• தொடர்
  • பத்துமலை பந்தம் | 23 | காலச்சக்கரம் நரசிம்மா

பத்துமலை பந்தம் | 23 | காலச்சக்கரம் நரசிம்மா

2 months ago
405
  • தொடர்
  • பத்துமலை பந்தம் | 23 | காலச்சக்கரம் நரசிம்மா

23. பத்து மலைக்கு ஒரு சாவி

கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையத்தின் பார்க்கிங் ஏரியாவில் இருந்து நழுவி, சைனா டவுனை நோக்கி மின்னல் வேகத்தில் பறக்கத்தொடங்கியது, அந்தக் கார். காரின் சாரதியாக, பல குழப்பங்களைத் தெளிவுபடுத்தப் போகிற குகன்மணி அமர்ந்திருக்க, அவன் அருகே, குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் அர்ஜுனனாக அமர்ந்துகொண்டிருந்தாள் மயூரி.

“இதற்கு மேல் என்னால் பொறுத்திருக்க முடியாது ! நீங்க யாரு ? உங்களை ஒரு விமானின்னு ஜஸ்ட் லைக் தட், கூற முடியலை. சென்னையில எங்க பண்ணை வீட்டுல நாங்க பேசற விஷயங்களை பத்தி அப்பப்ப ரன்னிங் கமென்டரி மாதிரி கமெண்ட் அடிக்கிறீங்க..! பத்து மலை உச்சில நின்னுகிட்டு, எங்க பள்ளங்கி மலையை வெறிச்சுப் பார்க்கிறதாச் சொல்றீங்க. என்னைச் சுத்திச் சுத்தி வரீங்க… இப்பக்கூட, உங்களோட வரமுடியாதுன்னு சொன்ன என்னை வற்புறுத்தி, பலவந்தமா உங்க கார்ல அழைச்சுக்கிட்டுப் போறீங்க. உங்களைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்க இது ஒரு வாய்ப்புன்னு தான் நானும் உங்ககூட வர ஒப்புக்கிட்டேன். சொல்லுங்க குகன்மணி-ங்கிற நீங்க யாரு..?” –மயூரி கேட்க, குகன்மணி வளைந்து நெளிந்து செல்லும் சாலையை கவனித்தபடியே காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

“குருக்ஷேத்திரத்துல அர்ஜுனன் கேள்வி கேட்டாப்பல நீயும் கேள்விகளை அடுக்கிக்கிட்டே போறே… அர்ஜுனன் ஏன் கண்ணன் கிட்டே அவ்வளவு கேள்விகளைக் கேட்டான் தெரியுமா..? அவனுக்குக் கண்ணன் மேல நம்பிக்கை வரலை. அதைச் சொல்ல முடியாம, “என் கை நடுங்குது, கால் நடுங்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். ஆனால் கண்ணனுக்கா தெரியாது..? கீதையை உரைச்சு, தன்மேல் அவனுக்கு நம்பிக்கை உண்டாகும்படி செஞ்சார். என்னால உனக்கு கீதை எல்லாம் உரைக்க முடியாது. அதுக்கு நேரமும் கிடையாது. கவுரவர்கள் மாதிரி உன் குடும்பத்தைச் சேர்ந்தவங்க அடாத செயலுல ஈடுபடறாங்க. அதைத் தடுக்கணும். அதே சமயம், உன்னால அதைத் தடுக்கவும் முடியலை. ஆனா நீயோ உன் குடும்பத்தாருக்கு அரணா இருக்கே. உன் குடும்பத்தாரை ஈஸியா பிரபஞ்ச சக்தி அழிச்சிடும். ஆனா அவங்களுக்கு அரணா உன்னோட பக்தியே இருக்கிறதால தான் இப்ப எல்லாருக்குமே பிரச்சனை. உன்னைக் கொண்டுதான் உன் குடும்பத்தாரை காப்பாத்தறதோ, தண்டிக்கிறதோ, எதுவுமே செய்ய முடியும். உன்னால தான் எதுவுமே முடியும்னு பிரபஞ்ச சக்தி என்கிட்டே கூறியதாலதான் நான் உன்னைச் சுத்தி வரேன். இப்ப புரியுதா.? உன் குடும்பத்தாரைப் பிரபஞ்சம் தண்டிக்காதபடிக்கு, அவங்களை நல்வழிப்படுத்தணும்ங்கிற நல்ல எண்ணத்துலதான் நான் உன்னைச் சுத்தி வரேன்.” –என்றவன், மௌனமாகக் காரைச் செலுத்தினான்.

