எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 11 | இந்துமதி

2 months ago
110

தொலைபேசியைப் பார்த்ததும் கை குறுகுறுத்தது சித்ராவிற்கு. யாருடனாவது பேசு பேசு என்றது. வழக்கமாக இருந்தால் ஷைலஜாவிற்கு போன் பண்ணியிருப்பாள், இருவரும் மணிக்கணக்கில் அறுத்திருப்பார்கள். மகாபலிபுரம் போய் வந்ததிலிருந்து இருவருமே அதிகம் பேசுவது குறைந்து போயிற்று. கலகலப்பாகப் பழகினது நின்று போயிற்று. இணை பிரியாமல் இருந்தது விலகிப் போயிற்று. கல்லூரியில் பார்த்தால்கூட ‘ஹாய்’ சொல்லிப் பிரிந்தார்கள். பேசப் பிடிக்காமல் நகர்ந்தார்கள். அவர்களது வகுப்பிலிருந்த அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்கள். என்ன விஷயம் என்பதைத் தெரிந்து கொள்கிற ஆர்வத்தில் நுழைந்து பார்க்க முற்பட்டார்கள். முதலில் அவர்கள் ஷைலஜாவிடம் கேட்டிருந்தால் வெகுளித்தனமாக உளறியிருக்கக் கூடும். ஆனால் நல்லகாலமாக சித்ரா இருந்தபோது கேட்டதால் பளிச்சென்று பதில் சொன்னாள். மீண்டும் கேட்க இயலாத வகையில் வாயில் அடித்தாள்.
“என்னப்பா… நகமும் சதையும் மாதிரி இருந்தீங்க. உங்களுக்குள் என்ன ஆச்சு..?”
“நாங்க எங்களுக்குள் ஏதோ பெட் வச்சுண்டிருக்கோம். அது எங்க பர்ஸனல் மேட்டர். அதுல யாரும் தலையிட அனுமதி இல்லை. அந்த பெட் முடிகிற வரை இப்படித்தான் இருப்போம். யூ பீப்பிள் ஹேவ் எனி அப்ஜெக்ஷன்..?”
கேட்டவர்கள் முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டார்கள். அதனால் அப்போது ஷைலஜாவிடம் பேச முடியாது என்பதால் வேறு யாரிடம் பேசலாம் என போசித்தாள்.
மதுவின் நினைவு வர டைரக்டரி புரட்டி தொலைபேசி எண்களைச் சுழற்றினாள். மறுபக்கம் எடுக்கப்பட்டது.
“ஹலோ… மது இருக்காரா..?”
“நீங்க யார் பேசறது..?”
“சித்ரா.”
“சித்ரான்னு சொன்னால் தெரியுமா..?”
“தெரியும். ரொம்ப நல்லாத் தெரியும்.”
“அப்படியா..?”

“ஆமாம்… நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?”
“மதுவோட அம்மா.”
சட்டென்று குரலைத் தழைத்துக் கொண்டாள் சித்ரா. பவ்யமாக்கிக் கொண்டாள்.
“அம்மா! நீங்களா..? மன்னிக்கணும். நான் யாரோன்னு நினைச்சு கேள்வி கேட்டுட்டேன்.”
“நீ எங்கேம்மா கேள்வி கேட்ட..? நான் தானே கேட்டேன்…?”
“இல்லம்மா… வந்து….”
“உன் பேர் என்ன சொன்ன..?”
‘“சித்ரா.”
“சித்ரா, நேர்ல வரியாம்மா..?”
“எங்கம்மா..?”
“எங்க வீட்டுக்கு.”
“உங்க வீட்டுக்கா…?”
“ஆமாம். நான் கார் அனுப்பி கூப்ட்டுக்கட்டுமா?”
“வேணாம்மா. இங்கேயே கார் இருக்கு.”
“அப்படின்னா கிளம்பி வாயேன்.”
“எதுக்கும்மா…?”
“உன்னை நேராப் பார்க்கிறதுக்குத்தான்.“
“என்னையா..?”
“உன்னைப் பத்தி அவன் என்கிட்ட பேசியிருக்கான்.”
“எப்போம்மா..?”
“நீதானே அவன் கூட மகாபலிபுரம் போனது..?”

