• தொடர்
  • பயணங்கள் தொடர்வதில்லை | 1 | சாய்ரேணு

பயணங்கள் தொடர்வதில்லை | 1 | சாய்ரேணு

2 months ago
246
  • தொடர்
  • பயணங்கள் தொடர்வதில்லை | 1 | சாய்ரேணு

டிக்கெட்

[மின்கைத்தடி வாசகர்கள் அனைவருக்கும் அகமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். இதோ நாம் ஒரு பயணம் புறப்படுகிறோம். கற்பனையெனும் இரயிலில் கதையெனும் தடங்களில் பயணிக்கப் போகிறோம். அந்தப் பயணத்தின் டிக்கெட் இந்த அத்தியாயம். அடுத்த அத்தியாயத்திலிருந்து பயணம் ஆரம்பிக்கிறது.]

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு…

“தடக் தடக் தடக் தடக் தடக்” என்ற லயம் கேட்டது.

ஒலி கேட்டது ரேடியோவிலோ, எம்பி3 ப்ளேயரிலோ அல்ல, அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ் சென்னையை நோக்கி விரையும் வேகத்தின் தாளப் பிரமாணத்தைத் தண்டவாளத்தில் வாசிக்கும் ஒலி அது.

நளினாவின் வண்டாடும் கண்களோ, வளைந்தாடும் கரங்களோ, குதித்தாடும் கால்களோ அந்த இனிய தாளவொலிக்குத் தகுந்தாற்போல் அசையவில்லை. அவள் மனம் மட்டுமே தடக் தடக்கென்று அடித்துக் கொண்டிருந்தது.

அந்த முதல் வகுப்பு கூப்பே அறையில் நளினா மட்டுமே இருந்தாள். கதவை மூடி இறுகத் தாளிட்டிருந்தாள். குளிர்பதன வசதி செய்யப்பட்டிருந்த அந்தக் கம்பார்ட்மெண்ட்டில் இன்னும் குளிர் அதிகமாகப் பரவவில்லை. ஆனால் நளினா ஒரு பெரிய சால்வையைப் போர்த்தி நடுங்கும் உடலை மறைத்திருந்தாள். அந்த நடுக்கம் குளிரால் ஏற்பட்டதும் அல்ல.

நீண்ட சீட்டில் நடுவே அமர்ந்திருந்தாள். ஜன்னல் வழியாக யாரேனும்… சே! அது முழுக்கக் கண்ணாடி. மேலே யாரும் இல்லை. கீழே லக்கேஜ் வைக்கும் இடத்தில் யாரும் மறைந்திருப்பார்களோ?

இந்த எண்ணம் வந்ததும் குனிந்து பார்த்தாள். குப்பைதான் இருந்தது. ஆள் என்ன, லக்கேஜ் கூட இல்லை. அவளுடைய லக்கேஜ்களைத்தான் மேல் பர்த்தில் வைத்திருக்கிறாளே!

என்ன பெரிய லக்கேஜ்? ஒரு பெரிய பெட்டி, ஒரு ஜிப் பை. என்னுடைய கைப்பை – அது முக்கியம். தோளில் கோத்து மார்போடு அணைத்துக் கொண்டிருக்கிறேன்.

யாரும் இல்லை. நான் தனியாகத்தான் இருக்கிறேன். என்ன பயம்? இன்னும் சில மணிநேரங்கள். அப்புறம் விடிந்துவிடும். சென்னை வந்துவிடும். இந்த இரவைக் கடந்தால் போதும். கதவைத் தாள் போட்டிருக்கிறேன். யாரும் வர முடியாது.

யாராவது கதவைத் தட்டினால்?

நளினாவுக்கு இந்த எண்ணம் வந்த சரியான அந்த நொடியில் கதவு தட்டப்பட்டது. தூக்கிவாரிப்போட்டு வியர்த்தாள் நளினா.

“யா… ரு…” குரல் எழும்பவேயில்லை. சமாளித்துக் கொண்டு மீண்டும் குரல் கொடுத்தாள். “யாரு?” பதில் சொல்லவில்லையென்றால் திறக்கவே வேண்டாம்.

“டிக்கெட் செக்கிங்” என்று அப்புறத்திலிருந்து குரல் வந்தது.

நளினா தளர்ந்தாள். கைப்பையைத் திறந்து டிக்கெட்டைத் தயாராகக் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். மீண்டும் கைப்பையை மூடி மார்போடு அணைத்துக் கொண்டாள். கதவின் தாழ்ப்பாளை நீக்கினாள்.

