• தொடர்
  • என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில்!

என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில்!

5 months ago
377
  • தொடர்
  • என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில்!

இந்துமதி

(1)

டிசம்பர் மாதத்து வானம். லேசாகத் தூவுகிற மழை. சிலுசிலுவென்ற காற்று. கல்லூரிக்கு எதிரில் தெரிந்த கடல் வழியெங்கும் மண்தரை மறைத்து இறைந்து கிடந்த சாரல் கொன்றைப் பூக்கள். மஞ்சள் பட்டில் சிவப்பு பூக்கள் பதித்த மாதிரி இடையிடையே குல்மொஹர்கள் அற்புதமான காட்சியாகத் தெரிந்தது ஷைலஜாவிற்கு. மணிரத்தினத்தின் படத்தில் பார்க்கிற மாதிரி இருந்தது. பாரதிராஜாவின் கதாநாயகி ஆடுகிற மாதிரி ஸ்லோமோஷனில் ஓட வேண்டும் போல இருந்தது. பின்னால் வெள்ளை உடையில் தேவதைகளாகத் துணை நடிகைகள் துரத்திக் கொண்டு வர வேண்டும். தன்தனனம் தனனம் பாட வேண்டும்…

அவளுக்கு அந்தக் கல்லூரியிலேயே பிடித்தமான விஷயம் சரக்கொன்றையும், குல்மொஹரும்தான். கல்லூரிக்குள் நுழைகிற பக்கத்து வழிப்பாதையில் கல்லூரிக் கட்டிடம் வரை இறைந்து கிடக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கின உடனே எல்லோரும் நுழைகிற மாதிரி கல்லூரிக்குள் நுழைந்து விடமாட்டாள் அவள். அந்தப் பக்கத்து வழி கேட் அருகிலேயே சிறிது நேரம் நிற்பாள். வழியெங்கும் பட்டு விரித்திருந்த சரக்கொன்றையைப் பார்ப்பாள். பின்னால் திரும்பி வானத்தை முத்தமிடுகிற கடலைப் பார்ப்பாள். அப்படியே பார்த்துக் கொண்டு அங்கேயே நிற்க வேண்டும் போலிருக்கும். நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கத் தோன்றும். ஆனால் லெக்சரர்களும், புரொபசர்களும் விடமாட்டார்கள்.

“என்ன ஷைலு…. வகுப்புக்கு வரலை…..?” என்று கேள்விகளாலேயே கொக்கி மாட்டி இழுத்துக் கொண்டு போய் விடுவார்கள். அப்படியே அவர்கள் விட்டாலும் அவளது தோழி சித்ரா விடமாட்டாள்.

“ஏய் போறும்டி.. எத்தனை நேரம்தான் இந்த மஞ்சளைப் பார்த்துக்கிட்டு நிற்பே..? பி பிராக்டிகல் ஐஸே…. நீ நிஜத்தை விட்டு அடிக்கடி நழுவிப் போற… விலகிப்போற இதுதான் உன்கிட்ட இருக்கிற மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்…” என்பாள். அதோடு நிற்கமாட்டாள் தரதரவென்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டும் போவாள்.

மிஸ்.மாத்யூஸின் ஸோனட்டைக் கேட்டுக் கொண்டே இவள் உட்கார்ந்திருப்பாள். பார்வை இடதுபுற ஜன்னல் வழியாகத் திரும்பிக் கடலுக்குப் போகும் அல்லது குல்மொஹர், சரக்கொன்றையில் கிடக்கும். இவை இரண்டும் இல்லையென்றால் மனம் மதுசூதனனிடம் லயித்திருக்கும்.

மது….

இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் ….?! நான் நினைக்கிற மாதிரி அவனும் என்னை நினைத்துக் கொண்டு இருப்பான்..? அல்லது கட்டிட மேஸ்திரியிடம் விளக்கிக் கொண்டிருப்பான்… ? இல்லாவிட்டால் புதிதான ஓர் கட்டிடத்திற்கு வரைபடம் வரைந்து கொண்டிருப்பான்…?

மது….

