அஷ்ட நாகன் – 3| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 3| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

நாகங்களை கனவில் கண்டால் அந்த கனவுக்கு கண்டிப்பாக பலன் உண்டு என்று நாக சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக, நாகங்களை கனவில் கண்டால் பலரும் அச்சம் அடைவர். நாகங்கள் எல்லாருடைய கண்களிலும் தென்படுவதில்லை. அவற்றைக் காண வேண்டுமென்ற விதி அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அவை புலப்படும்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது என்ற இரண்டு கிரகங்களின் பங்கு மிக முக்கியம். இந்த இரண்டு கிரகங்களும் சரியான இடத்தில் அமையும் பட்சத்தில், அவர் ராஜ பேக வாழ்க்கையை வாழ்வார். ஆனால், நாக தோஷம் ஏற்படும் வகையில் ஒருவரின் ஜாதகத்தில் ராகு-கேது அமைந்துவிட்டால், அவரை துரதிஷ்டம் துரத்திக் கொண்டே இருக்கும்.

நாக தோஷம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நாக தோஷம் நீங்கிட சரியான ஜோதிடரை நாடிச் சென்று, முறையான பரிகாரம் செய்திட நாக தோஷம் நீங்கி நன்மை பெறலாம். நாக சாஸ்திரத்தின்படி திருமணமான ஒரு ஆணை நாகம் தீண்டுவது போல அவருக்கு கனவு ஏற்பட்டால், கனவு கண்ட அந்த நபரின் மனைவி கருக்கொண்டு இருக்கிறாள் என்பது பொருளாகும்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

திருச்சி தேரடி பஜார் !

திருச்சி தேரடி பஜாரில் வலது இடதாக சுமார் 100 கடைகள் உள்ளன. பாத்திரக் கடை, துணிக்கடை, ஸட்டல், பூக்கடை, புத்தகக் கடை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தினுசாக இருக்கும். தேரடி பஜாரில் மட்டும் அருகருகே சுமார் 7 புத்தக கடைகள் உள்ளன. அந்த ஏழு புத்தக கடைகளில் ‘ஸ்ரீ மீனாட்சி புக் ஸ்டால்’ ஒரு தனி சிறப்புடன் காணப்பட்டது.

திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாக ‘ஸ்ரீ தைலா சில்க்ஸ்’ ஜவுளி மாளிகையின் எதிரில் தான் ஸ்ரீ மீனாட்சி புக் ஸ்டால் உள்ளது. புக் ஸ்டாலுக்கு வலதுபுறமாக சுமார் 100 வருட பழமையான வேப்பமரம். அதற்கு அடியில் 3 அடி உயரம் உள்ள பாம்பு புற்று. அதை சுற்றி சிவப்புத் துணி கட்டப்பட்டு இருந்தது. புற்றின் மேல் மஞ்சள் தூளும், குங்குமமும் கொட்டப்பட்டிருந்தது. அதுவும், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பாம்பு புற்றுக்கு அருகில் ஒரு மண்சட்டியில் பால் ஊற்றியும், பாம்பு புற்றில் ஆங்காங்கே சிலர் முட்டையை வைத்தும் வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அரவிந்தனும் நந்தனும் கடைக்கு தங்களின் பழைய டி.வி.எஸ் எக்ஸல் வண்டியில் வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்ததும், புற்றுக்கு அருகில் நின்று வணங்கிக் கொண்டிருந்த பெண்களும் தங்கள் நடையை கட்ட ஆரம்பித்தனர். வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த அரவிந்த், வண்டியை நிழலாக பார்த்து நிறுத்தினான்.

நந்தன் தன் வசமிருந்த சாவியால் ஷட்ரின் அடியில் பெரிதாக மாட்டியிருந்த ‘திண்டுக்கல் பூட்டை’ திறந்தான்.

‘ஒருவன்! ஒருவன்! முதலாளி… உலகில் மற்றவர் தொழிலாளி’ என்ற ரஜினி பாடலின் ரிங்டோனோடு அரவிந்தனின் செல் ஃபோன் ஒலிக்கத் தொடங்கியது.

அரவிந்த் காதைக் கொடுத்தான்.

“ஹலோ… சொல்லுங்க.”

“வணக்கம் அரவிந்த். அலாவுதீன் பாய் பேசுறேன். என்கிட்ட ரெண்டு மூட்டை பழைய புத்தகங்கள் இருக்கு, வந்து எடுத்துட்டு போறீங்களா?”

“சரி பாய், நான் உடனே கிளம்பி வரேன்.”

“யாருடா ஃபோன்ல?”

