் ஒரு டீ கெட்டில், இரு கப்கள் புடைசூழ. கப்களில் ஆவிபறக்கும் டீ. ஒருபுறம் தன்யா அமர்ந்திருந்தாள்.

மறுபுறம் – ஸ்ரீஜா.

*

“தாங்க் காட்!” என்றான் தர்மா. “உங்களைத் தேடிட்டுத்தான் போயிருந்தோம். யாரோ ஆஃபீஸர் உங்களைக் கூட்டிட்டுப் போனாரே, அவரைப் பற்ற்றி எதுவுமே ஸ்டேஷனில் தெரியல. பானிக் ஆகிடுச்சு எங்களுக்கு. இதில் நெல்லூருக்குப் பக்கத்தில் ட்ராக்கில் ஒரு பாடி கிடக்கறதா வேற…”

“உட்காரு” என்று அவன் பேச்சில் ஓட்டத்தைத் தடுத்தாள் தன்யா. மேஜை மேலிருந்த டீ கப்பை நீட்டியவாறே கேட்டாள். “அந்தப் பாடி பற்றி என்ன விஷயம் தெரிஞ்சது?”

“எதுவும் இந்த ஸ்டேஷனுக்கு வரலை… சாரி.”

“ஒரு விவரம் ஸ்ரீஜா சொல்வாங்க.”

ஸ்ரீஜா?

தர்மாவும் தர்ஷினியும் அவளை வியப்பாகப் பார்த்தார்கள்.

ஸ்ரீஜா ஒரு பெருமூச்சுவிட்டு, மெல்லிய குரலில் சொன்னாள் –

“அது சுப்பாமணி.”

–பய(ண)ம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published.