• தொடர்
  • பத்துமலை பந்தம் | 20 | காலச்சக்கரம் நரசிம்மா

பத்துமலை பந்தம் | 20 | காலச்சக்கரம் நரசிம்மா

5 months ago
531
  • தொடர்
  • பத்துமலை பந்தம் | 20 | காலச்சக்கரம் நரசிம்மா

20. செல்வத்துள் எல்லாம் சிலை 

மூன்றாவது நவபாஷாணச் சிலையை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் –இதுதான் நல்லமுத்துவின் அறையில் குடும்பத்தார் ஒன்பது பேரும் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. இந்த விவகாரத்தில் ஒன்பது பேரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்று தீர்மானித்தவுடன், அனைவரும்  மயூரியை எச்சரிக்கையுடன் பார்த்தனர். 

“மயூரி..! நீ இன்னைக்கு மலேசியன் ஏர்லைன்ஸ்ல ஏர் ஹோஸ்டஸா இருக்கே..! உன்னோட சானிடைசர் கம்பெனி வேற பிரமாதமாப் போகுது. இதற்குக் காரணம் நான் நம்ம நவபாஷாணச் சிலைக்கு செஞ்ச பூஜைதான். ஆக, நீயும் சேர்ந்துதான் எல்லாத்தையும் அனுபவிச்சிருக்கே. இப்ப குடும்பத்துக்கு  நன்னெறி பாடி பிரயோஜனம் இல்லை. எல்லோரும் சேர்ந்தே வாழ்வோம்..! இல்லே சேர்ந்தே விழுவோம். நீ சிலையத் திருட வேண்டாம். எங்க திட்டத்தை வெளியில சொல்லாம இருந்தா அதுவே போதும். குறிப்பா, வெளியே நிக்கிற அஞ்சையாவுக்கும், ராஜகாந்தத்துக்கும் தாங்கள்தான் உண்மையான நல்லமுத்து, தேவசேனானு தெரியவே கூடாது. ஜாக்கிரதை, சொல்லிட்டேன்..!–” பாப்கார்ன் வெடிப்பது போல, கிடுகிடுவென்று பேசினாள் கனிஷ்கா. 

“அவளைச் சும்மா மிரட்டாதே..! குடும்பத்துல அவளை மாதிரியும் ஒருத்தர் வேணும். அவளுக்குத் தாத்தா மேலே அலாதி பிரியம். தாத்தா மனசை நோகடிக்க மாட்டா..! அப்படித்தானே தங்கம்..?” –நல்லமுத்து பரிவுடன் கூறினாலும், அவர் குரலில் ஒருவித அச்சுறுத்தல் இருந்ததை மயூரி கவனிக்கத் தவறவில்லை. 

“மயூரி..! என்னை நினைச்சுப் பாரு..! இரண்டு வாரங்கள்தான் என்னோட அரெஸ்ட்டுக்கு ஸ்டே கொடுத்திருக்கு கோர்ட்.  நான் அந்த மாணவிகள் மரணம் கேஸுல வகையா மாட்டிக்கிட்டு இருக்கேன். நான் நல்லபடியா மீண்டு வரணும்னா நாங்க சொல்றதைக் கேளு..!” –மயூரியின் தாய் சத்தியவதி கெஞ்சினாள்.

அடுத்ததாக கனிஷ்கா கூறியது, அனைவரையுமே அதிர செய்தது. நல்லமுத்துவே அவள் பேசியதை அதிகம் என்று நினைத்தார்.  கனிஷ்கா மயூரியை அலட்சியமாக  பார்த்துவிட்டு, சத்தியவதியை நோக்கினாள்.

“மாமி..! உங்க அப்பாவுக்கு சுகர் அதிகமாகி, இடது காலை எடுத்துட்டாங்களாமே..? இப்ப எப்படி இருக்கார்..?” 

–குடும்ப மீட்டிங்கில் தொடர்பு இல்லாமல் தனது தந்தையைப் பற்றி கனிஷ்கா கேட்டதும், சத்தியவதி குழம்பினாள்.

“ஆமா கனி..! இடது கால் முழுக்க செப்டிக் ஆகிடுச்சு. அது மேலும் பரவறத்துக்குள்ளே, முட்டி வரை காலை எடுத்துடனும்னு டாக்டர் சொல்லிட்டார். உயிர் பிழைச்சாப் போதும்னு எடுக்கச் சொல்லிட்டோம்..!” –சத்தியவதி சொல்ல, கனிஷ்கா இகழ்ச்சியாக  இளிப்புடன் மயூரியை நோக்கினாள்.