“அலாவுதீன் பாய்.”

“என்ன விஷயம்டா.”

“உடனே கிளம்பி காந்தி மார்க்கெட் வரசொன்னாரு.”

“எதுக்குடா ?”

“டேய்… அலாவுதீன் பாய் ‘அற்புத விளக்கு’ கொடுக்கவா கூப்பிடுவாரு. அவர்கிட்ட ரெண்டு மூட்டை பழைய புத்தகங்கள் இருக்காம், வந்து எடுத்துக்க சொன்னாரு.”

அரவிந்தன் பேச்சைக் கேட்ட நந்தனும் சிரித்து விட்டான்.

“சரிடா. நான் கடையை பாத்துக்கிறேன். நீ பாத்து பத்திரமா போயிட்டு வா!”

அரவிந்தும் காந்தி மார்க்கெட்டில் இருக்கும் அலாவுதீன் பாய் வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

நந்தன் கடையைத் திறந்து, அங்கே சிதறிக் கிடந்த புத்தகங்களை நேர்த்தியாக அடுக்க தொடங்கினான். அவன் தலைக்கு மேல் உத்திரத்தில் இரண்டு வவ்வால்கள் தொங்கிக் கொண்டு இருந்தது.

புத்தகங்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பூச்சிகளை வேட்டையாடி அழிப்பதில் வௌவால்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இவை இரவில் கண்விழித்து பூச்சிகளைத் தின்று வேட்டையாடிவிட்டு, பகலில் தூங்கும் இயல்புடையவை. எனவே, நந்தனும் அரவிந்தும் இந்த வெவால்களை ஒன்றும் செய்வதில்லை.

நந்தன் புத்தகங்களின் மேலுள்ள தூசிகளை துடைத்து பளிச்சென்று சுத்தம் செய்துவிட்டு, கடையில் இருந்த நரம்பு நாற்காலியில் அமர்ந்தான்.

ஜனக்கூட்டம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.

“பூவு… பூவு..” என்று கூறிக்கொண்டே வந்தாள் ‘பொன்னியம்மாள் பாட்டி.’ பொன்னியம்மாள் பாட்டிக்கு 70 வயது இருக்கும். 5 அடி உயரம். கொக்கின் சிறகு நிறத்தில் தலைமுடி. முதுமையின் ரேகைகள் பதிந்த தேகம். நடராஜன் தாத்தா காலத்திலிருந்தே தினமும் ஸ்ரீ மீனாட்சி புக் ஸ்டாலில் வியாபாரம் செய்துவிட்டுதான் பூ விற்பதற்கு ‘உச்சிப் பிள்ளையார் கோயில்’ அடிவாரத்திற்கு செல்வாள். வழக்கம் போல் இன்றும் நந்தனிடம் பத்து ரூபாய்க்கு பூவை கொடுத்துவிட்டு நின்றாள்.

“என்ன பாட்டி சாப்டியா?” என்று நந்தன் அக்கறையோடு கேட்டான்.

“சாப்டேன் கண்ணு. நீ சாப்டியா? எங்க அரவிந்த தம்பியை காணோம்.”

“நாங்க, நம்ப நாயர் கடையில இட்லி சாப்பிட்டுட்டு வந்துட்டோம். அரவிந்த் பழைய புத்தகங்களை வாங்குறதுக்கு காந்தி மார்க்கெட் வரைக்கும் போய் இருக்கான்.”

“வியாபாரமெல்லாம் எப்படி போகுது கண்ணு?”

“ஏதோ பரவாயில்லை பாட்டி. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி, மேல பத்து இருபது வச்சி விக்கிறோம். லாபம் இருக்கோ இல்லையோ, நம்மால நாலு பேரு அவங்க வாழ்க்கையில மேம்பாட்டலே போதும். அதுதான் எங்களுக்கு ஆத்மதிருப்தி.”

“உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் கண்ணு.”

“இந்தா, இந்த பூவை நம்ம நாகாத்தம்மாள் புத்தலு போட்டு வேண்டிக்கோ!”

“பாட்டி! எனக்கு இதில எல்லாம் நம்பிக்கை இல்ல! இதுவரைக்கும் நான் ஒருநாள் கூட இந்த புத்தல பாம்பை பார்த்ததேல்ல. இதுவெல்லாம் மூடநம்பிக்கை. நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு நான் நம்புறேன். அதுக்காக கரையான் கட்டின புத்தல எல்லாம் பாம்பு இருக்கும். அத கும்பிட்டாக்க நல்லது நடக்கும் அப்டிங்கறத என்னால ஏத்துக்க முடியாது.”

