மெஹா பாஸ் ‘5’ | ஆர்னிகா நாசர்

 மெஹா பாஸ் ‘5’ | ஆர்னிகா நாசர்

வரவேற்பறையில் அஜய்டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஹரிஹரசுதன் தன் உதவியாளர் இருவருடன் அமர்ந்திருந்தார்.

உள்ளிருந்து “ஏய்! ஓய்! நாங்க தமிழன்டா… டாய்! டூய்! ஹௌஹேய்! ஆஹா! ஹிர் ஹிர்! நர நர! கிழிச்சிருவேன் தைச்சிருவேன்!” என உச்சஸ்தாயின் பல மாடுலேஷன்களில் ஒரு கீச்சுக்குரல் கத்திக் கொண்டிருந்தது.

சப்த நாடியும் ஒடுங்கி போனார் ஹரிஹரசுதன். உள்ளிருந்து ஒரு சிறுவன் மூன்று டம்ளர்களில் நீராகாரம் கொண்டு வந்து வைத்தான்.

“பயப்படாதீங்க… உள்ள எங்க தலைவர் கீமான் பொதுக்கூட்டங்கள்ல பேச பயிற்சி எடுத்துக் கிட்டு இருக்கார்!”

பத்து நிமிட கரைசலில் கீமான் உட்பட்டார். வலதுகையால் வாயை தடவிக் கொண்டார்.

“வணக்கம் யார் நீங்க?”

“என் பெயர் ஹரிஹரசுதன். அஜய்டிவியின் மெஹாபாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர். முதல் 4 பாகங்களை சினிமா பிரபலங்களை பங்கேற்பாளர்களாக வச்சு பண்ணோம். மிகப்பெரிய வெற்றி. அடுத்து மெஹா பாஸ் – 5 பண்ண இருக்கிறோம். அதில் 15 அரசியல்வாதிகளை பங்கேற்பாளர்களாக அறிமுகப்படுத்த விரும்புகிறோம். அதில் நீங்களும் ஒருவர்!”

“முதலில் உங்க தலைப்பை “மிகப்பெரிய வீடு 5ம் பாகம்” என தமிழ்படுத்துங்கள். நிகழ்ச்சியில் பிற மாநிலத்தவன் கலந்து கொள்ளட்டும். முதல்பரிசு வெல்லக்கூடாது. வீட்டிற்குள் நான் விடுதலைப்புலிகள் சீருடையுடன்தான் உலவுவேன். வீட்டின் தோட்டத்தில் தமிழ்கடவுள் முருகனின் சிலை வைக்கப்பட வேண்டும். தினம் காலையில் பங்கேற்பாளர்கள் எழுந்து ரிக்கார்டு டான்ஸ் ஆடுவதற்கு பதில் பரதநாட்டியம் ஆட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ஆமைக்கறி சமைத்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். வீட்டிற்குள் இரண்டு மாடு நான்கு ஆடுகள் பத்து கோழிகள் பத்து வாத்துகள் வளர்க்கப்பட வேண்டும். அவைகளை பங்கேற்பாளர்கள தினம் ஒருமணி நேரமாவது மேய்க்க வேண்டும். ஆண் பங்கேற்பாளர்கள் வேட்டி சட்டையுடன் பெண் பங்கேற்பாளர்கள் பாவாடை தாவணியுடன் தான் இருக்க வேண்டும்.!”

“நீங்க சொல்லும் மாற்றங்கள் செய்தால் நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் படுத்துக்கும்!”

“நான் சொல்லும் மாற்றங்களை நீங்கள் பண்ணாவிட்டால் கீமானின் எதிர்காலம் படுத்துக்குமே! கழுதைகளையும் குதிரைகளையும் ஒரே கொட்டடியில் அடைக்க முடியாது. நீங்கள் கிளம்பலாம்!”

ஹரிஹரசுதன் காருக்கு ஒளிவேகமாய் ஓடினார். உதவியாளர்கள் தொடர்ந்தனர். கார் சீறிப் பாய்ந்தது.

கட்டை குட்டையாய் தலைமுடி பரட்டையாய் யாழிசை சுந்தர்ராஜன் நின்றிருந்தார்.

அவர் முன் அவரின் கணவர் ஒரு ஸ்டெத்தாஸ்கோப்பை காட்டி “இதென்ன?” என்றார்.

“தெரியலியே…”

“இதை வைத்துதான் மருத்துவர்க்ள நோயாளிகளின் இருதய துடிப்பை பரிசோதிப்பாங்க!”

“ஓஹோ!”

இரத்தஅழுத்தத்தை சோதிக்கும் கருவி. தெர்மா மீட்டர் இவைகளை காட்டி “இவைகள் என்ன?” என்றார்.