படாரென்று உள்ளே வந்தார் அவர். அவர் நிச்சயம் டிடிஈ இல்லை. கதவை உள்புறம் தாழிட்டார்.

நளினா திடுக்கிட்டுப் பதறினாள். கையிலிருந்த டிக்கெட் கீழே விழுந்தது. கத்தப் போனவள் “ஷ்… ஷ்…” என்ற அவரின் எச்சரிக்கையில் அடங்கி, சீட்டின் ஓரத்தில் முடங்கினாள்.

வந்தவர் சீட்டின் மறுபக்கத்தில் சாந்தமாக அமர்ந்தார். நளினாவைப் பார்த்துப்ப் புன்னகைத்தார்.

நளினா நடுங்கினாள். “என்னை விட்டுடுங்க. நான் எங்கேயாவது போயிடறேன், உங்க வழிக்கே வரலை” என்றாள் கெஞ்சும் குரலில்.

“எதுக்குப் பயப்படறே நளினா? எனக்கும் உனக்கும் என்ன பகை? எனக்கு வேணுங்கறதைக் கொடுத்துட்டேன்னா நான் பாட்டுக்குப் போயிட்டே இருக்கேன்” என்று சாந்தமாகக் கூறினார் அவர்.

நளினா ஜன்னலில் தன் உடம்பை ஒட்டிக் கொண்டாள். முடிந்தால் வெளியே குதித்துவிடுவாள் போலிருந்தாள்.

“எடு! கொடுத்துட்டேன்னா நான் என் கூப்பேக்குத் தூங்கப் போயிடுவேன். நீயும் தூங்கப் போயிடலாம்” என்று பெற்றோர் மகளிடம் சொல்வதுபோல் அன்புடன் கூறினார். அவர் கூறியது நளினா காதில் விழவில்லை. அவள் அவர் கையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆம், அந்தக் கையில் சின்னஞ்சிறிய பிஸ்டல் ஒன்று மின்னியது.

“ஓ! ஸாரி. இது வெறும் பாதுகாப்புக்காகத்தான்” என்று சொல்லிப் பிஸ்டலின் குறியை லேசாக அப்புறம் நகர்த்தினார். “நளினா, நான் கேட்டது?” என்றார்.

நளினா மெதுவாக நிமிர்ந்தாள். தன் கைப்பையைத் திறக்கப் போனாள். “நளினா, நான் கேட்டதை மட்டும் எடுக்கணும், புரிஞ்சுதா?” என்றார் அவர். குரலில் சிறிதும் இல்லாத மிரட்டல் கையில் ஏறியிருந்த பிஸ்டலில் இருந்தது.

நளினா கைப்பைக்குள் இருந்த தன்னுடைய துப்பாக்கியை நினைத்துக் கொண்டாள். அதை எடுக்கலாமா என்று யோசித்தாள். வேண்டாம், அதற்குள் அவர் கையில் இருக்கும் சனியன் வெடித்துவிடும்.

கைப்பைக்குள் இருந்து தடித்த உறை ஒன்றை எடுத்தாள். எதிரே இருப்பவரிடம் நடுங்கும் கரங்களால் நீட்டினாள்.

அதை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டார் அவர். ஒரு விநாடிகூட அவர் பார்வை நளினாவிடமிருந்து அசையவில்லை. அந்த உறைக்குள் என்ன இருக்கிறது என்றுகூட அவர் பார்க்கவில்லை.

நளினா நிம்மதிப் பெருமூச்செறிந்தாள். இந்தமாதிரிச் சந்தர்ப்பங்களுக்காகவே அவளுக்கு அந்தப் போலி உறை அளிக்கப்பட்டிருந்தது. திறந்து பார்த்திருந்தாலும் பிரச்சனையில்லை. அவர் உண்மை என்று நம்பும்படியாக அதில் தகவல்கள் இருந்தன.

பிஸ்டல் இன்னும் அவளை முறைத்துக் கொண்டிருக்காவிட்டால் நளினா சிரித்துக்கூட இருப்பாள்.

“தாங்க்ஸ்” என்றார் அவர் புன்னகையுடன்.

அவர் எழுந்து செல்லக் காத்திருந்தாள் நளினா.

“இனி நான் போய் நிம்மதியா தூங்குவேன். நீயும் நிம்மதியா தூங்கு, என்ன?” குரலில் அன்பு குறையவேயில்லை.

நளினா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்போது அவர் கை உயர்ந்தது? எப்போது பிஸ்டல் வெடித்தது?

