• தொடர்
  • பத்துமலை பந்தம் | 25 | காலச்சக்கரம் நரசிம்மா

பத்துமலை பந்தம் | 25 | காலச்சக்கரம் நரசிம்மா

1 month ago
360
  • தொடர்
  • பத்துமலை பந்தம் | 25 | காலச்சக்கரம் நரசிம்மா

25. இரண்டில் ஒன்று, என்னிடம் சொல்லு..!

போதினியும், சுபாகரும், குகன்மணியிடம் பணிபுரியும், குனோங் மற்றும் குமுதினியின் வாரிசுகள் என்பதை அறிந்துகொண்டதும், எல்லாமே குகன்மணி அரங்கேற்றும் நாடகம் என்பதை உணர்ந்தாள் மயூரி. சுபாகரும், மயூரியும், பண்ணை வீட்டு மாடி அறையில் இவளது குடும்பத்தினர் பேசியதை ரகசியமாக பதிவு செய்ய பட்டன் மைக் எதையாவது பொருத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், குகன்மணியால் இவர்கள் பேசியதை எப்படி சரியாக யூகிக்க முடியும்..? குகன்மணி மிகவும் ஆபத்தானவன். அவனது முருக பக்திகூட, ஒரு புகைத்திரையாகத்தான் அவன் பயன்படுத்திக்கொண்டிருப்பானோ..?

எது எப்படியிருந்தால் என்ன..! இவள் வசம் உள்ள அந்த மர்மச் சுவடியை இவள் அவனுக்கு கொடுக்கப் போவதில்லை. அதே போல் தனது குடும்பத்தினரின் கையிலும் அவள் தரப்போவதில்லை. ‘எங்கேயாவது அதை பத்திரப்படுத்த வேண்டும்’ என்று மனதினுள் தீர்மானித்தாள். அறையின் கதவை தாளிட்டிருந்த துணிவில், தனது ஹாண்ட் பாகில் இருந்து சுவடியை எடுத்தாள். அந்த சுவடியில் இரு ஓலைகள் இருந்தன. ஓலை இரண்டுமே நீளமாக இருந்தாலும், லவங்க பட்டையின் அளவிலான அகலத்தை கொண்டிருந்தன. இவ்வளவு குறுகிய ஓலைகளில் எப்படித்தான் பாடல்களை எழுதினார்களோ..?

சுவடி என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட ஓலைகளைக் கொண்டதுதான். ஒரே ஓலையாக இருப்பதை சுவடி என்று குறிப்பிடுவதில்லை என்பதை மயூரி அறிவாள். முதல் ஓலையை வாசிக்க முற்பட்டாள். எழுத்துகள் தெளிவில்லாமல் எறும்புகள் ஊர்வதை போன்று ஒரே சீராக இருக்க, மிகவும் சிரமப்பட்டு அவற்றை ஆராய்ந்தாள்.

அந்த ஓலையின் முதல் வரியை படித்ததுமே, அவளது சிந்தையில் ஒரு வெளிச்சம். அந்த ஓலையின் முதல் வரியை எங்கோ கேட்டது போன்ற உணர்வு, தோன்ற, சட்டென்று தனது செல்போனை எடுத்து, அன்று பண்ணை வீட்டில் தாத்தா நல்லமுத்து என்கிற அஞ்சையா கூறியிருந்த அந்த பாடலை கேட்டாள்.

அவரது பாடலும், அதே வரியில்தான் தொடங்கியிருந்தது. தாத்தாவின் பதிவைக் கொண்டு, தொடர்ந்து சுவடியின் முதல் ஓலையை படிக்க, இப்போது அவளால் எளிதாக படிக்க முடிந்தது. தாத்தா கூறிய அந்த பாடலைத்தான் சுவடியின் முதல் ஓலை குறிப்பிட்டிருந்தது.

