குத்துச் சண்டையில் (MMA) சாதிக்கும் தமிழன் பாலி சதீஷ்வர்

 குத்துச் சண்டையில் (MMA) சாதிக்கும் தமிழன் பாலி சதீஷ்வர்

உலகப் புகழ்பெற்ற நடிகர் மறைந்த புருஸ்லி. இவர் நடிகர் மட்டுமல்ல, ஒரு தற்காப்புக் கலைஞரும்கூட. புரூஸ்லி நடித்த படங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதனால் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் ஹாலிவுட் படங்களே புரூஸ்லி படங்கள் அளவுக்கு வசூல் குவிக்க முடியாமல் மிரட்டன. அப்படிப்பட்ட புரூஸ்லி சாதனை முயற்சியாக ஒரு நொடியில் 9 குத்துகள்விட்டு  (Punches- இரண்டு கைகளையும் புஷ்டி பிடித்து மாறி மாறி குத்துவது) உலக சாதனையை 1977ல் நிகழ்த்தியிருந்தார். அந்த உலக சாதனையை முறியடிக்கும்விதமாக ஒரு நொடியில் 13 குத்துகள் விட்டு (Punches) உலக சாதனை படைத்த வீரத்தமிழன் பாலி சதீஷ்வர். இவர் கடந்த சில மாதங்களுக்குமுன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார். அப்போது பேசும்போது ஊடகங்கள் முன்னிலையில் செப்டம்பர் 25ல் நாசிக்கில் நடைபெறும் சர்வதேச தொழில் முறை எம்.எம்.ஏ. குத்துச்சண்டை போட்டியில் நாக்அவுட் முறையில் வெற்றி பெறுவேன் என்று கூறி இருந்தார். சொன்னதைப் போல தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காஷ்மீரைச் சேர்ந்த வீரர் முனிஷ்குமாரை முதல் ரவுண்டில் நாக் அவுட் முறையில் வீழ்த்தினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற ஹீரோ சர்வதேச தொழில்முறை எம்.எம்.ஏ. (மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்) போட்டி உலகில் மிகவும் ஆபத்தான விளை யாட்டுகளில் முதலாவதாகத் திகழ்கிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து முதன்முறையாக கலந்து கொண்ட பாலீ சதீஷ்வர் தன்னை எதிர்த்துப் போட்டியிட தன்னைவிட  இரண்டு மடங்கு அதிகமான எடைப் பிரிவு கொண்ட குஜராத்தைச் சேர்ந்த தொழில்முறை வீரர் வினித் தேசாயை முதல் சுற்றில் 3 நிமிடம் 15 விநாடிகளில் நாக் அவுட் முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அவரின் வெற்றிக்கு அவருடைய மல்யுத்த பயிற்சியாளர் ராம்பர்வேஸ் (சர்வதேச மல்யுத்த வீரர்) மற்றும் அவரின்  நண்பர் யு.எப்.சி. வீரர் பரத்கந்தாரே உறுதுணையாக இருந்தனர்.

எம்.எம்.ஏ. குத்துச்சண்டை உலகின் ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டில் முதன்மையாக விளங்குகிறது. எம்.எம்.ஏ எனப்படும் மிக்ஸ்ட் மார்ஸியல் ஆர்ட் விளையாட்டில் உலகின் ஆபத்தான கலைகளான பாக்ஸிங், மோய்தாய், கிக்பாக்ஸிங், ஜீடோ, ஜூஜீட்சு, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் முக்கிய அங்கமாக உள்ளன. இந்த ஆபத்தான, முழு பலத்தை வெளிப்படுத்தும் போட்டியில் தமிழகத்திலிருந்து முதல்முறையாகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் பாலி சதீஷ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 21 ஆண்டுகளாகத் தற்காப்புக் கலை பயிற்சி செய்துவரும் பாலீ சதீஷ்வர் பாக்ஸிங், கிக்பாக்ஸிங், ஜீடோ, மோய்தாய் போன்ற தனி விளையாட்டுகளிலும் இதுவரை மாநில, தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த மாதம் (30.10.21 அன்று) பெங்களூருவில் உலகின் முன்னணி எம்.எம்.ஏ  பைண்டிங் புரமோஷனான பிரேவ் எப்.சி.யில் தமிழ்நாட்டின் முதல் வீரராகக் கலந்துகொண்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தன்னைவிட கூடுதல் எடையும் உயரமும் கொண்ட அஸ்ஸாமைச் சேர்ந்த தொழில்முறை வீரர் ‘டெர்மினேட்டர்’ மிதுன் பர்மனை இரண்டாவது சுற்றில் இரண்டு நிமிடங்களில் ஆர்.என்.சி. ரியர் நெக்ட் சோக் சப்மிஸன் செய்து பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று சர்வதேச அரங்கில் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பாலி சதீஷ்வரின் எம்.எம்.ஏ  தொழில்முறை போட்டியின் 3 ஆண்டாவது தொடர் வெற்றி இதுவாகும்.

