பத்துமலை பந்தம் | 18 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 18 | காலச்சக்கரம் நரசிம்மா

18.நீலி என்னும் வேலி

ந்த நள்ளிரவில் நல்லமுத்து வீசிய வெடிகுண்டு, குறிஞ்சி பண்ணை வீட்டின் மாடி அறையில் குழுமி இருந்தவர்கள் இடையே பெரிய அதிர்வினை ஏற்படுத்தி, அவர்களைக் கல்லாக உறையச் செய்திருந்தது.

“நான் நல்லமுத்து இல்லை. எனது பெயர் அஞ்சையா..! எனது தங்கை தேவசேனாவின் உண்மையான பெயர், ராஜகாந்தம்..!” –என்று நல்லமுத்து தங்களது உண்மையான பெயராக அந்த வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பணியாட்களின் பெயரைக் கூற, செல்வாக்கும், புகழும், நிரம்பிய பண வசதியால் செருக்குடன் அமர்ந்திருந்த அந்தக் குடும்பத்தினரின் முகத்தில் ஈயாடவில்லை.

அனைவரும் நல்லமுத்துவையே வெறித்துக்கொண்டிருந்தனர்..! அங்கு நிலவிய மௌனத்தால், இப்போது, கடலலைகளின் ஆர்ப்பரிப்பைக் கூட மெல்லியதாகக் கேட்க முடிந்தது.

மயூரிதான் அந்த அமைதியைக் கலைத்தாள்.

“தாத்தா..! நீங்கதான் அஞ்சையான்னா, வெளியில இருக்கிற அஞ்சையா யாரு ?” – மயூரி கேட்டதும், நல்லமுத்து தனது இமைகளின் ஊடே அவள் பக்கமாக நோக்கினார். அவர் தன்னைத்தான் பார்க்கிறாரா, இல்லை கடந்த காலத்தினுள் கண்களால் துழாவுகின்றாரா என்கிற சந்தேகத்துடன், அவரை மயூரி ஆர்வத்துடன் பார்த்தாள்.

“எல்லோரும் கேட்டுக்கங்க..! . நாம எல்லாரும் கீர்த்தியும், செல்வாக்கும், பணபலமும் கொண்டிருக்கோம். ஒவ்வொரு துறையிலயும் ஒவ்வொருத்தர் சோபிக்கிறீங்க. இதெல்லாம் எப்படி வந்தது.? நம்ம பள்ளங்கி போகர் பாசறையில நான் செய்யற தைப்பூச பூஜைதான் எல்லாத்துக்குமே காரணம். நான் கொடுக்கிற மூலிகைத் தீர்த்தம் உங்க நாடிச் சக்கரங்களை உந்தச் செய்து உங்களை சாதனைகளைச் செய்ய வைக்கிறது. எல்லாப் பெருமையும் உங்களுக்கில்லே… அந்த நவபாஷாணச் சிலைக்குத்தான். முதல் சிலை பழனி மலையில இருக்கிறது உங்களுக்குத் தெரியும். இரண்டாவது சிலையைத் தயாரித்த போகர், அதைத் தன்னோட சிஷ்ய பரம்பரை ஒருத்தர் கிட்டே கொடுத்து வச்சார். அந்த சிலைதான் ஓராண் வழியா அந்த குடும்பத்துகிட்டே இருந்து வந்தது.” –என்றவர் ஒரு சிறு இடைவெளி விட, குடும்பத்தினர் அனைவரும் அதுவரை கொறித்துக் கொண்டிருந்த நொறுக்குத்தீனியை உள்ளே தள்ளுவதற்காக வாயை திறந்தவர்கள், இப்போது அதிர்ச்சியினால் வாயைப் பிளந்து கொண்டிருந்தனர்.