“நானும் என் பிரெண்டும்.”
“அன்னிக்குக் காலைலதான் இதைப் பத்தி பேசினான். வந்து விவரமா சொல்றேன்னான். இன்னிவரை உட்கார்ந்து பேச நேரம் இல்லை. ஓடிட்டிருக்கான்.”
“அப்படியா…?”
“நீ நேர்ல வாயேன். எல்லாம் பேசிக்கலாம்.”
சித்ரா தயங்கினாள்,
“என்னம்மா தயங்கற …? வீட்ல நான் மட்டும் தாம்மா இருக்கேன்…”
“அவர் இல்லையாம்மா….?”
“யாரைக் கேட்கற…? என் வீட்டுக்காரரையா..?”
“இல்லைம்மா…மது…”
“ஓ… உன் வீட்டுக்காரனைக் கேட்கறியா? இல்லை. வெளில போயிருக்கான்.”
அதிர்ந்து போனாள் சித்ரா.
“என்ன பேசாமல் இருக்க..? நாளைக்கு வீட்டுக்காரனாகப் போறவன் தானே….?”
“அதில்லைம்மா…வந்து…”
“அதான் வரச் சொல்றேன். நேர்ல வா பேசிக்குவோம்ன்றேன்.”
“சரிம்மா, வரேன்.”
“இப்பவே வரியா..?”
“இன்னும் அரைமணி நேரத்துல வரேன்.”
“அரை மணியா..? எதுக்கு..? நீ எங்க இருக்க..?”
“இன்னிக்கு சனிக்கிழமை. காலேஜ் லீவுன்றதால் நான் இன்னும் குளிக்கலை. குளிச்சு டிரஸ் பண்ணிண்டு வந்துடறேன்.”

“இங்க சாப்பிடற மாதிரி வா.”
“சரிம்மா.”
யோசித்தவாறே குளிக்கப் போனாள் சித்ரா. மது, ஷைலஜாவைப் பற்றிப் பேச்செடுத்திருக்கிறான், அந்தம்மாள் அதுதான் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஷைலஜாவையும் கூட அழைத்துக்
கொண்டு போனால் என்ன என்று தோன்றிற்று. உடனே கார்ட்லெஸ் தொலைபேசியை எடுத்து ஷைலஜாவைக் கூப்பிட்டாள்.
“என்னம்மா சித்ரா எப்படி இருக்க? என்ன, உன்னை இந்தப் பக்கம் காணோம்..?”
“கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். ஷைலு இருக்காளா மாமி…?”
“இருக்கா… குளிச்சுண்டிருக்கா….”
“அட..! நான் கூட குளிச்சுண்டுதான் இருக்கேன். என்ன ஒற்றுமை பார்த்தீங்களா எங்களுக்குள்ள…”
“குளிச்சுண்டிருக்கேன்ற, பின்ன எப்படி டெலிபோன் பேசற..?”
“கார்ட்லெஸ் டெலிபோன் மாமி.”
“என்ன..?”
“ஒண்ணுமில்ல மாமி, பாத்ரும்லயும் டெலிபோன் இருக்கு.”
“உனக்கென்ன சொல்லு…. எங்க வேணா டெலிபோன் வச்சுக்கலாம்.”
“ஏதோ கடவுள் புண்ணியம் மாமி, சரி நான் இப்போ அங்கே புறப்பட்டு வரேன், ஷைலு கிட்ட சொல்லுங்க.”
“சாப்பிட வரியா..?”
“ம்ஹூம், சாப்பாட்டுக்கு அவளையே வெளில கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன்.”