“உங்களுக்குக் கட்டளையிடும் அந்தச் சக்தி யாரு..?” –மயூரி கேட்டதும், குகன்மணி அவளைத் திரும்பி நோக்கி முறுவலித்தான்.

“நான் உன்னைச் சுத்திச் சுத்தி வரதா நீ நினைக்கிறே. ஆனா எனக்குக் கட்டளைகள் இடுகிற அந்த சக்தி என்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போகச் சொல்லுது. அங்கே போனா நீ அங்கே இருக்கே..! எனக்கே இது ஆச்சரியம்..! இப்பக்கூட விமான நிலையத்துக்குப் போ..! அங்கே ஒரு பொண்ணுகிட்ட ஒரு பொருள் இருக்கும். அதை வாங்கிக்கன்னு ஒரு கட்டளை வந்தது. அதுக்காகத்தான் நான் விமான நிலையத்துக்கு வந்தேன்.! வந்து பார்த்தா, அந்த பெண் நீதான்..! எனக்கும் ஷாக் தான். சென்னையில இருக்கிற நீ எப்படி திடீர்னு இந்த விமானத்துல வந்தேன்னு குழப்பம்.” –குகன்மணி சொன்னதும், அவனை நம்புவதா வேண்டாமா என்பது போல நோக்கினாள், மயூரி.

“விமான நிலையத்துக்குப் போகும்படி உங்ககிட்டே சொன்னது யாரு..?”

“தெரியலை..! கனவுல போகரைப் போல ஒரு உருவம். பறந்து வந்தாரு. வாயில சிக்லெட் வச்சு மெல்லறதை போல எதையோ அடக்கிக்கிட்டு எங்கிட்ட பேசினார். ‘இன்னைக்கு சென்னையில் இருந்து வர விமானத்துல ஒரு பெண் முக்கிய தகவலை கொண்டு வருவாள். அதை வாங்கிக்க..!’ –என்று சொன்னாரு. அதான் விமான நிலையத்திற்குப் போய்ப் பார்ப்போம்ன்னு வந்தேன். மத்தபடி நான் உனக்கு எப்படிப் புதிரா இருக்கேனோ, அதேபோல நீயும் எனக்குப் புதிரா இருக்கே..! ஸோ… நம்ம ரெண்டு பேரையும் இயக்குவது வேறு யாரோன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.” –குகன்மணி கூறினான்.

விமானத்தில் உறங்கிய போது தனது கனவில் தோன்றிய அந்தப் பறக்கும் சித்தரையும், பிறகு விமானத்தில் தனது மடியில் கிடந்த ‘கரூரார் ஜலத்திரட்டு’ சுவடியையும் நினைத்துப் பார்த்துக்கொண்டாள். குகன்மணி கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்காக அவனை முழுவதுமாகவும் நம்பத் தோன்றவில்லையே..! – மனதில் நினைத்தாள் மயூரி.

“மயூரி..! எனக்காக நீ கொண்டு வந்த பொருளை எப்ப ஒப்படைக்கப் போறே..?” –குகன்மணி கேட்டதும் அதிர்ந்தாள்.

“நான் உங்களுக்காக எந்தப் பொருளையும் கொண்டு வரலயே..!” –மயூரி கூற, குகன்மணி யோசித்தான்.