“என்னோட தாத்தா நாகரத்தினம் வரைக்கும் அந்த பரம்பரை கிட்டேதான் இருந்தது. நம்ம பள்ளங்கி பவனம் கட்டப்படறதுக்கு முன்னே, கோவணத்தைக் கட்டிகிட்டு, தாத்தா நாகரத்தினம்தான் ஒரு சின்ன குடிசையில் மூலிகைச் சாலையை நடத்தி வந்தாரு. அவருதான், போகர் பாசறைக்குப் போயி பூஜையை செய்துகிட்டு வந்தாரு. நாகரத்தினம் தாத்தாவோட மகன்தான் கந்தகோ. கந்தகோவுக்கு சின்ன வயசுலேயே, பாஷாணங்களைப் பற்றி ஆய்வு செய்யறதுல ஆர்வம் அதிகம். சிறுவனா இருக்கறப்பவே பாஷாணங்களை வச்சுப் புது மருந்து கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு சொல்லி, எதையோ செஞ்சு அதைத் தானே சாப்பிட, அவரோட கண் பார்வை போயிடுச்சு. எந்தப் பாஷாணத்தைச் சேர்த்து என்ன மருந்து செஞ்சார்னு கந்தகோவுக்கு சொல்ல தெரியலை. நாகரத்தினமும் எவ்வளவோ மாற்று மருந்து செஞ்சு கண்பார்வை திருப்பிக் கிடைக்க முயற்சித்தார். அவரால முடியலை. அவரோட ஒரே வாரிசான கந்தகோ அவருக்கு பிறகு போகர் பாசறையில நவபாஷாணச் சிலைக்கு பூஜை செய்யணும். அதுக்காக அவரு சங்கல்பம் செஞ்சுக்கணும். என்ன செய்யறதுன்னு யோசிச்சார், பெரியவர் நாகரத்தினம். இப்ப நீங்க குணா குகை னு சொல்றீங்களே… போகர் பாசறையான அந்தப்பகுதி மிகவும் ஆபத்தானது. கண் பார்வை இருக்கிறவங்களே, அங்கே நடமாடத் தயங்குவாங்க. கந்தகோவால எப்படி அங்கே போயி நவபாஷாண சிலைக்குப் பூஜை செய்ய முடியும்..? அதனால அவரை போகர் பாசறைக்கு அழைச்சுக்கிட்டுப் போக, ஒரு ஆளை வேலைக்கு வச்சார். அவருதான் என்னோட அப்பா, செல்வேந்திரன். என் அப்பாதான் கந்தகோ-வை பாசறைக்கு அழைச்சுக்கிட்டுப் போவார். வாரிசு தொடரணுமே..! அதனால பூம்பாறை கோவில்ல மணியடிக்கிற, ஆறுமுகசாமியோட பொண்ணு காதம்பரியைக் கட்டி வச்சாரு. காதம்பரி வாய்பேச முடியாத ஊமைங்கிறதால அவங்க கல்யாணத்துல பிரச்சனையே வரலை. அவங்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்த சேதியைக் கேட்டுட்டுத்தான் நாகரத்தினம் காலமானார். குழந்தைகளைப் பார்த்துக்க தன்னோட உறவுக்கார பெண் கோகிலாவை வேலைக்கு வச்சாரு என் அப்பா.

“திடீர்னு கந்தகோ கிட்ட ஒரு மாற்றம். அவர் மனைவி எங்கப்பாவோட பொறுப்பை எடுத்துக்கிட்டாங்க. போகர் பாசறைக்குக் கந்தகோவை அவங்களே அழைத்துச்செல்லத் தொடங்கினாங்க. காதம்பரி எதோ மூலிகைக் கஷாயத்தைக் கலக்கிக் கொடுக்க, திடீர்னு கொஞ்சம் கொஞ்சமா, கந்தகோவுக்கு பார்வையில தெளிவு ஏற்பட ஆரம்பிச்சது. ‘இனிமே நீங்க வர வேண்டாம்’ன்னு என் அப்பா செல்வேந்திரன் கிட்டே சொல்லிட்டாங்க. அப்பாவுக்கு ஏமாற்றம். பாஷாணச் சிலையை வச்சு பூஜை மட்டும் பண்ணிட்டு இருக்கறதை விட, அதை வச்சு சம்பாதிக்கணும்னு ஏற்கனவே மனசுல நினைச்சுக்கிட்டிருந்தாரு என் அப்பா. குட்டிக் குழந்தைகளை கோகிலாங்கிற பெண்ணோட பொறுப்புல விட்டுட்டு போகர் பாசறைக்கு பூஜை செய்ய கந்தகோவும், காதம்பரியும் போனாங்க. அப்பா பின்னாடியே போய் அவங்களை பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு, பிறகு இறங்கிக் போய் அவங்களையும் புதைச்சுட்டாரு. அவங்க ரெண்டு பெரும் மலையில இருந்து விழுந்து இறந்துட்டாங்கன்னு சொல்லி, தனது உறவுக்காரப் பெண் கோகிலாவையே கல்யாணம் கட்டிக்கிட்டாரு. அவங்களுக்கு பொறந்தவங்கதான் நானும், ராஜகாந்தமும். ஊருல சந்தேகம் வரக்கூடாதுன்னு, தன் பெயரை கந்தகோ, அம்மா கோகிலா பெயரை காதம்பரி, என்னோட பெயரை நல்லமுத்து மற்றும் என் தங்கை ராஜகாந்தம் பெயரை தேவசேனானு மாத்தி வச்சாரு. கந்தகோவோட உண்மையான குழந்தைகளை, அஞ்சையா, ராஜகாந்தம்னு பெயரை வச்சாரு. அதற்கப்புறம் போகர் பாசறை, அப்பாவோட ஏகபோக உரிமையா ஆகிடுச்சு. அதை வச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சோம். போகர் தலையாய சித்த வைத்தியசாலை தொடங்கினோம். இலை விடலையில விற்பனை செஞ்ச மருந்துகளை பிளாஸ்டிக் கன்டைனர்ல உலகம் முழுக்க அனுப்பறோம். அந்த நவபாஷாணச் சிலை மகிமைதான், இன்னைக்கு உங்களை இந்த நிலையில வச்சிருக்கு. துரதிர்ஷ்டவசமா, அந்தப் பாஷாணச் சிலையோட கட்டுகள் தளர்ந்து போச்சு. மூன்று பாஷாண கட்டு தளர்ந்ததால, சிலைக்கு மகிமை போயிடுச்சுன்னு சஷ்டி சாமி சொன்னாரு.” —நல்லமுத்து சொன்னதும், கனிஷ்கா யோசனையுடன் கண்களைத் தாழ்த்தினாள்.