“என்ன செய்ய முடியும், மாமி..! மத்த அங்கங்கள் நல்லா இருக்கணும்னா, செப்டிக் ஆன காலைப் பலி கொடுத்துத்தான் ஆகணும். ஒண்ணு மட்டும் பிரச்சனை பண்ணிக்கிட்டே இருந்தால், அதை அப்புறப்படுத்திட்டுத் தான் மறுவேலை பார்க்கணும்..!” -என்றதும், அவள் என்ன சொல்கிறாள் என்பது அனைவருக்கும் புரிந்தது.

மயூரி என்ன பதில் சொல்வது என்று நினைத்த பொது, பிங்  என்று மீண்டும் சத்தம்.  வாட்ஸப் தகவலை நாசூக்காகப் படித்தாள்..! குகன்மணிதான் சேதி அனுப்பியிருந்தான்.

“விநாச காலே விபரீத புத்தி..!” –என்று மட்டும் சேதி அனுப்பியிருந்தான்.   

“சரி..! எல்லோரும் அவங்கவங்க ரூமுக்குப் போய்ப் படுங்க. நாளையிலிருந்து மும்முரமா இந்த வேலையில இறங்கணும். கொஞ்ச நாளைக்கு, சினிமா, கிரிக்கெட், பத்திரிகை, ஸ்கூல், அரசியல், தொழிற்சாலை எல்லாத்தையும் மறந்திடுங்க .  நம்ம செல்வாக்கும், செல்வமும் நிலைக்கணும்னா, அந்த மூணாவது நவபாஷாண சிலையைக் கண்டுபிடிக்கணும்..! செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்… அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை –ன்னு வள்ளுவர் சொன்னாரு..! நம்ம குடும்பத்துக்கு மட்டும், –செல்வத்துள் செல்வம், போகர் செல்வம்..! அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் சிலை..!னு தான் ஒவ்வொருத்தரும் சொல்லணும்..!” –நல்லமுத்து கூறினார். 

அனைவரும் எழுந்து செல்ல, மயூரி அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்குக் குறிஞ்சி பண்ணை வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. பெற்ற அம்மாவே இவளுக்கு எதிராக மற்றவர்களுடன் சேர்ந்து விட்டது, இவளுக்கு சோகத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது. அப்படியே மேஜையில் தலையைச் சரித்து கொண்டு அமர்ந்திருத்தாள்.

கதவை யாரோ திறக்கும் ஒலி கேட்டு, தலையை உயர்த்தி நோக்கினாள்.  அஞ்சையாவும், ராஜகாந்தமும்  தான் உள்ளே வந்து, மேஜையின் மீது இறைந்து கிடந்த நொறுக்கு தீனித் தட்டுகளை அப்புறப்படுத்தத் தொடங்கினர். 

“மயூரி ம்மா..! தூங்கப் போகலை..?” –காலித் தட்டுகளை டிரேயில் அடுக்கியபடி கேட்டார், அஞ்சையா.

“என்ன அநியாயம்..! தாத்தாவின் இடத்தில் உட்கார்ந்து அதிகாரம் செய்ய வேண்டிய உண்மையான நல்லமுத்து எச்சில் தட்டுகளை எடுத்துக்கிட்டு இருக்காரு. ஆனா உண்மையான அஞ்சையாவோ, போலி நல்லமுத்துவா ஆர்ப்பாட்டம் செஞ்சுகிட்டு இருக்காரு. போதாதகுறைக்கு மூன்றாவது சிலையை வேற திருடப் பார்க்கிறார்..! சை..! ஒரு முருக பக்தரின் பெயர்த்தியாக பிறந்ததற்கு இவ்வளவு நாட்களாக பெருமைப்பட்டுக்கொண்டிருந்தவள், இப்போது இத்தகைய குடும்பத்தில் வந்து பிறந்தோமே என்று கூனிக் குறுகினாள் .

