எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 12 | இந்துமதி

1 month ago
79

த்தனை சந்தோஷமாக ருக்மிணியம்மாள் இருந்ததே இல்லை. தரையில் கால் பாவாமல் நடந்ததில்லை. நினைவுகள் நிலைகொள்ளாமல் அலைந்ததில்லை. சமையலறைக்கும் வாசலுக்கும் ஓடினதில்லை, செய்கின்ற காரியங்களில் கவனமற்றுப் போனதில்லை.

‘கணவருக்குத் தெரியப்படுத்தலாமா..?’ தொலைபேசி ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு யோசித்தாள்.

“இல்லை, வேண்டாம். முதலில் நாம் பார்க்கலாம். நம் மனசுக்குப் பிடித்தபின், கணவரிடம் சொல்லலாம்.” ரிஸீவரை வைத்தாள்.

‘நம் மனசுக்குப் பிடிப்பதென்ன…? அதான் மதுவிற்குப் பிடித்தாகி விட்டதே…’

உடனே அவனுக்குச் சொல்ல நினைத்து, அவன் இருக்கக்கூடிய அத்தனை இடங்களுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். மது கிடைக்கவில்லை. அவன் வருகிறபோது வரட்டும் என்று ரிஸீவரை வைத்தாள். காய்கறி எடுக்கக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபோது, ‘அந்தப் பெண்ணிற்கு என்ன பிடிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே’ என்ற ஆதங்கம் எழுந்தது. போன் பண்ணிக் கேட்கலாமென்றால், அவளது தொலைபேசி எண்களைக் கேட்டுக் கொள்ளாதது நினைவிற்கு வந்தது. சில சமயம் முன் யோசனை இன்றி நடந்து கொள்வதை உணர்ந்து தன்னைத்தானே கடிந்து கொண்ட போது, வேலைக்காரப் பெண் உள்ளே வந்தது. அவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கேட்டது.

“என்னம்மா… இன்னிக்கு ஒரே சந்தோஷமாக இருக்கீங்க..? மருமக வரப் போறாங்களா என்ன…?”

ஒரு வினாடி அதிர்ந்து போனாள் ருக்மிணியம்மாள். ‘என்ன இந்தப் பெண், குறி சொல்கிற மாதிரி சொல்கிறது…?”

“என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க..?”

“சர்க்கரை டப்பா கொண்டாடி.”

“எதுக்கும்மா..?”

“உன் வாய்க்கு சர்க்கரை அள்ளிப் போடணும்.”

“ஏம்மா….?”

“அத்தனை சரியாச் சொல்லிட்ட.”

“நிஜமாகவே பொண்ணு பார்க்கப் போறீங்களாம்மா…?”

“ம்ஹும்… போகலை. பொண்ணு வீட்டைத் தேடி வருது.”

“என்னம்மா சொல்றீங்க..?”

“நம்ம சின்னய்யா, ஒரு பொண்ணு மேல ஆசைப்படறாரு. அந்தப் பொண்ணும் இவருமேல் ஆசைப்படுது. அது, இன்னிக்கு இப்போ இங்கே வரேன்னு போன் பண்ணி சொல்லியிருக்கு…”

“அப்படியா..? நானும் இருந்து பார்க்கறேம்மா.”

“நீ இருந்து தான் ஆகணும். ஏன்னா சாப்பிடக் கூப்பிட்டேன், வரேன்னு சம்மதிச்சிடுத்து. நான் சமைக்கணும், கூட ஒத்தாசைக்கு நீ வேணும்.”

“தாராளமா இருக்கேம்மா…சந்தோஷமா இருக்கேன், முதல்ல பாயசம் வைங்க…”

“என்ன பாயசம்டி வைக்கலாம்..?”

“பால் பாயசம் வைங்களேன்.”

“சரி, வச்சுடலாம். மேல என்ன செய்யறது..?”

“அந்தப் பொண்ணுக்கு என்ன பிடிக்குமோ..?”

“அதைக் கேட்டுக்க மறந்துட்டேன்னுதான் நினைச்சுக்கிட்டிருக்கேன்…”

“ஃபிரிஜ்ல என்ன காய் இருக்குன்னு பாருங்களேம்மா…. அதுக்குத் தகுந்த மாதிரி சமைக்கலாம்.”

“கோஸ் இருக்கு, வெண்டைக்காய் இருக்கு. உள்ள சின்ன வெங்காயம் இருக்குதில்ல…”

“வெங்காய சாம்பார் வச்சிடலாம்மா..?”