“இல்லை..! உன்கிட்ட ஏதோ ஒரு பொருள் கொடுக்கப்பட்டிருக்கும். உனக்கும் தெரியாம அது உன்னிடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம். உன்னையும் அறியாம நீ அந்த பொருளைச் சுமக்கிற கொரியரா இருக்கலாம்..! யோசிச்சுப் பாரு..! இப்போ உன் வசம் இருக்கும் அந்தத் பொருள் நீ ஊருக்கு புறப்படும் போது பாக் செய்யாத பொருளா இருக்கலாம்..!” –குகன்மணி குரலில் உறுதி தென்பட, தனது ஹான்ட்பாகில் வைத்திருந்த ‘கருரார் ஜலத்திரட்டு’ சுவடியை எடுத்து அவனிடம் காட்டினாள்.

“உண்மைதான்..! எம்.எச்.381 விமானத்துல நள்ளிரவு நான் தூங்கிட்டு இருந்தபோது, என் மடியில் ஐந்து சுவடி வைக்கப்பட்டிருந்தது. இதை யார் வச்சாங்கன்னு நான் விமானத்துல தேடிப்பார்த்தேன். யாரும் தென்படலை.” –என்று மயூரி சொன்னதும் குகன்மணியின் கண்கள் விரிந்தன.

“அப்பாடி..! இன்னைக்கு என் வாழ்க்கையில மறக்க முடியாத நாள்..! பத்துமலை பொக்கிஷப் பெட்டகத்தின் சாவி இந்தச் சுவடி தான். பள்ளங்கி மலையில, கன்னிவாடி-ங்கிற பகுதியில் இந்தச் சுவடியைப் பத்திரப்படுத்தி வச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டிருக்கேனே தவிர, இன்னைக்குத்தான் இந்தச் சுவடி விஷயம் உண்மைன்னு தெரியவருது. உனக்குத் தெரிஞ்சோ, தெரியாமலோ எனக்குப் பெரிய உதவி செஞ்சிருக்கே, மயூரி..!” –சற்றே நெகிழ்ச்சியுடன் கூறிய குகன்மணி, அதனைப் பெற்றுக்கொள்ளத் தனது இடது கையை நீட்டினான்.

“அவசரப்படாதீங்க..! இந்தச் சுவடி உங்களுக்கு அனுப்பப்பட்டதா இருக்கலாம். பிரபஞ்ச சக்தி நம்ம ரெண்டு பேரையும் ஆட்டி வைக்கிறதா இருக்கலாம். நீங்க வேணுமின்னா அந்த சக்தி இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வளைஞ்சு கொடுக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யப் போறதில்லை. எனக்குத் தகுந்த பதில்கள் கிடைக்காம நான் யாருக்கும், எந்த சக்திக்கும் உதவப் போறதில்லை. முதல்ல இந்தச் சுவடியில் என்ன சொல்லப்பட்டிருக்கு..? அதுக்குப் பதில் சொல்லுங்க…” –மயூரி கேட்டதும், குகன்மணி சிரிக்கத் தொடங்கினான்.

“உங்க சொந்த ஊரான பள்ளங்கியில இவ்வளவு காலம் இந்தச் சுவடி இருந்திருக்கு. இப்பக்கூட உன் வசம்தான் அது இருக்கு. நீயே படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு இருக்கலாம். அதை விட்டுட்டு என்கிட்டே கேட்டா நான் என்ன பதிலைச் சொல்ல முடியும்..? கருவூரார் ஜலத்திரட்டு என்கிற சுவடியில் பத்துமலை பற்றிய ரகசியங்கள் சங்கேதமா சொல்லப்பட்டிருக்குன்னு மட்டும்தான் எனக்குத் தெரியும்.” –குகன்மணி கூறினான்.

“புரியலை..! பத்துமலையில அப்படி என்ன ரகசியங்கள் இருக்கு..?” –மயூரி கேட்டதும் அவளை ஆழமாகப் பார்த்தான் குகன்மணி.

“அது ஒரு பெரிய கதை..! இன்னைக்கு இரவு என்னோட வீட்டுலதானே தங்கப் போறே..! அப்ப சொல்லறேன்..!” — குகன்மணி கூற, திகைப்புடன் அவனை நோக்கினாள்.

