• தொடர்
  • தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 4 | தனுஜா ஜெயராமன்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 4 | தனுஜா ஜெயராமன்

2 months ago
154
  • தொடர்
  • தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 4 | தனுஜா ஜெயராமன்

திருச்சியின் பிள்ளையார் கோவில் தெரு. “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே” என பக்திப் பாடல் ஒலிக்க, ஊதுபத்தி வாசனையும் சாம்பிராணி வாசனையும் காற்றில் மிதந்துவர, கற்பூரத்தை பயபக்தியுடன் சாமி படங்களுக்குக் காட்டி கொண்டிருந்தாள் தனலட்சுமி.

காலை நேரப் பரபரப்புடன் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த வேதமூர்த்தி, “என்ன தனா… உன் பிள்ளை எழுந்தானா இல்லையா..? காலேஜ் போகலையா..?” என்றார் நக்கலுடன்.

“அவனை வம்புக்கிழுக்காட்டா உங்களுக்குத் தூக்கம் வராதே!.. இன்னைக்கு சனிக்கிழமை. கிரிக்கெட் கோச்சிங் போயிட்டு வந்து தூங்கறான்.”

“சரி சரி! உன் பிள்ளையை நான் எதுவும் சொல்லல்லே..! வரிஞ்சி கட்டிகிட்டு வராதே..! நான் போயிட்டு வரேன்..!” என ஆபீஸ் கிளம்பி விட்டார்.

அவர் போனதும் காலிங்பெல் அடிக்க, கதவை திறந்தால் அறிமுகமற்ற இளம்பெண். இருபத்தியெட்டு வயதிருக்கும். களையான முகம். அழகான தோற்றம். நாகரீகமாக உடுத்தியிருந்தாள். நெற்றியில் வைத்திருந்த சிந்தூர் திருமணமானவள் எனக் காட்டியது.

“ஆன்ட்டி..! நான் அம்ரிதா.. எதிர் வீட்டுக்குப் புதுசாக் குடி வந்திருக்கேன்.”

“ஓ… ஓ… வாம்மா..! உள்ளே வா..! ஆமாம், காலையில் கோலம் போடும்போது லாரியில் சாமான் இறங்கியதை பார்த்தேன்.. நீங்க தான் குடி வந்திருக்கீங்களா..?”

“ஆமாம் ஆன்ட்டி…ஒன்பது மணிக்கு பால் காய்ச்சுறேன்… வெத்தலை பாக்கு வாங்கிக்க வாங்க…” என்றாள்.

“சரிம்மா, வரேன்..!” என அவளை அனுப்பி விட்டு… வேலைகளைத் தொடர்ந்தாள்.

அதற்குள் பக்கத்து வீட்டு அம்புஜம் விடுவிடுவென ஓடி வந்தவள்… “அக்கா… அந்த புதுப்பொண்ணு உங்களை அழைச்சாளா..? பால் காய்ச்சறாங்களாம்..”

“ஆமாம் வந்தா..! இப்ப தான் சொல்லிட்டுப் போறா..! ஏன்..?”

“அவளும் கொழந்தையும் மட்டும் தான் இங்க இருக்கப் போறாங்களாமாம்.. புருஷனுக்கு டில்லியிலே வேலையாம்… மாசத்துக்கு ஒரு வாட்டி வருவாராமாம்…”

“அதுக்குள்ள இவ்வளவும் விசாரிச்சிட்டயா..? பலே ஆளு தான் நீ.. அதெல்லாம் நான் கேக்கலை..”

“சரிக்கா..! சரியா ஒன்பது மணிக்கு வரேன்..! நாம போயிட்டு வரலாம்க்கா.” என்று தன் வம்பை முடித்துக் கொண்டு கிளம்பினாள் பங்கஜம்.

ம்ரிதாவின் வீட்டில் அவளை போலவே செழுமை தெரிந்தது. அம்ரிதாவின் குழந்தை ஷ்ரதா கொள்ளை அழுகு. கணவன் சர்வேஷ் கூட ஹான்ட்சமாகவே இருந்தான்.

“உட்காருங்க..” என சோபாவைக் காட்டினாள். பங்கஜமும் தனலட்சுமியும் தயக்கத்துடன் அமர்ந்தனர்.

அம்ரிதா இருவருக்கும் காபி கொண்டு வந்து தந்தாள்.

காபியைச் சுவைத்தபடியே வீட்டை நோட்டம் விட்டனர். விலையுயர்ந்த பொருட்கள் பணத்திற்கு பஞ்சமில்லை என உணர்த்தின. அதற்குள் பொருட்களை ஓரளவு அடுக்கி வைத்திருந்தனர்.