‘பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான்

சொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்

தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற

தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த

சிவசக்தி நலமான மனோம்மணி கடா”

கட்டுவது நவநஞ்செனினும், தலை மூன்றே ஔஷதமாம்!

நீலி காவல் நிற்குங்கால், நவநாதனும் நிற்பானாம்.’

தாத்தாவின் குரல் அதோடு நிற்க, வியப்புடன் அடுத்த ஓலையை வாசிக்க முயன்றாள்.

மூல தலைச்சன் பாலனுக்கு மாங்கனியே காப்பு

ஜால இடைச்சன் குட்டனுக்கு ஆழ்குழியே காப்பு

கோலா கடைச்சன் வித்தனுக்கு சுண்ண கல்லே காப்பு

தகையோன் வந்து நிற்க, மெய்யே காப்பு

என்கிற குறிப்பு இருக்க, திகைப்புடன் மீண்டும் அதனை படித்தாள். இந்த ஓலைதான் பள்ளங்கி நவபாஷாண சிலையின் அடியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். தாத்தா சங்கல்பம் செய்து கொண்ட போது முதல் சுவடியில் உள்ள பாடல் மட்டும் அவருக்கு போதிக்கப்பட்டிருக்க, அதனை அவர் பாடியிருக்கிறார். நவபாஷாண சிலையின் உள்ள பாஷாணங்கள் பட்டியலை முதல் ஓலை கூறுகிறது. ஆனால் இரண்டாம் ஓலையை பற்றி தாத்தா அறிந்து கொண்டிருப்பதாக தெரியவில்லை. அதனை யாரோ தாத்தாவின் கண்களில் படாமல் மறைத்திருக்கிறார்கள். அதனை எடுத்தவர், இவள் பயணித்த அதே விமானத்தில் பயணித்திருக்க வேண்டும். இவள் உறங்கும்போது, இவளது மடியில் சுவடியை போட்டுவிட, அதற்காகத்தான் குகன் மணி விமான நிலையத்தில் இவளுக்காக காத்திருக்கிறான்.

இவளைக் கூரியராக உபயோகித்திருக்கிறார்கள். சுவடியை இவள் மடியில் போட்டது, ஒரு வேளை சஷ்டி சாமியோ..? அவர்தானே தாத்தாவோடு கூடவே போகர் பாசறைக்கு போகும் வழக்கம். தாத்தாவுக்குத் தெரியாமல், இரண்டாம் ஓலையை மறைத்திருக்க வேண்டும். தாத்தாவும் முதல் ஓலைப் பாட்டை மட்டுமே கற்றிருக்க வேண்டும். சஷ்டி சாமி கூடவே இருந்து குழி பறிக்கிறார் என்று கனிஷ்கா கூறியது அவளுக்கு நினைவு வந்தது.

இவளது குடும்பத்தினர் செய்வது அடாத செயல்தான். இருப்பினும், இந்தச் சிலையும் , சுவடியும் அஞ்சையா என்கிற உண்மையான நல்லமுத்துவுக்கும், ராஜகாந்தம் என்கிற உண்மையான தேவசேனைக்கும் அல்லவா சேர வேண்டும். இந்த சுவடியை அடைய குகன்மணி ஏன் திட்டமிடுகிறான்.?

என்ன ஆனாலும் சரி..! முதல் ஓலை குகன்மணியிடம் கிடைத்தாலும் பரவாயில்லை. இரண்டாம் ஓலை அவனுக்கு கிடைக்கவே கூடாது. அதில்தான் ஏதோ முக்கியத் தகவல் இருப்பதாக அவளுக்கு பட்டது. நிச்சயம் குகன்மணி இவளிடம் இருந்து ஓலையை பறிமுதல் செய்வான்.

