• கதை
  • கண்ணதாசன் மன்னிக்க… | ஆர்னிகா நாசர்

கண்ணதாசன் மன்னிக்க… | ஆர்னிகா நாசர்

4 months ago
495
  • கதை
  • கண்ணதாசன் மன்னிக்க… | ஆர்னிகா நாசர்

“டேய் நரம்பா!” கனத்த குரலில் தம்பியை அழைத்தான் டைரக்டர் ஐங்கரன்.

“என்னை அப்படி கூப்பிடாதேன்னு எத்னி தடவை சொல்றது?… சோடாப்புட்டி சோடாப்புட்டி… தமிழின் டாப்டென் நடிகர்களில் ஒருவன்நான். ‘தி கிரேட் லிங்கா’ ன்னு கூப்பிடு!”

“சரி விட்ரா லிங்கா. நீயும் நானும் சேர்ந்து தமிழ் சினிமாவை எவ்வளவு கெடுத்திருக்கம்… இன்னும் எவ்வளவு கெடுக்கப் போரோம்னு நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குடா…

“ஆமா அண்ணன்டா.”

“என் அடுத்தப்படமான ‘நண்பனின் காதலி என் மனைவி’ க்கு நீதான் ஹீரோ. படத்துக்கு ம்யூசிக் ராஜாதாசன். படத்துக்கு ஆறுபாட்டு தேவைப்படுது. பாடலாசிரியரை பேசி முடிவு பண்ணிட்டம்னா நீ நான் ராஜாதாசன் பாடலாசிரியர் மொரிஷியஸ் பறப்போம். ரூம் போட்டு தண்ணியடிச்சபடி பாடலாசிரியர்கிட்ட பாட்டு எழுதி வாங்கிடுவம்”

“ஒகே அண்ணன்டா” தோள்களை குலுக்கியபடி முகவாயை தேய்த்துக் கொண்டான் லிங்கா.

“என்னடா.. மாமனாரோட மேனரிஸங்களை எல்லாம் முண்டமுழுக்க இமிடேட் பண்ற?”

“இமிடேட் பண்ணினா என்ன தப்பு அண்ணன்டா? அதுக்கு எனக்கு உரிமை இருக்கு தெரியுமா?”

“தொலை. மொதல்ல கவிஞர் சுக்ரீவனை கான்டக்ட் பண்ணுவம்”

“அவருக்கு வயசு எண்பதாகுது. அவருக்கும் நமக்கும் வேவ்லென்த் ஒத்துவராது. பவளமுத்தை பாட்டு எழுதச் சொன்னா அவர் எழுதின புத்தகங்களை ஒரு லட்சத்திற்கு வாங்கிக்க கட்டாயப்படுத்துவார். பேரொளியை கூப்பிடு!”

கைபேசியை எடுத்து பேரொளியை அழைத்தான் ஐங்கரன். எதிர்முனை கரகரத்தது. “பேரொளி ஆட்சி மாற்றத்தின் போது காணாம போனவன்தான். தலைமறைவு வாழ்க்கை வாழுறான். ஆளும் கொஞ்சம் சித்தபிரமை பிடிச்சவன் மாதிரி இருக்கிறான். அடிக்கடி இளைஞன் வாழ்க்கையில் சூன்யம் இனி என்றென்றும் வராது கண்ணியம்னு உளறுறான். நீங்க யாரு எதுக்கு அவன தேடுறீங்க?”

“நான் டைரக்டர் ஐங்கரன். என் புதுப்படத்துக்கு பாட்டு எழுத பேரொளியை கூப்பிடலாம்னு” இழுத்தான்.

“நேரம் சரியில்லாதவனின் பாட்டை கேட்டு வாங்கி உங்க நல்ல நேரத்தை கெடுத்துக்காதிங்க தம்பி!”

“நீங்க யாருங்க பேசுரது!”

“பேரொளியோட அப்பா!”

