• தொடர்
  • பயணங்கள் தொடர்வதில்லை | 4 | சாய்ரேணு

பயணங்கள் தொடர்வதில்லை | 4 | சாய்ரேணு

4 days ago
90
  • தொடர்
  • பயணங்கள் தொடர்வதில்லை | 4 | சாய்ரேணு

3   ஆடை

“வணக்கம் மேம். நீங்க காலேஜ் புரொஃபஸர் இராணி கந்தசாமி தானே?” என்று கேட்டாள் அந்த இளம்பெண். பளீரென்ற தோற்றம். அழகான, பொருத்தமான ஆடை. இராணிக்கு அவளைக் கண்டதுமே பிடித்துப் போய்விட்டது.

“வரும் ஆனா வராதுன்னு நீங்கள்ளாம் ஒரு ஜோக் சொல்வீங்களே, அந்த மாதிரி உன் கேள்விக்குப் பதில் – ஆமா ஆனா இல்லை!” என்றாள் இராணி கந்தசாமி புன்னகையுடன்.

அந்தப் பெண் விழித்தாள்.

“நான் காலேஜ் புரொபஸர்தான், ஆனா இப்போ ரிடையர் ஆகிட்டேன்” என்றாள் இராணி கந்தசாமி.

அந்தப் பெண் சிரித்தாள். “ஹலோ மேம். ஐ ஆம் மாயா” என்றாள்.

இத்தனை நேரம் சாமான்களைப் பர்த்துக்குக் கீழே ஒழுங்குபடுத்துவதற்காகக் குனிந்திருந்த இன்னொரு பெண் நிமிர்ந்தாள். “நான் சாயா” என்றாள்.

அவளைக் கண்டதும் இராணி திடுக்கிட்டுப் போனாள். “நீ… நீ…” என்றாள்.

“அவளோட ட்வின்” என்றாள் அந்தச் சாயா சிரித்தவாறே.

“ஓ… இருந்தாலும் இப்படி ஒரு ஒற்றுமையை நான் பார்த்ததேயில்லை, அதான் ஷாக்காகிட்டேன். மை காட், உங்க வாய்ஸ்கூட ஒண்ணா இருக்கே!” என்று வியந்தாள் இராணி.

அதற்கு அவர்கள் பதிலளிப்பதற்குமுன் “என்னம்மா, லக்கேஜெல்லாம் எடுத்து வெச்சுட்டீங்களா? ஏதாவது உதவி வேணுமா?” என்றவாறே கேபினுக்கு உள்ளே வந்தவரைப் பார்த்ததும் மேலும் திடுக்கிட்டாள் இராணி.

“நீ… நீங்க…” என்று அவரும் தடுமாறினார்.

அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்கள் மாயா, சாயா. “அப்பா, இவங்க மிஸஸ் இராணி கந்தசாமி” என்றாள் மாயா.

அவர் “தெரியும்” என்று சொல்ல முயன்று வார்த்தை வராமல் நின்றார்.

“மேடம், இவர் எங்கப்பா. மிஸ்டர் கிருஷ்ணகுமார்” என்று அறிமுகம் செய்தாள் சாயா.

“எனக்கு உங்கப்பாவை நல்லாவே தெரியும்மா” என்றாள் இராணி, பற்களைக் கடித்துக் கொண்டு.

சிறிய மௌனம்.

“உட்காரலாமே” என்றாள் சாயா.

மாயாவும் சாயாவும் பர்த்களின் ஜன்னலோரங்களில் அமர, எதிர்ப்பக்கங்களில் இராணியும் கிருஷ்ணகுமாரும் ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் அமர்ந்தார்கள்.

“இராணி இன்னும் என்னை மறக்கலை” என்று மெதுவாக ஆரம்பித்தார் கிருஷ்ணகுமார்.

“உங்களையும் மறக்கலை, நீங்க செய்துட்ட துரோகத்தையும் மறக்கலை!” என்று உறுமினாள் இராணி.

“அப்போ என் நிலைமை என்னன்னு யோசிச்சுப் பேசு, இராணி! நானும் ரெண்டு பெண்ணைப் பெற்றவன்!”