“தெரியலியே…”

“இதெல்லாம் கூட மருத்துவர்கள் உபயோகிப்பதுதான்… நீதான் டாக்டர் தொழிலே இருபது வருஷமா செய்றதில்லையே… பின்னெப்படி இதெல்லாம் உன் ஞாபகத்ல இருக்கும்?”

திடீரென்று யாழிசை ஹிஸ்டீரிகலாய் கூவினார். “தமிழகத்தில் அல்லி மலரும்… மலரும்… மலர்ந்தே தீரும். தமிழகத்தில் லட்சக்கணக்கான பகோடா வியாபாரிகளை உருவாக்கியே தீருவோம்!”

ஹரிஹரசுதன் வணங்கி வந்த நோக்கத்தை கூறினார்.

“நிகழ்ச்சியில் பங்கேற்பதில் ஆட்சேபனையில்லை. ஆனால் ஒரு விஷயம்… நிகழ்ச்சி பங்கேற்பாளர்களில் யாராவது ஒருவர் எனக்கு பின்னாடி நின்று “மத்திய அரசு ஓழிக” ன்னு கோஷமிட்டா அவங்களை கைது செய்து பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வோம். எதாவது ஒரு டாஸ்க்ல எனக்கு சூர்ப்பனகை வேஷம் குடுக்கக்கூடாது. பங்கேற்பாளர்களுக்கு ஆதாவா கூகுள்ல மிஸ்ட் கால்ல ட்விட்டர்ல ஓட்டு விழுமில்ல… அதுல எல்லாம் நான் நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்கினாலும் நான்தான் பர்ஸ்ட்ன்னு அறிவிச்சிடனும். தினசரி நிகழ்ச்சியை ஒளிபரப்பறதுக்கு முன்னாடி என்கிட்ட போட்டு காண்பிச்சு பெர்மிஷன் வாங்கனும். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களா கன். சாதாகிருஷ்ணன் ஓய். சாஜா ஆர்.டி. பாகவன் எம்.ஆர். காகர் போன்றவர்களை வர வைக்கனும். அவங்க எதாவது தாறுமாறா பேசினா நான் பொறுப்பல்ல. அது அவங்க சொந்த கருத்து”

“இதெல்லாம் செய்ய முடியாது மேடம்!”

“நீங்க கிங்கிரஸ்க்கு ஆதரவாளர் போல. உங்களின் நிகழ்ச்சிகளை மத்திய ஒளிபரப்பு துறை தடை செய்ய வேண்டும்!”

கும்பிடு போட்டபடி ஹரிஹரசுதன் அண்ட் கோ கிளம்பியது.

“நூறு மரங்களை வெட்டுவோம். பத்து செடிகளை நடுவோம். ஜாதிய கட்சி இல்லை என்போம் பக்கா ஜாதி கட்சியா செயல்படுவோம். ஐந்து சதவீத ஓட்டு வங்கி வைத்திருக்கும் கட்சிக்கே ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை கொடுக்கும் சட்டதிருத்தம் மேற்கொள்வோம். எங்களின் தேர்தல் அறிக்கைக்கு காப்பிரைட் வற்புறுத்துவோம்!” தானாக பேசிக் கொண்டிருந்தார் பண்புமணி.

ஹரிஹரசுதன் வந்த நோக்கத்தை கூறினார்.

“ஒரு முதலமைச்சர் கேண்டிடேட்டை பங்கேற்பாளராக கூப்பிடுகிறீர்கள். தினசரி நான் உடற்பயிற்சி செய்வதையும் குளத்தில் நீச்சல் அடிப்பதையும் ஒரு மணிநேரம் காட்ட வேண்டும். “சினிமா நடிகர்களை முதலமைச்சராக்குவது தமிழக நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.”- என்கிற எச்சரிக்கை வாசகத்தை வீட்டின் முக்கிய இடங்களில் டிஸ்பிளே பண்ணவேண்டும். மருத்துவர் அய்யா பேசுவதை தினசரி பத்து நிமிஷம் ஒலி பரப்ப வேண்டும். வீட்டின் பங்கேற்பாளர்களுக்கு இலவசமாய் உணவு பொருள் வழங்கக்கூடாது. அவரவர் உழைத்து சாப்பிட வேண்டும். நாங்கள் கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம். மக்களோடுதான் கூட்டணி வைப்போம்!”

“நீங்க சொன்னவற்றை பரிசீலித்து முடிவை சொல்கிறோம்!” ஹரிஹரசுதன் நடையை கட்டினார்.