மிதுன் ரெட்டியின் நிச்சயதாம்பூலத்தின் போது இவள் ஆர்ப்பாட்டம் செய்ய, அப்போது அங்கே வந்த சஷ்டி சாமி கூறியது அவளது காதில் எதிரொலித்தது.

“ஏற்கனவே நிறைய பிரச்சனைகளை விலைக்கு வாங்கியிருக்கீங்க. கூடுதலா, நீ வேற எதற்கு வம்பை விலைக்கு வாங்கறே..? உனக்கு வேறு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் என்றாரே..! தாத்தாவிடம் சஷ்டி சாமியைப் பற்றி எச்சரித்து விடலாமா..?”

அதற்காக அவள் வாயைத் திறந்து பேச முற்பட, அதை கவனித்து விட்ட நல்லமுத்து, அவளைக் கையசைத்துத் தடுத்தார்.

“நான் இப்ப ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசப்போறேன். நீ அப்புறம் பேசு..!” –என்றவர், ஒருமுறை அனைவரையும் பார்த்தார்.

“நான் சினிமா ஹீரோ இல்லை… வில்லன்! நவபாஷாணச் சிலையைக் கபளீகரம் செய்யறதுக்காக ஒரு குடும்பத்தையே அழிச்சவன். இப்ப நாம எல்லோரும், தொடர்ந்து, இதே வசதிகளோடு, செல்வாக்கோடு, பணபலத்தோடு வாழணும்னா, நீங்க எல்லோரும் சேர்ந்து எனக்கு ஒரு உதவி செய்யணும்.” –நல்லமுத்து கூறினார்.

“சொல்லுங்க தாத்தா..!” -தனது கால்கட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தேஜஸ் கூறினான்.

“ஒண்ணுமில்லை. போகர் பதுக்கி வச்சிருக்கிற மூன்றாவது நவபாஷாணச் சிலையை எப்படியாவது கண்டுபிடிச்சு போகர் பாசறையில் பிரதிஷ்டை செய்யணும். அதை நீங்க எல்லாரும் சேர்ந்து செஞ்சாத்தான், நம்ம குடும்பத்தை காப்பாத்த முடியும்.” –நல்லமுத்து கூறினார்.

“அந்த சிலை எங்கே இருக்கு..?”

குடும்பத்தினர் அனைவருக்கும் தத்தம் பிரச்சனைகள் மனதினுள் விஸ்வரூபம் எடுக்க, ஒரே சமயத்தில் நல்லமுத்துவிடம் கேட்டார்கள். மயூரி மட்டும் அமைதி காத்தாள்.

“இவ்வளவு பெரிய உலகத்துல எங்கேன்னு அந்தச் சிலையை தேடிக் கண்டுபிடிக்க முடியும்..?” –குணசுந்தரி கேட்டாள்.

“நியாயமான கேள்வி..! ஆனா எல்லாத்துக்கும் போகரே விடை சொல்லியிருக்காரு. நம்ம நாட்டோட வரைபடத்தை வரைஞ்சு, அதைச் சுக்குநூறாக் கிழிச்சு, திரும்பி ஒண்ணா இணைச்சுத் தாங்கன்னு குழந்தைகளை கேட்டா, அதுங்களுக்கு கஷ்டம்தான். ஆனா அந்த வரைபடத்துக்குப் பின்னாடி ஒரு யானை உருவத்தை வரைஞ்சிருந்தா, குழந்தைகளால எளிதா அதை இணைச்சிட முடியும். அதுபோலத்தான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். நவபாஷாணச் சிலைன்னு நீங்க தேடினா கிடைக்காம போகலாம். ஆனா அதுக்குப் பின்னாடி ஒரு விஷயம் இருக்கு. அதைத் தேடிக் கண்டுபிடிச்சா, தன்னால மூணாவது நவபாஷாணச் சிலை இருக்கிற இடம் தெரிஞ்சுடும்.” –நல்லமுத்து சொல்ல, அனைவரும் ஆர்வத்துடன் அவரை நோக்கினார்.

“பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான்

சொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்

தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற

தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த

சிவசக்தி நலமான மனோம்மணி கடா”

“இது நவபாஷாணச் சிலையின் குறிப்பு. எல்லோரும் இதை மட்டுமே தெரிஞ்சிக்கிறாங்களே தவிர, போகர் கண்டுபிடிப்பின் முக்கிய சங்கேதக் குறிப்பை யாருமே புரிஞ்சுக்கலை.

கட்டுவது நவநஞ்செனினும், தலை மூன்றே ஔஷதமாம்..! நீலி காவல் நிற்குங்கால், நவநாதனும் நிற்பானாம்.

“அப்படின்னா..?” –பாண்டிமுத்து கேட்டான்.

“மொத்தம் 64 பாஷாணங்கள் இருக்கு. அதுல வீரியம் உள்ள ஒன்பதைக் கொண்டு போகர் நவபாஷாணச் சிலையை உருவாக்கினார். அந்தத் வீர்யம் உள்ள ஒன்பதுல, முதல் மூன்றே நல்ல மருந்து. அந்த 64 பாஷாணங்களில் 63 மட்டுமே, நச்சு தன்மை கொண்டவை. நீலி-ங்கிற பாஷாணம் ஒரு தரப்பு மருந்து. மற்ற 63 பாஷாணங்களின் வீரியத்தை கட்டுப்படுத்தும் பாஷாணம். அதை நீலின்னு போகர் சொல்றார் . எங்கெல்லாம் நவபாஷாணச் சிலையை நிறுவினாரோ, அங்கெல்லாம் அதோட வீரியத்தைக் குறைக்க, நீலி பாஷாணத்தால் ஒரு வேல் செஞ்சு வச்சாரு. நீலி பாஷாணம் வேல் கொஞ்சம் நீல நிறம் பாய்ஞ்சு இருக்கும். நம்ம பள்ளங்கி பவனத்துல நுழைவாயிலுல ஒரு வேல் மட்டும் வச்சு ஒரு கோவில் இருக்கு. அது நீலி வேல் தான். நம்ம கையிலருக்கற பாஷாணச் சிலை யோட வீரியத்தை கட்டுப்படுத்தும் வேல் அது. அதோ..! அந்த fan-க்கு regulator இருக்கிற மாதிரி, நவ பாஷாணச் சிலைக்கு நீலி வேல் தான் regulator..! நவபாஷாணச் சிலையை தேடாம, நீலி வேலைத் தேடுங்க..! அதுதான் நவபாஷாணச் சிலைக்கு வேலி..! நீலி கிடைச்சா தன்னால சிலை கிடைச்சுடும்..!”

அனைவரும் பிரமித்துப் போய் பார்த்துக்கொண்டிருக்க, ‘பிங்’ என்று மயூரியின் ஐ போனில் மெசேஜ் வந்ததன் அடையாளமாக ஒலி கேட்டது.

போனை மேஜையின் கீழ் மறைவாக வைத்து, மெசேஜ்-ஜைப் படித்தாள்.

குகன்மணிதான் அனுப்பியிருந்தான். ”Take atmost care’ என்று மெசேஜ்-ஜில் காணப்பட்டது.

அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மயூரி, தலைநிமிர்ந்த போது தாத்தா நல்லமுத்துவை ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டாள் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கேள்வியினால் பிடரியில் ஏற்பட்ட குறுகுறுப்பைத் தவிர்க்க வேண்டி, பயத்துடன் தனது ராக்கிங் சேரில் சாய்ந்து, தலையை அதன் குஷனில் புதைத்துக் கொண்டார். அவரது கண்கள், பால்கனியில் இருந்து முந்தைய நாள் மாலை கீழே பார்த்தபோது, தனது கண்களில் புலப்பட்டிருந்த கந்தகோ மற்றும் காதம்பரியின் உருவங்களை அச்சத்துடன் நினைத்துப் பார்த்தது.

-தொடரும்…

ganesh

4 Comments

  • செம்ம விறு விறுப்பு!சூப்பர்!

  • Twist and Turn is remarkable

  • Very good thriller

  • I am unable to get after 8th chapter, please kindly inform how to get all chapters to read upto 32

Leave a Reply

Your email address will not be published.