“எங்க..?”
“ஒரு பிரெண்டு வீட்டுக்கு.”
“சரி, சொல்றேன்.”
“பத்து நிமிஷத்துல வந்துடறேன். ஷைலஜாவை ரெடியா இருக்கச் சொல்லுங்க.”
தொலைபேசித் தொடர்பைத் துண்டித்து அவசரமாகக் குளித்து விட்டு வந்தாள். எப்போதும் சுடிதாரிலும் மிடியிலும் இருப்பவள் பதவிசாகப் புடவை உடுத்துக் கொண்டாள், தலை வாரி ரப்பர் வளையமிட்டு நெற்றியில் கணிசமாகப் பொட்டு வைத்துக் கொண்டாள். அலமாரி திறந்து கையில் ஆறு தங்க வளையல்கள், கழுத்துச் சங்கிலி, காதுத் தோடு எனப் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் பார்த்த போது திருப்திகரமாக உணர்ந்தாள். பெண் பார்க்க வந்தால் செய்து கொள்கிற அலங்காரம் மாதிரி இருக்கிறதோ எனவும் கேட்டுக் கொண்டாள். நான் இப்போ ஆண் பார்க்கப் போகிறேனா… பெண் பார்க்கிற வழக்கத்தை நிறுத்தி விட்டு ஆண்
பார்க்கிற வழக்கம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றிற்று. பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிட்டு போய் லெட்டர் போடறோம்னு சொல்லி விட்டு வரலாம். கடிதம் எழுதாமலே இருக்கலாம். இவன் கறுப்பு அவன், குள்ளம், இவனுக்குப் பல் எடுப்பாக இருக்கிறது. கொஞ்சம் குண்டாக இருக்கிறான், தொப்பை விழுந்திருக்கிறது, தலை வழுக்கை என்றெல்லாம் சொல்லி தட்டிச் கழிக்கலாம். பழைய காலத்தில் அந்த முறைதானே இருந்தது. சுயம்வரம்ன்ற போலதானே நடந்தது…? எப்போது அது மாறிற்று? யார் மாற்றினார்கள்?

யார் மாற்றியிருந்தால் என்ன? மாறிப் போயிருப்பது நிஜம். அந்த நிஜத்தைச் சற்று மாற்றினால் என்ன..? மது, ஷைலஜாவைப் பெண் பார்க்க வருவதற்கு பதிலாக அவளைக் கூட்டிக் கொண்டு போய் காட்டலாம்.
தீர்மானித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள். காரை தானே ஓட்டிக் கொண்டு ஷைலஜாவின் வீட்டிற்குப் போனாள். ஷைலஜா குளித்து வெறும் ஹவுஸ் கோட்டில் இருப்பதைப் பார்த்து மெலிதாகக் கோபப்பட்டாள்,
“ஏய்… என்னடி இது…? இப்படி ஹவுஸ் கோட்டில் உட்கார்ந்துட்டிருக்க..? அம்மா சொல்லலை…”
“என்ன…?”
“நான் வந்து வெளில கூட்டிட்டுப் போகப் போறேன். தயாரா இருக்கச் சொல்லுங்கன்னு சொன்னேனே… சொல்லலை…”
“சொன்னாங்க..”
“பின்ன ஏன் தயாரா இல்லை..?”
“நான் வரலை.”
“ஏன்..?”
“எனக்குப் பிடிக்கலை…”
“எது பிடிக்கலை..? வெளில போறதா..? இல்ல என் கூட வர்றதா..?”
ஷைலஜா பேசாமலிருந்தாள்.
“சொல்லு, எது பிடிக்கலை..?”
“………………….”

“என்னைப் பிடிக்கலைன்னு நான் எடுத்துக்கலாமா?”
“மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா..?”

