இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்

2 days ago
65

பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத காலத்தில், கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியால் இந்தியாவின் முதல் பெண் விமானி ஆன சரளா தாக்ரலின் 107வது பிறந்த நாள் இன்று/

சரளா தாக்ரல், டெல்லியில், 1914-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிறந்தார். அதன் பின்னர் இவருடைய பெற்றோர் இன்றைய பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு குடிபெயர்ந்தனர். லாகூரில், தனது 16-வது  வயதில் பி. டி.ஷர்மா என்பரை மணந்தார்.

பி.டி.ஷர்மா குடும்பத்தினருக்குச் சொந்தமாக ‘ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி’ என்ற விமான நிறுவனம் இருந்தது. பத்ரிநாத்திற்கும் ஹரித் துவாருக்கும் இடையே அந்நிறுவனம் தன் பயணச் சேவையை நடத்தி வந்தது. அந்நாட்களில், சரளாவின் கணவர் குடும்பத்தில் 9 பேர் விமானியாக இருந்தனர்.

இந்தியாவில் முதன்முதலில் ஏர்மெயில் விமானியாக உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி. டி.ஷர்மாதான். அவர், கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில் பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.

சரளாவையும் விமானி ஆக்குவதில் அவரது கணவரும், கணவரின் தந்தையும் ஆர்வமுடன் இருந்தனர். ஷர்மாவின் தந்தை, சரளாவை லாகூர் ஃப்ளையிங் கிளப்பில் சேர்த்து டிம்மி தஸ்த்தூர் என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார். அவர், சரளாவிற்கு 8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு, தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார்.

ஆண்கள் கார் ஓட்டுவது கூட அபூர்வமாக இருந்த காலத்தில் புடவை அணிந்து விமானம் ஓட்டிய சரளா தாக்ரல் இந்தியாவின் முதல் பெண் விமானி!

பழமைவாதமும், மூடநம்பிக்கைகளும் கைகோர்த்துக் கோலோச்சிய 1930-களி லேயே விமானத்தை வெற்றிகரமாக இயக்கிப் பறந்தவர் இவர்! விமானம் ஓட்டும் உரிமம் பெற்ற பின்பு லாகூர் விமானப் பயிற்சிக்கழகத்தின் மூலம் 1,000 மணி நேரம் விமானத்தைத் தனியாக சர்வசாதாரணமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் ஆங்கிலேய அரசு இவருக்கு ஏ கிரேடு விமான ஓட்டுநர் உரிமம் வழங்கியது. இத்தகைய உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியும் இவரே!

உலக வரலாற்றில் முதன் முதலில் ரைட் சகோதரர்களால் நார்த் கரோலினா மாநிலத்தின் கிட்டி ஹாக் என்னுமிடத்தில் டிசம்பர் 17, 1903 அன்று வெற்றிகரமாக விமானம் பறக்கவிடப் பட்டது. உலக அளவில் பல நாடுகளில் பல நிறுவனங்கள் விமான சேவையில் 1909ஆம் ஆண்டு முதல் இறங்கின.

வான் பயணத்தின் பொற்காலம் எனக் கருதப்பட்ட காலம். முதலாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் வரையில் உள்ள இடைப்பட்ட காலமாகும். இக்காலம் விமானங்களின் தொழில்நுட்பமும் எண்ணிக்கையும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி யடைந்த காலமாகும்.

இக்காலத்தில் விமான சேவை வணிக அளவில் வளர்ந்தபொழுது பல விமானிகள் தோன்றினர். அவர்களில் மகளிர் பலரும் அடங்குவர். அமெரிக்கா வின் ஹரியெட் குயிம்பி என்பவரே 1911-ஆம் ஆண்டு விமானி உரிமம் பெற்று விமானத்தில் பறந்த முதல் பெண்.

இவர் விமானி உரிமம் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பெண் விமானியாக சரளா தாக்ரல் விமானி உரிமம் பெற்றார்.

தற்காலத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம் (அக்கால இந்தியாவில் தனி யார் நிறுவனமாக ஜே.ஆர்.டி டாட்டாவும் அவர் குடும்பத்தினரும் தொடங்கிய வர்த்தக விமான சேவை) தொடங்கப்பட்டு நான்காண்டுகளே ஆகியிருந்த காலகட்டத்தில் பெண்கள் மட்டு மல்ல, பெரும்பான்மையான ஆண்களும் கார் ஓட்டுவது கூட அரிதாக இருந்த காலகட்டத் தில், சரளா விமானியானது வியப்பூட்டும் சாதனை!

அதிகாரபூர்வமாக 1936-ஆம் ஆண்டு ஜிப்சி மாத் என்ற சிறு வகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார். அப்பொழுது சரளாவிற்கு வயது 21 தான். தான் வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார்.