இரண்டாவது ஓலையைச் சுவடியில் இருந்து உருவினாள். எங்கே பத்திரப்படுத்தலாம்..? இவள் இல்லாதபோது, இவளது உடைமைகளை சோதனையிட்டால் கூட, ஓலை கிடைக்கக்கூடாது. சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. தான் இரவு உறங்கும் போது அணியும் உடையான கருப்பு நிற சுரிதார் பைஜாமாவின் மீது அவளது பார்வை பதிந்தது. சுவடியில் இருந்து இரண்டாம் ஓலையை மட்டும் நீக்கினாள். அந்த பைஜாமாவின் நாடாவை உருவியவள், அந்த பகுதிக்குள் அந்த ஓலையை நுழைத்தாள். சிரமம் எதுவும் தராமல் அந்த ஓலை சூரிதாரின் இடைப்பகுதியில் நுழைந்தது. ஓலை முழுவதுமாக மறையும் வரையில், அதனை உள்ளே திணித்தாள். பிறகு சேப்டி பின் ஒன்றை எடுத்து மீண்டும் நாடாவை கோர்த்து, பிறகு அதனை மடித்து, பையில் வைத்தாள். நிச்சயம் யாராலும் அந்த ஓலையைக் கண்டுபிடிக்க இயலாது.

நல்லவேளை… இவள் காரில் பயணிக்கும்போது அவனிடம் சுவடியைக் காட்டியிருந்தால் தவிர, அதில் இரண்டு ஓலைகள் இருக்கும் என்பதை அவனால் யூகித்திருக்க முடியாது. சுவடியின் முதல் ஓலையைத் தனது ஹாண்ட் பாகில் திணித்துவிட்டு, நிமிர்ந்தபோது, அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.

நிதானமாகச் சென்று கதவைத் திறக்க, வெளியே குமுதினி நின்றிருந்தாள்.

“முதலாளி சாப்பிடக் கூப்பிடறாரு..!” –என்றபடி குமுதினி செல்ல, அவள் பின்னால் நடந்தாள் மயூரி.

“வா மயூரி..! இட்ஸ் டின்னர் டைம்..!” என்றவன், டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்தான்.

“நான் எப்பவும் டின்னர் சாப்பிடும் போது பழைய சிவாஜி படம் பார்த்துக்கிட்டேதான் சாப்பிடுவேன்.” என்றபடி குகன்மணி டைனிங் டேபிள் முன்பாக அமர்ந்துகொண்டு, டிவி வால்யூமை அதிகரித்தான். டிவியில் ராஜா படம் ஓடிக்கொண்டிருந்தது. சிவாஜி கணேசன், ஒவ்வொரு ஜன்னலாக வந்து நின்று, “இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு..” —என்று பாடிக்கொண்டிருக்க, ஜெயலலிதா ஒவ்வொரு ஜன்னலாக மூடிக்கொண்டிருந்தார்.

“ஜெயலலிதா என்னதான் கதவை மூடினாலும், சிவாஜி எப்படியாவது வந்து பாடறாரு இல்லே..? இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு..!” –என்று சிரித்தபடி குகன் பாட, மயூரி உறைந்து போய் அவனை வெறித்தாள்.

சென்னை. ஈசிஆர் பண்ணை வீட்டை விட்டு அனைவரும் தத்தம் ஊர்களுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். நல்லமுத்து மாடியில் இருந்து இறங்கி தனது காரை நோக்கி நடந்தார், டிரைவர் கார்க் கதவைத் திறந்து நிற்க, வலது காலை உயர்த்தி காரில் ஏற முற்படுகையில், பாண்டிமுத்துவின் கார் நுழைந்தது.

“அப்பா..! கொஞ்சம் நிதானிங்க..! மூணாவது சிலையைப் பற்றி நல்ல தகவலோடு வந்திருக்கேன்.” –பாண்டிமுத்து கூற, அனைவருமே திகைப்புடன் அவனைப் பார்த்தனர்.

பாண்டிமுத்து விழித்தபடி நிற்க, அவன் அருகில் கோபுரக் கொண்டையுடனும், பெரிய வட்ட குங்குமப்பொட்டுடனும், செவிகளில் பாம்படத்துடனும், எல்லோரையும் விசித்திரமாக பார்த்தபடி நின்றிருந்தாள், மருதம்மா.