“என்னைப் பிடிக்காமல் போக நான் என்ன தப்பு செய்திட்டேன்.”
“சரி. நீ பேசலைன்னால் உங்க அம்மாவைக் கூப்பிட்டு எல்லாம் சொல்றேன். மதுவைப் பற்றி, நமக்குள் ஏற்பட்ட பந்தயம் பற்றி, நாம் மகாபலிபுரம் போனது பற்றி, நான் நடந்துக்கிட்டது பற்றி எல்லாம் சொல்றேன்.”
“ஏய்…என்ன பிளாக்மெயில் பண்றியா..?”
“அதெல்லாம் நிஜம்தானே பொய் இல்லையே..?”
“பிளாக்மெயில் பண்றவன் கட நிஜத்தை வச்சுத்தான் பண்ணுவான். பொய்யை வச்சு பண்ண முடியாது. பண்ணினாலும் யாரும் கவலைப்பட மாட்டாங்க.”
“குட். சமயத்துல நீ கூட அழகாப் பேசற…”
“உண்மைக்கு இருக்கிற அழகு பேச்சுல வர்றது.”
“சரி, போறும்டி விதண்டாவாதம். எழுத்து மடமடன்னு டிரஸ் பண்ணிக்க….அழகா பண்ணிக்க…”
ஷைலஜாவின் கையைப் பற்றி இழுத்தாள் சித்ரா. சடேரென்று கையை உதறிக் கொண்டாள் ஷைலஜா. சித்ராவின் கை அந்த வேகத்தில் மேஜை மீது மோத, ‘அம்மா…’ என்று அலறினாள். அதைக் கேட்ட ஷைலஜாவின் அம்மா அறைக்குள் ஓடி வந்தாள்.
“என்னம்மா… என்ன..?”
“ஒண்ணுமில்லம்மா. மேஜைல இடிச்சுண்டுட்டேன்.”
“எங்க காட்டு… நீவி விடறேன்.”
“அதெல்லாம் வேணாம். ஷைலஜாவை முதல்ல கிளம்பச் சொல்லுங்க. வெளில வர மாட்டேன்னு அடம் பிடிக்கறா..”

“ஏய்… என்னடீ இது..? கிளம்புடீ..”
“ம்ஹும், வேணாம்மா. எனக்குப் பிடிக்கலை”
“நீ கூப்பிடற போதெல்லாம் உனக்காகக் காரைப் போட்டுண்டு அவ ஓடி வரணும். ஆனால் அவ கூப்பிட்டா நீபோக மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறதா..? எழுந்து புடவை கட்டிண்டு கிளம்பு. நாலு மனுஷா வேணும்ன்ற எண்ணமே இந்தக் காலத்துப் பசங்களுக்கு இல்லை..”
“ஏம்மா இப்போ வெளிய வரலைன்னால் மனுஷா வேணாம்னா அர்த்தம்..?”
“சும்மா பேசிண்டே இருக்காதே, சீக்கிரம் கிளம்பற வழியைப் பாரு”
ஷைலஜா முகத்தைத் தூக்க வைத்துக் கொண்டு, சாதாரண வாயில் புடவையைக் கட்டிக் கொண்டாள்.
“இந்தப் புடவை வேணாம் ஷைலு. நல்லதா எதாவது கட்டிக்க…” -சித்ரா சொன்னாள்.
“புடவைகூட உன் இஷ்டத்துக்குத்தான் நான் கட்டிக்கணுமா..?”
“உன் நல்லதுக்குத்தான் நான் சொல்றேன்.”
“தெரியுமே. எனக்கு நீ எவ்வளவு நல்லது செய்வேன்றது தெரியும்.”
“சொன்னால் கேள் ஷைலு. பளிச்சுன்னு அழகா வாடி. இந்த மாதிரி அழுது வடியற புடவை வேணாம்..”
“அது என் இஷ்டம். நான் இப்படித்தான் வருவேன். இப்படியே கூட்டிட்டுப் போறதானால் சரி. இல்லைன்னால் விட்டுடு.”
“சரியான வேதாளம்டி நீ. சமயத்துல முருங்கை மரம் ஏறிடற. சரி வா. நாங்க வரோம்மா.”

“எப்போ திரும்பி வருவீங்க..?”
“மூணு மணிக்குள்ள வந்துடுவோம். ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு.”
“எதுக்கு..?”
“ஷைலுவைக் கிளப்பி அனுப்பினதற்கு.”
“இதுக்கு என்ன தாங்க்ஸ்.? சாப்பிட வர மாட்டீங்களா..?”
“ம்ஹும். மாட்டோம். வரோம்.”
காரில் போனபோது சித்ரா சொன்னாள்.
“நாம் இப்போ எங்கே போறோம் தெரியுமா..?”
அவள் முகத்தைப் பார்க்ல பிடிக்காமல் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த ஷைலஜா கேட்டாள்.
“எங்கே..?”
“மதுவின் வீட்டிற்கு.”
“என்ன..?” -பளீரென்று திரும்பினாள் ஷைலஜா.

–தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31