-அமானுஷ்ய தொடர்-

பாம்புகள் குறித்து பலவிதமான நம்பிக்கைகள் இன்றளவும் நிலவி வருகின்றது. பாம்புகள் அடிக்கடி கனவில் வந்தால் பாலுணர்வு எண்ணம் மேலிடும். அதைப்போலவே பாம்புகள் பின்னிப் பிணைந்து புணரும்போது அதனருகில் தூய்மையான புது வெண்மையான துணியை போட்டு விட வேண்டுமாம். நீண்ட நேரம் குறிப்பிட்ட அந்த இரண்டு நாகங்களும் அந்த வெள்ளைத்துணியில் புரண்டு எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்ற பிறகு, அந்த வெள்ளைத் துணியை எடுத்து பார்த்தால் அது மஞ்சள் நிறமாக மாறியிருக்கும். அந்த துணியை எடுத்து வந்து வீட்டில் வைத்து வணங்கி வந்தால் செல்வம் குவியும் என்று மக்கள் நம்புகின்றனர்.

ஆனால், நாகங்கள் பின்னிப் பிணைவது பற்றி நாகாஸ்திரம் வேறுவிதமாக கூறுகிறது. பாம்புகள் பின்னிப் பிணைந்து புணர்வது போல் கனவு கண்டால் துன்பம் வருவதற்கு அறிகுறியாம்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

யோகினியின் அலறல் சத்தம் கேட்டு அருவியில் குளித்துக் கொண்டிருந்த அனைவரும் திகில் அடைந்தனர்.

அரவிந்தனும் நந்தனும் அருவிக்குள் இருந்து வேகவேகமாக யோகினி அருகே ஓடி வந்தனர்.

“யோகினி, என்னாச்சு? ஏன் அப்படி கத்தின?” அரவிந்த் அதிர்ச்சியோடு கேள்வி கேட்டான்.

“என் கால்ல பாம்பு கடிச்சிடுச்சு” என வலியில் துடித்துக் கொண்டே யோகினி கூறினாள்.

அரவிந்தன் அவள் இடது காலை பார்த்தான்.இடது காலின் பதத்திற்கு சற்று மேலே ஒரு சின்ன இடைவெளியில் அருகே பிளடால் கீறியது போல் கீறல் இருந்தது.

“நந்தா, பாம்பு கடிச்ச மாதிரி தான் இருக்கு” என்று அரவிந்தனும், யோகினியின் காலை பார்த்துவிட்டு கூறினான்.

“அரவிந்தா, டைம வேஸ்ட் பண்ணாமல் உடனே யோகினியை தூக்கிக்கிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்.”

“சரிடா” என்றவாறே அரவிந்தன், யோகினியை ஒரு குழந்தையை தூக்குவது போல தூக்கி கொண்டான்.

“சார், கொஞ்சம் நில்லுங்க” என்று ஒரு குரல் கேட்டது.

அரவிந்தன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

“ஏன் நிக்க சொல்றீங்க?” என்று சீறினான் நந்தன்.

“என் பேரு முருகேசன். இந்த கொல்லிமலையில வாழுற மலைப்பளியன். அந்த பொண்ணு கடிச்சது விஷப் பாம்பா ? விஷமில்லாத பாம்பான்னு தெரிஞ்சிக்கலாம். அப்புறம் ஹாஸ்பிடலுக்கு போகுறதா? வேண்டாமான்னு பற்றி யோசிக்கலாம்” என்று முருகேசன் என்ற அந்த மலைப்பளியன் சர்வசாதாரணமாக கூறினான்.

“நீங்க தான் ஐந்துதலை நாகத்தை நேரில் பார்த்தவறா?” என்று பொட்டில் அடித்த மாதிரி கேட்டான் நந்தன்.

“சார் முதல்ல இந்தப் பெண்ணைக் காப்பாத்துற வழியே பார்க்கலாம்.அப்புறம் மத்ததை பத்தி பேசிக்கலாம்” என்று நந்தனை கத்தரித்தான் முருகேசன்.

முருகேசன் யோகினியின் காலில் பாம்பு கடித்த இடத்தை பார்த்தான்.அங்கே, முள்ளால் கீறிவிட்டது போல் இருந்தது.

“சார், இது எதோ தண்ணி பாம்பு கடிச்சா மாதிரி இருக்கு. பயப்படுவதற்கு ஒண்ணுமில்லை” என்று சாதாரணமாக கூறினான், முருகேசன்.

“எப்படி…எப்படி சொல்றீங்க?” என்று ஆர்வத்துடன் கேட்டான் அரவிந்த்.

அது ஒண்ணும் பெரிய ‘கொல்லிமலை ரகசியம்’ இல்லை! பாம்பு கடிச்ச வேகத்திலே உடனே வாயில் நுரை தள்ளி, உடம்புல நீலம் பூத்திருக்கும். ஆனா, இவங்களுக்கு அப்படி எந்த அறிகுறியும் தெரியல.”

“அப்போ, யோகினியை கடிச்சது தண்ணி பாம்பு?”

“ஆமாங்க அப்படி தான் இருக்கும்.”

“அப்புறம் ஏன் யோகினி இன்னும் மயக்கத்துல இருக்கா?”

“அது பாம்பு கடிச்சிடிச்சேன்னு அப்படின்னு பயத்தில வந்த மயக்கமாக இருக்கும்” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த அருவி நீரை கொஞ்சம் அள்ளி யோகினியின் முகத்தில் தெளித்தான், முருகேசன்.

யோகினியும் சில நொடிகளில் கண் விழித்தாள்.

