• கைத்தடி குட்டு
  • 3 வேளாண் சட்டம் விலக்கு- கார்த்திகை தீபத் திருவிழாவில் கிடைத்த ஒளி

3 வேளாண் சட்டம் விலக்கு- கார்த்திகை தீபத் திருவிழாவில் கிடைத்த ஒளி

1 week ago
67
  • கைத்தடி குட்டு
  • 3 வேளாண் சட்டம் விலக்கு- கார்த்திகை தீபத் திருவிழாவில் கிடைத்த ஒளி

மத்தியில் முழு வலிமையோடு இருக்கும் எண்ணத்தில் சர்வாதிகாரமாக இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் ‘ஜனநாயக’ தேர்தலுக்காகப் பயந்து ரத்துச் செய்யப்பட் டுள்ளன.

இது விவசாயிகளின் கடுமையான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. போராடிய விவசாய வர்க்கத்தைப் பார்த்து ஐந்து மாநிலத் தேர்தலில் பின்னடைவைச் சந்திப்போம் என்பதை உளவுத் துறை மூலமாகத் தெரிந்து பயந்து பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளது.  ஆனால் தேர்தலில் ஒரு ஓட்டைக்கூட வாங்க முடியாது. காரணம் பெட்ரோல் என்கிற எமன் சாதாரண மக்களை விழுங்குகிறதே. அதுமட்டுமா?

வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்குக் காப்பீடுத் திட்டம் கொண்டுவரப் பட்டது. அதனைத் தனியார் மயமாக்கி 12 கார்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களை அனுமதித்து, அவர்கள் பயனடையும் வகையில் வழிகாட்டு நெறிமுறை களை மாற்றியமைத்தது மோடி அரசு.  இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய காலத் தில் இழப்பீடு பெற முடியாத நிலையை ஏற்படுத்தியது. 2014-ல் ஒரு மூட்டை டி.ஏ.பி. 380 ரூபாய், ஒரு மூட்டை யூரியா 150-க்கும் விலை போனது. இன்றைக்கு டி.ஏ.பி. 1800, யூரியா 800 ரூபாய்க்கும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியது யார்?

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதில் இருந்து தன்னை விலக் கிக் கொள்ள முயன்றது. லாபகரமான விலை நிர்ணயம் செய்வதில்லை என கொள்கை முடிவெடுக்கப் பட்டது. கடன் தள்ளுபடி செய்ய கொள்கைரீதியாக மறுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்கள்.

தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்ட பிரதமர் மோடி 2020-இல் கொரோனா வால் உலகமே முடங்கி இருந்த நிலையில், ஒரு சில மணி நேரங்கள் நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டி விவசாயிகளுக்கு விரோதமான 3 சட்டங்களைத் தான்தோன்றித்தனமாக நிறைவேற்றினார். 

விவசாயிகளிடம் கருத்துக் கேட்கவில்லை, மாநில அரசுகளின் கருத்தறியவில்லை, மாறாக கார்ப்பரேட்டுகள் தயாரித்துக் கொடுத்த சட்டத்தை அவர்கள் விருப்பத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கினார்.

இதனை எதிர்த்து ஓராண்டுகாலம் விவசாயிகள் தீவிரமான போராட்டத்தில் களம் இறங்கினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றததற்குப் பிறகு ஒரு மறு சுதந்திரப் போராட் டத்தை இந்திய விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக தொடங்கினார்கள். இதனை ஏற்க மறுத்து மோடி அரசு விவசாயிகள் மீது தாக்குதலைத் தொடங்கியது.

குறிப்பாக, உள்துறை இணை அமைச்சரின் மகனே காரை ஏற்றி பல விவசாயிகள் உயிரைப் பறித்தார். பல இடங்களில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க ஆளும் மாநில அமைச்சர்கள் தனது வாகனங்களை விவசாயிகள் மீது ஏற்றி படுகொலையும், பெரும் காயங்களையும் நிகழ்த்தினர். 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் உயிரைப் பணையம் வைத்து விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. 