தொடர்பை துண்டித்து “அட கொய்யால!” என முணுமுணுத்தான் ஐங்கரன். மரகதகுமாரை தொடர்பினான்.

“ரொம்ப சந்தோஷம். ட்யூனை அனுப்ச்சு வைங்க சார். ஒரு வாரத்ல ஆறு பாடல்களையும் எழுதித் தந்திடுரேன்” புரோட்டா மாஸ்டர் ஆறு புரோட்டா பார்சல் பண்ணி அனுப்பும் தொனியில் பேசினான்.

“இல்ல நீங்க எங்களோட மொரிஷியஸ் வந்து ஒருவாரம் தங்கி பாட்டு எழுதித்தரனும்!”

“மன்னிக்கனும். வேறவேற கமிட்மென்ட்ஸ் எல்லாம் இருக்கு. மொரிஷியஸ் வர இயலாதநிலை சார்”

“நீங்க கேக்ற பணத்தை தந்திடுரேன்!”

“கூடுதல் பணத்துக்காக நான் சாக்குபோக்கு சொல்லல சார். என் தர்மசங்கடமான நிலைமைய புரிஞ்சிக்கங்க சார்!”

“ஓகே… உங்களுக்கு குடுத்து வைக்கல. பின்னாடி பார்ப்பம்!” தொடர்பை துண்டித்தான் ஐங்கரன். தொடர்ந்து நான்கைந்து சில்லுண்டி கவிஞர்களை தொடர்பினான்.

ஒரு கவிஞன் “அய்யய்யோ நல்ல வாய்ப்பாச்சே… பட் சோகமான விஷயம்… என்கிட்ட பாஸ்போர்ட் இல்லை. இனிதான் புதுசா அப்ளை பண்ணனும். எண்ணெய் பிசுக்கு பட்ட ரேஷன்கார்டை எலி வேற கடிச்சுக் குதறிருச்சு”

இன்னொரு கவிஞன் “சார் சபரிமலைக்கு மாலை போட்ருக்கேன். நான் மொரிஷியஸ் வரலாம். பாட்டு எழுதலாம் ஆனா தண்ணியடிக்க கம்பெனி குடுக்க முடியாது!”

இன்னொரு கவிஞன், “நான் ராஜாதாசனின் தொழில் எதிரி பேரிஸ் விஜயராஜ்க்கு ஆஸ்தான கவிஞனா இருக்கேன். நான் மொரிஷியஸ் வந்து தங்கிபாட்டு எழுதித்தரது என் எதிர்காலத்தை பாழாக்கி விடும். என்னை விட்ருங்க!”

“எங்க கவிஞர் பிறன்மனையை திருடி விட்டு முன்ஜாமீன் கேட்டு தலைமறைவாய் அலைகிறார்!”

கைபேசியை சோபா மீது விசிறியடித்தான் ஐங்கரன். “டாமிட்! டாமிட்! டாமிட்!”

“அண்ணன்டா. மொரிஷியஸ் ட்ரிப்பை கான்சல் பண்ணிடுவமா?”

“நோநோ. திட்டமிட்டபடி நீ நான் ராஜாதாசன் மொரிஷியஸ் போரோம். ‘மச்சி ஒப்பன் தி பாட்டில் வேலையை திருத்தமா செய்வோம். மாற்றுத்தீர்வு அங்கே கிடைக்கும்!”

“மொரிஷியஸை கொண்டேபுடுவம்!” துப்பாக்கிபோல் கை செய்து வான் உயர்த்தி கூவினான் லிங்கா.

