23rd October 2021

அடுத்த மாதம் வடபழநி கோயில் கும்பாபிஷேகம்

1 week ago
46

சென்னை வடபழநி என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்தான். திருமுருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் வீற்றிருக்கும் தண்டாயுத பாணியின் மற்றொரு வடதிசை வீடாக முருக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது மிகையில்லை. அதுவே வடபழநியின் பெயர் வரக் காரணம்.

வடபழநி முருகன் கோயில் குடம்முழுக்கு அடுத்த மாதம் நவம்பர் இறுதியில்  நடைபெறவுள்ளது. வடபழனி முருகன் கோவிலில் 34 திருப்பணிகள் ரூ.2.56 கோடி செலவில் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோவிலுக்கு முன்பு உள்ள கூரை களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ.16 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திருமண மண்டபங்கள், ரூ.9 கோடி மதிப்பீட்டில் அன்னதான கூடங்கள், முடி காணிக்கை செலுத்தும் இடம், ரூ.2 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம், ரூ.40 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு வீடுகள் கட்டுதல் உள்பட பல்வேறு பணிகளுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வெகுவிரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. மேலும் கூடுதல் வசதிக்காக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு இடம் தனியாக கட்டப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

இப்போது வடபழநி கோயில் பற்றித் தெரிந்துகொள்வோம்.

ஒரு கோயிலை எடுத்துக்கொண்டால் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றும் ஏதோ ஒன்றினால் அந்தக் கோவில் பிரசித்திப் பெற்று விளங்கும். இத்தலத்தைப் பொறுத்தவரை மூலவர் அருள்மிகு வடபழநி ஆண்டவரின் மூலம் சிறப்புப் பெற்றுள்ளதாக விளங்குகிறது.

இத்தலமானது சென்னை மாநகரின் மையப் பகுதியில் கிழக்கில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வடபழநியில் கோயில் அமைந்துள்ளது.

அறுபடை வீட்டிலுள்ள முருகன்களைப்  போல் வடபழநியில் உள்ள மூலவ மூர்த்தியும் சிறப்புடன் அமைந்துள்ளார். தம் திருப்பாதங்களில் பாதணிகளுடன் (பாதரட்சை) அருள்பாலிக்கிறார். பாதணி அணிந்திருப்பது வழிபடுவோருக்கு ஆவணத்தையும் அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது.
     பழநி முருகன் கோவிலில் உள்ள முருகனோ, இரு கால்களையும் நேர்க்கோட்டில் வைத்துக் காட்சி அளிக்கிறார். ஆனால் வடபழநி ஆண்டவரோ தனது வலது காலை சற்று முன்வைத்து காட்சியளிக்கிறார். தன்னிடம் வந்து தங்கள் குறைகளைக் கூறும் பக்தர்களுக்கு அவர்கள் குறைகளைத் தீர்க்கத் தானே முன்வந்து அருளத் தயாராகக் காத்திருக் கின்றார் என்பதைக் குறிக்கின்றது.

வடபழநி ஆண்டவரின் அருளை உணர்ந்த பக்தர்கள் இத்தலத்தில் கார்த்திகைத் திருநாள், தைப்பூசம், வைகாசி விசாகம் ஆகிய விசேஷ விழா நாட்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் பாத யாத்திரையாகவும் கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

அதேபோல் வடபழநி ஆண்டவர் திருமணத்திற்கு விசேஷமானவர். இக்கோயிலில் திருமணம் செய்தால் வாழ்க்கை வளமாகும். அதனாலேயே இங்கு ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. தற்போது கொரோனா காலத்தில் ஆலயத்தில் திருமணம் செய்வதைத் தடை செய்திருக்கிறார்கள்.