பல்வேறு  மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலேயே பா.ஜ.க. படுதோல்வியைத் தழுவியது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இச்சட்டத்தை ஆதரித்ததால் அ.இ.அ.தி.மு.க.விற்கும் தோல்வி ஏற்பட்டு ஆட்சியை இழந்தது. 

இந்நிலையில், உத்திரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவும் என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக் கிறது. 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழப்பிற்கு மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும். மேலும் நடந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டத்தைத் திரும்பப்பெறும் மசோதாவைத் தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் தொடரும் என போராட்டக் குழு அறிவித்திருக்கிறது. 

இரண்டு காரணங்களுக்காக இந்த முடிவை பிரதமர் மோடி எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் வெற்றிபெற்றால் மட்டுமே, மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்குத் தனிப்பெரும்பான்மை யுள்ள எண்ணிக்கையைப் பெற முடியும். தற்போது 97 எம்.பி-க்கள்தான் மாநிலங்களவை யில் பா.ஜ.க.வுக்கென உள்ளனர். கடந்த மே 2021-ல் நடைபெற்ற மேற்குவங்கத் தேர்தலில் கட்சி எப்படியும் வெற்றியைப் பெற்றுவிடும். அதன் மூலமாக, ‘மாநிலங்களவையில் பா.ஜ.க எம்.பி-க்கள் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ளலாம்’ என டெல்லி மேலிடம் தீர்மானித் திருந்தது. ஆனால், அந்த மாநிலத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றிபெற்றுவிட்டார். விரைவில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் வாய்ப்பைத் தவறவிட் டால், பிறகு மாநிலங்களவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குக்கூட படாதபாடுபடவேண்டியிருக்கும்.

உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை இழந்தால், அதன் தாக்கம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். வேளாண் சட்டங்களை எதிர்த்து ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீவிரமாகப் போராடுகிறார்கள். இவர்கள் கணிசமாக வாழும் மேற்கு உத்தரப்பிரதேசப் பகுதி, எப்போதுமே பா.ஜ.க.வுக்கு சாதகமாகத்தான் இருந்திருக்கிறது. தற்போது ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இதே பிரச்னைகளுக் காக பஞ்சாப்பிலுள்ள சீக்கிய ஜாட் பிரிவைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தலைச் சந்தித் தால் கட்சி பெரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.

ஐந்து மாநிலத் தேர்தல்கள், பிரிவினைவாத கோஷங்கள் வலுப்பெற்றுவிடக் கூடாது என்கிற காரணத்துக்காக இந்த மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டிருக் கின்றன.

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்தாலும், நாடாளு மன்றத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்று விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் பா.ஜ.க. கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில்தான், சீக்கியர்களின் புனித குருவான குருநானக் பிறந்தநாளில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித் திருக்கிறார் மோடி. அமரீந்தர் சிங், அகாலி தளம் ஆகியோருடன் கரம் கோத்துக் கொண்டு பஞ்சாப் தேர்தலையும், ஜாட் சமூகத்தை அமைதிப்படுத்தி உத்தரப்பிரதேசத் தேர்தலையும் சந்திக்க வியூகம் வகுத்து  தங்களுக்குச் சாதகமாக காற்று அடிக்கும் எனக் கணக்கு போடுகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும், உத்தரப்பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம், சமாஜ்வாடி கட்சிகளும் பிரதமரின் இந்த அறிவிப்பால் குழப்ப மடைந்திருக்கின்றன.

எப்படியோ ஜனநாயகத்தில் ஒரு சிறு உதவி என்றால் ஓட்டெடுப்பின் மூலம்தான் ஆட்சி யில் அமர முடியும் என்கிற விதியாவது இந்த சர்வாதிகார அரசுக்குத் தேவைப் பட்டதே. சரியாக கார்த்திகை தீபம் அன்று விவசாயிகளுக்கு ஒளி தெரிந்திருக்கிறதே. தேர்தலுக்குப் பிறகு மீண்டும் 3 வேளாண் சட்ட இருளை இந்தியாவில் கொண்டுவராமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதற்கு விவசாயிகள் மட்டுமல்ல அனைத்து மக்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930