ஜெயகாரணி முகத்தில் இரண்டு இஞ்ச் ஆழத்திற்கு மேக்கப் போட்டு விட்டாள் மேக்கப் விமன். கழுத்திலும் காதிலும் நகைக்கடையை தொங்க விட்டாள். பயமுறுத்தும் லிப்ஸ்டிக். ஜிகுஜிகு ஜிகினா முழுக்கை சுடிதார்.

“அப்படியே பொம்பிளை ராமராஜன் மாதிரி டாலடிக்கிறீங்க!”

“நான் எனக்காக மேக்கப் பண்ணல மக்களுக்காக பண்ணுகிறேன். தமிழ்நாட்டின் அனைத்து டிவி சானல்களில் விவாத மேடைகளுக்கும் என்னை விட்டால் வேற நாதி இல்லை. தமிழ்நாட்டில் கிங்கிரஸ் ஜெயித்தால் நான்தான் முதலமைச்சர். கிங்கிரஸ்க்கு ஒரு வழின்னா எனக்கு தனிவழி!”

ஹரிஹரசுதன் வணங்கி வந்த நோகத்ததை கூறினார்.

“ஒரு நாள் ஆறுதடவை மேக்கப் செஞ்சிக்குவேன். எனக்கு அணிய கொடுக்கப்படுகிற நகைகளை நானே வச்சிப்பேன். என்னை லாங்ஷாட்ல காட்டக்கூடாது. குளோஸப்பில் மட்டுமே காட்ட வேண்டும். எனக்கு பிடிச்ச பங்கேற்பாளர்களோட கோஷ்டி சேந்துகிட்டு பிடிக்காத ஆண் பங்கேற்பாளர்களின் வேட்டியை உருவுவேன். எனக்கு எதிர்அணி ஆசாமிகள்ல யாரையாவது பங்கேற்பாளரா போட்டா நான் நிகழ்ச்சில பங்கேற்க மாட்டேன். நாங்க கிராமத்து கிழடுகட்டைகளுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வந்தோம். நீங்க மார்க்கெட் இல்லாத சினிமா நடிகர்களுக்கு மாடல்களுக்கு நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வந்திருக்கீங்க!”

“அப்றம் பாக்ரம் அம்மா!”

“நான் கிமுககாரன்தான் ஆனா கிமுககாரன் இல்ல. சென்னையை சுத்திகாட்டி மூணுவேளை சாப்பாடு போட்டு குவார்ட்டர் பிராந்தி தரேன்னு ஆட்களை பேரணிக்கு கூட்டி வரல. அப்படி கூட்டிட்டு வந்தா என்ன தப்பு? சின்ன வயசில ஸ்காலினின் தலையில் குட்டியிருக்கிறேன். இடுப்பில் கிள்ளி இருக்கிறேன். கையை கடித்து இருக்கிறேன். என்னை கண்டாலே அவன் பயந்து ஓடுவான். அந்த பயந்தோளியை தலைவனாக ஏத்துக கொள்வதா? ஸ்காலினை தலைவனாக ஏத்துக் கொண்டால் என்ன தப்பு? மரியாதையா கெஞ்சி கேக்ரேன் என்னை கட்சில இணைச்சிக்கங்கப்பா!” பழகிரி புலம்பிக் கொண்டிருந்தார்.

ஹரிஹரசுதன் பத்தடி தூரம் தள்ளி நின்று வந்த நோக்கத்தை கூறினார்.

“என்னை வேலைவெட்டி இல்லாதவன்னு நினைச்சு நிகழ்ச்சில பங்கேற்க கூப்பிட வந்தியா? என் நடை திருவாரூர் தேர்நடை. நான் முரடனா இருந்தப்ப பிறந்தவன் பழகிரின்னு என் அப்பாருவே சொல்லிருக்காரு. உன் டங்குவாரை அத்துப்பிடுவேன்… ஓடிப்போயிரு!”

“மெஹா பாஸ் வீட்டுக்குள்ள டோல்கேட் செட்டிங் போடனும். நான் டோல்கேட்ல கலாட்டா பண்ணி டோல்கேட்டை தொம்சம் பண்ணுவேன் நெய்வேலி மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மட்டும்ன்ற மாதிரி அஜய்டிவி நிகழ்ச்சி தமிழ்நாட்டுக்கு மட்டுமேன்னு போராடுவேன். கடலூரை தனி மாநிலமா அறிவிச்சா நான் அதுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும். நான் பங்கேற்பாளரா வந்தா பண்புமணியை பங்கேற்பாளரா கூப்பிடக்கூடாது. நிகழ்ச்சில நான் ஜெயிக்கிரேனோ என்னவோ ஜெயிப்பவர் தனது பரிசு தொகையில் ஒரு பகுதியை எனக்கு பங்காய் கொடுத்திட வேண்டும்!” என்றார் பேல்முருகன்.