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் 19ஆம் நுற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. வடபழநி எனும் பெயர் இந்தக் கோயில் தோன்றிய காலத்தில் இல்லை. அப்போது இந்தப் பகுதி கோடம்பாக்கம் என்றே அழைக் கப்பட்டு வந்தது. பேருந்து வசதியில்லாத அந்தக் காலத்தில் கோடம்பாக்கத் திலிருந்து இரண்டு கி.மீ. தூரம் சிறிய பாதை வழியேதான் குதிரை வண்டியிலும் கால் நடையாகவும் சென்று வடபழநி முருகனை வணங்கி வந்துள்ளனர்.
     காலப்போக்கில் அண்ணாசாமி சித்தரால் கோவில் வளர்ச்சிப் பெற்றது. மற்றும் இறை அன்பர்கள் மற்றும் பக்தர்களின் ஆதரவினாலும் முருகனின் மகிமையினாலும் வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வளர்ச்சிப் பெற்று தற்போது சுமார் அரை ஏக்கர் (2234 சதுர மீட்டர்) பரப் பளவில் நாற்புறத் திருக்கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சிஅளிக்கிறது.

தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் தினம் தினம் ஆயிரக்கணக்கான வர்கள் வந்து வழிபடும் பிரசித்திப் பெற்ற தெய்வமாக வடபழநியில் முருகன் வீற்றிருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந் தெல்லாம் முருக பக்தர்கள் வந்து முருகனை வணங்கிச் சென்றார்கள்.
     தென்பழநியிலிருந்து தண்டாயுதபாணியின் திருவுருவப் படத்தைக் கொண்டுவந்து ஸ்தாபிக்கப்பட்டதால் இக்கோயில் வடபழநி என பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. தென்பழநியிலிருந்து முருகன் திருவுருவப் படத்தைக் கொண்டுவந்த சித்தர் அண்ணாசாமி வழிவந்தவர்கள் இன்றும் வடபழநி கோயில் அருகிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது வடபழநி ஆண்டவர் கோயில் கொண்டுள்ள இடத்தில்தான் அண்ணாசாமி சித்தர் வாழ்ந்து வந்திருந்தார். அவர் ஒரு சமயம் கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஒரு முருகபக்தர் அண்ணா சாமியைச் சந்தித்து, கிருத்திகை நாளில் திருப்போரூர், திருத்தணி, பழநி ஆகிய தலங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வேண்டி வழிபட்டால் உங்களின் வயிற்றுவலி தீரும் என்றார்.

அத்துடன் திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்குப் புதுமையான சக்தி நிறைந்த காணிக்கை ஒன்றையும் செய்யச் சொன்னார். அதற்குப் பெயர் பாவாடம் அதாவது நாக்கை அறுத்து ஆண்டவனுக்குக் காணிக்கையாகத் தருதல்.
அதேபோல் ஒரு கிருத்திகை நாளில் அண்ணாசாமி திருத்தணிக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியைத் தரிசித்தபின் பலி பீடத்தருகே சென்று தன் நாக்கைத் தானே அறுத்து இறைவனுக்குக் காணிக்கையாக்கினார். பிறகு  தன் வீடான தற்போதைய வடபழநி ஆண்டவர் திருக்கோவி லுக்கு வந்த அண்ணாசாமி முருகனை நினைந்து உருகி முருகா…முருகா… என நா குழறியபடி வேண்டினார். என்ன அதிசயம்!

சில நாள்களிலேயே அண்ணாசாமியின் நாக்கு வளரத் தொடங்கியது. கொடுமையான வயிற்று வலியும் விடைபெற்றது. பிறகு அண்ணாசாமி, குறி சொல்லத் தொடங்கினார்