“நோ வே..! நான் ஹோட்டலுக்கே திரும்பிப் போறேன்..!” –மயூரி கூறினாள்.

“மயூரி, நானும் பைலட்..! எனக்கும் ப்ரொஸிடர்ஸ் தெரியும். இப்ப நீ லீவுல இருக்கிறதால, உன்னோட ஹோட்டல் பில்களை மலேசியன் ஏர்லைன்ஸ் கட்டாது. எனவே, லீவு முடிகிற வரைக்கும், நீ என் வீட்டுல தங்கு.! உன்கிட்டே நிறைய விஷயங்களைப் பேச வேண்டியிருக்கு. நீ நம்பினா நம்பு, நம்பாட்டிப் போ..! எனக்கு ஒரு பெரிய கடமை கொடுக்கப்பட்டிருக்கு. அதனை நான் நிறைவேத்தியே ஆகணும். அதுக்குத் தடையா இருக்கிறவங்களை நான் அப்புறப்படுத்தியாவது, எனக்கு விதிக்கப்பட்டிருக்கிற பணியை நிறைவேத்தியாகணும். அதுக்குத்தான் உன்னோட உதவி அவசியம் தேவை.” –என்றான் குகன்மணி.

“என்ன விஷயம்னு தெளிவா சொல்லுங்க. என்னால உதவ முடியுமா முடியாதான்னு நான் சொல்லறேன்..!” –மயூரி கூறினாள்.

“உனக்குத் தெரியாத விஷயங்களை நான் பேசப் போறதில்லை. போகர் உலகத்திற்குக் கொடுத்த மூணு பொக்கிஷங்கள் பத்தி நீ கேள்விப்பட்டிருப்பே..! முதல் பொக்கிஷம் பழனி மலை மேல இருக்கு. இரண்டாவது பொக்கிஷம், பள்ளங்கி மலை மேல இருக்கு. மூணாவது பொக்கிஷம், பத்துமலையில இருக்கு. இப்ப மூணாவது பொக்கிஷத்திற்கு ஆபத்து வந்திருக்கு. அந்த ஆபத்தைத் தடுக்கிற பணிதான் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கு. இப்ப உன்கிட்ட இருக்கிற சுவடிதான் அந்த மூணாவது பொக்கிஷத்திற்குத் திறவுகோல். இதுக்கு மேல உனக்கு எல்லாம் புரியும்னு நினைக்கிறேன்..!” –குகன்மணி கூறியதும், மயூரியின் பிடரியில் வியர்த்தது.

சென்னை ஈஸிஆர் பண்ணை வீட்டில் இரவெல்லாம், மூன்றாவது நவபாஷாணச் சிலையைப் பற்றிக் குடும்பத்தினர், பேசியதை அதற்குள்ளாகவா மறந்து விடுவாள்..? இவள் குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் எப்பாடு பட்டாவது மூன்றாவது சிலையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சபதம் செய்திருக்க, அவர்கள் தேடும் சிலை, பத்து மலையிலேயே இருக்கிறதாமே..!

குகன்மணி அவளை எச்சரிக்கையுடன் பார்த்தான்..!

“மயூரி..! நீதான் மூன்றாவது நவபாஷாணச் சிலையைப் பாதுகாக்க உதவி செய்யணும்..!” –என்றதும் கலகலவென்று சிரிக்கத் தொடங்கினாள் மயூரி.

“பாலுக்கு பூனையைக் காவலா வைக்கறீங்க..! அந்தச் சிலையைக் கைப்பற்றத்தான், என்னோட குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் திட்டம் தீட்டிக்கிட்டு இருக்காங்க. என்னைப் போயி அதைப் பாதுகாக்கச் சொல்றீங்களே..! உங்களுக்குத் தெரியுமா குகன்மணி… எனக்குக் குடும்பப் பாசம் அதிகம். தாத்தா மேல பிரியம் அதிகம். என்னோட அப்பா அம்மாவே அந்தப் பக்கம்தான். நான் அந்தச் சதியில் பங்கேற்கலேன்னாக்கூட, என் குடும்பத்துக்கு எதிரா நான் விரலைக்கூட அசைக்க மாட்டேன். ஐ ஆம் சாரி..! எனக்கு என்னோட குடும்பம்தான் முதல்ல..!” –என்றவுடன் அவளை மீண்டும் புன்சிரிப்புடன் பார்த்தான்.

