கலைவாணர் ஒரு சகாப்தம்

2 months ago
131

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் மணிமகுடமாகத் திகழ்பவர் என்.எஸ்.கிருஷ்ணன் அன்னாரது பிறந்தநாள் இன்று (நவம்பர் 29, 1908).

ரசிகர்களைச் சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன்.

பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங் களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார்.

பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. அதே நேரத்தில் அறிவியல் கருத்துகள் நாட்டில் பரவவேண்டும் என்பதிலும் ஆர்வம் கொண்டவர் என்.எஸ்.கே.

கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிடவில்லை, தமது வாழ்க்கை யிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர். உண்மையைச் சொல்லப்போனால், என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. அதற்கும்மேலே. இன்றைய பல நகைச்சுவை நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்.எஸ்.கே.தான் என்றால் அது மிகை யில்லை.

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பு அளப்பரியது.

தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலை முத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29ல் பிறந்தார். இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்திவந்த தபால் அலுவலகத்தில் தபால்களைக் கொண்டுசெல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். வறுமை யின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிப் படிப்பு நிறுத்தப் பட்டது.

இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால் அவர் குடும்ப வறுமையைச் சமாளிக்கத் தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார். இந்த வறுமையான குடும்பத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் ஏழைச் சிறுவனாகத் தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராகத் தனது கலையுலக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் நாடகத் துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார்.

1931ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, ஒருமுறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்றபோது, டி.எம். மதுரத்திடம் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துகொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். பின்னர், டி.எம்.மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி.எம்.மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.

நாடகத்திலிருந்து திரைப்படத் துறையில் நுழைந்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி.  ஆனந்த விகடனில் இவர் எழுதிய ‘சதிலீலாவதி’ தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ். வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். ஆனால், ‘சதிலீலாவதி’யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த ‘மேனகா’ படமே முதலில் திரைக்கு வந்தது. ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

இவரது சிறந்த குணத்திற்கு பல சம்பவங்களைச் சான்றாகக் கூறலாம்.

ஒரு தடவை, கலைவாணர் தனியாக திடீரென்று நள்ளிரவு 2 மணிக்கு பெங்களூருக்குப் புறப்பட்டார். சைதாப்பேட்டையைத் தாண்டி பரங்கிமலை வந்ததும், ரோடு ஓரம் ஒரு கோயிலில் தெருக்கூத்து நடந்துகொண்டிருந்தது. வாகனத்தை நிறுத்தச்சொல்லி, அங்கேயே போய் அமர்ந்துவிட்டார். காலை 5 மணிக்குக் கூத்து முடிந்ததும், அந்தக் கோயில் நிர்வாகிகள் இவருக்கு மாலை அணிவித்து, மரியாதைகள் செய்து, பிரசாதம் அளித்து, கோயில் திருப்பணிக்காக நன்கொடை கேட்டனர். பெங்களூரு செலவுக்காக வைத்திருந்த 500 ரூபாயையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு, பெங்களூரு செல் லாமல் வீடு திரும்பி விட்டார் என்.எஸ்.கே.

சிவாஜி நடித்த ‘அம்பிகாபதி’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் படத்தின்  பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசனுக்கும் நடிகர் திலகம் சிவாஜிக்கும் பயங்கர கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பத்திரிகைகளில் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டனர். கலையுலகப் பெருமையும் கலைஞர்களிடையே ஒத்துழைப்பும் கெட்டுவிடக் கூடாது என்பதில் கலைவாணருக்கு அதிக கவலை உண்டு. இருவரையும் அழைத்துப் பேசி, சமாதானப்படுத்தி, அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி, தின இதழ்களில், இருவரின் கூட்டு அறிக்கையைப் பெரிய அளவில் விளம்பரமாக வெளிவரச் செய்தார். இந்த விளம்பரச் செலவுகூட கலைவாணர் கொடுத்தது.

நாட்டை விட்டு மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான கொள்கை உடைய வராயிருந்தார் கலைவாணர். இதை பகிரங்கமாக உலகமறிய, ‘நல்ல தம்பி’ படத்தில் வரும் ‘இந்திர சபா’ தெருக் கூத்தில் சிறப்பாகப் பாடி, நடித்து தெளிவுபடக் காட்டி யிருக்கிறார். அவரைவிடவும் யாரும் மதுவின் தீமைகளையும், அது ஒழிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளையும், பாமரர் முதல் பண்டிதர் வரை சகலரும் உணரும் வண்ணம் விளக்கிக் காட்டியிருக்க முடியாது.

‘தாய்க்குப் பின் தாரம்’ படக் கதை, தயாரிப்பு போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆருக்கும் தயாரிப்பாளர் தேவருக்கும் பெரும் கருத்து வேற்றுமை ஏற்பட, படப்பிடிப்பு தொடர்ந்து வளராமல் நின்றுவிட்டது. அந்ச் சமயத்தில் தேவர், நஷ்டங்களைத் தாங்கக்கூடிய நிலையில் இல்லை. கொள்கை மற்றும் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்காத மனப்பான்மை கொண்டவர் எம்.ஜி.ஆர். எவர் சொன்னாலும் தன் நிலையிலிருந்து இறங்கமாட்டார். தேவரின் சிரமமான நிலையைக் கண்டு, துணிந்து எம்.ஜி.ஆருடன் பேசி, சமாதானப்படுத்திப் படப்பிடிப்புக்கு நாட்கள் வாங்கிக் கொடுத்தார் கலைவாணர்.

காந்தியடிகளிடமும் காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்குமேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடி களுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

இந்து நேசன் பத்திரிகை ஆசிரியர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதா நாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் என்.எஸ்.கே. சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட என்.எஸ். கிருஷ்ணன், மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் தான் என்.எஸ்.கே. குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

கலைவாணர் சிலை திறப்பு விழாவில்

தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்தக் கலைவாணர் அரங்கம் விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப் படுகின்றது. அங்குதான் தற்போது கொரோனா காலத்தில் தமிழக சட்டசபை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் என்.எஸ்.கே. பண்பான நகைச்சுவை விருந்து வைத்ததால் அவர் “கலைவாணர்” எனப் புகழப்பட்டார். அவர் ஒரு சகாப்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31