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கிருத்திகையன்றும் திருப்போரூர் கோயிலுக்குப் பாத யாத்திரையாகச் சென்று முருகனைத் தரிசித்துவந்தார்.
(அண்ணாசாமி சித்தர் வாரிசுகளில் ஒருவரான திரு. குமாரசாமி அவர் களும் அவரின் மகன் திரு. சம்பந்தன் அவர்களும் மாதந்தோறும் கிருத்திகை தினத்தில் ஸ்ரீதிருப்போரூர் ஆலயத்துக்குச் சென்று ஸ்ரீ முருகனைத் தரிசித்து வந்தனர். அதேபோல் தற்போதைய அவரது குடும்பத்தினரும் மாதந்தோறும் கிருத்திகை தினத்தில் திருப்போரூர் ஸ்ரீமுருகனைத் தரிசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
     பக்திக்குப் பாத்திரமான அண்ணாசாமி சித்தரை பக்தர்கள் பெருமை யோடு மதிக்கத் தொடங்கினர். அருள்வயப்பட்டு அவர் சொல்லும் வாக்கை பக்தர்கள் அப்படியே கேட்டு நடந்தனர். சில நாட்களுக்குப் பிறகு அண்ணாசாமி பழநிக்குச் சென்றார். அங்கு மெய்ம்மறந்து முருகனைத் தரிசித்துவிட்டு படி இறங்கும்போது ஒரு பெரிய அழகிய பழநி தண்டாயுதபாணியின் திருவுருவப் படத்தைக் கண்டார்.

அப்படத்தைப் போலவே ஒரு படத்தை வாங்க நம்மிடம் பணம் இல்லையே என நினைத்துக்கொண்டே பழநியில் தாம் தங்கிருந்த இருப் பிடத்தை வந்தடைந்தார் அண்ணாசாமி. அன்றிரவு பழநி தண்டாயுதபாணி அண்ணாசாமியின் கனவில் தோன்றி, அண்ணாசாமி, நான் உன் வீட்டிலேயே எழுந்தருளப் போகிறேன். நாளை நீ வீதியில் செல்லும்போது, ஒரு படக் கடைக்காரர் நீ விரும்பிய அந்தப் படத்தை உனக்குத் தருவார். பெற்றுச் செல் என்று கூறி மறைந்தார். அதேபோல் மறுநாள் அண்ணாசாமி கோயில் வீதியில் செல்லும் போது, கோயில் வாயிலில் உள்ள ஒரு சாமிப் படங்கள் விற்கும் படக் கடைக்காரர், தானே முன்வந்து தண்டாயுதபாணியின் அழகிய உருவப் படத்தைத் தந்தார். எல்லாம் முருகன் திருவிளையாடல்.
     அதன்பின் சென்னைக்கு வந்த அண்ணாசாமி, அப்படத்தைத் தாம் அருள் வாக்கு சொல்லும் குறி மேடையில் வைத்து, அந்த இடத்தைக் கீற்றுக் கொட்டகைக் கோயிலாக உருவாக்கினார். இதுவே வடபழநி ஆண்டவர் திருக்கோயிலாக இன்று தெய்வீக ஒளிவீசி காட்சி அளிக்கிறது.

அண்ணாசாமி சித்தருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர். ஒருவர் ரத்தினசாமி சித்தர். இன்னொருவர் பாக்கியலிங்கத் தம்பிரான். இவ்வாறு இறைப்பணி செய்து வந்தவர் மூப்பு எய்தவே பின்னர்அவ ரது சீடர் ஸ்ரீரத்தினசாமி முதலியாரை இவரது பணியினைத் தொடர்ந்து செய்யச் சொல்லி பின்னர் முக்தியடைந் தார். ஸ்ரீரத்தினசாமி முதலியாரும் ஸ்ரீவடபழநி ஆண்டவருக்கு உருவச்சிலை அமைத்து பூஜைகள் செய்து வந்தார். பின்னர் அவர் வழித்தோன்றலாக வந்தவர்தான் ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரான். இவரும் முருகன்பால் பக்திகொண்டு, வரும் பக்தர்களுக்கு அருளாசிகள் வழங்கியும் சில நாள்களில் குறிசொல்லியும் மக்களின் மனத்தை மிகவும் கவர்ந்து வந்துள்ளார். மூன்றாவது சாதுவான இவர் 1931ஆம் ஆண்டு முக்கியடைந்தார். பின்னர் இம்மூவரின் புகழும் தமிழ்நாடெங்கும் பரவ, பெருந்திரளான மக்கள் அடிக்கடி வடபழநி ஆண்டவ னைத் தரிசிக்க வர ஆரம்பித்து பிரபலமானது இக்கோயில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031