இவர் விமானம் ஓட்டக் கற்ற பிறகே கார் மற்றும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதாகப் பின் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப் படாத அக்காலத்தில், தான் விமானி பயிற்சி பெறத் தனது குடும்பம், கணவர், உடன்பயின்ற மாணவர்கள், ஆசிரியர் என அனைவரும் மிகவும் ஆதரவு கொடுத்ததாகக் கூறிய இவர், இவரது நோக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே ஆள் ஃப்ளையிங் கிளப்பில் வேலை செய்த ஒரு ஊழியர் மட்டுமே என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். முதல் பெண் விமானியாகப் பறந்ததற்குப் பிறகு தனியாக லாகூர் ஃப்ளையிங் கிளப் விமானம் ஒன்றில் ஆயிரம் மணி நேரம் பறந்த பிறகு விமானியாக உரிமம் பெற்றார்.

இவர் கணவர் பி.டி.ஷர்மா ஒரு விமான விபத்தில் 1939ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பிறகு தொழில்முறை விமானியாகத் தகுதி பெற விரும்பி இவர் ஜோத்பூர் சென்றார். அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியதால் உள்நாட்டு விமானப் பயிற்சிகள் தடைபட்டது. எனவே, தனது தொழில்நிலை விமானியாகும் திட்டத்தை ஒத்தி வைத்து விட்டு மீண்டும் லாகூர் சென்று மேயோ கலைக் கல்லூரியில் ஓவியங்கள் கற்று வங்காள முறை ஓவியத்தில் நுண்கலையில் பட்டயப் படிப்பை முடித்தார்.

இந்திய நாடு சுதந்திரம் அடையும் நாள் அருகில் வரும்பொழுது பாகிஸ்தா னில் கலவரங்கள் அதிகரித்தது. அக்காலத்தில் பெண்கள் அவர்களது கணவர் அல்லது வீட்டில் பிற ஆண்கள் இறக்க நேர்ந்தால் எதிரிகள் கையில் சிக்கிச் சீரழியாமல் இருக்க, நஞ்சுண்டு உயிரை மாய்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு நச்சுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதனால் கைம்பெண்ணாக இரு சிறுமிகளுடன் இருந்த சரளாவை டெல்லிக்குச் சென்று விடும்படி ஆலோசனை வழங்கினர் சிலர். அவரும் நிலைமையை உத்தேசித்து தனது மகள்களுடன் புகைவண்டியில் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார்.

டெல்லியில் ஓவியங்களை வரைந்தும், ஆடை ஆபரணங்களை வடிவமைத் தும் விற்பனை செய்து ஒரு தொழிலதிபராக சரளா வாழ்க்கையைத் தொடங்கினார்.

மகரிஷி சாமி தயானந்த சரஸ்வதி தொடங்கிய ஆரிய சமாஜத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார் சரளா. அதன் கொள்கைகளாகிய பெண் கல்வி, விதவை மறுமணம் போன்ற வற்றை பெண்களிடம் பரப்பி வந்தார். அப்படி ஒருமுறை விதவைப் பெண் ஒருவரிடம் சரளா மறுமணத்தின் அவசியம் பற்றிப் பேசியபோது “நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது?” என்று அவர் திருப்பிக் கேட்டார். ஆரிய சமாஜத்தின் பிற உறுப்பினர் களும் அந்தப் பெண்ணின் கருத்தை வரவேற்றனர். தக்ரல் என்ற முற்போக்குச் சிந்தனை யாளர் சரளா மனதைக் கவர்ந்தார். இதன் காரணமாக 1948ஆம் ஆண்டு அவர் தக்ரலை மறுமணம் புரிந்தார்.

தனது தொழில்முறை விமானி பயிற்சியினைத் தொடர்ந்த சரளா 1948ஆம் ஆண்டு தொழில்முறை விமானி உரிமமும் பெற்றார். அப்பொழுது செய்தித் தாளில் வெளிவந்த, ராஜஸ்தான் அரச குடும்பத்தின் அரச குடும்ப விமானத் திற்குப் பெண் விமானி தேவை என்ற விளம்பரத்திற்கு விண்ணப்பித்தார். ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானி யாக ஆறு மாதங்கள் வேலை செய்தார்.

95 வயது வரை வாழ்ந்து, மார்ச் 15, 2009ல் உயிர் நீத்தார் சரளா. தனது வாழ்நாளின் பிற்பகுதியில் ஆடை ஆபரணங்களை வடிவமைக்கும் பணியில் முழு ஈடுபாடு காட்டினார். அச்சுப்பட்டை ஓவியங்களால் இவர் வடிவமைத்த சேலைகளும், கைவினை ஆபரணங் களும் பலராலும் அந்தக் காலத்தில் பெரிதும் விரும்பப்பட்டன. அவரது வாடிக்கையாளர் களில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டும் ஒருவராக இருந்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930