23rd October 2021
  • தொடர்
  • கிறித்தவம் இரத்தக் கறை – 2 | மு.ஞா.செ.இன்பா

கிறித்தவம் இரத்தக் கறை – 2 | மு.ஞா.செ.இன்பா

1 month ago
117
  • தொடர்
  • கிறித்தவம் இரத்தக் கறை – 2 | மு.ஞா.செ.இன்பா

விமர்சனங்களாலும், எதிர்ப்புகளினாலும் மெருகேற்றிக் கொண்ட கிறித்தவத்தின் ஆதிமூலம் எங்கிருந்து புறப்பட்டது என்பதை அறியும் வேளையில், விழிகளில் வியப்பு வந்தமர்ந்து தானாக எழில் நடனம் புரியும்.

விவிலிய நம்பிக்கையின் படி, மாபெரும் வெள்ள ஊழியில் அகிலம் அழிந்து போனதென்றும், பின்னர் நோவா என்ற மனிதனின் உதவியில் அது மீண்டும் தன் உருவைப் பெற்றதென்றும் நம்பப்படுகிறது. பெரிய வெள்ள ஊழியில் அகிலம் அழிந்து போனது என்ற தகவல்கள் யூதர்களின் தால்மத்திலும், தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்திலும் இடம் பிடித்துள்ளது.

இந்துப் புராணமான ‘மனு’ வில் இந்நிகழ்வு, விவிலியத்தில் இடம்பெற்ற நிகழ்வைப் போல குறிப்பிடப்பட்டுள்ளது. அகிலத்தில் வாழும் மனிதர்களைக் கூண்டோடு காவு வாங்க எல்லா பகுதி இறைவர்களும் சேர்ந்து கூட்டுச்சதி செய்தனர்.

பெருமைமிக்கத் தீர்க்கத்தரிசியும், துறவியுமான மனுவுக்கு மீன் வடிவத்தில் பிறப்பெடுத்த விஷ்ணு, இருகரையும் நாணல்களில் முகம் புதைத்த நன்னீர் ஓடும் அற்புத ஆற்றின் கரையோரம் காட்சி அளித்தார்.

‘‘மனுவே, இவ்வகிலம் என் சினத்தின் காரணமாக வெள்ளத்தில் அழியப் போகிறது. உயிரினங்கள் எதுவும் தப்பப் போவதில்லை. நீ ஒருவன் மட்டும் நல்லவனும், நேர்மையாளனுமாகவும் இருக்கிறாய், உன்னை அழிக்க என் மனம் விரும்பவில்லை. உன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் காப்பாற்ற நான் விரும்புகிறேன்.

நீ போய் உன் குடும்ப உறுப்பினர்களோடு எல்லா வகையான விலங்குகளில் ஒரு இணையையும், எல்லா வகையான தாவரங்களின் விதைகளையும் ஒன்று சேர்த்து, அவைகளைச் சுமந்து செல்ல கப்பல் ஒன்றையும் கட்டு, நீ கப்பலைக் கட்டி முடித்தபின் மழை கொட்டத் தொடங்கும். நான் உன்னைக் காப்பாற்றுவேன் எனக் கூறினார்.

இறைவனின் வாக்கிற்குப் பணிந்து மனு எல்லா செயல்களையும் நிறைவேற்றி, கப்பலைக் கட்டி முடித்தார். மழை கொட்டத் தொடங்கியது. மீன் வடிவில் பிறப்பெடுத்த விஷ்ணு, கப்பலின் முனையாக மாறினார். அவரின் சங்கு நீரில் மிதந்து வழிகாட்டியது. தண்ணீரில் மிதந்த கப்பல் இமய மலையில் தங்கியது. மனுவால் மீண்டும் அகிலம் புதிதாக உருவானது.

விவிலியத்தில் இடம் பெற்றுள்ள தொடக்க நூல் என்ற பகுதியில் ஆறு முதல் எட்டு வரை உள்ள பாகங்களில் நோவா காலத்தில் நடைபெற்ற வெள்ள அழிவைக் குறித்தத் தகவல்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வு மனுவின் கதையோடு ஒத்துப் போகின்றது.

