• தொடர்
  • பத்துமலை பந்தம் | 26 | காலச்சக்கரம் நரசிம்மா

பத்துமலை பந்தம் | 26 | காலச்சக்கரம் நரசிம்மா

1 month ago
313
  • தொடர்
  • பத்துமலை பந்தம் | 26 | காலச்சக்கரம் நரசிம்மா

26. வீட்டுச் சிறையில் மயூரி

தொழிலதிபர் சரவணப்பெருமாள் குடும்பம் காலை டிபன் உண்டு கொண்டிருந்தனர். வழக்கம் போல் கனிஷ்கா, பாலில் கார்ன் பிளக்ஸ்-சை மிதக்க விட்டு, ஸ்பூனால் ஒவ்வொன்றாக எடுத்து வாயினுள் தள்ளிக் கொண்டிருந்தாள்.

தேஜஸ் பேப்பரை படித்துக்கொண்டே, நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், வெறுப்புடன் இடதுகையால் பேப்பரை விசிறி எறிந்தான்.

“போச்சு..! இனிமே ராஜஸ்தான் ராயல்ஸ் என்னை திரும்பி பார்க்கும்னு தோணலை. புது பையன்க நல்லாவே ஆடிட்டு வராங்க..!” –தேஜஸ் கூற, கனிஷ்கா தந்தையைக் கேள்வியுடன் பார்த்தாள்.

“நேத்திக்கு நம்ம தாத்தாவைப் பார்க்க வந்தாளே ஒரு வியர்ட் லூக்கிங் லேடி. அவ பெயர் என்ன… மாதம்மாவா… மருதம்மாவா..? உங்க குடும்பத்துல ஒரு பொண்ணு கையிலதான் மூன்றாவது சிலையைப் பத்திய ரகசியம் இருக்குனு சொன்னாளே..! இஸ் ஷி ஹிண்டிங் அட் மயூரி..?”

குணசுந்தரி தனது மூக்குக்கண்ணாடியைக் கழட்டி துடைத்தபடி, மகளைப் பார்த்தாள். “வேற யாரு இருக்க முடியும்..? நாம ஒன்பது பேரு ஒரு பக்கமா இருக்கோம். நம்ம கிட்டே ரகசியம் எதுவும் இல்லேனா… அவ கிட்டேதான் இருக்கும்..? வாட் எ கேரக்டர்..? குடும்பத்துக்கு நல்லதுன்னு தானே தாத்தா சொல்றாரு..? அவளோட பாமிலிக்கும்தானே லாபம்..? என்னவோ நீதி, நேர்மை, பக்தின்னு பினாத்திக்கிட்டு நம்ம உயிரை வாங்கிகிட்டு இருக்கா.” –குணசுந்தரி புலம்பினாள்.

“அவளுக்கு எப்படி அந்த ரகசியம் கிடைச்சிருக்கும்..?” –தேஜஸ் கேட்க, கனிஷ்கா, பட்டென்று பதிலளித்தாள்.

“நான்தான் சொல்றேனே… அந்த சஷ்டிசாமிதான் கல்ப்ரிட்..! நம்ம தாத்தாவை நல்லா ஏமாத்திருக்கான். நம்ம மயூரியும் அவனோட சேர்ந்துக்கிட்டு நம்மளுக்கே ஆட்டம் காட்டறா.”

“இதுக்கு போயி ஏன் எல்லோரும் அலட்டிக்கிறீங்க..? எனக்கு மலேசியா, சிங்கப்பூர்ல இல்லாத காண்டாக்ட்டா..? என்னோட நண்பன் அமீர் மெர்ச்சண்ட் மலேசியாவில பெரிய பிசினஸ் மக்னெட்ன்னு உங்களுக்குத் தெரியாதா..? அண்டர் வேர்ல்ட், மேல் வேர்ல்ட்ன்னு ஈரேழு பதினாலு லோகங்களிலேயும் அவனுக்குத் தொடர்பு உண்டு..! மயூரி கிட்டே ரகசியம் இருந்தா, அதை நொடியிலே பிடுங்கி, வாட்ஸாப் பண்ணிடுவான். நான் அவன்கிட்டே பேசறேன்.”

“பட் … அவன் ரொம்ப ஆபத்தான பேர்வழி ஆச்சே..! கொலை பாதகத்துக்கும் அஞ்ச மாட்டானே..! அவன் கிட்டே நவபாஷாணம்… மூணாவது சிலைன்னு பேசாம, மயூரி கிட்டே இருக்கிற ரகசியத்தை பத்தி மட்டும் சொல்லுங்க. அப்படி ஏதாவது விவரம் கேட்டா, அது எங்க குடும்ப தெய்வம் விவகாரம்னு சொல்லி சமாளிங்க” –குணசுந்தரி சரவணப்பெருமாளை எச்சரிக்கை செய்தாள்..

சரவணப்பெருமாள் செல்போனை எடுத்து அமீர் மெர்ச்சண்ட் நம்பரை அழைத்தார்.

