சிங்கள புத்தம் முதலைக்குளம்!

சிங்கள புத்த மதத்தைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதற்காக, மதம் மாற்றும் நடவடிக்கைகளில் இலங்கை ஆட்சியாளர்களும் சிங்கள புத்தமத பீடத்தினரும் இப்போது தீவிரமாகச் செயல்படுகின்றனர். இந்து மதத்தில் உள்ள சாதி ஏற்றத்தாழ்வை – சாதி ஒடுக்குமுறையைக் காட்டி – “சமத்துவம்” பேசி, மதம் மாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர். குறிப்பாகப் பட்டியல் வகுப்புத் தமிழர்கள்தாம் சிங்களர் களின் இலக்காக உள்ளது.

இலங்கைச் சிங்கள புத்த மதத்தில் ஆதிக்க சாதியின் பெயர் “கோவி ஜாதி!” ஜாதி என்ற சொல் அப்படியே உள்ளது. சிங்கள புத்த மதத்தையும், இலங்கை அரசையும் ஆட்டிப் படைக்கும் மூன்று புத்த பீடங்களின் தலைவர்களும் கோவி ஜாதியிலிருந்து மட்டுமே வரமுடியும். அவை 1. மல்வத்த பீடம், 2. அஸ்கிரிய பீடம் 3. கலனி பீடம்!

சிங்கள புத்த மதத்தினரில், பறையடிப்பதற்கும், கீழ்நிலை வேலைகள் செய் வதற்கும் உள்ள சாதியாரின் பெயர் “பெறே ஜாதி”. “பறையர்” என்பது சிங்களத்தில் “பெறே” ஆகியுள்ளது. இலங்கைச் சிங்களர்கள் அந்நாட்டில் உள்ள தமிழர்களைத் திட்டும்போது, “பறத் தமிலோ” என்று திட்டுவர். “வண்ணார்”  போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளும் சிங்கள புத்த மதத்தில் இருக்கின்றன.

சிங்கள புத்த மதத்தினர் ஆரிய வர்ணாசிரம – சாதி வேறுபாடுகள் கொண்டவர்கள். சிங்களவர்கள் இந்தியாவின் பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து இலங்கைக்குள் குடியேறியவர்கள். அவர்கள் தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். தங்களுக்கு “ஆரிய” என்ற சொல்லைச் சேர்த்து பெயர் வைத்துக் கொள்கின்றனர்.  எடுத்துக்காட்டாக ஆரிய ரத்தனே.

போதிமரப் புத்தரின் அன்பு, அறம், மனித சமத்துவம் போன்ற உயர் நெறி களை சிங்கள புத்தமத பீடங்கள் பின்பற்றுவதில்லை. அந்தக் காலத்திலிருந்து தமிழின அழிப்பில், தமிழ் மொழி ஒழிப்பில் தீவிரமாக இருந்து வருகிறார்கள்.

மியான்மரில் ரோகிங்கியா முசுலிம்களை பல்லாயிரக்கணக்கில் இனப் படுகொலை செய்து, இலட்சக்கணக்காணவர்களை நாட்டைவிட்டு விரட்டி ஏதிலியர் ஆக்கியவர்கள் புத்த மதத்தினர்தாம்! நாட்டுக்கு நாடு புத்த மதக் கொள்கைகளும் செயல்பாடுகளும் மாறுபடுகின்றன.

அம்பேத்கர் அவர்கள் சாதியற்ற சமூகம் படைக்க, மூன்று இலட்சம் பட்டியல் வகுப்பு மக்களுடன் மராட்டியத்தில் புத்த மதத்தைத் தழுவினார். புத்த மதத்திற்குப் போனதால் பட்டியல் வகுப்பு இடஒதுக்கீட்டையும் சிறப்பு உரிமைகளையும் இழந்தனர். ஆனால் அவர்கள் நடைமுறையில் ஒடுக்கப்பட்ட சாதியினராகவே இருக்கின்றனர். தொடர்ந்து போராடி வி.பி.சிங் ஆட்சியில் பட்டியல் வகுப்பு இடஒதுக்கீட்டை மீண்டும் பெற்றனர்.

தமிழ்நாட்டில் பட்டியல் வகுப்புத் தமிழர்கள் புத்தமத்திற்குப் போனாலும் மராட்டியத் தலித்துகளுக்கு ஏற்பட்ட நிலைதான் தொடரும். இங்கு இந்து மதத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடிக் கொண் டுள்ளோம். பல உரிமைகளை மீட்டுள்ளோம். பயணத்தில் மிச்சமுள்ள தொலை வையும் அறிவோம்! உரிமை மீட்பு சமத்துவ முயற்சிகளும் போராட்டங்களும் தொடர வேண்டும்.

இந்து மதத்திற்கு அஞ்சி சிங்கள புத்த முதலைக்குளத்தில் விழ வேண்டாம் என்பது நமது வேண்டுகோள். சிங்கள புத்த பீடங்கள் தலைமை தாங்கித்தான் தமிழீழத்தில் இலட்சகக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். தமிழ்நாட்டிலும் தமிழ் இனத்தை அழிக்க வருகின்றனர். அவர்கள் தமிழ்நாட் டில் தங்களுக்கான “ஆள் பிடிக்கிகளை” உருவாக்கியுள்ளனர். எச்சரிக்கை!

இந்த நிலையில் எழுச்சித் தமிழர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் அண்மையில் இராமநாதபுரத்தில் “பிரஹ்போதி பிஹார்” என்ற சிங்கள புத்த கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதாகவும் அவ்விழாவில் சிங்கள புத்த பிக்குகள் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. அதிர்ச்சியாக உள்ளது. அதற்குச் சில நாட்கள் முன் சென்னையில் கிறித்துவ மத நூல் வெளியீட்டு விழாவில் “திருவள்ளுவர் கிறித்தவர் என்று இந்நூலில் கூறப்பட்டுள்ளது. அது உண்மையா, பொய்யா என்று “ஆய்வு” செய்ய வேண்டும்” என்று திருமா பேசிய காணொலியைப் பார்த்தோம். திருமாவளவன் அவர்களின் இந்தப் போக்கு வருத்தமளிக்கிறது.

ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு அண்ணல் அம்பேத்கர் சிலையை நம் மக்கள் வைத்திருந்தாலும் அவர் காட்டிய புத்த மதத்தை இதுவரை ஏற்கவில்லை. இனியும் சிங்கள புத்த மதத்தை ஏற்க வேண்டாம். அது பரவினால் தமிழ்நாட்டில் தமிழ் மொழியை, தமிழ் இனத்தை அழித்துவிடும். அதே வேளை சாதி ஏற்றத் தாழ்வும் ஒழியாது!

ஐயா பெ. மணியரசன்,

தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

(இக்கட்டுரை “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – 2021 திசம்பர் இதழின் ஆசிரியவுரையாக வெளிவந்துள்ளது)

மூலவன்

1 Comment

  • சாத்தான் வேதம் ஓதுது.

Leave a Reply

Your email address will not be published.