“மேல….”

“கோஸ் கூட்டும், வெண்டைக்காய் கறியும் செய்யுங்க…”

“சரி, நீ காய் அரிஞ்சு தா, நான் போய் குக்கர் வைக்கறேன்.”

“ஏம்மா, பொண்ணு பேர் என்ன சொன்னீங்க..?”

“சித்ரா.”

மைத்து முடித்து, குளித்து, உடை மாற்றி, பூஜையறையில் குத்து விளக்கேற்றி வைத்து, “என்னப்பா முருகா… இந்தக் கல்யாணம் என் பிள்ளை மனசு போல நல்லபடியா நடக்கணும்ப்பா…” என்று வேண்டி நமஸ்கரித்து, வெளியில் வந்தபோது, சித்ராவின் கார் வந்து

நின்றது. கார்ச் சத்தம் கேட்டு, அந்தம்மாள் வாசலுக்கு வந்தாள். காரைவிட்டு இறங்கிய சித்ராவைத்தான் முதலில் பார்த்தாள். அவளது உயரமும், நிறமும், முகத்தில் தெரிந்த ‘பெரிய இடத்துப் பெண்ணும்’ பளீரென்று கண்ணில் அடித்தன. மனசு நிறைந்தது. ‘மதுவுக்கேற்ற உயரமும், நிறமுமாக எத்தனை அழகாக இருக்கிறாள்..!’

“வாம்மா…” வாய் நிறைய அழைத்தாள். உதட்டில் திருப்திகரமான புன்னகை ஓடிற்று.

“வணக்கம்மா….” கைகுவித்த சித்ரா, காரைவிட்டு இறங்காத ஷைலஜாவைப் பார்த்து அதட்டினாள். “ஏய்… இறங்குடி…”

இன்னமும் அதிர்ச்சியும், பிரமையும் நீங்காதிருந்த ஷைலஜா, சட்டென்று கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள். தன் புடவையையும் காதிலும் கழுத்திலும் ஒன்றும் போட்டுக் கொள்ளாமல் வந்து விட்ட கோலத்திலும் மனசு சங்கடப்பட்டது.

‘கடன்காரி. வீட்டிலேயே மதுவின் வீட்டிற்குப் போகப் போகிறோம் என்றிருந்தால், நன்றாக டிரஸ் பண்ணிக் கொண்டு வந்திருக்கலாம் இல்ல…?’

‘அவ சொன்னா….. இடத்தைச் சொல்லலையே தவிர, நல்லா டிரஸ் பண்ணிட்டு வரச் சொன்னா… நாம்தான் கேட்கலை’

‘ஆனாலும் இந்த சித்ரா, வேணும்னேதான் இப்படிச் செய்திருக்கா. தாள் மட்டும் பளிச்சுனு ரொம்ப அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு, நம்மை ஒரு வேலைக்காரி மாதிரி கூட வரவழைச்சிருக்கா…. அந்தம்மா என்ன நினைச்சுப்பாங்க…? ஏதோ ஒரு பொண்ணு கூட வந்திருக்குன்னு இல்ல

நினைச்சுப்பாங்க’

அவள் பயந்த மாதிரிதான் ஆயிற்று, ருக்மிணியம்மாள் ஷைலஜா பக்கம் திரும்பக்கூட இல்லை. பார்வை முழுதும் சித்ராவின் மீதே இருந்தது. அங்கம் அங்கமாய் கவனித்தது. கண், காது, மூக்கு. முகவாய், தலைமுடி, கை, பாதங்கள் எனக் கவனித்தது. ஒரு குறை இல்லை. குரல், பேச்சு

எல்லாம் ஸ்பஷ்டமாக வந்ததில் மனசு பரிபூரணமாக நிறைந்து கிடந்தது.

‘என் நெஞ்சுல பால் வார்த்தாயப்பா முருகா. இவ்வளவு லட்சணமான பெண்ணாகத் தேடிக் கொடுத்திட்ட. இப்படி இல்லாமல், இந்தக் காலத்துப் பொண்ணுங்க மாதிரி அரைகுறை டிரஸ்ஸும் ஆடம்பரமும், அலட்டலுமாக வந்து நின்றால், என்ன செய்திருக்க முடியும்… நிதானமும், பணிவும், அழகும், அடக்கமுமாக எப்படி இருக்கிறது இந்தப் பெண்….’