“அஞ்சையா..! நான் நாளைக்கு மலேசியா போறேன்..!  அப்புறம் உன்னைப் பார்க்க முடியுமோ முடியாதோ..! இப்பவே போயிட்டு வரேன்னு சொல்லிடறேன். அப்புறம் ஒரு விஷயம், அஞ்சையா..! நான் உன்னையும் ராஜகாந்தம் அம்மாவையும் நமஸ்காரம் செய்யறேன். நீங்க ரெண்டு பேரும் என்னையும், என் குடும்பத்தையும் வாழ்த்தணும்..!” –மயூரி எழுந்து அவர்களை நோக்கிச் சென்றாள்.

“என்னம்மா இதெல்லாம்..?” –ராஜகாந்தம் பரிவுடன் கேட்டாள்.

“என்னமோ ஆசீர்வாதம் கேட்கத் தோணிச்சு..! அதுதான் காலில விழறேன்..! பெரியவங்களா என்னை வாழ்த்துங்க..!” –என்றபடி அவர்கள் காலில் விழுந்து பணிந்தாள்.

“மயூரிம்மா..! நீ இவ்வளவு வருத்தத்தோட எங்க காலுல விழறதை பார்த்தா,  உங்க தாத்தா நானேதான் நல்லமுத்துங்கிற ரகசியத்தைச் சொல்லிட்டார் போல இருக்கே. என் தங்கை ராஜகாந்தம்தான் உண்மையான தேவசேனாங்கிற விஷயத்தையும் சொல்லிட்டார் போல இருக்கே..!” –அஞ்சையா என்கிற உண்மையான நல்லமுத்து கூற, தரையில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்த மயூரி, அதிர்ச்சியைத் தாளமாட்டாமல், தலையை மட்டும் நிமிர்த்தி அவர்கள் இருவரையும் பார்த்தாள்.

இருவர் முகத்திலேயும் ஒருவித குரூரப் புன்னகை. 

ல்லமுத்துவின் அறையிலிருந்து ஒன்பது பேரும் தத்தம் படுக்கையறைக்குப் போனாலும், யாருக்கும் உறக்கம் வரவில்லை. மூன்றாவது சிலையை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, குடும்பம் இழந்திருந்த ச்ரேயஸையும், பொலிவையும் மீண்டும் கொண்டு வர வேண்டும். பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, வழக்கம்போல எல்லாத் துறைகளிலும் தங்கள் குடும்பமே ஜொலிக்க வேண்டும். எல்லா துறைகளிலும், தங்கள் குடும்பமே பணம் பண்ண வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். 

தேஜஸும், கனிஷ்காவும் மட்டும் தங்கள் அறைக்குப் போகாமல், பால்கனிக்குச் சென்று திட்டம் தீட்டினார்கள்.

“தேஜஸ்..! நான் நெட்ல உடனடியா மூன்றாவது சிலையை பத்தி எல்லா விவரங்களையும் அலச போறேன். போகர் எங்கே எல்லாம் போனார், எங்கே எல்லாம் மூன்றாவது சிலை இருக்கலாம்னு தகவல் சேகரிக்கப் போறேன்.” –மயூரி சொன்னாள்..!

“கனிஷ்கா..! உனக்கு சுப்புணி தெரியுமில்லே… என்னோட பிளஸ் டூல படிச்சான், சுப்பிரமணி..! அவங்க அப்பா முருகன் கோவில் அர்ச்சகர். ஒரு நாள் அவங்க கோவிலுக்குப் போனபோது, எனக்கு நவபாஷாண சிலைகளைப் பத்தி கதை கதையாச் சொன்னார். அப்ப எனக்கு போரே அடிச்சது. ஆனா இப்ப அவர் சொன்னது எனக்கு நினைவுல வருது. பழனி மலை செவ்வாய்க் கிரகத்தோட தாக்கம் அதிகம் உள்ள பகுதியாம். எனவேதான் போகர் பழனி மலையில அந்த சிலையைப் பிரதிஷ்டை செஞ்சாராம். செவ்வாய் ஆதிக்கம் உள்ள பகுதியில பிரதிஷ்டை செஞ்சாதான், நவபாஷாண சிலைக்கு வீர்யம் அதிகமாகுமாம். முருகனோட நட்சத்திரம் விசாகம், விருச்சிக ராசியில் கூட வருது. அத்தோட அதிபதி செவ்வாய்ன்னு அந்த குருக்கள் சொன்னார். இந்த இன்ஃபர்மேஷன் நமக்கு உபயோகப்படுமா பாரு..?” -தேஜஸ் சொன்னான்.

“நீயும் என் ரூமுக்கு வாயேன்..! ரெண்டு பேரும் தகவல்களைத் தேடலாம்..!” –கனிஷ்கா அவனை அழைத்தாள்..!

