• தொடர்
  • பயணங்கள் தொடர்வதில்லை | 2 | சாய்ரேணு

பயணங்கள் தொடர்வதில்லை | 2 | சாய்ரேணு

2 months ago
210
  • தொடர்
  • பயணங்கள் தொடர்வதில்லை | 2 | சாய்ரேணு

தொடரின் அறிமுகத்தைத் தவற விட்டவர்களுக்காக…

அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் பயணிக்கும் நளினா, ஒரு மர்ம நபரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறாள். அவர் கேட்கும் கவருக்குப் பதிலாக போலிக் கவரைத் தருகிறாள். அவர் எதிர்பாராதவிதமாக அவளைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவள் உடைமைகளை ஆராய்ந்து உண்மையான கவரைக் கைப்பற்றுகிறார். சரியான ஓரிடத்தில் அவள் உடலை ரயிலிலிருந்து வீசியெறிகிறார். அவள் உடைமைகளை சேகரித்துக் கொண்டு அதே ரயிலிலேயே பயணிக்கிறார். சென்னையில் அவளை கம்பார்ட்மெண்ட்டில் காணாமல் ஏமாற்றமடைகிறான் ஓர் இளைஞன். நாட்டியத் தாரகையான நளினாவை வரவேற்க வந்த சங்கர்-ஸ்ரீனி அசோசியேட்ஸை சேர்ந்த சுப்பாமணி அவளது பயண டிக்கெட்டை மட்டும் கண்டெடுக்கிறார். இனி…

1   சீப்பு

சென்னை சென்ட்ரல்.

எப்போதுமுள்ள கூட்டம் இல்லையோ என்று தோன்றியது ஸ்ரீஜாவுக்கு. என்றாலும் கலகலப்பாகத்தான் இருந்தது இரயில் நிலையம்.

குர்தா பாக்கெட்டிலிருந்து சிறிய சீப்பை எடுத்துத் தன் பாப் கூந்தலை ஒழுங்குபடுத்திக் கொண்டாள். தன்னுடைய ஸில்க் எம்பிராய்டரி செய்த மாஸ்கைச் சரிசெய்து கொண்டவளாக, ஹௌரா மெயில் நின்றுகொண்டிருந்த நடைமேடைக்குக் கம்பீரமாக நடந்தாள். மகாராணிக்குப் பின்னால் நடக்கும் சேடியைப் போல, ஒரு பெண் மேக்-அப் கிட், ஒரு ஹேண்ட் பேக், இரு மொபைல் ஃபோன்களை ஏந்திக் கொண்டு பின்னால் பணிவுடன் வந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால், முழுமையாக நிரம்பிய, சாமான்கள் நிறைந்த கார்ட்டைக் “கிரீச் டக்” செய்துகொண்டு ஒரு போர்ட்டர்.

ஹௌரா மெயில். அதை அண்ணாந்தவாறு ஒரு நிமிடம் நின்ற ஸ்ரீஜாவுக்கு நாற்பதை நெருங்கிக் கொண்டிருந்த முப்பதுகளில் வயது. வயதைப் பற்றிய கேள்விகளைத் தவிர்ப்பாள். பிடிவாதமாக யாராவது கேட்டால் இருபத்தொன்பது என்பாள். (கேட்பவர்கள் நம்பிவிடுவார்கள்.) பளீரிடும் வெண்ணெய் நிறம். கருநீலக் கண்கள். செல்வத்தின் திமிர் அந்தக் கண்களில் தெரியும்.

இப்போது திமிர் தெரியவில்லை. கண்களில் ஏதோ திரை விலகினாற்போல் அதில் அதீத பயம் தெரிந்தது. ஹௌரா அவளுடைய நிம்மதியை விழுங்கக் காத்திருக்கும் அரக்கன்போல் தோன்றியது.

“ஏஸி ஃபர்ஸ்ட் க்ளாஸ். பர்த் ஒன் அண்ட் டூ. கூப்பே” என்றாள் அவளுடன் வந்திருந்த அடிப்பொடி “ஷான்” எனப்படும் சந்திரிகா. (பர்சனல் செகரட்டரி என்பதுதான் பதவியின் பெயர். ஆனால் அவள் நடந்துகொள்வது, ஸ்ரீஜா அவளை நடத்துவது ஆகியவற்றிற்கு அடிப்பொடி என்பதே பொருந்தும்.)