“அப்போ என் நிலைமை என்னன்னு உங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கணும்!” உறுமினாள் இராணி. “அன்றைக்கு நான் பட்ட கஷ்டம்… அதோட மூல காரணமே நீங்கதான்! நீங்க மட்டும் கொஞ்சம் வளைஞ்சு கொடுத்திருந்தா… இந்த நிலைமை வந்திருக்குமா?”

“என்ன நிலைமை? இன்றைக்கு உன் குழந்தையோட நிலைமையையும் என் குழந்தைகளோட நிலைமையையும் ஒப்பிட்டுப் பாரு! நான் செய்தது நல்லதாப் போச்சுன்னு நினைப்பே…” சொல்வதற்குள் குரல் தழுதழுத்துவிட்டது கிருஷ்ணகுமாருக்கு.

“என்னப்பா சொல்றீங்க? என்ன எங்க நிலைமை?” என்று பதறிக் கேட்டாள் மாயா. சாயாவின் பதட்டமும் முகத்தில் தெரிந்தது.

இராணியும் கிருஷ்ணகுமாரும் சுதாரித்துக் கொண்டார்கள்.

“ஒண்ணுமில்லைம்மா, இவங்க பொண்ணு அமெரிக்கால இருக்கா. ஹஸ்பெண்ட் மைக்ரோஸாஃப்ட்ல பெரிய போஸ்ட்ல இருக்காரு. நீங்க இந்த நடுத்தர வர்க்க அப்பாவோட சம்பாத்தியத்தில் உங்க கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக்க முடியாம தவிக்கறீங்க. அதான் சொன்னேன்” என்றார் கிருஷ்ணகுமார்.

“யார் சொன்னது? எங்களோட எத்தனையோ கனவுகளை நிறைவேற்றி வெச்சிருக்கீங்க. அதோட, எங்களுடைய லட்சியம் நிறைவேறுகிறது எங்க உழைப்பில் இருக்கே தவிர, உங்களுடைய செல்வத்தில் இல்லை! அப்படி நாங்க ஜெயிக்கவும் விரும்பலை!” என்றாள் மாயா ஆவேசமாக.

இராணி அவளை உற்றுப் பார்த்தாள்.

“என்ன பார்க்கறீங்க? நாங்க எந்தப் பணக்காரக் கணவனை நம்பியும் இல்லை! நான் ஃபேஷன் டிஸைனர். ஒரு பெரிய சினிமா நடிகை (பெயரைச் சொன்னாள்), இன்னும் எத்தனையோ டீ வி நடிகைகளுக்கு நாந்தான் காஸ்ட்யூம் டிஸைன் செய்து தரேன்! அடுத்து ஒரு பாலிவுட் படத்துக்கு முழுமையா – எல்லா ஆர்ட்டிஸ்ட்டுக்கும் – டிஸைன் பண்ணப் போறேன்! சாயா – திறமையான பாட்மிண்டன் ப்ளேயர். அகில இந்திய சாம்பியன்ஷிப்பில் ரன்னர்-அப்பா வந்திருக்கா. அடுத்த முறை நிச்சயம் சாம்பியன்ஷிப் ஜெயிப்பா!”

இராணியை நேருக்கு நேர் பார்த்துப் பேசிய மாயா அவள் கண்களில் மின்னிய பெருமையையும் ஆனந்தத்தையும் கண்டு முகம் சுளித்து நிறுத்தினாள்.

“ரொம்ப… ரொம்ப சந்தோஷம்மா மாயா! என் அண்ணன் குழந்தைகள் இத்தனை திறமையானவங்களாகவும், அதைவிட இத்தனைச் சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் உள்ளவங்களாக இருக்கறதைப் பார்த்து… எனக்கு… எனக்கு… ரொம்பப் பெருமையாக இருக்கும்மா! ரொம்பப் பெருமையாக இருக்கு!” என்று இராணி சொன்னதைக் கேட்டதும் மாயா புரியாமல் விழித்தாள். தன் தந்தையைப் பார்த்தாள். “அப்பா! இவங்க…” என்று இழுத்தாள்.

“என் தங்கைம்மா. கஸின்” என்றார் கிருஷ்ணகுமார்.