இந்தியப் பெருங்கடலில் கடிபட்ட சிறிய பிட்ஸா துண்டாய் மிதந்து கொண்டிருந்தது மொரிஷியஸ் தீவு. ‘ஏர்மொரிஷியஸ்’ விமானம் மாகிபோர்க்கின் ஸர் சிவு சாகர் ராம்கூவம் சர்வதேச விமானநிலைய ரன்வேயில் ஓடி நின்றது. படிக்கட்டு பொருத்தப்பட்டது. மூவர் குழு இறங்கியது. ராஜாதாசன் சச்சா சச்சச்சா என வாயாலேயே இசையமைத்தான். மூவரும் தோளில் கைகோர்த்து இணைந்து நடனமாடினர். பயண சுமைகளை கவர்ந்து கொண்டு சிற்றுந்தில் ஏறினர். வாகனம் ‘லீ செய்ன்ட் ஜார்ஜ்ஸ்’க்குள் பிரவேசித்தது.

இரு சகோதரர்களுக்கு ஒரு சூட். ராஜாதாசனுக்கு தனி சூட்.

மூவரும் குளித்தனர். லிங்கா கழுத்தில் இருந்த உத்திராட்சம் மாலையை கழற்றி வைத்தான். மனைவி பரிசளித்த பிளாட்டின மோதிரத்தை கழற்றி வைத்தான். உள்ளாடை இல்லாமல் பெர்முடா டவுசரும் ‘ஆண்கள் இல்லாத தேசத்தில் நான் பேரழகன்’ என்கிற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பனியனும் அணிந்து கொண்டான்.

லிங்காவும் ஐங்கரனும் ராஜாதாசன் சூட்டுக்குப் போயினர். கீ போர்டை நோண்டிக் கொண்டிருந்தான் தாசன். ஐங்கரன் கைதிகள் சீருடை அணிந்து இருந்தான். தாசன் உள்ளாடைகள் எதுவும் அணியாமல் ராசாத்தி நைட்டி அணிந்திருந்தான். குடிப்பதற்கு இவர்கள் தேர்ந்தெடுக்கும் சென்டிமென்ட் ‘காஸ்டியூம்கள்’ இவை.

“உற்சாகபான மராத்தானை ஆரம்பிப்போமா?” பிரேம்ஜி அல்லது துரைமுருகன் போல் அகலவாய் காட்டினான்.

“ஓகே… ஸ்டார்ட் தி ம்யூஸிக்!” என்றான் ராஜாதாசன் கவுண்டமணி தோரணையில்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட பிராண்டுகளில் விஸ்கி, பிராந்தி, ஜின், ரம், வோட்கா பாட்டில்கள் பரப்பப்பட்டிருந்தன. கொறிக்க இராலும் ட்ரை சிக்கனும் காத்திருந்தன. கொஞ்சம் சரக்கு எடுத்து தன் தலையில் தெளித்துக் கொண்டு மீதி இருவர் தலையிலும் தெளித்து விட்டான் லிங்கா. டவுசரிலிருந்து கடலைமிட்டாயும் ஊறுகாய் பொட்டலங்களும் எடுத்து தனக்கு முன் பரப்பினான். ஐங்கரன் எல்லா சரக்குகளையும் வைத்து காக்டெய்ல் தயாரிக்க ஆரம்பித்தான். “சியர்ஸ்” உயரப்புள்ளியில் மூன்று மது கோப்பைகள் ‘டிக்கிலோனா’ செய்தன. ஆல்கஹால் உள்ளே போனதும் உன்மத்தம் ஆனான் லிங்கா. “அண்ணன்டா… பாட்டு எழுத ஒரு கவிஞ்ஞன் பய்யனும் வரமாட்டேன்ட்டான்க இல்ல? கவிஞ்ஞர்களை போட்டுத்தள்ர மாதிரி ஒரு ஸைக்கோ திரில்லர் எடு அண்ணன்டா’

“கதைகளை திருட திருட்டு டிவிடி கிடைக்ற மாதிரி கவிதைகளை திருட ஒரு வழி கிடைச்சா தேவலை”

“பாடல்வரிகளே இல்லாம வெறும் ம்யூசிக்காலேயே ஆறுபாட்டையும் போட்டுத்தந்திரவா?”

“அது சலிவழாது சலிவழாது!” நாக்கு தடித்து உமாபத்மநாபன். ‘தமில்’ பேசினான் ஐங்கரன்.