ஸ்ரீஜா அவளை ஏறிட்டுப் பார்த்தாள். “எனக்குத் தெரியாதா? எதுக்குச் சொல்லிட்டிருக்க, ஸில்லி” என்று அவள் வாய் திட்டவில்லை, கண்களே அந்த வார்த்தைகளை எழுதின, கோபத்தையும் காட்டின. ஷான் ஓரடி பின்வாங்கினாள்.

ஸ்ரீஜா கம்பீரமாக நடந்து ஏஸி முதல் வகுப்பு கம்பார்ட்மெண்ட் வாயிலை அடைந்தாள். அங்கே சுப்பாமணி அவளுக்காகக் காத்திருந்தார். கைகுவித்து “வாங்கம்மா” என்றார் புன்னகையுடன்.

அவருக்கும் அதே ஏறிட்ட பார்வை. இரயிலில் ஏறப் போனாள் ஸ்ரீஜா. இரயில் ஒரு கருநாக அசுரன் போலவும், கம்பார்ட்மெண்ட் வாயில் அதன் திறந்த வாய் போலவும், வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்திருந்த சுப்பாமணி அந்த நாகத்தின் கோரப் பற்கள் போலவும் தோன்ற, வெலவெலத்தாள். இரயிலின் படிகளில் கால் வைத்தவள் தலைசுற்றித் தடுமாறிக் கீழே விழப் போனாள்.

“அம்மா!” என்று கத்திய சுப்பாமணி அவளைப் பிடித்துக் கொண்டார். பின்னால் நின்ற ஷானும் பதறி அவளைத் தாங்கிக் கொண்டாள். அருகிருந்த பெஞ்சில் அவளை அமர வைத்தாள். பையிலிருந்து வாட்டர் பாட்டில் எடுத்து நீட்டினாள்.

“என்ன மேடம் ஆச்சு? உடம்பு சரியில்லையா? திரும்பிப் போயிடுவோமா மேடம்?” ஷான் தவித்துக் கேள்விகளை அடுக்கினாள்.

“சரி, வா திரும்பிப் போயிடலாம்” என்று சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் ஸ்ரீஜா.

“இல்லை, ஒண்ணுமில்லை” என்றாள். நீளநீளச் சுவாசங்கள் எடுத்து மனதையும் உடலையும் அமைதிப்படுத்தினாள். தான் எடுத்திருந்த முடிவை ஞாபகப்படுத்திக் கொண்டாள். உள்ளத்தில் உறுதி வந்தது. எழுந்து சென்று இரயிலில் ஏறிக் கொண்டாள். சுப்பாமணி அதற்குள் அவளுடைய எல்லாச் சாமான்களையும் கூப்பேக்குள் ஏற்றி, போர்ட்டருக்கும் பணம் கொடுத்து அனுப்பிவிட்டிருந்தார்.

உள்ளே ஜன்னலை ஒட்டிய மேஜை மீது ட்ரேயில் சிறிய பாட்டிலில் வெல்கம் ட்ரிங்க். அழகாகப் பேக் செய்யப்பட்ட ஒற்றை ஸ்வீட் பாக்கெட். பட்டர் பேப்பர் கவரில் இஞ்சி பிஸ்கெட். சிறிய உலர்பழங்கள் பாக்கெட். டீயோ, காப்பியோ கொண்ட ப்ளாஸ்க், கப், சாஸர். சீட்டில் அவள் கைப்புரட்டலுக்காகக் காத்திருந்த மங்கையர் மலர், ஃபெமினா. ஸ்பெஷலாகச் சேர்க்கப்பட்டிருந்த ஒரு பிறையில் ஆண்டிராய்ட் டேப்லட். அதனருகிலேயே அட்டெண்டரை அழைப்பதற்கு என்ன செய்ய வேண்டும், உணவு ஆர்டர் செய்ய என்ன செய்ய வேண்டும், இரயில் செல்லும் வேகம், இருக்குமிடம் ஆகியவற்றைப் பார்க்க என்ன செய்ய வேண்டும், பாடல்கள், திரைப்படங்கள் எப்படிப் பார்ப்பது என்று இன்ஸ்ட்ரக்‌ஷன்கள் அடிக்கப்பட்ட வழுவழுப்பான அட்டை.

மன இறுக்கத்தோடு உள்ளே ஏறிய ஸ்ரீஜா தளர்ந்தாள். உதட்டில் லேசான சிரிப்புக்கூட இழையோடியது.