அம்ரிதாவின் கணவர் சர்வேஷ்… அவரை அறிமுகப்படுத்தி கொண்டு.. “நான் டெல்லியில் வேலை செய்யறேன். இரண்டு மாசத்துக்கு ஒருமுறை தான் வரமுடியும்.. நீங்க தான் அம்ரிதாவையும் கொழந்தையையும் பாத்துக்கணும்..” என்றார் பல நாட்கள் பழகியவரை போல தயக்கமேயில்லாமல்…

“ஓ..! அதுக்கென்ன..? நீங்க கவலைபடாம போய்ட்டு வாங்க ..நாங்க பாத்துக்கறோம்..” என இளித்தாள் பங்கஜம்.

பேச்சுக்கிடையில்… “நானும் அம்ரிதாவும் டெல்லியில தான் இருந்தோம். அம்ரிதாவிற்கு வீசிங் ப்ராப்ளம் இருக்கு. டெல்லி குளிர் ஒத்துக்கலை.. அதான் குழந்தையுடன் இங்க வந்துட்டோம்..”

“அப்படியா..?”

“ட்ரான்ஸருக்கு அப்ளை பண்ணியிருக்கேன். ஆறுமாசம் ஆகும்னு சொல்லியிருக்காங்க. அதுவரை இவங்க அங்க கஷ்டபடவேணாம்னு தான் இங்க வந்துட்டோம். தவிர ஷ்ரதாவை ப்ரீ கேஜி சேக்கணும்.. இங்கயே படிக்கட்டும்னு வந்தாச்சு..” என்றார்.

“தாம்பூலம் எடுத்துக்கங்க..” என்றாள் அம்ரிதா.. வெற்றிலை பாக்குடன் ஜாக்கெட் பிட்டும், அழகான பித்தளையில் மயில் வடிவக் குங்கும சிமிழ் ஒன்றும் வைத்து தந்தாள்.

வாய்கொள்ளாச் சிரிப்புடன் தாம்பூலம் பெற்று கொண்டு வெளியே வந்தனர் பங்கஜமும் தனலட்சுமியும்..

“அக்கா.. வசதியானவங்க போல… யாராவது பால் காய்ச்சுறதுக்கே இவ்வளவு வைச்சுத் தருவாங்களா..?” என்றாள் மகிழ்வுடன்.

“ஒருவேளை வடநாட்டுப் பழக்கமோ என்னவோ…” எனச் சொல்லிவிட்டு, “நான் வரேன் பங்கஜம். முகேஷூக்கு தோசை சுட்டுத் தரணும்.”

“சரிக்கா…” என அவள் வீட்டுக்குச் சென்றாள் பங்கஜம்..

தன்பிறகு கத்தி தேவை, கத்தரிக்கோல் தேவையென அடிக்கடி வந்து போனாள் அம்ரிதா..

“ஆன்ட்டி..! இங்க டிபார்மெண்ட் ஸ்டோர்ஸ் பக்கமா..?” எனக் கேட்டபடி உள்ளே வந்தாள் அம்ரிதா.

முகேஷூக்கு உள்ளே தோசை சுட்டு கொண்டிருந்த தனலட்சுமி, “பக்கந்தான். அடுத்த தெருவில் நாலாவது கடை” என கத்திச் சொன்னாள்.
“ஏம்மா கத்துற..?” என உள்ளேயிருந்து எழுந்து வந்த முகேஷ்… அம்ரிதாவைப் பார்த்து சட்டென அடங்கினான்.

‘யாரிவள்..? ஸ்லீவ்லெஸ், ப்ரீ ஹேர் என ஸ்டைலாக இருக்கிறாள். திருச்சிக்கு சம்பந்தமில்லாத ட்ரெஸ்ஸிங் சென்ஸ்..’ என வியந்து நோக்கினான்.

அம்ரிதாவும் முகேஷைப் பார்க்க.. “என் பையன். காலேஜ் மொத வருஷம் படிக்குறான்..” என அறிமுகப்படுத்தினாள்.

அம்ரிதா, முகேஷைப் பார்த்துச் சிரித்து கொண்டே.. “ஹலோ” என்று சொல்ல….

தயக்கமாக வெறும் தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

“சரிங்க ஆன்ட்டி.. சர்வேஷை அனுப்பி வாங்கிக்கறேன்..” என முகேஷின் தயக்கத்தை ரசித்தவாறு அவனை உற்றுப் பார்த்தபடியே சென்றுவிட்டாள்.

“யார்ம்மா இது..?”

“எதிர் வீட்ல புதுசாக் குடி வந்திருக்காங்கடா..! பேரு அம்ரிதா..! டெல்லியில் இருந்து வந்திருக்காங்க..” என்று சொல்லிவிட்டு தோசையைச் சுடச் சென்றாள்..

அவள் சென்ற பின்பும் அவளின் பர்ப்யூமின் மணம் வீடெங்கும் வந்து கொண்டிருந்தது. ‘எவ்வளவு அழகாக, நாகரீகமாக இருக்கிறாள்..?’ என முகேஷின் மனம் நினைத்தது.

அந்த அழகு ஆபத்தானது. அது தன் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடப் போகிறது என முகேஷூக்கு அப்போது புரியவில்லை.

-தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31