அந்தப் பெயரில் இருக்கிற இனிமை அவனிடம் உண்டு. நல்ல எதிர்காலம் உண்டு. பெற்றோருக்கு ஒரே பையனாகப் பிறந்த அதிர்ஷ்டம் உண்டு. பணம் உண்டு. இவள் மதுவைச் சந்தித்ததே அவன் கட்டிடம் கட்டுகிற ஸைட் ஒன்றில்தான். இவளது வீட்டுத் தெருக்கோடியில் பிரபலமான அலுவலகம் ஒன்றின் ஆபீஸ் கட்டிடம். பெரிய நான்கு மாடிக் கட்டிடம். மதுதான் அதன் இன்ஜினியர். இவள் கல்லூரிக்குக் கிளம்பும் முன் கட்டிடத்தை மேற்பார்வை பார்க்க வருவான். அப்படியே இவளையும் பார்ப்பான். கிட்டத்தட்ட ஒரு மாதம்! பின் இவளைப் பார்ப்பதற்கென்றே கட்டிடத்திற்கு வர ஆரம்பித்தான்.

வெள்ளையாய், உயரமாய் பளிச்சென்று கண்ணில் அடிக்கிற உருவமாய், அழகாய், முன்நெற்றியில் மயிர் புரள நின்றுக் கொண்டிருந்தவன் மீது இவளது பார்வையும் படரலாயிற்று. பார்வை புன்சிரிப்பாக மாறி, பின்னர் மெல்ல விரிந்து, விகசித்துப் பேச்சாக வெளிவந்து, கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாக உருவெடுத்து இப்போது கசிந்துருகத் துவங்கிற்று….அவளைப் பைத்தியமாக அடிக்கத் தொடங்கிற்று. நாள் முழுதும் மதுவின் நினைவில் அமிழலாயிற்று. பார்க்கும் இடத்திலெல்லாம் அவனைப்போல் ஓர் உருவம் தெரியலாயிற்று.

அவளைக் கடந்து ஒரு சிவப்பு மாருதி போய்விடக் கூடாது. போனால் நிற்பாள்.

“என்ன ஷைலு..?” சித்ரா கேட்பாள்.

“இல்லை… அந்த ரெட் கலர் மாருதியில் போனது மது மாதிரி இல்லை….?”

“உனக்கென்ன பைத்தியமா ஷைலு..?”

“ஏண்டி….?”

“தெருவில் ஒரு ரெட்கலர் மாருதி போக விட மாட்ட போலிருக்கே..?”

“இல்ல சித்ரூ… ரெட் கலர் மாருதியைப் பார்க்கிற போதெல்லாம் அவர் நினைவு வருது..”


“வர்றதா….? அப்படியானால் எங்கேயாவது போயிருந்ததா …?!”

“எது..?”

“நினைவு..! வர்றதுன்னு சொன்னாயே… எங்கேயாவது போயிருந்தால்தானே வர முடியும்… மறந்தால்தானே நினைக்க முடியும்….?!”

“ஆமாண்டி… யு ஆர் ரைட்….இருபத்திநாலு மணி நேரமும் மது என் நினைவில் இருக்கிறப்போ புதுசா எப்படி வர முடியும்…?”

“முட்டாள்….” என்று திட்டினாள் சித்ரா.

“ஏண்டி…?”

“யாரும் யாரையும் இருபத்து நான்கு மணி நேரமும் நினைச்சிட்டிருக்க முடியாது. அப்படி நினைச்சுக்கிட்டிருந்தால் மற்ற வேலைகளைச் செய்ய முடியாது…”

“என்ன சித்ரா அப்படிச் சொல்ற… அப்படியானால் நான் மதுவை நினைக்கலேன்னு சொல்றியா..?”

“இல்லை…. அப்படிச் சொல்லல….நீ மதுவை நினைச்சுக்கிட்டிருக்கிறது எனக்குத் தெரியும். உன் மனசுல அவர் இருக்கிறது தெரியும். ஆனால் ஒரு நாள் பூராவும் ஒருத்தர் நினைவிலேயே இருக்கிறது கஷ்டம்னு சொல்ல வரேன். சாத்தியமற்ற விஷயம்ன்றதைத் தெளிவுபடுத்தறேன்…”

ஷைலஜாவிற்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது. நல்ல மடம், ஜடம் என்று திட்டிக்கொண்டான்.

காதல்னா என்ன என்று தெரியுமா இவளுக்கு….? லீஸ்ட் பிட் ரொமாண்டிக் பர்ஸன். எதையும் நிஜமாக மட்டுமே பார்க்கத் தெரிந்த மரக்கட்டை ஜென்மம்… எப்படித்தான் எனக்குச் சினேகிதியாக வந்து வாய்த்ததோ…. எப்படிதான் ஆங்கில இலக்கியம் படிக்கிறதோ….? ஒரு கற்பனை வேண்டாம்… கவிதை நயம் வேண்டாம்… உணர்ச்சிவசப்படல் வேண்டாம்….? எதுவுமே இல்லாமல் வெறும் மனதை மட்டுமே நினைத்துக்கொண்டு…?