சுப்பாமணி. சூப்பர் எஃபீஷியண்ட். வழக்கம்போல்.

உள்ளே சென்று அமர்ந்தாள். சுப்பாமணி தலைக்கு மேல் இருக்கும் மின்விசிறிகளை இயக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவை இயங்கத் தொடங்கியதும் அறையிலிருந்து வெளியேறிக் காரிடாரில் நின்றுகொண்டு “அப்புறம்மா?” என்றார் மரியாதையாய்.

ஸ்ரீஜாவின் பற்கள் லேசாகக் கடிபட்டன. நடிக்காதடா!

“இப்போ ஒண்ணும் தேவையில்லை” என்றாள் அலட்சியமாக.

“சரிம்மா, ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க. டேப்லட் மெனுல ஃபர்ஸ்ட் ஆப்ஷன் அடிச்சா, எனக்குப் பெல் அடிக்கும். உடனே வந்திடறேன். நீங்க கூப்பிடாட்டியும் என்னுடைய ஒரு கண் உங்க மேலேதான் இருக்கும்” என்றார் சுப்பாமணி.

ஸ்ரீஜா மெலிதாக முறைத்தாள். எதுவும் பேசவில்லை.

சுப்பாமணி “கதவைத் தாள் போட்டுக்கோ ஷான். வரவர நாட்டு நடப்பு நல்லாயில்லை. குடிச்சுட்டுவந்து யார் கூப்பேலயாவது, கார்லயாவது புகுந்துடறாங்க. ஃபுல்லா ஏத்திக்கிட்டுக் காரை ஓட்டி ஆக்ஸிடெண்ட் பண்ணிடறாங்க. ட்ரெயின்ல பெண்கள் தனியா இருந்தா இவங்க கலாட்டா தாங்க முடியலை. ஜாக்கிரதை” என்று சொல்லி விலகிப் போக, அவர் சென்ற திசையையே வெறித்தாள் ஸ்ரீஜா.

ஷான் பரபரவென்று இயங்கினாள். தன்னிடமிருந்த பையைத் திறந்து ஷால் எடுத்து ஸ்ரீஜாவிடம் நீட்டினாள். காப்பியை ஊற்றிக் கொடுத்தாள்.

காப்பியை அருந்த அருந்தவே ஸ்ரீஜாவுக்குத் தைரியம் வந்துவிட்டது. முகத்தில் பழைய அலட்சியம் தோன்றியது. ஃபெமினாவை எடுத்துப் பிரித்தாள். ஆனால் அதில் சில விநாடிகளுக்கு மேல் மனம் பதியவில்லை. பழைய நினைவுகள் மனதில் ஓட ஆரம்பித்தது.

ருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த கோயில் குருக்களின் மகன் ஸ்ரீனிவாஸன். வீட்டுக் கஷ்டம் காரணமாகப் பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டுக் கோயிலில் பரிசாரகம் செய்துகொண்டே வேலை தேடிக் கொண்டிருந்தான். குருக்கள் வீட்டுக்கே வருவதில்லை. வேறு ஒரு பெண்ணோடு பல ஆண்டுகளாகத் தங்கிவிட்டார். அந்த வருத்தத்திலேயே ஸ்ரீனிவாஸனின் அம்மா படுத்த படுக்கையாகிவிட்டாள். நடக்க முடியாத தம்பி, பிறவியிலேயே வியாதிக்காரியான தங்கை இருவரையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஸ்ரீனிவாஸனின் தலையின் விழுந்தது.

பிறந்ததிலிருந்தே அதிர்ஷ்டக் கட்டையாக இருந்த ஸ்ரீனிவாஸனுக்குத் திடீரென்று அதிர்ஷ்டம் அடித்தது. பழமையான ஆலயங்களைத் தரிசித்துத் தேவையான திருப்பணிகளைச் செய்துவந்த பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான காமேஸ்வரன் அவன் ஊர் ஆலயத்திற்கு ஒருநாள் வந்தார். அன்று ஆலயத்திற்குக் குருக்கள் வராததால் ஸ்ரீநிவாஸனே அவருக்கு ஸ்வாமி தரிசனம் செய்துவைத்தான். கோயிலின் புராண, வரலாற்றுச் செய்திகளை அழகாக எடுத்துக் கூறினான். வந்திருந்தவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள மண்டபத்தில் ஒரு பகுதியைச் சுத்தம் செய்து கொடுத்தான். அவனே மடைப்பள்ளியில் அருமையான பிரசாதம் தயார் செய்தான்.

