News
7th December 2021
  • தொடர்
  • பத்துமலை பந்தம் |21| காலச்சக்கரம் நரசிம்மா

பத்துமலை பந்தம் |21| காலச்சக்கரம் நரசிம்மா

3 months ago
480
  • தொடர்
  • பத்துமலை பந்தம் |21| காலச்சக்கரம் நரசிம்மா

21. கரூரார் ஜலத்திரட்டு

ரவு மணி 11. 55.

தனது அறையில் நெட்டில் மூன்றாவது நவபாஷாணச் சிலையைப் பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்தாள் கனிஷ்கா. எதற்கும் இருக்கட்டும் என்று கிடைத்த தகவல்களையெல்லாம் ‘காபி, பேஸ்ட்’ செய்து , புதிய folder ஒன்றை உருவாக்கி, அதற்கு ‘மூன்றாவது சிலை’ என்று பெயர் வைத்து, அதில் சேகரித்துக் கொண்டிருந்தாள்.

—-போகர் சித்தர் தன்னுடைய தவ வலிமையால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிராகாமியம், ஈசத்துவம் என அட்டமா சித்தி எனப்படும் எட்டு ஆற்றல்களையும் பெற்றவர். அதோடு, மந்திரம், மருத்துவம், மெய்யுணர்வு, ஜோதிட சாஸ்திரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கியவர்.

போகர் சித்தர் பழநி மலையில் தவம் செய்யும்போது, முருகப் பெருமான் அவருக்கு காட்சி தந்து, ‘என்னை விக்ரகமாக செய்து இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வா’ என்று கூறி மறைந்தார். முருகனின் கட்டளைப் படியே, ஒன்பது கிரகங்களின் மருத்துவ குணங்களை கொண்ட ஒன்பது விதமான பாஷாணங்களையும் கலவையாக்கி முருகனின் மூல விக்ரகமான தண்டாயுதபாணி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். போகர் சித்தர் இந்த சிலையைச் செய்து முடிக்க 9 ஆண்டுகள் ஆகியுள்ளது. பழனியின் கிழக்கே 36 கிமீ தொலைவில் கன்னிவாடி கிராமத்தின் எல்லையில் உள்ள அரிகேசவ பருவத மலையின் உச்சியில் உள்ள போகர் குகையில்தான் மூன்று நவபாஷாணச் சிலைகளை வரிசையாகச் செய்தார். போகர் நவபாஷாணச் சிலைகளை வடித்த விவரங்களை, ‘கரூரார் ஜலத்திரட்டு’ என்ற நூலில் விவரமாக காணலாம்.–

‘கரூரார் ஜலத்திரட்டு’ நூல் எங்கே கிடைக்கும்..? அதில் மூன்றாவது நவபாஷாணச் சிலையை பற்றி விவரங்கள் இருக்குமா..?

கனிஷ்கா ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருக்க, பிங் என்று ஐபோனில் ஒலி கேட்க, இடதுகையால் அதை எடுத்துப் பார்த்தாள். தேஜஸ் தான் அனுப்பியிருந்தான். ‘Rush to my room” — என்று இருக்க, வியப்புடன் எழுந்து அவனது அறையை நோக்கி விரைந்தாள். இருமுறை அறைக்கதவைத் தட்டிவிட்டு, உள்ளே நுழைய, டிவியையே வெறித்துப் பார்த்தபடி, அரண்டு போய் கிடந்தான் தேஜஸ்!

“என்னடா ஆச்சு, தேஜஸ்..?” –கட்டிலில் அவன் பக்கத்தில் அமர, பேயறைந்தது போன்று காணப்பட்ட அவனது முகம், இவளைப் பார்த்ததும், சற்றே சுதாரித்துக்கொண்டது. அக்காவின் எதிரே தான் பயந்து விட்டிருந்ததை காட்டிக் கொள்ள விரும்பாமல், கால் வலியால் அவதிப்படுவது போன்று பாவனை செய்துவிட்டு, பிறகு டிவியில் ஸ்டில் செய்திருந்த படத்தை மீண்டும் முதலில் இருந்து போடத்தொடங்கினான்.