மேலும் கடந்த மாதம் எகிப்தில் கிக் பாக்ஸிங் பெட்ரேசன் ஆப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் முதல் வீரராக கிக் பாக்ஸிங் பிரிவில் மிகக் கடுமையான பிரிவான கே1 பிரிவில்  அரையிறுதியில் தன்னை எதிர்த்துச் சண்டையிட்ட சிலி நாட்டைச் சேர்ந்த வீரனை 3 சுற்றுகள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற பிறகும் போட்டி நடுவர்களின் தவறான முடிவால் பாலி சதீஷ்வர் வெற்றி பறிக்கப்பட்டு சிலி நாட்டு வீரனை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்று அர்ஜென்டினா வீரனை எளிதில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வெல்ல வழிவகை செய்தனர் போட்டி அமைப்பினர்.

மேலும் பாலி சதீஷ்வர் சண்டையை அரங்கில் நேரில் பார்த்த அனைத்து மக்களும் பாலி சதீஷ்வரே வெற்றி பெற்றார் என கூச்சலிட்டனர். அவருக்கு வழங்கப்பட இருந்த வெண்கலப் பதக்கத்தை நிராகரித்து தனக்கு உரியது தங்கப் பதக்கம்தான் என்பதை அங்கு பதிவு செய்து மேலும் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறும் கிக் பாக்ஸிங் வேர்ல்ட் சாம்பியன்ஷில் தான் தொழில்முறை பிரிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வெளிநாட்டு வீரனை நாக் அவுட் செய்து வெற்றி பெற்று வேர்ல்ட் சாம்பியன் ஆவேன் என்று எகிப்து போட்டி காலத்திலேயே அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார், தமிழகத்தின் வீரத்தின் அடையாளம் ‘டைகர்’  பாலி சதீஷ்வர்.

                அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஸிப் போட்டியில் இந்தியாவின் முதல் வீரராக உள்ள நாசிக்கைச் சேர்ந்த பரத் கந்தாரேவுடன் இணைந்து தீவிரப் பயிற்சி யில் ஈடுபட்டுவரும் பாலி சதீஷ்வர் மேலும் தொழில் முறை எம்.எம்.ஏ. போட்டி களில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் யு.எப்.சி.யில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் உலக அரங்கில் பெருமை சேர்ப்பதே தனது லட்சியமாகக் கொண்டு கடினமான சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து  அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் தொழில் முறை குத்துச்சண்டை போட்டியிலும் மற்றும் இந்தியாவின் மாபெரும் அளவில்  நடைபெறவிருக்கும் சர்வதேசத் தொழில்முறை மிக்ஸ்ட் மார்ஸியல் ஆர்ட் போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

 அக்டோபர் மாதம் எகிப்தில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்சிப் கிக்பாக்ஸிங் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவிற்காகத் தேர்வாகி உள்ள பாலி சதீஷ்வர் உலக சாம்பியன் ஆவதற்காகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வெற்றிக்கு அவருடைய குத்துச்சண்டை பயிற்சியாளர் சரவணன் மற்றும் பயிற்சிக் கூட்டாளிகள் தேசிய குத்துச்சண்டை வீரர் குருசங்கர், முகமது ஜக்காரியா, மூத்த ஜூடோ பயிற்சியாளர் சி.எஸ். ராஜகோபால் மற்றும் இவரது பெற்றோர் ஆகியோர் உறுதுணையாக உள்ளனர் என்றார்.

அக்டோபர் 18ம் தேதி எகிப்தில் நடைபெறவிருக்கும் உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாம் டெல்லியில் அக்டோபர் 2ல் தொடங்கியது. இதில் கிக் பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா மூலமாக இந்தியாவின் மற்றும் தமிழகத்தின் ஒரே வீரராகவும் தேர்வாகி யுள்ளார் பாலி சதீஷ்வர். இவர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.