“நந்தா… நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு நீ நம்பற்தே எனக்கு சந்தோஷமா இருக்கு.

‘கண்ணால பார்க்க முடியற்தால கானல் நீர் உண்மையுமில்ல. கண்ணால பார்க்க முடியாததால காத்து பொய்யுமில்ல! நடக்கட்டும் நம்புறேன்கறது மனுஷன் புத்தி, நம்பினால் நடக்கும் என்பது தெய்வ சக்தி.’ எனக்காக ஒருமுறை இந்த பூவ அந்த பூத்துல சாத்திட்டு மனசார வேண்டிக்க. அதுக்கப்புறம் போக போக நீயே புரிஞ்சுக்குவ” என்று சொல்லிவிட்டு பூவிற்கான பணத்தை பெற்றுக்கொண்டு உச்சிப் பிள்ளையார் கோயில் நோக்கி செல்ல ஆரம்பித்தாள் பொன்னியம்மாள் பாட்டி.

பொன்னியம்மாள் பாட்டி சொன்ன வார்த்தைகள் அவனுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. அப்படியே கடையை விட்டு வெளியே வந்து வேப்ப மரத்துக்கு கீழே உள்ள பாம்பு புற்றை பார்த்தவன், நேற்று இரவு அரவிந்தன் கண்ட கனவை நினைத்துக் கொண்டான். தப்பித் தவறியும் அந்த கனவு நிஜமாகி விடக்கூடாது என்று எண்ணிக்கொண்டே பாட்டி கொடுத்த பூவை பாம்பு புற்றில் சாற்றி விட்டு வேண்டிக் கொண்டான்.

இவ்வளவையும் வேப்பமரத்தின் ஒரு பருத்த கிளையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ‘கரு நாகம்’ சரியாக நந்தனின் கழுத்தில் விழுந்து, அவன் கண்டத்தைச் சுற்றிக்கொண்டு சிவபெருமான் கழுத்தில் படமெடுத்த நிலையில் காட்சி தரும் நாகம் போல் காட்சியளித்தது. நந்தன் அதிர்ச்சியில் உறைந்தவனாக செய்வதறியாது திகைத்து நின்றான்.

நந்தனுக்கு என்ன நிகழ்ந்தது?

– தொடரும்…

< இரண்டாம் பாகம்

கமலகண்ணன்

8 Comments

 • Waiting for next sir

  • Thank you very much sister.

 • திருச்சியில் வாழ்ந்தவரை போல் கதை செல்கிறது. அருமை. இறுதியில் கருநாகம் நந்தன் கழுத்தில் விழுந்த்து அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்போடு முடித்து விட்டீர். எதிர் பார்க்க வைத்து விட்டீர்…..

  • மிக்க நன்றி நண்பரே…தொடர் எழுதுவது என்பது கம்பி மேல் நடப்பது என்று எழுத்தாளர் திரு.இந்திரா செளந்தர் ராஜன் அவர்கள் கூறியுள்ளார்.என்றும் அவர் வழியில் அவர் மாணவனாக அடியேன்… மகிழ்ச்சி நண்பரே… ஓம் நமசிவாய

 • பிரமிப்பில் கூடிக்கொண்டே இருக்கிறது

  • மிக்க நன்றி இனிய நண்பரே… மிக்க மகிழ்ச்சி.

 • சகோதரர் பென்னடம் பிரதாப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் முதலில் 🤝💐

  ஒரு புதுமையான கதையின் ஊடே பயணித்து அதில் இருபெரும் நாயகர்களை கொண்டு அதில் கிட்டத்தட்ட ஆன்மீக நம்பிக்கை இல்லாத ஒருவனை எப்படி ஆன்மீக சிந்தனைகள் அவன் நெஞ்சிற்குள் சிறகடிக்கும் என்று நீங்கள் எழுதுவதை அறிய ஆசைப்படுகிறேன்..

  அடுத்து கதையில் அழகான காட்சி அமைப்புகள் அழகான உருவாக்கம்… அலாவுதீன் பாய் தொடங்கி, பொன்னியம்மாள் பாட்டிவரை எதார்த்தத்தை அழகான வரிகளில் பதிவு செய்து உள்ளீர்கள் 👌 அவ்வளவு அழகு 👌

  வாழ்த்துக்கள் எனதருமை சகோ.. விறுவிறுப்பாக உள்ளது உங்களது எழுத்துகளில் உள்ள ஈர்ப்பு.. வாழ்த்துக்கள் 💐

  • மிக்க நன்றி என் இனிய சகோதரா விமல் அவர்களே !

Leave a Reply

Your email address will not be published.