“அண்ணனும் தங்கையுமா இப்படிச் சண்டை போட்டுக்கறீங்க?” என்று வியந்தாள் சாயா. “அண்ணன்னு கூப்பிட உங்களுக்கு ஒருத்தர் இருக்காங்க, தங்கச்சின்னு அன்பு செலுத்த உங்களுக்கு ஒருத்தர் இருக்காங்க என்பதே பெரிய பாக்கியம்! அது எங்களைவிடத் தெரிஞ்சவங்க யாரும் இல்லை. உங்களுக்குள்ளே என்ன பிரச்சனைன்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா இத்தனை வயதாகியும் நீங்க ரெண்டுபேரும் இப்படிச் சண்டை போட்டுக்கறதைப் பார்த்தா எங்களுக்குக் கேவலமா இருக்கு” என்றாள் ஆத்திரமாக.

இராணியும் கிருஷ்ணகுமாரும் தலைகவிழ்ந்தார்கள்.

“இவங்க சொல்றது சரிதான் இராணி!” என்றார் கிருஷ்ணகுமார்.

“ஆமாண்ணா! எத்தனையோ வருஷம் கழிச்சுப் பார்க்கிறேன் உங்களை. இப்படி நடந்துக்கிட்டேனேன்னு வெட்கமா இருக்கு!” என்று வருத்தத்துடன் கூறினாள் இராணி.

“இல்லைம்மா! உனக்கு வந்தது நியாயமான கோபம்…” என்று கிருஷ்ணகுமார் கூறவே, அவரை இடைமறித்தாள் சாயா.

“அடா… டா… டா! அப்போ நீ தப்புப் பண்ணிட்ட, பண்ணிட்டன்னீங்க, இப்போ நான் தப்புப் பண்ணிட்டேன், பண்ணிட்டேன்னு சொல்றீங்க! ஆக மொத்தம் இன்னும் சண்டையை நிறுத்தலை” என்று சிரித்தாள்.

இதைக் கேட்டு மாயாவும் குபீரென்று சிரிக்க, இராணிக்கும் அடக்கமுடியாமல் சிரிப்பு வர, கிருஷ்ணகுமாரும் மனம் லேசாகிச் சிரித்தார்.

என்றாலும் மனத்தின் ஆழத்தில் தான் இரயிலில் ஏறும்போது சந்தித்த நபரை அவரால் முழுமையாக மறந்துவிட முடியவில்லை.

இந்தச் சுப்பாமணி ஹார்ட்-அட்டாக், கிட்னி ஃபெயிலியர் ஏதாவது வந்து சீக்கிரம் போய்த் தொலைய மாட்டானா?

ன்னை அன்று ட்ரெயினில் வருகின்ற பலர் சபித்துக் கொண்டிருந்தார்கள் என்ற எண்ணமே இல்லாதவர் போல, சந்திரசேகருடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் சுப்பாமணி.

சந்திரசேகர் – சங்கரின் உறவினர் மட்டுமல்ல, சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸிலேயே பெரிய பதவியில் இருப்பவர். அவர்களுடைய ஆலையில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி. அவர் பேச்சுக்கு எம் டி, சேர்மன் கூட மறுபேச்சுப் பேச மாட்டார்கள். நேர்மையானவர், திறமையானவர் ஆதலால் எல்லோராலும் மதிக்கப்படுபவர்.

அந்தக் கேபினின் ஒரு பக்கம் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தாள் லீலா, சந்திரசேகரின் மனைவி. ஹவுஸ்வைஃப் தான். அருமையான பாடகி. பல குழந்தைகளுக்கு இலவசமாகவே சங்கீதம் கற்றுக் கொடுத்து வந்தாள். சந்திரசேகர் கம்பெனியில் மிகவும் மதிப்பு வாய்ந்தவர் என்றால், “லீலா சந்துரு” – ஊழியர்கள் வசித்த காலனியில், அவர்கள் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளிக்கூடத்தில், ஏன் அப்பகுதியின் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலுமே, மிகவும் பிரசித்தம். லீலா சந்துரு சாஸ்திரீய இசையோ, பஜனோ கற்றுக் கொடுத்து ஒரு குழந்தையைத் தயார்செய்து ஏதேனும் போட்டிக்கு அனுப்பினால், வெற்றி அந்தக் குழந்தைக்குத்தான் என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம்.