ஓடிப்போய் கணவருக்கு டெலிபோன் செய்து வரவழைக்க வேண்டும் போல் இருந்தது. ‘பார்த்தீங்களா நம்ம மதுவோட சாமர்த்தியத்தை…? எத்தனை லட்சணமான பெண்ணாகத் தேடிப் பிடிச்சிருக்கான்…’ பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால், தன்னை

அடக்கிக் கொண்டாள். மனதின் மகிழ்ச்சியை புன்னகையும், முகமலர்ச்சியுமாக வெளிக்காட்டியவளாகக் கூப்பிட்டாள்.

“வாம்மா… உள்ளே வா… உன் பேர் என்ன சொன்ன..? சித்ராதானே..! ரொம்ப சந்தோஷம்மா, நீ வந்ததுல.”

“உங்களை சந்திச்சதில் எனக்கும் சந்தோஷம்மா. ஏய் வாடி” ஷைலஜாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“இவ என் சினேகிதிம்மா, கிளாஸ் மேட். பேரு ஷைலஜா.”

“அப்படியா…?” அதிக சுவாரஸ்யமின்றி அவள்முகத்தை ஏறிட்ட ருக்மிணியம்மாள் நினைத்துக் கொண்டாள்.

‘இந்தப் பெண்ணும் நன்றாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் நிறம் மட்டு. என்றாலும், கண்ணும் மூக்கும் நல்ல தீர்மை. இன்னொரு பையன் இருந்திருந்தால், அவனுக்கு இந்தப் பெண்னை முடித்திருக்கலாம்..!’

அதோடு ஷைலஜா, பக்கம் அதிகம் திரும்பவில்லை. சித்ராவைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு வாஞ்சையாகத் தலை தடவி, வேலைக்காரப் பெண்ணை அழைத்து,

“கிருஷ்ணவேணி, நான் சொல்லலை… அந்தச் சித்ரா இவதான்.” “வணக்கம்மா.” பணிவாய் கை குவித்தது. வாய் நிறையச் சிரித்தது.

“நீ இங்க வேலை செய்யறியா கிருஷ்ணவேணி..?”

“ஆமாம்மா.”

“வீட்டோட இருக்கியா…?”

“ம்ஹும்…. வீட்டுக்குப் போயிடுவேன்.”

“அப்படியா…? இவ என் பிரெண்டு ஷைலஜான்னு பேரு. ரெண்டு பேரும் ஒண்ணா படிக்கிறோம்.”

“அப்படிங்களா..?”

கிருஷ்ணவேணியின் பார்வை ஷைலஜா பக்கம் திரும்பக்கூட இல்லை. சித்ராவின் முகத்திலேயே பதிந்து கிடந்தது. இமைக்க மறந்த மாதிரி இருந்தது.

“ஏய், என்னடி அப்படிப் பார்க்கற..? போய் ஜூஸ் கொண்டு வாடி.”

ருக்மணியம்மாளின் அதட்டலில் உணர்வு பெற்ற கிருஷ்ணவேணி கேட்டாள்.

“என்ன ஜுஸ்மா சாப்பிடறீங்க? எலுமிச்சையா, தக்காளியா, திராட்சையா..?”

“ஜுஸ் எல்லாம் வேணாம். ஒரு டம்ளர் தண்ணி கொடு: போறும். இப்போதான் சாப்பிடப் போறோமில்ல…”

‘ஜுஸ் வேணாம். பீயர் கொண்டு வந்து தா, குடிப்பா…’

ஷைலஜா, நாக்கு நுனிவரை வந்து விட்ட வார்த்தைகளை அடக்கிக் கொண்டாள். அதற்குமேல் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து ஓடிப் போய் விடலாம் போலிருந்தது. தன்னை அந்த அம்மாவோ கிருஷ்ணவேணியோ ஒரு பொருட்டாக மதிக்காதது தெரிந்தது.

பார்வை கூட தன் பக்கம் திரும்பாததைப் புரிந்து கொண்டாள். மனசு சங்கடப்பட்டது. அந்த வேலைக்காரப் பெண்ணைவிட, தான் தாழ்ந்து போய் நிற்பதாக நினைத்தாள்.