அகிலம் வெள்ளத்தினால் அழிந்து போனது என்பதை எல்லா மத நூல்களும். எல்லா இலக்கியங்களும் ஏற்றுக் கொள்கின்றன. நோவாவால் அல்லது மனுவால் தற்போது உள்ள அகிலம் உருவாக்கப்பட்டிருக்கலாம். விவிலியத்தின் மொழிப்படி, நோவாவால் உருவான அகிலத்தில் இயேசு பிறப்பிக்கப்பட்டார். அவர் பெயரில் இயங்கும் மதமும் பிறப்பிக்கப்பட்டது.

வரலாற்று ஆசிரியர்கள் நோவாவின் காலத்திலிருந்து யூத வரலாற்றை வரைமுறைப் படுத்துகின்றனர். யூதர்களின் வாழ்வியலை நெறிப்படுத்த, நோவாவிற்குப் பின் தோன்றிய இறையடியார்கள் பல சட்ட திட்டங்களை உருவாக்கினர்.

அடிமைத்தனம், நிலவுடமை, கொத்தடிமைத்தனம், பாலியல் ஒழுக்கமின்மை, வக்கிரம், மந்திரங்கள், சோதிடம், பில்லி சூனியம், உருவ வழிபாடு போன்றவை தெய்வக் குற்றங்களாக வரையறுக்கப்பட்டன. யூத இனத்தில் தவறான செயல்களில் ஈடுபடும் மனநிலை கொண்ட மனிதர்கள், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளாகத்தான் இருப்பார்கள் எனச் சொல்லப்பட்டது. அதற்கான காரணத்தையும் யூதர்கள் வகுத்துக் கொண்டனர். நோவாவின் மூத்த மகனான ஹாமின் தலைமுறைகள் அப்பழிக்குப் பலியாகினர்.

நோவா வீட்டில் அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்த போது, அவனுடைய ஆடைகள் விலகி, நிர்வாணக் கோலத்தில் தன்னை மறந்து கிடக்க, தந்தையின் நிர்வாணத்தைக் கண்டு ஹாம் எள்ளி நகையாடி, நோவாவை அவமானப்படுத்தினான். விழித்த நோவா, மகனின் செயலைக் கண்டு ஆத்திரமடைந்து கோபத்தில் அவனைச் சபித்தான்.

காலகாலமாக உன் தலைமுறைகள் அடிமைகளாக இருப்பார்கள். அவமானத்தைப் பெறும் குற்றத் தலைமுறைகள், உன் சகோதரத் தலைமுறைகளால் துரத்தப்படுவார்கள் என்றான். ஹாமின் தலைமுறைகள் சபிக்கப்பட்ட மக்களாக இன்றுவரை பார்க்கப்படுகிறார்கள். ஹாமின் தலைமுறைக்காக வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் மதச் சட்டமாக மாறி, யூத இனத்தின் நெறிமுறைக் கோட்பாடுகளாக வடிவம் கண்டன.

விவிலியத்தின் முதல் நூலான தொடக்க நூலில் இருந்து யூத வரலாறு தொடங்குகிறது. மோசே எழுதிய நூலாக தொடக்க நூல் பார்க்கப்படுகிறது. யூதக் குலத்தின் முதல் தலைவனாக மோசே உள்ளான்.

மோசே என்ற பெயருக்கு எபிரேயத்தில் தண்ரொல் காப்பாற்றப்பட்டவன் என்று பொருள். மோசேயின் கைத்தடியும் ஆன்மீகம் பேசியது. யூத மதமும் கிறித்தவ மதமும் மோசே என்ற இந்தக் கிழவனிடமிருந்துதான் தொடங்கியது என்றால், வியப்புதான் வரும்.