“ஹலோ அமீர்..! ஹவ் ஆர் யூ..? ஹவாய் ட்ரிப் என்ஜாய் பண்ணீங்களா..? எஸ்… ஒரு உதவிக்காக உங்ககிட்டே போன் பண்ணியிருக்கேன். என் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பொண்ணு… என்னோட பிரதர் இன் லாவோட பெண்.! பெயர் மயூரி..! உங்க கோலாலம்பூர் மில்லினியம் க்ராண்ட் ஹோட்டல்ல தான் வழக்கமா தங்குவா. ஷி இஸ் ஆன் ஏர் ஹோஸ்டஸ்.! மலேசியன் ஏர்லைன்ஸ்ல வேலை பார்க்கிறா..! எங்க பாமிலியோட முக்கியமான சீக்ரெட் ஒண்ணு அவகிட்டே இருக்கு. அதை எப்படி வாங்கறதுனு தெரியலை.”

“………… ………… …………”

“அவ அந்த ஹோட்டல் ல எப்பவும் ஆறாவது மாடியில ரூம் நம்பர் அறுபதுல தான் தங்கியிருப்பா. எப்படியாவது அந்த சீக்ரெட் கிடைச்சா போதும்….. நோ… நோ… எனக்கு ஆட்சேபணை இல்லை…… உங்க டிரீட்மெண்ட் படியே நல்லா கவனிச்சு, விஷயத்தை வாங்கிடுங்க…. நோ வொர்ரீஸ்..!” –என்று போனைக் கட் செய்த சரவணப்பெருமாள், குடும்பத்தினரைப் பார்த்து, “டன்” என்று கட்டைவிரலை உயர்த்தினார்.

குகன்மணி காரைச் செலுத்திக்கொண்டிருக்க, அவன் பக்கத்தில் முன் சீட்டில் மயூரி அமர்ந்து கொண்டிருந்தாள். மயூரிக்கு ஒரு துணையாக இருக்கட்டும் என்று குமுதினியையும் அழைத்திருந்தான் குகண்மணி. அவள் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தாள்.

காரின் ஜன்னல் வழியாகத் தொலைவில் தெரிந்த மலைத்தொடர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரி. மனதிற்குள் தன் வசம் இருந்த சுவடியின் இரண்டாம் ஓலையில் இருந்த குறிப்பை உச்சரித்துக் கொண்டிருந்தாள்

மூல தலைச்சன் பாலனுக்கு மாங்கனியே காப்பு

ஜால இடைச்சான் குட்டனுக்கு ஆழ்குழியே காப்பு

கோல கடைச்சன் வித்தனுக்கு சுண்ணமே காப்பு

தகையோன் வந்து நிற்க, மெய்யே காப்பு

மீண்டும் மீண்டும் அந்தக் குறிப்பை உச்சரிக்க, முதல் மூன்று வரிகளை அவளால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. போகர் மூன்று நவபாஷாணச் சிலைகளை செய்திருக்கிறார். முதலில் செய்த சிலையை தலைச்சன் என்றும், இரண்டாவது சிலையை இடைச்சான் என்றும், கடைசியாக செய்த சிலையை கடைச்சன் என்றும் சுவடிக் குறிப்பு கூறுகிறது. அப்படிப் பார்த்தால், தலைச்சன் பாலனுக்கு மாங்கனியே காப்பு என்பது பழநியையும், இடைச்சான் குட்டனுக்கு ஆழ்குழியே காப்பு என்பது பள்ளங்கி மலையையும் குறிக்கிறது.

கடைச்சன் வித்தன் என்பதுதான் மூன்றாவது சிலையாக இருக்க வேண்டும். சுண்ணம் காப்பு என்பது தான் விடை.! தகையோன் வந்து நிற்க, மெய்யே காப்பு என்கிற நான்காவது அடிதான் அவளை திணற அடித்தது.

காரணம் இல்லாமல் அவளைத் தனது வீட்டில் தங்க வைத்து, இப்போது பத்து மலைக்கு குகன்மணி எதற்காக அழைத்து செல்கிறான்..? இவளிடம் சுவடியைப் பெற்றுக்கொள்ள வந்ததாகக் கூறியவன், அதற்கு பின்னர் சுவடிகளைப் பற்றிப் பேசவே இல்லையே..! உண்மையில் சுவடிக்காக வந்தானா இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கக்கூடுமா..?

“பத்து மலையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அதை பற்றி எனக்கு அதிகம் தெரியாது .” மயூரி கேட்க, உற்சாகத்துடன் அவளிடம் விவரிக்கத் தொடங்கினான் குகன்மணி.

“யு ஓண்ட் பிலிவ், மயூரி..! பத்து மலையை பத்தி நிறைய மர்மமான விஷயங்கள் இருக்கு. தமிழர்கள் நிறையப் பேரு பத்து மலைன்னா அங்கே பத்து மலைங்க இருக்கும்னு நினைச்சுக்கிறாங்க. உண்மையில பத்துங்கிறது ஒரு நதியோட பெயர்..! இங்கே உள்ள குன்றுகள் எல்லாமே 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி உருவாச்சு. சித்தர்களோட தவ பூமி அது. ஜோக் என்ன தெரியுமா..? 1878 வரைக்கும் இப்படி ஒரு இடம் இருக்கிறதையே யாரும் தெரிஞ்சுக்கலை. 1878-இல் அமெரிக்கத் தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடேதான் இங்கே 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னால உருவான குன்றுகள் இருக்குனு அறிவிச்சார். அதற்குப்பின்தான் எல்லோரும் அங்கே போக ஆரம்பிச்சாங்க. பத்துமலையின் பெயர் புகழடைந்தது. 14 வருஷம் கழிச்சு 1891-இல் தம்புசாமிப் பிள்ளை னு ஒருத்தர் கட்டின முருகன் கோவிலுக்குத்தான் நாம் இப்ப போறோம்.”