இடிஇடி என சிரித்தார் கைகோ. “நான் உன் நிகழ்ச்சியில் பங்கேற்றால் உன் நிகழ்ச்சி புட்டுக்கும் பரவாயில்லையா, நான் ஒரு நவரச நாயகன். கோடையிடி குமரன். மெஹாபாஸ் பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து அரசியல்வாதிகள் நலகூட்டணி அமைத்திடுவேன். மெஹாபாஸ் செட்டுக்குள் தினம் நடைபயணம் போவேன். நான் ஆயிரம் சிவாஜிக்கு சமம். “இன்றைக்கு வெள்ளிகிழமை” என்பதை கூட சிங்கம் போல கர்ஜித்து புலி போல உருமி யானை போல பிளிறி லட்சம் வோல்ட் மின்னலாய் வெட்டுவேன். நான் உணர்ச்சி பிழம்பை கக்கும் எரிமலை. நான் பங்கேற்பாளர்களுடன் வந்தா ஜெயிக்கிற மாதிரி பிரகாசமாகி பின் தோல்வியோட கடைசி படிக்கட்டுக்கு தள்ளப்பட்டு ப்யூஸ் போன பல்பாகி விடுவேன்!”

ஹரிஹரசுதன் உன்னித்தார். கிப்பிரமணிய பாமி “உன் நிகழ்ச்சில நான் பங்கேற்பாளரா வந்தா மற்ற பங்கேற்பாளர்களை வண்டை வண்டையா திட்டுவேன். கழுவிகழுவி ஊத்துவேன். உன் டிவி நிகழ்ச்சில பங்கேத்துக்கிட்டே மத்த டிவி நிகழ்ச்சிகளை பாராட்டுவேன். யாரும் கேட்டா “அது பாமியோட சொந்தக்கருத்து”ன்னு சொல்லிடு. சுதன்! நீ ஒரு முட்டாள். நானோ சோழவந்தானின் தவப்புதல்வன. ஹார்வார்டு பல்கலை மேதை. தமிழ்நாட்டை ஆளுரதுக்கு பணகரனுக்கு மட்டும்தான் தகுதி இருக்கு. பாஜீவ் சாந்தியை கொன்னதில் அடுத்து கிரகத்து மனுசாளோட பங்கும் இருக்குன்னு இப்ப சொல்றேன். இந்தியா முழுக்க மாவட்டத்துக்கு ஒரு பாமர் கோயில் கட்டனும். கோடி ஆட்சி மோசம்தான் ஆனா கிங்கிரஸ் அளவுக்கு மட்டமல்ல…”

ஹரிஹரசுதன் விளக்கெண்ணெய் குடித்ததது போல முகபாவம் காட்டினார்.

“நீ நடத்துற கேம்ஷோ எல்லாம் பிரிட்டிஷ்காரனை காப்பியடிச்சதுதான? பதினைஞ்சு பங்கேற்பாளர்களை நூறுநாள் ஒரே இடத்ல உக்காரவச்சு நாட்டுக்கு எதிரா சதி பண்றியா, என்னைக் கண்டு ட்ரம்ப் புதினே அஞ்சி நடுநடுங்குவாங்க. நீ என்னடான்னா எனக்கு சரிசமமா உக்காந்து பேசுற, ஒழுங்கா சொல்லிடு… நீ அமெரிக்க ஏஜன்ட்டா ரஷ்ய ஏஜன்ட்டா சீன ஏஜன்ட்டா? அவாளுக்கு நீ குடை பிடிக்றியா? நீ உண்மையை ஒத்துக்கலன்னா உன் மேல சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போடுவேன்!”

“அய்யய்யோ… ஒரு டிவி கொடுக்கிற அறுபதாயிரம் கூலிக்கு மாரடிக்கிற ஒரு சாதா தொழிலாளி நான்… என்னை விட்ருங்க நான் ஓடிர்ரேன்… எப்பா… இத்னி வெரைட்டினா தகில்பாஜி அரசியல்வாதிகளை எப்டித்தான் தமிழக மக்கள் சகிச்சு வாழுராங்களோ… நமக்கு மார்க்கெட் போன நடிகர் நடிகை மாடல்கள்தான் பொருந்தி வருவாங்க!” காமெடி நடிகரின் நான்கு தோழர்களில் ஒருவராக வரும் ஒரு சில்லுண்டி நடிகரை பார்த்து ஒப்பந்தம் செய்ய புறப்பட்டார் ஹரிஹரசுதன்

கமலகண்ணன்

1 Comment

  • 😂😂😂😂

Leave a Reply

Your email address will not be published.