ஆனால், உண்மை நிலை அதுதான். யூத மக்களை ஒருங்கிணைத்து வழி நடத்தும் தலைவனாக மோசே விளங்கிய காரணத்தால், அதிகாரம் அனைத்தும் அவனைச் சுற்றி செயல் வடிவம் கண்டன. இறைவன் மோசேயை யூதக் குலத்தின் தலைவனாகத் தேர்ந்தெடுத்த வேளையில், அவனைத் திறன்மிக்கவனாகத் தன் ஆற்றலால் அறிவிக்கை செய்தார். மோசேயை எதிர்ப்பவர்கள் நெருப்பினால் அழிந்து போகும் சிறப்புத்தன்மை கொண்டவராக மோசே விளங்கினார். இச்செய்தி விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டைச் சேர்ந்த பூசாரிகள் மக்களை பயம்காட்ட வெடி மருந்தையும், துப்பாக்கியையும் கருவியாக்கிக் கொண்டனர். தாங்களை முதன்மையானவர்களாகக் காட்டிக் கொள்ள, அவர்கள் கையில் எடுத்துக்கொண்ட செயல் நுணுக்கம் இதுவென ‘விவிலிய மோசே’ என்ற நூலை எழுதிய ஜென்ஸ் ஜொர்ன்ஸ் குறிப்பிடுகிறார். திறமை வாயந்தவர்களாகவும், மக்களின் தலைவர்களாகவும் விளங்கிய இந்த எகிப்து பூசாரிகளை இறையாற்றலின் துணையுடன் மோசே வென்று காட்டினார். இறைவனால் கிடைத்த வெற்றி இதுவென யூதர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இறைவனின் திருவுளம்மகிழ்ந்தால் மட்டுமே நமக்கு என்றும் விடுதலை என்ற நம்பிக்கை யூதர்களிடம் மேலோங்கின. மோசேயை இறைத்தூதனாக நினைத்து, அவன் கட்டளைகளுக்குப் பயந்து தலைவணங்கினர்.

சீனாய் மலையில் பத்துக் கட்டளைகளை இறைவனிடம் பெற்றுக்கொண்ட மோசே, அதனை யூதர்களுக்குச் சட்டமாக வரையறுத்தபோது, இறைவனைத் தண்டனை கொடுப்பவராகவும், நீதிபதியாகவும் அடையாளப்படுத்தினார். இறை என்ற சொல் யூதர்கள் மனதில் தவறுக்காகத் தண்டனைகளை வழங்குபவன் என்ற அச்சத்தின் மறுபதிப்பாக பதிவானது.

சிலைகளை வழிபட்டு, இச்சை போல் வாழ்பவர்கள் மீது இறைவனின் கருக்குள்ள பட்டயம் தண்டனையை அளிக்கும். யூத இன மக்களே, உங்களுக்காக இறைவன் தந்திருக்கும் பத்துக் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். இறைவன் உங்கள் பேரில் மகிழ்வான், என மோசே யூத இனத்திற்குக் கட்டளை கொடுத்த இடம் யூதர்களுக்குத் திருப்பு முனையானது போல, கிறித்தவத்திற்கும் முதல் புள்ளியை இட்டுக் கொண்டது.

எருசலேம் மண்ணில் புரட்சி சிந்தனையோடு இயேசு மெய்யறிவுப் பயணத்தைத் தொடங்கியபோது, மோசே வழங்கிய நியாயப் பிரமாணங்களை உள்ளடக்கிய சட்ட வரைமுறையைக் கொண்டு வந்தார். மோசேயின் சொற்களில் கிறித்தவம் தனது வழிப்பாதை அமைத்தது. கிறித்தவத்தின் ஆணி வேராக மோசேயின் சொற்கள் ஆயின. உன்னைப் போல பிறனை அன்பு செய் என்ற இயேசுவின் தத்துவப் போதனையில் உள்முகமாக மோசே தெரிந்தார்.

கிறித்தவத்தின் பயணச் சுவட்டிற்கு மோசேயின் பத்துக் கட்டளைகள் முதல் படிக்கட்டாக மாறிட, தந்தையை என்னில் காணலாம் என்ற இயேசுவின் கருத்துகளில் அவரின் நாத்திகச் சட்டை கழன்று போனதாக உணரப்படவில்லை. மோசேயின் கருத்துகளை வாங்கிக் கொண்ட இயேசு எந்த இடத்திலும் நாத்திக மொழியைத் தவறவிடாமலே இருந்தார்.

யூத ஆயர்கள் மதத்தை முன்னிலைப்படுத்தி சுரண்டிக் கொழுத்த எருதுகளாக மாறி, வறியவர்களை வாட்டி, கொடூரச் செயல்களால் மேதாவிகளாக வேடம் தரித்துக் கொண்டிருந்த வேளையில், அட மடையர்களே.. கடவுளின் இல்லத்தைக் காசு பறிக்கும் சுங்கச்சாவடியாக மாற்றிவிட்ட உங்களைத் தாங்கி நிற்கும் இவ்வாலையத்தை இடித்து, தரைமட்டமாக்கி விட்டு வறியவர்களும் திக்கற்றவர்களும் தன்னிச்சையாக வழிபடும் புதிய ஆலையத்தைக் கட்டமைப்பேன் என இயேசு நிமிர்ந்து நின்ற இடம் நாத்திகத்தின் தெளிவான கண்ணோட்டம்!