“அப்படின்னா இப்பவே மூணாவது சிலை பத்து மலையில் இருக்குன்னு உன் தாத்தாவுக்கு மெசேஜ் அனுப்பிடுவியா..?”

“யு சி மிஸ்டர் குகன்மணி..! I am a bundle of contradictions..! முரண்பாடுகளின் மொத்த உருவம்-னுதான் என்னோட ஏர் ஹோஸ்டஸ் வட்டாரத்துல சொல்லுவாங்க. திடீர்னு குடும்பப் பாசம் அதிகமாகும். அப்ப அதற்கேற்ற மனப்பான்மையோடு நடந்துப்பேன். திடீர்னு முருக பக்தி அதிகமா இருக்கும். அப்ப அதுக்கேத்த மனப்பான்மையில் நடந்துகொள்வேன். எப்ப பக்தி வரும், எப்ப பாசம் வரும், எப்ப தர்மசிந்தனை வரும்னு எனக்குத் தெரியாது. அதனால என்னால எந்த உத்தரவாதமும் தரமுடியாது. என்னை எதுக்கும் நம்பாதீங்க..!” –மயூரி சொன்னாள்..

“தெரியுமே..! இதையும் எனக்கு அந்த சக்தி சொல்லித்தான் அனுப்பியது. நீ சந்திக்க போற பெண்மணிகிட்டே அபார முருக பக்தி உண்டு. அதே சமயம் ரொம்ப குடும்பப் பாசம் உள்ளவ. குடும்பத்துக்கு எதிராக எதையும் செய்யமாட்டா. ! ஆனா அவ குடும்பத்தினர்தான் அழிக்கப்பட வேண்டியவங்க. அதை அவளைக்கொண்டேதான் செய்ய வேண்டும்.— என்று சொல்லித்தான் அனுப்பியது.” –குகன்மணி சொன்னதும், அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

இவள் யூகித்தது சரிதான். மூன்றாவது சிலையைக் களவாட இவள் குடும்பத்தினர் திட்டமிட, அதனை முறியடிக்கும் எண்ணத்துடன்தான் குகன்மணி இவளைச் சுற்றி வருகிறான்.

மயூரி அவனை எச்சரிக்கையுடன் பார்த்தாள்.

“மூன்றாவது பொக்கிஷம் பத்து மலையில இருக்கு. அந்தப் பொக்கிஷத்தைத் திறக்கும் சாவி, கரூரார் திரட்டு சுவடியில் இருக்கு. அந்தச் சுவடிக்காக நீங்க காத்திருக்கீங்க.! மூணாவது நவபாஷாணச் சிலை வைக்கப்பட்டிருக்கும், இடத்தின் ரகசியம் இந்த சுவடியில் இருக்குன்னா, எனக்கு கிடைத்திருக்கிற இந்தச் சுவடி என்கிட்டேயே இருக்கட்டும். எனது குடும்பத்து கையிலயும் இந்தச் சுவடியைக் கிடைக்க விடமாட்டேன். உங்க கிட்டேயும் இந்த சுவடி கிடைக்க விடமாட்டேன்..” என்று சுவடியை மீண்டும் ஹாண்ட்பாகில் வைத்து இறுக மூடினாள் மயூரி.