“டுபுக்” என்று சைலன்சர் உபாயத்தால் மெல்லிய சப்தத்துடன் எமன் நளினாவின் நெற்றிவழியே புகுந்து அவள் உயிரைத் திருடிக் கொண்டான். “க்ரிக்” என்ற அர்த்தமற்ற சப்தத்துடன் சரிந்தாள் நளினா.

அவர் பிஸ்டலை உள்ளே வைத்துவிட்டு அமைதியாகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

***

டு இரவு.

அவர் எழுந்தார். கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். ரயில் அமைதியில் ஆழ்ந்திருந்தது. விளக்குகள் அநேகமாக அணைக்கப்படுவிட்டன.

அவர் நிம்மதியானார். அன்று மாலைவரை நளினாவாக இருந்த உடலைப் பஞ்சுமூட்டை போலத் தூக்கிக் கொண்டார். கம்ப்பார்ட்மெண்ட்டின் கதவை நோக்கிச் சென்றார். நளினாவின் உடலை ஒரு டாய்லெட்டில் இருத்தினார். வெளியே சென்று கம்ப்பார்ட்மெண்ட்டின் கதவைத் திறந்து காத்திருக்க ஆரம்பித்தார்.

யாராவது அந்தப்பக்கம் வந்துவிட்டாலும் “பாத்ரூமில் ஆள் இருக்கு சார்” என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பத் தயாராக இருந்தார். ஆனால் யாரும் வரவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் அங்குமிங்கும் கொட்டம் அடிக்கும் குழந்தைகள்கூட அன்று இல்லை.

அடிக்கடி வாட்சைப் பார்த்துக் கொண்டார். நேரம் ஒன்றரையை நெருங்கும்போது, சுறுசுறுப்பானார். ஒரு இடத்தில் ரயில் தன் வேகத்தை இழக்க ஆரம்பித்தது. ரயில் சினேகம்போல் திடீரென்று இன்னொரு தண்டவாளம் அருகில்வந்து சேர்ந்து பயணித்தது.

அவர் மீண்டும் நளினாவின் உடலைத் தூக்கினார். கவனமாக அடுத்த தண்டவாளத்தில் வீசியெறிந்தார். மீண்டும் நளினாவின் கூப்பேக்குச் சென்றார்.

அங்கே அவளுடைய லக்கேஜை இறக்கிச் சீட் மீது வைத்துக் கொண்டார். சீட் மீது ஏற்கெனவே நளினா அணிந்திருந்த உடைகள் இருந்தன. அவள் உடலின்மீது இதற்கென்றே அவர் எடுத்துவந்திருந்த ஒரு நைட்டியை அணிவித்திருந்தார். நளினாவின் உடைகளையும் செருப்புகளையும் பெட்டியில் திணித்தார். அவள் அணிந்திருந்த நகைகளைக் கைப்பையில் போட்டுவிட்டு அதைக் குடைந்தார். அவர் எண்ணியது கிடைக்கவில்லை. பதறாமல் பெட்டியையும் மற்றொரு பையையும் ஆராய்ந்தார். அவரிடம் நளினா கொடுத்ததுபோன்றே மற்றொரு உறை பெட்டியில் புடவை ஒன்றின் மடிப்புக்குள் இருந்தது.

இதைக் கவனமாகக் கிழித்தார். அதில் அவர் எதிர்பார்த்ததுதான் இருந்தது. திருப்தியுடன் பெட்டியிலேயே வைத்து மூடினார்.

சீட்டில், தரையில் ஏதும் ரத்தக்கறை இல்லையே என்று சோதித்தார். இல்லை. மேல் பர்த், கீழ் பர்த் ஆகியவற்றில் எதுவும் தடயங்கள் விடவில்லையே என்று பார்த்துக் கொண்டார். கீழே பளபளவென்று மின்னிய ஏதோ ஒன்று அவர் கருத்தைக் கவர்ந்தது. அது நளினா அணிந்திருந்த தோட்டின் திருகாணி என்று உணர்ந்து அதை எடுத்துக் கைப்பையில் போட்டார். அதன் அருகிலேயே கிடந்த பேப்பரைக் கவனிக்கவில்லை.

ஏதோ ஸ்டேஷனில் ரயில் நின்றது. நிமிர்ந்தார். நளினாவின் லக்கேஜ் முழுவதையும் எடுத்துக் கொண்டு, புதிதாக வண்டியில் ஏறுபவர்போல் தன் கூப்பேக்குள் சென்று அமைதியாக அமர்ந்தார். அதில் பயணம் செய்த மூவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். ஒருவர் லேசாகத் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தார்.