மோசேயின் பத்துக் கட்டளையை மையமாகக் கொண்டு தொடங்கிய கிறித்தவம், வெகு விரைவில் தனக்கெனப் புதிய களத்தை உருவாக்கிக் கொண்டது. யூத மக்களை வழிநடத்தி புதிய நாடு நோக்கிப் பயணப்பட்ட மோசே, யோர்தான் ஆற்றங்கரை அருகே வந்த போது, உடல் நலன் குன்றியதால், தான் அதிக நாட்கள் வாழப் போவதில்லை என நம்பினான். அதனால், யூத மக்களை வழி நடத்திச் செல்லும் பொறுப்பை கோத்திரங்கள் வாரியாக பகிர்ந்து அளித்தார். நோபா மலையில் மோசேயின் உயிர் பிரிந்திட, பாலும் தேனும் பாய்ந்து ஓடும் கானான் நாட்டைக் காணும் வாய்ப்பை இயற்கை அந்த  மாமனிதனுக்கு அளிக்கவில்லை. இறைவனோடு இணைந்து இயற்கையும் சதி செய்தது.

மோசேயின் இறப்பு யூதர்களுக்குப் பேரிடியாக இருந்தது. யூத இனத்தைக் காக்க மேசியா ஒருவர் வருவார் என யூதர்களுக்குச் சொல்லப்பட்ட தகவல், மோசேயின் இறப்பிற்குப் பின் தேடலை உருவாக்கியது. யூதர்களின் இந்தத் தேடல் கிறித்தவத்திற்கு அறுவடைக் களமானது. மேசியா வந்துவிட்டார் என இயேசுவை முன்னிலைப் படுத்தி, காத்திருந்த யூதர்களுக்கு அதிர்ச்சி மருத்துவம் கொடுத்தனர். மேசியா என்ற சொல் கிறித்தவத்தின் உந்து ஆற்றலாக மாறிட, இரண்டாவது பயணப் புள்ளியைக் கிறித்தவம் கண்டது. யூத மதத்திற்குப் பயம் காட்டும் பதிப்பாக கிறித்தவம் உயர, போராட்ட நிலைக்கு யூதர்கள் தள்ளப்பட்டனர். கிறித்தவக் கோட்பாடுகளையும், அதனைக் கற்பித்துக் கொண்டிருந்த இயேசுவையும் துணிந்து எதிர்க்கத் தொடங்கினர்.

யூதர்களின் எதிர்ப்பு இன்னொரு பிரிவினரிடம் கிறித்தவத்திற்கு ஆதரவு நிலையை உருவாக்கியது. நான் அவமானப்பட்டிருக்கிறேன். அசிங்கப்பட்டிருக்கிறேன். களங்கப்படுத்தப் பட்டிருக்கிறேன். மத நம்பிக்கையற்றவர்கள் எனக்கு எதிராகச் செய்தது அல்ல. எந்த மதத்தில் ஞானப்பெயர் பெற்றேனோ, எந்த மதத்தில் திருமுழுக்கு எடுத்தேனோ.. அந்த மதம் எனக்கு எதிராகவும், என் கொள்கைகளுக்கு எதிராகவும் என்னை வேட்டையாடத் துடிக்கிறது. வீழ்வேன் என்று நினைக்காதீர்கள். நான் ஏற்றப் போகும் புரட்சிக் கொடிதான் நாளைய அகிலத்தின் திசையாக இருக்கும் என்பதை மறவாதீர் என யூத மதத்திற்குஎதிராக இயேசு நிலைப்படுத்திய போது, கிறித்தவம் என்ற மதத்தின் கரு அகிலத்தின் கருவறையில் வளரத் தொடங்கியது.

கிறித்தவ மதத்தின் தோற்றவாய் குறித்து அய்யமுறத் தெளிவு காணும் அதே வேளையில், தோன்றிய இடம் அறிதலும், அறிவூற்றுக்குக் கைகொடுக்கும். மோசேயின் பத்துக் கட்டளைகளை உள்வாங்கி கிறித்தவம் தோற்றம் கண்டாலும், அது தோன்றிய இடம் சீனாய் மலையல்ல.