“நோ வே..! நான் நெட்பிளிக்ஸ்ல ஒரு நல்ல திரில்லர் படம் பார்க்கப் போறேன்..! குட் நைட்..!” –என்று கூறிவிட்டு தேஜஸ் தனது அறைக்குச் சென்று  விட்டான்.

தனது அறையினுள் நுழைந்து, நைட்டிக்கு மாறிக்கொண்டு, கட்டிலின் மீது சரிந்துகொண்டு ஸ்லீப் மோடில் இருந்த லாப் டாப்புக்கு உயிர் கொடுத்தாள். ‘Third Navabaashana Idol’ என்று கூகுள் செய்தவுடன், தகவல்கள் கொட்டத் தொடங்கியது. ஆர்வத்துடன் தனது டயரியில் முக்கியக் குறிப்புகளைச் சேகரிக்கத் தொடங்கினாள், கனிஷ்கா.

தேஜஸ் தனது டீ ஷர்ட்டை மட்டும் கழட்டிப் போட்டுவிட்டு, ஷார்ட்ஸ் உடன் கட்டிலில் சரிந்தான். netflixக்கு என்று பிரத்யேகமாக வழங்கப்பட்டிருந்த ரிமோட்டை எடுத்து Netflix படங்களை மேயத் தொடங்கினான். அநேகமாக எல்லா படங்களையும் அவன் நண்பர்களுடன் பார்த்துவிட்டிருந்தான். தான் பார்க்காத படம் என்று தேடிப் பார்க்க, ஒரு ஆங்கிலப் படம் கிடைத்தது. 

‘The haunting of Bly Manor’ என்கிற பெயர் தோன்ற, பேய்க்கதை என்று புரிந்துகொண்டு அந்த படத்தை க்ளிக் செய்தான். 

இரண்டு தலையணைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிக்கொண்டு, இரு கைகளையும் முதுகையும் அதன் மீது ஊன்றிக்கொண்டு, கட்டுப் போடப்பட்டிருந்த காலை இரு தலைகாணிகளின் மீது வசதியாக வைத்துக்கொண்டு, அறை விளக்கையும் அணைத்துவிட்டு, படத்தைப் பார்க்கத் தொடங்கினான். 

படத்தில் டைட்டில்ஸ் காட்டுவதற்கு முன்பாகவே,  ஒரு பிரம்மாண்ட மாளிகை காட்டப்பட, அதன் உள்ளே காமிரா நுழைகிறது. விஸ்தாரமான மாடியின் அகலமான பத்துப் படிகளில் ஏறிப்போனால், இருபக்கமும் மாடிப்படிகள் தொடர, பத்து படிகள்  முடிவடையும் இடத்தில்  ஒரு நீளமான லாண்டிங் காணப்படுகிறது. அதன் சுவற்றில் பெரிய பெரிய புராதன புகைப்படங்கள். 

ஆர்வத்துடன் அந்தப் படங்களை பார்த்த தேஜஸின் வாய் சட்டென்று பிளந்து அதிலிருந்து ‘ஹா’ என்று குரல் எழும்பியது..! “வாட் தி ஹெல்..!” -என்றவன் அதிர்ச்சியில் உறைந்துபோனான். 

திரையில் காணப்பட்ட அந்த லாண்டிங்கில் மாட்டப்பட்ட புகைப்படங்களில் இவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரின் புகைப்படங்களும் இருந்தன. 

மேலே உச்சியில் நல்லமுத்துவின் படமும்,  பக்கத்தில்,தேவசேனாவின் படமும் இருக்க, அவற்றின் கீழே சரவணபெருமாள், குணசுந்தரி, சத்தியவதி, மற்றும் பாண்டிமுத்துவின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.  கடைசி வரிசையில்  தேஜஸ், கனிஷ்கா மற்றும் கார்த்திக்-கின் படங்கள் இருந்தன.

‘ஹோ’….. என்று அலறியவன், “ரஷ்  டு மை ரூம்..!” என்று கனிஷ்காவுக்கு  டெக்ஸ்ட் செய்தான் தேஜஸ்.

–தொடரும்…

5 thoughts on “பத்துமலை பந்தம் | 20 | காலச்சக்கரம் நரசிம்மா

  1. மிரட்டலான இடத்தில் தொடரும்.. மனம் பரபரக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31