“இதோ இந்தப்படம் ‘The haunting of Bly Manor’ பார்த்துக்கிட்டே இருந்தேன்..! titles-ல மாடிப்படில கமெரா ஏறிப் போற இடத்துல, இதோ இந்த புராதன போட்டோக்களைக் காட்டறாங்க இல்லே… அந்த போட்டோக்கள்-ல நம்ம பாமிலி-ல இருக்கிற ஒன்பது பேரோட படங்களைப் பார்த்தேன். அதைக் காட்டத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.!” –என்றவுடன், கனிஷ்கா அவனை எரிச்சலுடன் முறைத்தாள்.

“ஹவ் யு கான் நட்ஸ்..?” என்றாள். அவன் மீண்டும், அதே காட்சியைப் போட்டுக் காட்ட, இப்போது அவன் கண்களில் அந்த படத்தின் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் தெரிந்தன.

“நீ ரன்கள் அதிகம் அடிச்சிருந்தேனா, கிரிக்கெட் காட்சிங்க கண்ணுக்குத் தெரியும். ரன்களை விட தண்ணிதான் நிறைய அடிச்சிருக்கே. அதுதான், இப்படி கற்பனைக் காட்சிகள் தெரியுது..! டிவியை அணைச்சுட்டு ஒழுங்கா தூங்கப் போ..!” –என்று தேஜஸை அதட்டிவிட்டு, தனது அறைக்குத் திரும்பும்போது, வெராண்டா ஜன்னல் வழியாக பண்ணை வீட்டுத் தோட்டத்தை பார்த்தாள்.

தோட்டத்தின் இருளில் அசைவுகள் தென்பட, சற்றே நின்று உறுத்துப் பார்த்தாள். கூர்ந்து கவனித்ததில், சுபாகரும், போதினியும், நிற்பது தெரிந்தது. அவர்களிடம் யாரோ பேசிக்கொண்டிருக்க, அவர்கள் தலையை அசைத்துக்கொண்டிருப்பதும் தெரிந்தது. இந்த நடுஇரவில் யாருடன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.? மரத்தின் பின்பாக யாரோ நின்று அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

மாடிப்படிகளில் இறங்கி தனது செல் போன் டார்ச்சின் ஒளியை நிலத்தை நோக்கிப் பாய்ச்சியபடி அவர்களை நோக்கி நடந்தாள்.அவர்களை நெருங்கியதும், அதிகாரக் குரலில் அவர்களை மிரட்டியபடி, “யார்கூடப் பேசறீங்க..?” –என்று பாய்ந்து சென்று மரத்தின் பின்பாக எட்டிப்பார்த்தாள்.

மரத்தின் பின்பாக யாருமில்லை. சுபாகர் அமைதியாக கனிஷ்காவைப் பார்த்தான்.

“எங்க உறவுக்காரச் சித்தப்பா ஒருத்தர், இலங்கை கதிர்காமத்துல இருக்கார். அவருடன்தான் போனில் பேசிக்கிட்டு இருந்தோம்.” –சுபாகர் சொல்ல, அவரகள் இருவரையும் மாற்றி மாற்றி நோக்கினாள் கனிஷ்கா.

“குடும்ப மீட்டிங் முடிஞ்சாச்சே..! உங்களை அழைச்சுக்கிட்டு வந்த மயூரி கூடக் கிளம்பிப் போயிட்டா. இன்னும் நீங்க ரெண்டு பேரும் இங்கே என்ன செய்யறீங்க.? அவளோடவே கிளம்ப வேண்டியதுதானே..?” — கனிஷ்கா கேட்டாள்.

“பெரியவர் நல்லமுத்து இந்தப் பண்ணை வீட்டை விட்டுக் கிளம்பும்வரை எங்களுக்கு டூட்டி இருக்கு-னு மயூரி மேடம் சொல்லியிருக்காங்க.!” –பொதினி கூற, அவளை எரித்துவிடுவது போன்று பார்த்தாள், கனிஷ்கா..! மீண்டும் மரத்தின் பின்பாக எட்டிப்பார்த்தாள்.

மரத்தின் பின்பாக யாரோ நின்றிருந்ததை உறுதியாக கனிஷ்கா நம்பினாள்…!

• • •

தே இரவு மணி 11.55..!

சென்னை. இரவு, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு விட, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் விளக்குகளைச் சிமிட்டிக் கொண்டு, கோலாலம்பூர் புறப்பட்டது, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH 181.