கிறித்தவம் பிறப்பெடுத்த நிலம் எருசலேம் என்பதே ஆவணக் கிடங்கின் அதிகாராப்பூர்வ அறிவிப்பு. இயேசுவின் வாழ்வியலைத் தெளிவாகக் குறிப்பிட்ட நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்றவை புதிய ஏற்பாட்டின் முதுகுத் தண்டுகளாக உள்ளன. பிற அதிகாரங்கள் பெரும்பாலானவை பவுலை மையப்படுத்திப் பயணிக்கின்றன. நவீன எழுத்தாளர்கள் பெரும்பாலானோர் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடவடிக்கையில் இருந்து திருவெளிப்பாட்டு நூல் வரை உள்ள நூல்களை பவுல் கிறித்தவ நூல்கள் என கிண்டலடிக்கிறார்கள்.

கிறித்தவத்திற்குள் பவுல் நடத்திய அரசியல் இந்நூல்கள் வாயிலாக வெளிப்பட்டு உள்ளன. இயேசுவின் வாழ்வியலை எழுதியவர்களில் ஒருவரான லூக்கா, பன்முகத் திறன் கொண்ட எழுத்தாளராக விளங்கியவர். இவரின் கைவண்ணத்தில் பல நூல்கள் வெளியாகி இருந்தன. முதன்மை நூலான லூக்கா நற்செய்தி கி.பி.எண்பதாம் ஆண்டு எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பவுலின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான லூக்கா, கிறித்தவ மெய்யறிவு பரப்பும் பணிகளில் பவுலுடன் இணைந்து செயல்பட்டார். கிறித்தவக் கோட்பாடுகளைத் தீவிரமாக மக்களிடம் கொண்டு சென்ற பவுல், சிறைப்பட்ட போது, லூக்காவும் உடன் இருந்தார். உரோமைப் பேரரசு பவுலுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்திட, பவுல் சிறைப்பட்ட காலத்தில், லூக்கா உரோமைப் பகுதியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயேசுவின் சீடர்கள் ஆற்றிய பணிகளைக் குறிப்பெடுத்து, அப்போஸ்தலர் நடவடிக்கை என்ற நூலை எழுதினார். இது விவிலியத்தில் புதிய ஏற்பாட்டுப் பகுதியில் அய்ந்தாம் நூலாக இடம் பிடித்துள்ளது.

‘நீதிகள்’ என்ற இன்னொரு நூலும் லூக்காவால் எழுதப்பட்டது. முரண்பாடான கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் விவிலியத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்நூலில் மெய்யறிவு பரப்பும் பணிகளை இயேசுவின் சீடர்கள் எருசலேமில் தங்கியிருந்து செய்தார்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடுகிறது. லூக்காவின் கூற்றுப்படி கிறித்தவம் எருசலேம் நிலப்பரப்பில் தொடங்கின என்பது தெளிவுபடுத்தப் படுகிறது துயரம். கிறித்தவர்கள் ஓரணியில் இயங்கவில்லை. பலக் குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். கிறித்தவம் என்ற தத்துவக் குழந்தையின் செவ்விதழில் பூங்கவிதையாக நற்களத்தில் பயணத்தைத் தொடங்கினாலும், பிற்காலத்தில் சிலரின் தன்னல குணத்தினால் குருதியில் குளிர்காயும் மத விரியன் பாம்பாக மாறியது காலம் செய்த கோலமே!

இயேசு உருவாக்கிய கொள்கைகள், கோட்பாடுகள், ஒழுக்க நன்னெறி, பெண்ணியம் போன்ற தலை சிறந்த கருத்துகள் கிறித்தவத்தின் சில தொலைவுப் பயணமாக இருந்திட, பிற காலங்களில் இயேசுவின் கொள்கைகளைத் தீட்டு எனத் தள்ளி வைத்துவிட்டு, ஆயர்களின் தன்னலக் கூத்துப் பட்டறையாக கிறித்தவம் செயல்பட்டது.

ஆயர்களின் ஆடம்பரமான அடுக்கு மொழியில் இயேசு வணிகப் பொருளாக மாறிய விந்தையைப் பற்றி அறியும் போது, வியப்பும், அதிர்ச்சியும், பயமும் உங்களுக்குஏற்படலாம். ஏன், மதத்தின் மீது வெறுப்புகூட ஏற்படலாம். என்றாலும் அதன் குற்றவாளி ஆயர்களே! இனி… இரத்தக் கழிவுகள்…!

< முதல் பாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031