அவனுடைய சிரத்தையும் சுறுசுறுப்பும் காமேஸ்வரனுக்குப் பிடித்துப் போனது. பக்கத்து டவுனில் அவர் ஆரம்பிக்கவிருந்த ஒரு ஏஜன்சிக்கு அவனைப் பொறுப்பாளனாக்கினார். ஆறே மாதம் – அந்த ஏஜன்சியைத் தமிழ்நாட்டிலேயே அவருடைய ஏஜன்சிக்களில் சிறந்ததாக மாற்றிக் காட்டினான் ஸ்ரீனிவாஸன்.

அவனைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார் காமேஸ்வரன். தன் தலைமை அலுவலகத்தில் அமர்த்தினார். அப்போதுதான் அவருடைய மகன் சங்கரும் அலுவலகத்திற்கு வர ஆரம்பித்திருந்தான். இருவருக்கும் இடையில் நட்புத் தோன்றியது. ஆனால் சங்கர் தன் பந்தாவை விட்டுக் கொடுக்க மாட்டான், ஸ்ரீனிவாஸன் தன் அடக்கத்தை விடவே மாட்டான்.

இந்த நிலையில் சங்கருக்கு எப்படியோ மதுப்பழக்கம் வந்துவிட்டது. அந்த வயதில் ஏற்படும் வியாதியாகிய காதலும் தொடர்ந்து காதல் தோல்வியும் ஏற்பட்டன. தற்கொலைக்கு முயன்ற சங்கரைக் காப்பாற்றி, அவனோடு போராடி அவனைத் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் மதுவிலிருந்தும் மீட்டான் ஸ்ரீனிவாஸன். இது சங்கரின் வீட்டுக்குத் தெரியாமலும் பார்த்துக் கொண்டான்.

அதன்பிறகு ஸ்ரீனிவாஸனின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் இருந்தது. முதலில் சங்கரின் பி ஏ, பிறகு வொர்க்கிங் பார்ட்னர். பிறகு தனியாகவே ஆலை ஆரம்பித்தான், அதிலும் வெற்றி. தமிழகத்தின் சிறந்த தொழிலதிபர்களுள் ஒருவனாக மாறினான். பெயரும் ஸ்ரீனி என்று அதிகாரச் சுருக்கம் பெற்றது.

திடீரென்று பங்குகள் சரிந்து, காமேஸ்வரனின் கம்பெனிகள் மூடப்படும் நிலையில் ஸ்ரீனி மீண்டும் அவர்களிடம் சென்றான். காமேஸ்வரன் தற்கொலை செய்துகொண்டு சங்கர் அனாதையாகத் தவித்த நேரம் அது. அப்போது ஸ்ரீனிவாஸன் தன் நன்றியைச் செயலில் காட்டினான். ஆம், உதயமாயிற்று சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸ்! தன் எல்லா முயற்சிகளிலும் சங்கரைப் பார்ட்னராக அறிவித்தான். கம்பெனிகளில் சேர்மன், எம் டி என்று பதவிகளைக் கொடுத்தான்.

ஸ்ரீனியை வானளாவ எல்லோரும் புகழ்ந்தனர். அவன் அசுர வளர்ச்சி அடைந்த இந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்குள், தன் தாயை நன்றாகக் கவனித்துக் கொண்டான். அவள் சந்தோஷமாக வாழ்ந்து மரித்தாள். தம்பி, தங்கைகளுக்கு நல்ல வாழ்வு அமைத்துக் கொடுத்தான். தானும் பெரிய இடத்தில் திருமணம் செய்துகொண்டான். ஆனால் அவன் செய்த ஒரு காரியம் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது, சிலரை முகம் சுளிக்க வைத்தது.

ஆம், அவன் தந்தையும் அவர் இரண்டாம் மனைவியும் மடிய, அவர்களின் ஒரே மகளை அழைத்துவந்து தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான். படிக்க வைத்தான். அவள்தான் ஸ்ரீஜா.