எப்படி முடிகிறது இவளால்…?

கற்பனை சுகம், கனவு சுகம், நிஜத்தை விட்டு விலகுவது சுகம். சிறிது நேர சுகம், சின்னச்சின்ன சுகம். இந்தச் சின்னச்சின்ன சுகங்களும், ஆசைகளும்தான் வெறும் வெள்ளையாகக் கிடக்கின்ற வாழ்க்கைக்கு வர்ணமேற்றுகின்றன. வானவில்லைக் காட்டி மறைக்கின்றன. சிறிது நேரமானாலும் வானவில் நிஜம்தானே… அழகுதானே…. ரம்மியமானதுதானே… இந்த அழகு ரம்மியமற்று எப்படி இருக்க முடியும் ? கற்பனையற்றிருக்க முடியும் ?

சொன்னால் புரியாது. சித்ரா சண்டைக்கு வருவாள். கற்பனைவாதிகள் வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள் என்பாள். நிழலைத் துரத்திக்கொண்டு போகிற ஏமாளிகள் என்பாள்.

அதனால் சித்ராவுடன் இந்தச் சண்டை போடுவதை விட்டு விட்டாள் ஷைலஜா… எல்லாவற்றிற்கும் ஒத்துப் போகிற அவர்களால் ஒன்றா இருக்கிற அவர்களால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துப்போக முடிவதில்லை. சண்டை வருகிறது. முகம் சிணுங்குகிறது. வெறும் அபிப்ராயப் பேதங்கள்தான். ஆனால் அதுகூட நல்ல நட்பில் கீறல் விழ வைக்கிறது என்பதால் இரண்டு பேருமே அதைப்பற்றி பேசுவதைக் கை விட்டிருந்தார்கள். நிழல், நிஜம் பற்றின விவாதத்தை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

அப்போதும் கல்லூரி வாசலில் நின்று சரக்கொன்றையைப் பார்த்தபோது ஷைலஜாவிற்கு சித்ராவின் ஞாபகம்தான் வந்தது. இன்றைக்காவது கல்லூரிக்கு வருவாளா மாட்டாளா… ? என்று தோன்றியது. மாமா பெண்ணிற்குக் கல்யாணம் என்று சித்ரா மதுரைக்குப் போயிருந்தாள். மூன்று நாட்களாகக் கல்லூரிக்கு வரவில்லை. அந்த மூன்று நாட்களும் இவள் தோழமை இன்றித் தவித்துப் போனாள். மதுவிடம் பேசினதையெல்லாம் சொல்ல ஆளின்றித் துவண்டு போனாள். இதற்கு மேலும் சித்ரா வராது போனால் தாங்க முடியாது என்று தோன்ற அவள் நின்று கொண்டிருந்த போதே தோளின் மீது ஒரு கை விழுந்தது. ஸ்பரிசத்திலிருந்தே அவளுக்குப் புரிந்து விட்டது.

“ஹாய் சித்ரு…..” என்று திரும்பினாள்.

வெள்ளையில் சிகப்புப் பூ போட்ட சுடிதாரில் சித்ரா நின்று கொண்டிருந்தாள். தன்னைவிட உயரமாய், வெள்ளையாய், அழகாய் சித்ராவைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது. கூடவே மெலிதாய் கோடு மாதிரி ஒரு பொறாமையும் எட்டிப் பார்த்தது.

“ஹாய்..” சொன்ன சித்ரா சிரித்தாள்.

“என்னப்பா சிரிக்கிற..?”

“இல்லை வழக்கப்படி பூவைப் பார்த்துண்டு நிற்க ஆரம்பிச்சிட்டியான்னு நினைச்சேன். சிரிப்பு வந்தது.”

“உன் கண்ணுல இந்த மஞ்சள் பெட்ஷீட் படலையா..?”

“என் கண்ணுக்கு பெட்ஷீட் எல்லாம் ராத்திரிதான் படும். குளிர்றபோதுதான் படும்…”

“ஜடம்..ஜடம்…சரியான ஜடம்…”

“ஏம்ப்பா மடத்தை விட்டுட்ட…?”