“யாரு பாண்டிமுத்து இவங்க..?” –நல்லமுத்து கேட்டார்.

“பிரத்யங்கரா தேவி உபாசகி. வழக்கமா யார் வீட்டுக்கும் போக மாட்டாங்க. நம்ம வீட்டுக்கு மட்டும் புறப்பட்டு வந்திருக்காங்க. அவங்களேதான் வரேன்னு சொன்னாங்க. உன்னைப் பார்த்து பேசணும்னு சொன்னாங்க.” — பாண்டிமுத்து கூற, அவளை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார், நல்லமுத்து.

“நீங்க நல்லமுத்து..! ஆனால் உங்க பெயர் வேற..! ஒரு காரணத்துக்காக உங்க பெயரை மாத்திக்கிட்டீங்க. இதுவரைக்கும் எல்லாம் நல்லா போய்கிட்டு இருந்தது. இப்ப தொடர்ந்து நல்லா போகணும்னு ஒரு பொருளை தேடிகிட்டு இருக்கீங்க. ஆனா நீங்க செய்ய போகிற காரியம் ரொம்ப ஆபத்தானது. அந்தக் காரியத்துல இறங்கணும்னா முதல்ல உங்களை நீங்க பத்திரப்படுத்திக்கணும். அதுக்குதான் நான் வந்திருக்கேன். உங்களுக்கு ஆபத்து எதுவும் வராம நான் பார்த்துக்கறேன். நீங்க பதிலுக்கு என்ன செய்யணும் தெரியுமா..? உங்க மகன் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கார். அதை நிறைவேத்தணும். செய்வீங்களா..?” –மருதம்மா கேட்க, நல்லமுத்துவின் விழிகள் தெறித்து விழுந்துவிடும் போல பிதுங்கின.

‘எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறாளே..! நாம பேசின விஷயங்களை அவள் கிட்டே சொன்னியா..?’ — என்பது போல மகனை வெறித்தார், நல்லமுத்து.

“உங்க மகன் எதையும் என்கிட்டே சொல்லலை.! ஆத்தா தான் என்கிட்டே எல்லாத்தையும் விலாவரியா சொல்லிக்கிட்டு இருக்கா. இப்ப குமுதினி எங்க இருக்கானு ஆத்தா கேட்கிறா..?” –மருதம்மா கேட்க, அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தார், நல்லமுத்து என்கிற உண்மையான அஞ்சையா.

சட்டென்று தன்னைச் சுதாரித்துக்கொண்டார், நல்லமுத்து.

“நான் கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க. நான் உங்களை நம்பறேன்..! நான் தேடறது எனக்குக் கிடைக்குமா..?” –நல்லமுத்து கேட்க, அவரை பார்த்து மருதம்மா சிரித்தாள்.

“முக்கோணத்துல மூணு பேரு நிக்கிறாங்க, ஐயா..! ஒரு மூலையில நீங்க, இன்னொரு மூலையில ஒரு பையன், மூணாவதா ஒரு பொண்ணு. அந்தப் பொண்ணு நினைச்சா நீங்க தேடற பொருள் உடனே உங்க கைக்கு வந்து சேரும்..!” –மருதம்மா கூற, அனைவரும் அவளை வியப்புடன் நோக்கினர்.

“அந்த பொண்ணு யாரு..?” –கனிஷ்கா கேட்க, சட்டென்று அவளைத் திரும்பி நோக்கினாள், மருதம்மா.

‘இந்தப் பெண்ணிடம் ஏதோ கோளாறு இருக்கிறது..!’ -மருதம்மா கனிஷ்காவைத் தனது கண்களால் அளவெடுத்து கொண்டிருந்தாள்.

-தொடரும்…

2 thoughts on “பத்துமலை பந்தம் | 25 | காலச்சக்கரம் நரசிம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930