சோனி விடியோ கேமிராவை எடுத்து ஆங்கிள் பார்த்து வைத்து ஆன் பண்ணினான் ராஜாதாசன். “நாம விடியவிடிய குடிச்சு கூத்தடிக்கிறதை ரிக்கார்ட் பண்றேன். காலைல போட்டுபாக்க சூப்பராயிருக்கும்!”

மூன்றாவது ரவுண்டில் ஐங்கரன் ஏறக்குறைய 500ஆங்கில தமிழ் தெலுங்கு ஹிந்தி கெட்டவார்த்தைகளை மந்திரம் போல உச்சரித்தான். ‘‘ஏன்?” திகிலாய் வினவினான் லிங்கா.

“ரொம்ப நாளா கெட்டவார்த்தை பேசாத குறையை தீர்த்துக்கிட்டேன்!”

“அண்ணன்டா நானும் பேசிபார்க்கவா?” கொஞ்சினான்.

“பேசுபேசு… காசா பணமா?”

“வெறும் கெட்டவார்த்தைகளை அடுக்கி பாட்டு போட்ரவா?”

“அதுக்கு தமிழ் மக்கள் தயாராய்டுவாங்க. இப்ப இல்ல இன்னும் பத்து வருஷத்துக்கு பின்னாடி!”

“யாராவது ஒரு கவிஞியை கடத்திட்டு வந்திருக்கலாம்…”

“ம்ஹிம்… அது சலிவழாது!”

போதை ஏறஏற மூவரும் அச்சிட முடியாத வார்த்தைகள் பேசிக் கொண்டனர் கட்டிப்புரண்டனர். ஆல்கஹால் இரவு நீண்டது. விடிகாலை 4.30மணிக்கு மூவரும் மட்டையாயினர்.

மறுநாள் காலை11மணி. ராஜாதாசன் இருசகோதரர்களை நோக்கி ஓடிவந்தான். “கண்டேன் கழுதையை… சாரி… கவிதையை!”

“என்ன பேத்ற?”

“லிங்கா குடிச்சிட்டு தாறுமாறா உளர்னதை போட்டு பார்த்து சிலபல வரிகளை எடுத்து பாட்டாக்கியிருக்கேன்” விடியோபதிவை போட்டுக் காட்டினான்.

“ரொம்பக் கேவலமா இருக்கு. இவ்ளவு லோக்கலா நானு?” லிங்கா.

“அதுவா முக்யம் இப்ப? உன் உளறலை பாட்டா எழுதியிருக்கேன். அதை படிக்றேன் கேளு!”

“சொல்லு!”

“கம்முடி நான்ஸென்ஸ் பெண்ணே… கோகோடி ந்யூசென்ஸ் பெண்ணே…

என்னை ஒன்போர் த்ரி பண்ணு! என்னை ஒன்போர் த்ரி பண்ணு!

இல்லன்னா தர்சாக்கிடுவேன் நாஸ்தி பண்ணிடுவேன்

டாஸ்மாக் ஒரு அக்மார்க் போதிமரம் அண்ணன்டா

நான் எல்லா அண்ணன்களுக்கும் தம்பிடா தம்பிடா

என் ப்ரண்டுகளோட தோழிகள் எல்லாம் எனக்கு காதலிடா

என்னோட காதலிகள் எல்லாம் என் ப்ரண்டுகளுக்கு தங்கச்சிடா

எனக்கு ழளறர வராது மைக்கேல் ஹோல்டிங் பேரன்

ஆனா காதல்வரும் நான் குணாகமலின் தம்பி மகன்…” வரிகள் நீண்டன.

மலச்சிக்கல் முகம் காட்டினான் லிங்கா. “நல்லாவா இருக்கு?”

“மொதல்ல கேக்க கேவலமாயிருக்கும் அதுவே கேக்ககேக்க உசத்தியாயிடும். இந்த பாட்டை நீதான் பாடவும் போற!”