“இது போகரின் உத்தரவு மயூரி..! அவர் உன்கிட்டே அந்தச் சுவடியை வாங்கிக்கச் சொன்னார்..! அதர்ம வழியிலே உன் குடும்பம் அந்த மூணாவது சிலையை அபகரிக்கப் பார்க்குது. தர்ம முறைப்படி சிலையைப் பாதுகாக்கச் சொல்லி எனக்குக் கட்டளையிடப்பட்டு இருக்கு. தர்மம் ஜெயிக்கணும்னா நீ என் பக்கமா நிற்கத்தான் வேண்டும்.” –குகன்மணி கூறினான்.

“சாரி..! துவாபர யுகத்துல வேணுமின்னா தர்மம் ஜெயிக்கணும்ன்னு கண்ணன் குருக்ஷேத்திரப் போர் நடத்தினான். இப்ப இருக்கிற நிலைமையில தர்மமும் ஜெயிக்க வேண்டாம். அதர்மமும் ஜெயிக்க வேண்டாம். In fact, யுத்தமும் வேண்டாம். யாரும் தண்டிக்கப்படவும் வேண்டாம். எல்லாத்துலயும் status quo இருக்கட்டுமே. அந்த மூன்றாவது சிலை இருக்கிற இடத்துலயே இருக்கட்டும். என் குடும்பம் அந்தச் சிலையைத் திருடவும் வேண்டாம். நீங்க என் குடும்பத்தாரைத் தண்டிக்கவும் வேண்டாம். கருவூரார் ஜலத்திரட்டு சுவடி, என் வசமே இருக்கட்டும். யார் கையிலேயும் அது கிடைக்க வேண்டாம்..! ப்ளீஸ்… என்னை ஹோட்டல்ல கொண்டு விடுங்க..!” –மயூரி கூறினாள்.

குகன்மணி பரிதாபமாக அவளைப் பார்த்தான்.

“How selfish..! நீ ரொம்ப சாமர்த்தியமாத்தான் பேசறே..! ஆனா நீ இப்படியெல்லாம் பேசுவே..! கடைசியில நீயே என் கிட்டே வந்து, ‘தயவுசெய்து என் குடும்பத்தாரை ஒழிச்சுக் கட்டுங்கன்னு சொல்லுவே’ன்னு, பிரபஞ்ச சக்தி என்கிட்டே சொல்லியிருக்கு. அநேகமா அப்படித்தான் நடக்கும் போல இருக்கு,” –என்ற குகன் மணி, முகத்தைச் சற்றே கடுமையாக வைத்துக்கொண்டு, தனது எஸ்டேட் உள்ளே காரைத் திருப்பினான்.

அந்த பிரம்மாண்ட போர்டிகோவில் குகன்மணி தனது காரை நிறுத்த, அதிலிருந்து ஆக்ரோஷத்துடன் இறங்கிய மயூரியின் பார்வை நீரூற்றின் நடுவில் நின்றிருந்த பத்துமலை முருகனின் சிலையின் மீது பதிந்தது. சட்டென்று திரும்பி, குகன்மணியை நோக்கினாள்.

“உங்களுக்குக் கட்டளை இடுற அந்த பிரபஞ்ச சக்திகிட்டே சொல்லுங்க. எப்பாடு பட்டாவது நான் என் குடும்பத்தை பத்திரமாப் பாதுகாப்பேன். அவங்களுக்கு நல்ல புத்தி சொல்லி, மூன்றாவது சிலையைக் களவாடற நோக்கத்துல இருந்து அவங்களை திசை திருப்பப் பார்ப்பேன்.” –என்றாள் மயூரி.

“அப்படி முடியலேன்னா..?” –குகன்மணி கேட்டான்.

“அப்படி முடியலேன்னா, அவங்களை நீங்க தண்டிக்க முடியாதபடி நான் எப்படியாவது தடுப்பேன். அவங்களை எப்படிக் காப்பாத்தறதுன்னு எனக்குத் தெரியும்..!” –என்றாள் மயூரி.

குகன்மணியின் உதட்டோரம் ஒரு கேலியான புன்னகை மிளிர்ந்தது.

-தொடரும்…

3 thoughts on “பத்துமலை பந்தம் | 23 | காலச்சக்கரம் நரசிம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930