ஸ்ரீஜா திருமணம் செய்துகொள்ளவில்லை. ஸ்ரீனி வீட்டில் மேனேஜர் பொறுப்பை ஏற்றாள். பிறகு சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸில் ஈவண்ட் மானேஜர். அவர்களுடைய சமூகப் பொறுப்புகள், விழாக்கள், பத்திரிகை-டீவி சந்திப்புகள், தற்போது சோஷியல் மீடியா வேலைகள் எல்லாம் அவளுடைய அதிகாரத்தின்கீழ் இயங்கின. ஸ்ரீனியின் சகோதரி அல்லவா? அவள் வேலையில் ஒரு குறை காணமுடியாது! வெகுசீக்கிரமே, கம்பெனியின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக ஆனாள் ஸ்ரீஜா.

த்து நாட்கள் முன்பு.

“கம் இன், ஸ்ரீ” என்றார் சங்கர். சங்கர்-ஸ்ரீனி அஸ்ஸோஸியேட்ஸின் இரு மன்னர்களில் ஒருவர்.

அவருக்கு ஒரு புன்னகையைக் கொடுத்தவாறே உள்ளே நுழைந்தாள் ஸ்ரீஜா, அங்கே சுப்பாமணி நிற்பதைக் கண்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. படபடப்புத் தாங்க முடியாமல் மயக்கம் வரும்போலிருந்தது.

“ஸ்ரீ, ஆர் யூ ஆல்ரைட்? நம்ம ஷில்பா கல்யாண அரேஞ்ச்மெண்ட்ஸ் பற்றிப் பேசத்தான் கூப்பிட்டேன். சுப்பாமணியும் அதுக்குத்தான் வந்திருக்கான்” என்றார் சங்கர்.

ஸ்ரீஜா சமாளித்துக் கொண்டாள். இயல்பாக சங்கரோடு பேச ஆரம்பித்தாள். இருவரும் சங்கர் மகளின் திருமணத்தைக் குறித்து விலாவாரியாகத் திட்டமிட்டு முடித்தனர். கல்யாணம் பையன் ஊரான கொல்கத்தாவில் நடைபெறுகிறபடியால் பல ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியிருந்தது.

“ஸ்ரீ, உனக்கு இன்னொரு முக்கியமான பொறுப்புத் தரப் போறேன்” என்றார் சங்கர். “என்னோட ரிலேட்டிவ்ஸ் – கஸின்ஸ், மாமா, சித்தின்னு ஒரு கூட்டம் – கல்யாணத்துக்கு வராங்க. தவிர, பையனோட ரிலேட்டிவ்ஸ் ஓரிரண்டு ஃபேமிலியையும் நாம கூட்டிட்டு வரதா ஒத்துக்கிட்டிருக்கோம். இப்போ இருக்கற பேண்டமிக் ஸிச்சுவேஷன்ல ஃப்ளைட் நல்லதில்லை…”

“ட்ரெயின்” என்றாள் ஸ்ரீஜா. “ஸ்பெஷல் கோச் ஏற்பாடு பண்ணிடலாம். அதோட ப்ரைவேட் கேடரர் அரேஞ்ச் பண்ணிடலாம்.”

“சுப்பாமணியும் இதையேதான் சொன்னான்” என்றார் சங்கர். “அவனுக்கு ட்ரெயின் விவகாரங்கள் அரேஞ்ச் பண்ணுவதில் நல்ல அனுபவம் இருக்கு. நீ என்னென்ன தேவைன்னு அவனுக்கு லிஸ்ட் கொடு. அவன் அந்தக் கோச்லயே கொல்கத்தா வரட்டும்.”

“ஓகே சங்கர்” எழ முயன்றாள் ஸ்ரீஜா. “ஒரு நிமிஷம் சார்” என்ற சுப்பாமணியின் குரலில் மீண்டும் அமர்ந்தாள்.

“என்ன சுப்பாமணி?”

“சார், மேடமும் அந்தக் கோச்லயே வந்தா, ரொம்ப சவுகரியமா இருக்கும்.”

“ஸ்ரீ அவ ப்ரதரோட வருவா” என்றார் சங்கர்.

“அவங்களுக்கு லக்ஸரி கூப்பே அரேஞ்ச் பண்றேன் சார். முக்கியமான ரிலேட்டிவ்ஸ் வரும்போது அம்மாவும் கூட வந்துட்டா… அவங்க எங்கிட்ட பிரச்சனை பண்ணலாம், அம்மாகிட்ட யாரும் பண்ண மாட்டாங்க இல்லையா?”

சங்கர் யோசித்தார். சுப்பாமணி சொல்வது சரி என்றே பட்டது அவருக்கு.