*****

சென்னை எழும்பூர்.

சரியாக நளினாவின் கம்ப்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே நின்றுகொண்டு, இறங்குபவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த அவன், நளினா இறங்காததால் குழம்பினான். ஏறிப் பார்த்துவிடுவோமா என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கையில், வேறொரு கம்ப்பார்ட்மெண்ட்டிலிருந்து ஒருவர் உள்ளே ஏறுவதைக் கண்டதும் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

சிறிதுநேரத்தில் அவர் பரபரப்பாக இறங்கிப் போனார். அவன் இன்னும் காத்திருந்தான். பதினைந்து நிமிடங்களில் கம்ப்பார்ட்மெண்ட்டினுள் போலீஸ் நுழைவதைக் கண்டு திடுக்கிட்டான். மெதுவே நகர்ந்து கூட்டத்துக்குள் கரைந்து காணாமற் போனான்.

*****

“இந்தக் கூப்பேல பிரயாணம் செய்தது யாரு?” என்று கேட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரன்.

“நாட்டியத் தாரகை நளினா சார்” என்றார் அந்தப் புது மனிதர்.

“நாட்டிய… தாரகையா? இப்படில்லாம் வேற கிளம்பிருக்காங்களா?” என்றார் இன்ஸ்பெக்டர் கேலியாக.

“சார்! இவங்க உலகப்புகழ் பெற்றவங்க” என்றார் அவர் கோபமாக.

“இருக்கட்டும். நீங்க யாரு?”

“நான் சுப்பாமணி. சங்கர்-ஸ்ரீனி அஸ்ஸோசியேட்ஸ் தெரியுமா? சங்கர் சாருடைய செகரட்டரி.”

இன்ஸ்பெக்டர் தன்னையறியாமல் எழுந்தார். குரலில் பவ்யம் கூடியது. “சாரி சார். இந்த நளினா உங்களோடத்தான் வந்தாங்களா?”

“சங்கர் சார் மகளுக்கு நாளைக்கு பர்த்டே. பார்ட்டியில் இவங்க டான்ஸ் நடக்கறதாயிருந்தது. அதுக்காக இவங்களைப் புக் பண்ணிட்டுக் கன்னியாகுமரிலேர்ந்து கூட்டி வரேன். என் பர்த் அடுத்த கம்பார்ட்மெண்ட் – செகண்ட் ஏஸி” என்றார் சுப்பாமணி.

“ஐ ஸீ! இங்கே எந்த அசபாவிதமும் நடந்த மாதிரித் தெரியலையே சார்! அவங்க ஏதாவது ஸ்டேஷனின் இறங்கிப் போயிருக்கணும். லக்கேஜ் இல்லை, கவனிச்சீங்களா? அவங்க என்ன ட்ரெஸ் போட்டிருந்தாங்க, என்ன நகை போட்டிருந்தாங்க, என்னென்ன லக்கேஜ் வெச்சிருந்தாங்க, இதெல்லாம் சொல்லுங்க, ட்ரேஸ் பண்ணிடலாம்” என்றார் இன்ஸ்பெக்டர்.

சுப்பாமணி அவர் கேட்ட விவரங்களை யோசித்து யோசித்துக் கூறினார். அருகிருந்த கான்ஸ்டபிள் ஒன்றுவிடாமல் குறிப்பு எடுத்துக் கொண்டார். மேலும் இன்ஸ்பெக்டர் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.

“சரி, போகலாம். அவங்களுக்கு ஏதோ அர்ஜெண்ட்டா கால் வந்து, நடுவிலேயே இறங்கிப் போயிட்டாங்கன்னுதான் நினைக்கறேன். கண்டுபிடிச்சுடலாம். நீங்க வேற ஏதாவது எங்ககிட்டச் சொல்லணுமா?”

சுப்பாமணி தயங்கினார். யோசித்து “இல்லை சார்” என்றார்.

“உங்களுக்கு ஏதாவது நினைவுக்கு வந்தா, எனக்குக் கால் பண்ணுங்க” – இன்ஸ்பெக்டர் போய்விட்டார்.

சுப்பாமணி மெதுவாக இறங்கினார். ஸ்டேஷனில் காலியாயிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தார். போலீஸைக் கூப்பிடுவதன்முன்பு நளினாவின் கூப்பேயில் அவருக்குக் கிடைத்த ஒரு பொருளைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தார்.

அது ஒரு பயணச் சீட்டு. ஏஸி முதல் வகுப்பு.

நளினாவின் டிக்கெட்!

–தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31