மயூரி யோசனையுடன் தனது சீட்டில் அமர்ந்திருக்க, ‘பட்’ என்று அவளது தலையில் யாரோ தட்ட, திகைப்புடன் திரும்பியவளின் கண்கள் வியப்பால் விரிந்தன. அவளது தோழிகளான இமேல்டாவும், நான்சி அல்புகர்கோவும் தான் சர்வீஸில் இருந்தனர்.

“ஹவ் வாஸ் தி கெட் டுகெதர் வித் யுவர் பாமிலி..?” –நான்சி கேட்க, சுவாரஸ்யமின்றி தலையசைத்தாள் மயூரி. சிரிப்புடன் அவர்கள் விலகிப்போக, டேக் ஆஃபிற்காக மூடியிருந்த ஜன்னலின் பைபர் திரையை விலக்கினாள், மயூரி . கரிய வானில் வெண்பஞ்சுக் குவியலாய் மேகங்கள் மிதக்க, நடுநடுவே வைரங்களாகத் தாரகைகள் சுடர்விட்டன.

மூன்றாவது நவபாஷாணச் சிலையை கண்டுபிடிக்க வேண்டும்’ என்று தாத்தா நல்லமுத்து கூறியது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. இல்லை.. இல்லை. நல்லமுத்து தாத்தா இல்லை..! உண்மையான அஞ்சையா தாத்தா..! ஏற்கனவே, ஓராண் வழியாக போகரின் சீடர் குடும்பத்தாருக்கும், அவரை வழிபடும் குடும்பங்களுக்கும் மட்டுமே கைமாறி வந்த நவபாஷாண முருகன் சிலையைச் சூழ்ச்சியால் அபகரித்தது பெரிய குற்றம். அதைத் தங்கள் சுயநலத்திற்காக உபயோகித்தது மற்றொரு குற்றம்.! இப்போது மூன்றாவது சிலைக்கும் குறி வைத்திருப்பது அதைவிட மன்னிக்க முடியாத குற்றம்.

அவர்களது திட்டங்களை எப்படித் தடுப்பது ? என்ன இருந்தாலும் நமது குடும்பத்தினர் நன்றாக இருக்க வேண்டும் என்கிற ஆசை அவளுக்கு மட்டும் இருக்காதா..? கனிஷ்காவும் தேஜஸும், இவளை அச்சுறுத்தியது கூட எதிர்பார்த்ததுதான். ஆனால் இவளுடைய அப்பா அம்மாவே, அவர்களுடன் இணைந்துகொண்டதுதான் மயூரிக்குப் பெரும் அதிர்ச்சி..! என்ன செய்வது..? அவர்களுக்கு மட்டும் பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் செல்வாக்குடன் வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்காதா..?

செல் போனை அணைத்து வைத்திருந்தாள். விமான டேக் ஆஃபுக்காகவே போனை அணைத்து வைத்திருந்தாள் என்பது காரணமாக இருந்தாலும், உள்ளுக்குள் அவள் மனம் போனை ஆன் செய்ய அச்சப்பட்டது. ‘பிங் பிங்’ என்று மெசேஜ் வந்த அடையாளமாக ஒலி எழும் போதெல்லாம் தேகம் நடுங்கியது.

உண்மையிலேயே குகன் மணி யார்..? இவளைப் போன்ற ஒரு முருக பக்தன் எனபது அவன் வீட்டிற்கு எரிக் வானுடன் சென்றபோது தெரிந்தது. பத்துமலை முருகனின் பக்தன். வீட்டிலேயே ஆளுயர முருகன் சிலையை வைத்திருக்கிறான். அங்கிருந்து பள்ளங்கி மலை இருக்கும் திக்கில்

வெறித்துக் கொண்டு நிற்பேன் என்று கூறுகிறான். இவளது சென்னை பண்ணை வீட்டில் நடந்த உரையாடலை கேட்பது போன்று, அது தொடர்பாக தகவல்களை அனுப்பினானே..! எப்படி சாத்தியம்..? ஒருவேளை அஞ்சையாவும், ராஜகாந்தமும் அவனுடன் தொடர்பில் உள்ளனரா..? அவர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்ட உண்மை கூட தெரிந்திருக்கிறதே..!