‘இப்படி என்று தெரிந்திருந்தால், வந்திருக்க வேண்டாம். வரமாட்டேன் என்றவளை, வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு வந்தாளே… இங்கு என்பது தெரிந்திருந்தால் அழகாக டிரஸ் பண்ணிக்கொண்டு வந்திருக்கலாம். தான் மட்டும் நன்றாக வந்து விட்டு என்னை இப்படிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாளே… வழக்கமாகப் போடும் ஜீன்ஸும் டாப்ஸும், சுடிதாரும் இன்றி புடவை கட்டி கழுத்திலும் காதுகளிலும் நகைகள் போட்டு, தலையை வாரி, ரப்பர் வளையமிட்டு ஒரு சுற்று பெரிதாகப் பொட்டு வைத்துக் கொண்டு… வேணுமென்றே திட்டமிட்டுச் செய்திருக்கிறாள்.

மதுவிடம் மட்டுமின்றி, அவருடைய அம்மா மனதிலும் இடம் பிடிக்கப் பார்க்கிறாள். கூடாது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. இங்கு நாம் ஜெயித்தாக வேண்டும். நம்மை நிலைநாட்டி கொள்ள வேண்டும். மதுவின் அம்மாவின் கவனம், நம் பக்கம் திரும்பும்படிச் செய்ய வேண்டும் என்ன செய்யலாம்….?”

அவள் யோசித்து கொண்டிருந்தபோதே சாத்துக்குடிப் பழச்சாறு வந்தது. தன் கண்ணாடி டம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டு ஷைலஜா திரும்பிய போது, டீபாயில் இடித்து, கையிலிருந்து நழுவிய டம்ளர் தரையில் விழுந்து, ‘சிலிங்’ எனத் தெறித்தது. சாத்துக்குடிச் சாறு தரையில் ஓடத் துவங்கிற்று.

“ஐயையோ.” என்று ஒரு வினாடி அரண்டு போனாள் ஷைலஜா. ருக்மணியம்மானின் முகம் மாறியது. மனதிற்குள் லேசாகக் கீறல் விழுந்தது.

‘என்ன இது… இந்தப் பெண் ஏன் கூட வந்தது.? சகுனத்தடை மாதிரி

டம்ளரைப் போட்டு உடைத்திருக்கிறதே ஒரு பெண்ணுக்குக் கவனம் வேண்டாம்….. அந்நிய இடம் என்கிற எண்ணம் வேண்டாம்… பெயரைப் பாரு. ஷைலஜாவாம் ஷைலஜா… நல்ல பேரு! நல்ல பொண்ணு… பூனைக்குட்டியை மடியில் கட்டிண்ட மாதிரி இதை ஏன் கூட்டிக்கிட்டு வந்திருக்கா சித்ரா..?”

அந்த அம்மாளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஷைலஜா, தயங்கித் தயங்கி எழுந்து நின்று சொன்னாள்.

“மன்னிக்கணும்மா. கை தவறிப் போச்சு. டீபாயில் இடிச்சதில நழுவிடுத்து.”

பதில் வரவில்லை ருக்மிணியம்மாளிடமிருந்து. அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை. சட்டென்று நிலைமையச் சமாளித்தாள் சித்ரா.

“அதனால் என்ன ஷைலு…? இதுக்கு ஏன் இப்படி ஃபீல் பண்ற… கண்ணாடி டம்ளரும் ஜுஸும்தானே… போனால் போகட்டும். நான் டீபாயில் இடிச்சிருந்தால்கூட இப்படித்தான் உடைஞ்சு போயிருக்கும். இல்லம்மா…”

“அது சரி.” என்று ருக்மிணியம்மாவின் வாயிலிருந்து சடாரென்று வார்த்தைகள் வந்துவிட்டன.

“நீ இடிச்சிருக்க மாட்ட சித்ரா. கவனமா இருந்திருப்ப… அதுதான் வித்தியாசம்.” என்றவள், “கிருஷ்ணவேணி, இந்த இடத்தைச் சுத்தம் பண்ணு. நாங்க போய் சாப்பாட்டு ரூம்ல உட்கார்றோம். வா, சித்ரா.” என்று எழுந்து கொண்டாள்.

ஷைலஜாவின் கண்கள் கலங்கின. துக்கம் தொண்டையை அடைத்தது. உள்ளே போகாமல் அப்படியே திரும்பிப் போய் விடலாமா என்று நினைத்தபோது வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டது. சிவப்பு நிற மாருதி உள்ளே நுழைவது தெரிய, அப்படியே நின்றாள் அவள்.

-தொடரும்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31