அரவிந்தனுக்கும், நந்தனுக்கும் உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்தது.

“எதுக்கும் ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்” என்றான் நந்தன்.

“உங்களுக்கு சந்தேகமாக இருந்தாக்க, உங்க சந்தேகத்தை உடனே தீர்த்து வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு முருகேசன் ஒரு மூலிகையின் மூன்று இலைகளைக் கொடுத்து யோகினியை சாப்பிடச் சொன்னான். அவளும் மெல்ல மெல்ல மென்று சாப்பிட்டாள்.

“எப்படிம்மா இருக்கு?”

“முகத்தை ஒருவாறு சுளித்துக்கொண்டு, ரொம்ப கசப்பாக இருக்குங்க” என்று கூறினாள் யோகினி.

“உங்களை விஷப் பாம்பு கடிக்கல. விஷப்பாம்பு கடிச்சி இருந்தா, உங்களுக்கு கசப்பு சுவையே தெரியாது.”

“ரொம்ப நன்றிங்க” என்றவாறு தன் இரண்டு கைகளை கூப்பியவாறே நன்றி கூறினாள் யோகினி.

அரவிந்தனும், நந்தனும் கூட முருகேசனுக்கு மனதார நன்றி கூறினர்.

“உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?” என்றான் நந்தன்.

“தாராளமா கேளுங்க.”

“யோகினிக்கு எந்த இலையை கொடுத்தீங்க?”

“நான் கொடுத்த மூலிகையை ‘சிறியா நங்கை’.பாம்பு கடிச்சவங்களுக்கு மட்டுமில்ல பொதுவாக, வேற ஏதாவது விஷம் ஜந்துக்கள் கடிச்சட்டாக்கூட கொஞ்சம் சிறியா நங்கை இலையை கொடுத்து சாப்பிட சொல்லுவாங்க. இலையை சாப்பிடும் போது கசப்பு சுவை தெரிஞ்சுச்சுன்னா அவர்களுக்கு ஆபத்து இல்லைன்னு அர்த்தம். ஒருவேளை கசப்பு தெரியல்லன்னா, ஏதோ விஷம் ஜந்து கடிச்சிருக்குன்னு அர்த்தம். அதனால, அவங்களுக்கு விஷம் இறங்குற வரைக்கும் சிறியாநங்கை இலையை கொடுத்து சாப்பிட சொல்லுவாங்க. இலையை சாப்பிடறவங்களுக்கு கசப்பு சுவவை தெரிஞ்சிடுச்சுன்னா விஷம் இறங்கிடுச்சுன்னு அர்த்தம்.”

முருகேசனின் விளக்கத்தைக் கேட்ட நந்தன் அதிசயித்தான்.

அடுத்து, யோகினி இடையிட்டு ஒரு கேள்வியை கேட்டாள்.

“உங்களுக்கு ‘ஏலக்காய் சித்தர்’ பற்றி ஏதாவது தகவல் தெரியுமா?”

ஏலக்காய் சித்தர் என்ற பெயரைக் கேட்டதும் முருகேசனின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் படர ஆரம்பித்தது.

“எதுக்கு அவரை விசாரிக்கிறீங்க? நீங்க டி.வி காரங்களா?” என்று நச்சென்று கேட்டான் முருகேசன்.

“அப்படியெல்லாம் இல்லைங்க” என்று கூறிவிட்டு தனக்கு ஏற்பட்ட பாம்பு கனவு, நந்தனுக்கு ஏற்பட்ட பாம்பு அனுபவம் மற்றும் தற்போது பாம்பின் மூலம் ஏற்பட்ட ஆபத்து வரை அத்தனையும் கூறிவிட்டு தங்களுக்கு உதவும்படி அரவிந்தன் கூறினான்.

அரவிந்தனின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்து கொண்ட முருகேசனும் உதவி புரிய முன்வந்தான்.

“நீங்க சொல்றத வச்சு பார்க்கும் போது உங்க பேச்சிலே பொய் இல்லைன்னு தோணுது. நான் உங்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கேன். என்ன உதவி வேணும் சொல்லுங்க?”

“நாங்க ஏலக்காய் சித்திரை பாக்கணும் அவங்ககிட்ட எங்களை அழைச்சிட்டு போக முடியுமா?” என்று கேட்டாள் யோகினி.

“உங்க நிலைமை எனக்குப் புரியுது .முதல்ல நான் சாமிகிட்ட உங்களைப் பற்றி சொல்லுறேன்.அவரு உத்தரவு கொடுத்தாக்க உங்களை, அவரைப் பார்க்க அழச்சிட்டு போறேன்.”

யோகினி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

நந்தன் மட்டும் முருகேசனிடம் மற்றொரு கேள்வியை முன் வைத்தான்.

“ஆமா, நீங்க அஞ்சு தலை நாகத்தை பார்த்ததாக ஊர்க்காரங்க சொல்றாங்களே… அது உண்மையா? ஐந்துதலை நாகத்தை எங்க பார்த்தீங்களா?” என்று நந்தன் கேட்டான்.

முருகேசனுக்கு உடல் நடுக்கம் எடுத்து, வியர்த்து வியர்வை வழிந்தோடியது. அதிர்ச்சியோடு நந்தனை வெறித்தான்.

– தொடரும்…

< எட்டாம் பாகம் | பத்தாம் பாகம் >

2 Responses

  1. அமானுஷ்யங்க அதிகமாகி பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அருமை நண்பரே. தொடருங்கள். வாழ்த்துகள்.

Leave a Reply to Natarajan Cancel reply

Your email address will not be published.