தனது குடும்பத்தினர் அடாத செயலில் ஈடுபட்டிருப்பது உண்மைதான். ஆனால் அவர்களை குறி வைக்கத்தான், குகன்மணி இவளையே சுற்றி சுற்றி வருகிறான் போலும்.ஒரு வேளை, குகன்மணியால் நமது குடும்பத்திற்கு ஆபத்து நேரிடலாமோ..?

குகன்மணியை நமது குடும்பத்தினரிடம் அண்ட விடக்கூடாது. இவள் மூலம் அவன் அவர்களை நெருங்கி, பிரச்னைகளை ஏற்படுத்த கூடுமோ..?

குடும்பத்தினரின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். அதே சமயம், குகன்மணியால் குடும்பத்திற்கு எந்த வித தீங்கும் நிகழக்கூடாது..! –யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் மயூரி. விமானத்தில் இருப்பவர்கள் உறங்க தொடங்கி விட்டிருந்தனர்.

மறுநாள் காலை 6.55 மணிக்குத்தான் விமானம் கோலாலம்பூரில் தரையிறங்கும். எல்லா பிரச்சனைகளையும் மூட்டை கட்டி விட்டு உறங்க போகலாம்.

தனக்குள் தீர்மானித்த, மயூரி மடியில் இருந்த ஹாண்ட் பாகை ‘ஹாண்ட் லக்கேஜ்’ வைக்கும் பெட்டியில் அடைத்து விட்டு, மீண்டும் அமர்ந்தவள், விமானத்தில் அளித்திருந்த கண் திரையை கண்களுக்கு மேல் இறக்கிக் கொண்டு தூங்கத் தொடங்கினாள்.

அவள் உறங்குவதற்கு என்று காத்திருந்தது போல, பின்னால் அமர்ந்திருந்த பயணிகளில் இருந்து எழுந்த ஒரு உயரமான உருவம், மயூரி அமர்ந்த இருக்கையை நோக்கி நகர்ந்து வந்தது. அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததால், அந்த உருவத்தை யாரும் கவனிக்கவில்லை. மயூரி இருக்கையின் அருகே வந்ததும், குனிந்து உறங்கிக்கொண்டிருந்த மயூரியை வெறித்துவிட்டு, பிறகு ‘ஹாண்ட் லக்கேஜ்’ பகுதியைத் திறந்து, அவளது ‘ஹாண்ட் பாகை’ எடுத்து உள்ளே எதையோ வைத்தது. பிறகு வந்த வழியே தனது இருக்கையை நாடிச் சென்று அமர்ந்தது.

விமானத்தில் இருந்தவர்கள் அனைவருமே ஆழமான உறக்கத்தில் இருந்தனர். மயூரியும் தன்னை மறந்து உறங்கி விட்டிருந்தாள் .

திடீரென்று–

அவள் அமர்ந்திருந்த சன்னலின் திரை தடதடவென்று குலுங்கத் தொடங்க, அந்த இரைச்சலை கேட்டு, மயூரி திடுக்கிட்டு கண் விழித்தாள். தன்னைச் சுற்றிலும் குழப்பத்துடன் நோக்கினாள். எங்கும் இருள்..! தடதடவென்று ஜன்னலின் திரை மீண்டும் குலுங்க, அதைத் திறக்க முற்பட்டாள். இவள் திறக்க முடியாதபடி, வெளியே யாரோ பிடித்து கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு. தனது பலத்தை எல்லாம் திரட்டி அவள் அந்தத் திரையை விலக்க, வெளியே கரிய வானம் தெரியவில்லை. ஜகஜ்ஜோதியாக ஒளி வெளியே பரவி கிடந்தது. வியப்புடன் அவள் வெளியே நோக்க, அடர்த்தியான கொண்டையுடனும், தாடியுடனும், சித்தர் ஒருவர் விமானத்தின் பக்கலில் பறந்து கொண்டிருக்கிறார்.

ஜன்னல் வழியாக வெளியே நோக்கிக் கொண்டிருக்கும் இவளை பார்த்து சிரிக்கிறார். “நான் முன்னால் சென்று, உனக்காகப் பத்து மலையில் காத்திருக்கிறேன். நீ பின்னாடியே வந்து சேரு..!” –என்று கூறிவிட்டு, விர்ரென்று பறந்து சென்று விடுகிறார். வானில் பரவியிருந்த ஒளி மறைந்து, மீண்டும் நட்சத்திரங்களுடன் கூடிய கரிய வானம் தென்படுகிறது.