அவளுக்கு அதிகம் சம்பளம் கொடுத்து இசை ஆசிரியையாக அமர்த்த அப்பகுதியிலிருக்கும் அனைத்துப் பள்ளிகளும் போட்டா போட்டியிட்டன. ஆனால் லீலா சந்துரு வேலைக்குப் போகக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தாள். தன் குழந்தைகளுக்குத் தான் கொடுக்க வேண்டிய கவனம், நேரம் ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் குறைத்துவிடக் கூடாது, எஞ்சிய நேரத்தை மட்டுமே இசை கற்றுக் கொடுக்கச் செலவிட வேண்டும் என்பது அவள் கொள்கை.

அந்த அதிர்ஷ்டக்காரக் குழந்தைகளையும் பார்த்துவிடலாம். லீலாவுக்கு அருகில் அமர்ந்திருந்தான் பிரபுராம். பளிச்சென்ற ஆடை, களையான முகம். படிப்பு வரும் என்றாலும் படிப்பில் நாட்டம் இல்லை. தட்டுத் தடுமாறி எஞ்சினீரிங்கை முடித்துவிட்டு நடிப்புத் துறையில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறான். சில தொலைக்காட்சித் தொடர்களில் தலைகாட்டியும் இருக்கிறான்.

எதிர் பர்த்தில் அமர்ந்திருந்தாள் ஹரிணி. பதினெட்டு வயது, அழகான ஹரிணி. அவள் அம்மாவைப் போலவே அவள் குரலும் அழகானது. லா காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அடக்கமான உடை, அடக்கமான பேச்சு, அடக்கமான நடத்தை.

சந்திரசேகர் சுப்பாமணிக்குத் தூரத்து உறவினர். அதோடு சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸில் இருந்ததால் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பகள் அதிகம் கிடைத்தது. சந்திரசேகரின் வீட்டுக்கும் சுப்பாமணி பலமுறை வந்திருக்கிறார்.

“ட்ரெயின் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடும். நீங்க உட்காருங்க சார், நான் வரேன்” என்றார் சுப்பாமணி.

சந்திரசேகர் “உள்ளே வந்து கொஞ்ச நேரம் உட்காருங்க சுப்பாமணி, உங்களோடு பேசி எத்தனை நாளாச்சு” என்று அன்புடன் அழைத்தார்.

சுப்பாமணி பார்வையை கேபினின் உள்ளே ஓட்டினார். லீலா சந்துரு சுப்பாமணியைப் பார்த்துப் புன்னகைக்க முயன்று தோற்றாள். பிரபுராம் அவரை நிமிர்ந்து பார்ப்பதும் தலையைக் குனிந்துகொள்வதுமாய் இருந்தான். ஹரிணி அவர்கள் பக்கமே பார்க்காமல் ஜன்னல் பக்கமாய்த் திரும்பியிருந்தாள்.

சுப்பாமணி புன்னகைத்தார். “இருக்கட்டும் சந்துரு சார். இன்னும் ரெண்டு கேபினுக்கு ஆள் வர வேண்டியிருக்கு, நான் பார்த்து ஏற்றிவிடப் போகணும். நாளைக்குப் பூரா இந்த ட்ரெயினில்தானே கழிக்கணும்? நான் காலையிலேயே வந்துடறேன், நாள் முழுவதும் பேசுவோம், சரியா?” என்றார்.

“ஓகே” என்று சந்திரசேகர் கூறியதும் சுப்பாமணி நகர்ந்தார். அவர் உதட்டில் அபூர்வப் புன்னகையொன்று தோன்றியிருந்தது. மனம் ஒரே கேள்வியை உருப்போட்டது.

யார்? இந்த மூன்றுபேரில் யார்?

–பய(ண)ம் தொடரும்…

2 thoughts on “பயணங்கள் தொடர்வதில்லை | 4 | சாய்ரேணு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930