“அடுத்ததரம் சொல்றேன் . ஆமாம் எப்போ வந்தே..?’’

“இன்னைக்கு காலையிலே….”

“ஏன் எனக்குப் போன் பண்ணலை..?”

“பண்ணினேன். நீ குளிச்சிட்டிருக்கிறதா சொன்னாங்க.”

“யாரு…?”

“உங்கம்மா…”

“என்கிட்டே சொல்லவே இல்லையே..?”

“மறந்திருப்பாங்க..விடு..”

“ஏம்மா திருப்பிப் பண்ணலை..?”

“நேரமில்லை ஊருக்குக் கொண்டுபோன துணியெல்லாம் துவைக்கப் போட்டுட்டு குளிச்சி, டிரஸ் பண்ணிக்கவே சரியாக இருந்தது. அதான் காலேஜ்லே பார்க்கப் போறோமோன்னு விட்டுட்டேன்.”

“எப்படித்தான் அப்படி விடறியோ…என்னாலே முடியாதுப்பா. நானாக இருந்தால் துணி குளியல் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் முதல்ல உன்கிட்டே பேசிட்டுத்தான் மறுவேலை…”

“பொய் சொல்றே”

“பொய்யா,,? எதுக்குப்பா..?”

“முதல்ல எங்கிட்ட பேசமாட்டே”

“ஏன்..?”

“முதல் கால் மதுவுக்கு. இரண்டாம் காலதானே எனக்குப் போட்டிருப்பே..?”

ஷைலஜா சிரிக்க, இருவரும் கல்லூரிக்குள் நடக்க ஆரம்பித்தனர். இருவரும் மஞ்சள் சரக்கொன்றை விரிப்பில் நடந்து போவது அழகாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள் ஷைலஜா. பாலு மகேந்திராவின் காமிராவில் பார்க்கிற மாதிரி இருக்கும் இல்லாவிட்டால் தளபதி காமிராமேன் சிவன். அதுவுமில்லாவிட்டால் பி.ஸி.ஸ்ரீராம்.

அதைச்சொன்ன போது சித்ரா மீண்டும் சிரித்தாள். சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“ஆரம்பிச்சிட்டியா…? இந்தமாதிரி வானத்திலே பறக்கிறதை, மேகத்துல மிதக்கிறதையெல்லாம்குறைச்சுக்கிட்டால் நல்லா இருக்கும்..”

“நீயும் இந்த மாதிரி பேசறதைக் கை விட்டால் எனக்கும் நல்லா இருக்கும்.”

“சரி, மூணு நாளைக்கப்புறம் பார்க்கிறோம். சண்டைபோட வேணாம். வேற ஏதாவது பேசுவோம். என்ன..?”

“சரி…”

“மது வந்தாரா…? பேசினியா..?”

“ம்..அதைப் பற்றித்தான் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.”

“சொல்லு….”

“ஒரு நாளைக்கு மகாபலிபுரம் போகலாம்னு சொல்றார் மது. கெஸ்ட்ஹவுஸ் புக் பண்றாராம். வரச்சொல்லி கூப்பிடறார்…”

பேசாதிருந்தாள் சித்ரா. “என்ன சித்ரா பேசாமல் இருக்கே…?”

“நீ மகாபலிபுரம்போக வேணாம், கெஸ்ட்ஹவுஸ் எல்லாம் தங்க வேணான்னு தோணறது.”

“ஏன் சித்ரா…? அந்த அளவு மதுவை நம்ப வேணாம்னு சொல்ற…?”

“அவரை மட்டுமல்ல.. எந்த ஆம்பிளையானாலும் நம்ப வேணாம்தான் சொல்லுவேன். எல்லா ஆம்பிளைகளும் இந்த விஷயத்திலே ஒண்ணாகத்தான் இருப்பாங்க.”

“ஒண்ணுன்னா….எதைத் சொல்றே..?”

“தங்கள் தேவை எதுவோ அதை அடைந்தப்புறம் மனசு மாறிடுவாங்க….சில ஆண்கள் தேவைக்கு முன்னால் இன்னொரு அழகான பெண்ணைப் பார்த்தாலே மனசு மாறி அவள் பின்னால் போக ஆரம்பிச்சுடுவாங்க..”

“மது கூடவா..?”

“இந்த விஷயத்திலே உன் மது மட்டும் விதிவிலக்கா என்ன ? அவரும் ஆம்பிளைதானே…? எல்லா ஆண்களும் சபலப் புத்திக்காரங்கதான்.”