“குன்றுகள் இருக்கிற இடமெல்லாம் முருகனோட இடம்தான்..!” –மயூரி கூறியதும், குகன்மணி தலையசைத்தான்.

“பட் மயூரி… பத்துமலை சாதாரணக் குன்றம் இல்லே..! 40 கோடி ஆண்டுகள் பழமையானதுங்கிற சிறப்பு மட்டும் பத்து மலைக்கு இல்லையே. அங்கே இருக்கிற அத்தனை குன்றங்களும் சுண்ணாம்புக் குன்றங்கள்.” –குகன்மணி கூறியதும், சீட் பெல்ட் அணிந்திருப்பதை மறந்து, நிமிர்ந்து உட்கார முயன்றாள் , மயூரி !

“சுண்ணாம்புக் குன்றமா..?” தன்னை மறந்து பரபரப்புடன் கேட்டாள் மயூரி. –கோல கடைச்சன் வித்தனுக்கு சுண்ணமே காப்பு — ஓலையின் மூன்றாவது குறிப்பு அவளது மனதில் எதிரொலித்தது.

அப்படியென்றால், மூன்றாவது நவபாஷாணச் சிலை பத்து மலையில்தான் இருக்கிறதா..?

மயூரி ஓரக்கண்ணால், காரை செலுத்திக்கொண்டிருந்த குகன்மணியை நோட்டம் விட்டாள். அவனோ தொடர்ந்து பத்து மலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான்.

‘பத்து மலையில் மூன்றாவது நவபாஷாண சிலை இருக்கிறது என்பது உண்மையானால், அந்த விஷயம் இவளது குடும்பத்திற்கு மட்டுமல்ல, குகன்மணிக்கும் தெரியக்கூடாது. ஆனால் பத்து மலையில்தான் அது இருக்கிறது என்றால், நாம் ஏன் அதை தேடிப்பார்க்க கூடாது..?’

தனது குடும்பத்தை போன்று அதை களவாடுவதற்கு அவள் தேட விரும்பவில்லை. பழனி சிலையையும். பள்ளங்கி சிலையையும் அவள் தர்சித்திருப்பதால், மூன்றாவது சிலையையும் தரிசிக்க வேண்டும் என்கிற ஆசையாய் மட்டுமே. அவளுக்கு இருந்தது. யாருக்கும் தெரியாமல், மூன்றாவது சிலையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்தாள் மயூரி.

“நாளைக்கு நான் ட்யூட்டில ஜாயின் பண்ணறேன். அதனால இன்னைக்கு நைட் நான் மில்லினியம் கிராண்ட் ஹோட்டலுக்கு போகப்போறேன்..!”

“ஓ… இஸ் இட் ஸோ..?” –என்று கூறிய குகன்மணி காரின் சைட் கண்ணாடியையே வெறித்து பார்த்தான்.

தே சமயம்—

மில்லினியம் கிராண்ட் ஹோட்டலினுள் நுழைந்த அமீர் மெர்ச்சண்ட்டின் ஆட்கள், மயூரியை தேடி ஆறாம் மாடி அறை எண் 600-வின் வாசலில் நின்று பஸ்ஸரை அழுத்தினர்.

“சாரி மயூரி..! இப்ப இருக்கிற நிலைமையில நீ ஹோட்டலுக்கு போகக்கூடாது.! என்னோட வீட்டை நீ சிறையா நினைச்சாலும், நான் கவலைப்படப் போறதில்லை.! நான் உன்னை வெளியே விடறதா இல்லே..!” –என்று கண்டிப்பான குரலில் கூற, மயூரி திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.

“நோ வே..!” –மயூரி தனது எதிர்ப்பை தெரிவிக்க, அவளை லட்சியம் செய்யாமல் குமுதினியைத் திரும்பிப் பார்த்தான் குகன்.

“குமுதினி..! மயூரி இனிமே நம்ம வீட்டுலதான இருப்பா. நீதான் அவளுக்கு முழு ரெஸ்பான்சிபிலிட்டி.. அவங்களை நல்லா கவனிச்சுக்க. எந்த காரணத்தை கொண்டும் அவங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாதே.” –என்றான் குகன்.

மயூரி உறைந்துபோய் அமர்ந்திருந்தாள் .‘

தொடரும்…

3 thoughts on “பத்துமலை பந்தம் | 26 | காலச்சக்கரம் நரசிம்மா

  1. அருமை யான கதைக்களம், ஆர்வத்தைத்தூண்டும் விறுவிறுப்பு!
    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930