ஸ்ரீஜா லேசாக மறுத்துப் பார்த்தாள், தன் எதிர்ப்பு இங்கே எடுபடாது என்று தெரிந்துகொண்டே. முடிவில் ஒப்புக்கொண்டாள்.

“இன்னும் ஒரே ஒரு விஷயம். நாம கொல்கத்தாவில் வெச்சுக் கல்யாணம் பண்றோம். நம்ம ஆட்கள் குறைவாத்தான் கூட்டிப் போகறோம். அங்கே ரொம்ப காஸ்ட்லி கிஃப்ட்ஸ் வரும். அதனால ஒரு டிடக்டிவ்வைக் கூட்டிப் போயிட்டா நல்லது” என்று பணிவாகச் சொன்னார் சுப்பாமணி.

“கூட ஆட்கள் வேணும்னா கூட்டிக்கலாமே, சங்கர்! டிடக்டிவ்ஸ் எல்லாம் எதுக்கு?” என்றாள் ஸ்ரீஜா மெதுவாய்.

“இல்ல மேடம்! என்னதான் நம்ம ஆட்களை அழைச்சுப் போனாலும், அவங்க கல்யாண வேலைகளைத்தான் பார்த்திட்டிருப்பாங்க. டிடக்டிவ்ஸ்னா, ஏதும் திருட்டு-புரட்டு நடந்திடாமக் கவனமா இருப்பாங்க. கல்யாண நேரம் – ஏதும் அசம்பாவிதம் நடந்துட்டா, அதைப் பிள்ளை வீட்டுக்காரங்க அபசகுனமா நினைச்சுடக் கூடாது இல்லையா?” என்றார் சுப்பாமணி.

சங்கர் யோசித்தார். “நாம டிடக்டிவ்ஸைக் கூட்டிப் போறோம்னு தெரிஞ்சாலே பிள்ளை வீட்டுக்காரங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?” என்றார்.

“அவங்க யாருன்னே யாருக்கும் தெரியாது. அதற்கெல்லாம் சரியான ஆட்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கேன். போலீசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க. செக்யூரிட்டி, தவிர இன்வெஸ்டிகேஷன்லயும் சிறந்தவங்க” என்றார் ஸ்ரீஜாவைப் பார்த்துக் கொண்டே.

ஸ்ரீஜாவின் கண்கள் நெருப்பைக் கக்கின.

“அப்போ சரி, சுப்பாமணி. நீயே அவங்களை ஃபிக்ஸ் பண்ணி, ஃப்ளைட் டிக்கெட்ஸ் வாங்கிடு” என்றார் சங்கர்.

“அவங்களும் ட்ரெயின்லயே வந்துடட்டும் சார்! அங்கே வந்துதானே அவங்க வேலை தொடங்குது?” என்றார் சுப்பாமணி.

“உனக்கு அவங்களோட வம்பு பேசிக்கிட்டே வரணும்னு உண்மையைச் சொல்லேன்” என்று சிரித்தார் சங்கர். “அவங்க கேஸெல்லாம் கேட்டுப்பியாக்கும்?” என்றார்.

“நானும் சில கேஸ்களை அவங்களுக்குச் சொல்வேன் சார்” என்றார் சுப்பாமணி பணிவு மாறாமல்.

“நீ செய்வய்யா! உனக்குத் தெரியாத ரகசியம் என்ன இருக்கு?” என்றவாறே திரும்பிய சங்கர், ஸ்ரீஜாவின் பீதி நிறைந்த முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டார். “ஸ்ரீ…” என்று அவர் அழைப்பதற்குள் ஸ்ரீஜா தன்னிலையடைந்தாள். அவள் வழக்கப்படி சீப்பை எடுத்துத் தன் கூந்தலை வாரிக் கொண்டாள்.

“அப்படியே செஞ்சுடுவோம்” என்றாள் இயல்பாய்.

நினைவுகளிலிருந்து மீண்ட ஸ்ரீஜாவின் விரல்கள் சீப்பைத் தேடிக் குர்தாவின் பாக்கெட்டிற்குச் சென்றன.

அதில் கலப்புத் திருமண ஜோடிபோலச் சீப்போடு சேர்ந்து இருந்த சிறிய பிஸ்டலை அவள் விரல்கள் வருடியது.

மெலிதாகப் புன்னகைத்தாள் ஸ்ரீஜா.

-பயம் தொடரும்…

1 thought on “பயணங்கள் தொடர்வதில்லை | 2 | சாய்ரேணு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31