“இல்லை நிச்சயமாக என் மது அப்படி இல்லை..”

குழந்தையைப் பார்க்கிற மாதிரி ஷைலஜாவைப் பார்த்துச் சிரித்தாள் சித்ரா.

“என்ன சிரிக்கற..?”

“இன்னும் உலகம் புரியாமல் குழந்தையாகவே இருக்கியேன்னு சிரிக்கிறேன்..”

“எனக்கு உலகம் புரியாது இருக்கலாம். ஆனால் மதுவைப் புரிஞ்சுண்டிருக்கிறேன்.”

“முட்டாள்…”

“ஏன் சித்ரா..?”

“மது ஆம்பிளை..! ஆம்பிளைகளுக்கே ஸ்திரபுத்தி கிடையாது. சலனப் புத்திக்காரங்கதான்.”

“இல்லை. மது அப்படி இல்லை. இருக்கவும் மாட்டார். ஒருபோதும் என்னைத்தவிர வேறு ஒரு பொண்ணை ஏறிட்டுப் பார்க்க மாட்டார்.”

“உன் அபிப்பிராயம் தப்புன்னு நிரூபிச்சுக் காட்டட்டுமா..? இந்தச் சலனப்புத்தி விஷயத்துல எல்லா ஆண்களும் ஒண்ணுதான்னு உன் மூளைக்கு எட்ட வைக்கட்டுமா..?”

“எப்படி..?”

“ஒரு சின்ன எக்ஸ்பிரிமெண்டாகச் செய்து பார்க்கலாமா..? நிஜமாக இல்லை.. விளைாயட்டாகவாவது உன் மதுவை என் பக்கம் திருப்பிக் காட்டட்டுமா..?”

ஷைலஜா யோசித்தாள். சற்று முன்தானே பொறாமைப்பட்ட சித்ராவின் அழகு பயமுறுத்தியது.

“என்ன பேசாமல் இருக்க…?”

“இல்ல சித்ரா… என் மது அப்படி இல்ல…?”

“திருப்பித்திருப்பி அதையே சொல்லாத.. அப்படி ஒரு நம்பிக்கை அசையாமல் இருக்கும்னால் ஏன் தயங்கின..? ஏன் பேசாமல் இருந்த…? அந்த ஒரு நிமிட மெளனம் உன் அவ நம்பிக்கையைத் தானே காட்றது…?”

“நோ… என் மதுவை நான் நம்பறேன், பரிபூரணமாக நம்பறேன்.”

“அந்த நம்பிக்கை தப்புன்னு நிரூபிச்சிக் காட்டறேன்னு தான் நான் சொல்றேன். ஜெயிக்கப்போறது நீயா நானான்னு பார்ததுடலாமே… இந்த சாலன்ஜூக்கு சரி சொல்லேன்.”

அவள் மீண்டும் தயங்க, சித்ரா பேசினாள்.

“உன் தயக்கத்தையே நான் என் வெற்றியாக எடுத்துக்கட்டுமா..? நீ தோற்றுப்போய் விட்டதாக ஒப்புக் கொள்கிறாயா…?”

“நோ… ஐயம் ரெடி டு ஃபேஸ் தி சாலன்ஜ். நான் ஜெயிச்சால் என்ன தருவ…?”

“உங்க வீட்ல சொல்லி மதுவை உனக்குக் கல்யாணம் பண்ணித் தரேன்… ஓ….கே…?”

“ஓ.கே..”

“ஒருவேளை நான் ஜெயிச்சுட்டால் நீ என்ன எனக்குத் தருவாய்…?”

“ம்…?” என்று யோசித்த ஷைலஜா கண்களை மூடி, மனம் விம்ம, நெஞ்சில் ஓர் உறுதியை ஏற்படுத்திக் கொண்டு அழுத்தமான குரலில் சொன்னாள்.

“அப்படி அவர் உன் பக்கம் திரும்பினார்னால் அவரை நீயே கல்யாணம் பண்ணிக்க…”

அந்தப் பதிலில் அரண்டு போய் பளீரென்று திரும்பி அவளைப் பார்த்தாள் சித்ரா…!

-தொடரும்…

5 thoughts on “என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில்!

  1. House போவாள்.போய் மதுவிடம் தன்னை இழந்து வரப்போகிறாள். says:

    சித்ரா Guest

  2. முதல் பாகத்திலேயே எதிர் பார்க்க வைத்து விட்டீர்கள் அம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31