“எண்ட குருவாயூரப்பா!” தோள்களை குலுக்கி அங்கலாய்த்தான் லிங்கா.

“தமிழ் ரசிகருக்கு டிஎம்எஸ் எஸ்பிபி சங்கர் மகாதேவன் மாதிரி குரல்வளம் தங்களுக்கு இல்லியேன்னு ஒரு பீலிங்ஸ் ஆப் இண்டியா இருக்கு. நீ பாடுனா இவ்ளவு கேவலமான குரல் உள்ளவனே பாடுரானே. அப்படின்னா நாம்மளும் பாடலாம் போல’ன்னு நினைச்சு உன் பாட்டை ஆதரிப்பாங்க. கருணாநிதி மாதிரி உரைநடைய நாலா உடைச்சு போட்டு கவிதைன்னு சொல்ற ஒரு கூட்டமிருக்கு. அவங்க உன் பாட்டை கேட்டுட்டு ‘இப்டி கூட கேவலமா எழுதி பாட்டாக்கலாம்னா நாம்பளும் ஒருநாள் சினிமா கவிஞன் ஆகலாம் போல’ ன்னு உன் பாட்டை ஆதரிப்பாங்க. சோப்ளாங்கி கவிஞர் பாடகர்களின் ரோல்மாடல் நீ. பாத்துக்கிட்டே இரு பென்சில் பாய் என் யூகப்படி இந்தப்பாட்டு மெஹா சூப்பர் ஹிட் ஆகும்!”

“அண்ணன்டா நீ என்ன சொல்ற?”

“ராஜாதாசனின் அய்டியாவுக்கு டபுள் ஓகே!” வலதுகண் படபடத்தான்.

-படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் ‘கம்முடி நான்ஸென்ஸ் பெண்ணே’ இசை சுனாமியாய் வெடித்தது. சூப்பர் டூப்பர் ஹிட். படமும் மிகப்பெரிய வெற்றி.

கறுப்புநிற பிஎம்டபிள்யூ கார் வந்து நின்றது. அதிலிருந்து இரு புல்சூட் ஆசாமிகள் இறங்கினர். லிங்காவும் ஐங்கரனும் வரவேற்றனர்.

“நாங்கள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள். ’கம்முடி நான்ஸென்ஸ் பெண்ணே’ பாட்டு எங்க அதிபர் ஜோபைடனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. தினமும் நூறு தடவையாவது கேக்கிரார். வெள்ளை மாளிகையில் உங்களுக்கு விருந்தளிக்க ஆசைப்படுகிறார். அரசாங்க விருந்தாளியாக வாருங்கள் உங்கள் விருப்பதேதியில்!”

பிகுபண்ணி ஒத்துக்கொண்டனர். ஜோபைடனுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டே ‘தேவர் இங்கிலிபீசு’ பேசினர் இரண்டு சகோதர்கள். இடதுதோளில் லிங்காவையும் வலதுதோளில் ஐங்கரனையும் கட்டியணைத்தபடி நடுவில் ஜோபைடன் நின்று போஸ் கொடுத்தது மீடியாக்களில் ‘பிளாஷ்’ ஆனது.

ஆறுமாதங்களுக்குப் பின்… “அண்ணன்டா!” லிங்கா.

“என்ன கவிஞ்ஞரே பெரிய கவிப்பேரரசே! இரண்டாம் கவிக்கோவே!”

“மீண்டும் மொரிஷியஸ் போவோமா அண்ணன்டா? பாட்டு எழுத பாட தொண்டை விச்விச்சுன்னுது!”

“கண்ணதாசன் மன்னிக்க… பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் மன்னிக்க… நீ எழுதுடா நரம்பா… நாளை ப்ளைட் ஏறுவம்…” ஐங்கரன் ‘கம்முடி நான்சென்ஸ் பெண்ணே’ பாட்டை ஒப்பாரியாய் பாட ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31