விமானம் திடீரென்று குலுங்கியது. தூக்கிவாரிப் போட கண்விழித்தாள் மயூரி. மயூரி மட்டுமல்ல… விமானம் air pocket ஒன்றில் சிக்கியதால், சுமார் மூன்று அடிகள் தனது நிலையிலிருந்து திடீரென்று இறங்கியதால், அந்தக் குலுங்கல் என்று பைலட் மைக்கில் அறிவித்தார்.

விமானம் குலுங்கியதால் தான் விழித்துக்கொண்டாளா அல்லது சித்தரைப் பற்றிய கனவு தோன்றியதால் உறக்கம் கலைந்ததா..? மயூரியால் அனுமானிக்க இயலவில்லை.

முந்தைய நாள்தான், போகரைப் பற்றி ஒரு புத்தகத்தில் படித்திருந்தாள்.

—கரூரார் ஜலத்திரட்டு என்ற ஒரு நூலில் ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. . அகஸ்தியர், போகரை கோபித்து, “நீ முருகனை நவபாஷாண விக்கிரகங்களாக வடிக்கும் வரையில் சித்துக்களைப் புரியும் தன்மையை இழப்பாய்” என்று சொல்ல, சித்தத்தன்மையை இழந்துவிட்டால், என்னால் எப்படி பாஷாணங்களைத் திரட்டுவதற்கு அலைய முடியும் என்று போகர் வருந்த, அகஸ்தியர் அவருக்குக் ககன குளிகையை அளித்து, “இதனை வாயில் போட்டுக்கொண்டால் உன்னால் விண்ணில் பறக்க முடியும். அதன்பின் உன்னால் நவபாஷாங்கங்களை தேடி எடுத்துச் சிலையை வடிக்க முடியும்.” என்று அகத்தியர் கூறியதாக அந்த கரூரார் ஜலத்திரட்டு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது —

என்று தான் படித்த நூலில் கண்டிருந்தாள். அதனைப் படித்ததால் தான் விமானத்தில் இப்படியொரு கனவைக் கண்டிருக்கிறாள் போலும். அந்த நூல் – கரூரார் ஜலத்திரட்டு – படிக்கக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ? அப்போது தனது மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

தனது செல்போனைத் தேடியவள், அதனைத் தனது ஹாண்ட் பாகில் வைத்து ‘ஹாண்ட் லக்கேஜ்’ பகுதியில் வைத்தது நினைவுக்கு வர, எழுந்து, மீண்டும் ஹாண்ட் லக்கேஜ் பகுதியைத் திறந்து, தனது ஹாண்ட் பாக்-கை எடுத்துக்கொண்டாள்.

மீண்டும் இருக்கையில் அமர்ந்து, ஹாண்ட் பாக்-கினுள் கையை விட்டு, மொபை-லுக்காகத் துழாவினாள். இவளது ஐபோன் கையில் சிக்க, கூடவே மிருதுவாக ஏதோ கையில் சிக்கியது. வியப்புடன் அந்த பொருளை வெளியே எடுத்தாள். மேலே தனது இருக்கைக்கு பிரத்யேகமாக பொருத்தப்பட்டிருந்த விளக்கை எரிய விட்டாள்.

அவளது கையில் இருந்தது, சிறிய சுவடித் தொகுப்பு. பனையோலைகளால் தொகுக்கப்பட்டிருந்தாலும், மேலே மான் தோலால் வேயப்பட்டிருந்தது. அந்த மான் தோலில் எழுதப்பட்டிருந்த பெயரைப் படித்தாள், மயூரி. அவளுக்கு மெய் சிலிர்த்தது.

”கரூரார் ஜலத்திரட்டு” – என்று அந்த சுவடி தொகுப்பின் மேல் குறிப்பிடப்பட்டிருந்தது.

எந்த நூலை அவள் படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தாளோ, அந்த நூல்தான் தனது ஹாண்ட் பாகில் இருந்தது என்பதை அறிந்ததும், திகைப்புடன் தன்னைச் சுற்றி நோக்கினாள்.

–தொடரும்…

3 thoughts on “பத்துமலை பந்தம் |21| காலச்சக்கரம் நரசிம்மா

Leave a Reply to Ambiga Madasamy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031