பத்துமலை பந்தம் | 17 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 17 | காலச்சக்கரம் நரசிம்மா

17. நான் அவனில்லை..!

ந்த சனிக்கிழமை நள்ளிரவு..!

சென்னை ஈசிஆரில், பாண்டிச்சேரிக்கும், மாமல்லபுரத்திற்கும், விர்….விர் என்று பைக்குகளும், கார்களும் பறந்துகொண்டிருந்தன. அவற்றில் நண்பர்களும், இளம் ஜோடிகளும் உற்சாகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தனர். மறுநாள் ஞாயிற்றுகிழமை விடுமுறையைக் களிப்புடன் கழிக்கப் போகிறோம் என்கிற ஆனந்தத்தில், ஆர்ப்பாட்டத்துடன் அவர்கள் சென்றுகொண்டிருக்க, கிழக்கில் சற்றுத் தள்ளி, கரிய சேலையைக் கட்டியிருந்த வங்கக் கடலின் அந்த உற்சாகத்தில் பங்குகொண்டு, அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தனது அலைகளின் ஆப்பரிப்பால் பதிலளித்துக்கொண்டிருந்தது.

இரு பக்கத்து ஆர்ப்பரிப்புகளும் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது போன்று அமைதி காத்தது, குறிஞ்சிப் பண்ணை வீடு. சாலையில் ஏற்படும் ஒலிகள், குறிஞ்சிப் பண்ணை வீட்டின் மாளிகையை எட்டாத வண்ணம், பல அடர்ந்த மரங்களோடேயே, வளைந்து செல்லும் பாதையின் முடிவில் மறைந்திருந்தது அந்தப் பிரம்மாண்ட பண்ணை வீடு. வீட்டைச் சுற்றி விஸ்தாரமான நந்தவனம். உள்ளே ‘எனது அழகைக் காணுங்களேன்’, என்று தனது அகன்ற ‘போர்டிகோ’ வாயைப் பிளந்தபடி நீண்டிருந்தது, அந்தப் பண்ணை மாளிகை.

இரவுநேரப் பறவைகள் கூடக் கூவாமல் அமைதி காத்த அந்த பண்ணை வீட்டின் மொட்டை மாடியில்தான் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் ரகசியக் கூட்டத்தை கூட்டியிருந்தார் நல்லமுத்து. ஆனால் சடசடவென்று பெய்த மழை, அந்தக் கூட்டத்திற்கு தடை செய்ய, தங்களது சந்திப்பை தனது அறையிலேயே கூட்டியிருந்தார் நல்லமுத்து.

குடும்பத்தினருக்காக பல்வேறு பானங்களையும், நொறுக்குத் தீனிகளையும் ராஜகாந்தம் கீழ்த் தளத்தில் இருந்த அடுக்களையில் இருந்து மாடிக்கு ஏற்றுமதி செய்ய, அவற்றை போதினியும், சுபாகரும் கொண்டு சென்று மேலே நல்லமுத்துவின் அறையின் வாயிலில் இருந்த அஞ்சையாவின் மேஜைமீது வைப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் யார் என்ன கேட்கின்றனரோ, அவற்றை வழங்குவது அஞ்சையாவின் வேலை. இதைத்தவிர, பக்கத்து அறையில் இருந்த பாரில் பீர், விஸ்கி, வைன் எல்லாம் தயாராக இருக்க, பாண்டிமுத்து, சரவணப்பெருமாள், தேஜஸ் மற்றும் நல்லமுத்துவின் தங்கை தேவசேனையின் மகன் கார்த்திக் ஆகியோர் அந்த அறைக்குள் அவ்வப்போது உள்ளே நுழைவார்கள். வறுத்த மசாலா முந்திரி, உருளைக்கிழங்கு சிப்ஸ், கனிஷ்காவுக்கு சீஸ் பால்ஸ், நல்லமுத்துவுக்கு உலர்ந்த திராட்சை, பாதாம், பிஸ்தா, மற்றும் ஓமப்பொடி, முறுக்கு என்று தீனி வகைகளை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தனர் போதினியும், சுபாகரும்.

“இந்த நடு ராத்திரியில இவ்வளவு அயிட்டங்களையா தின்பாங்க..? அந்தக் காலத்துல சூரிய அஸ்தமனம் ஆகிட்டா, எதுவும் சாப்பிட மாட்டாங்கன்னு என்னோட பாட்டி சொல்வாங்க. இப்ப என்னடான்னா, நள்ளிரவு முழுக்க தின்னுட்டும் குடிச்சிட்டும், மூணு மணிக்குத் தூங்க போறாங்க. மதியம் பதினோரு மணிக்குத்தான் எழுந்துக்கிறாங்க..”

–போதினி சொல்ல, சுபாகர் சிரித்தான்.

“அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்னு கேள்விப்பட்டதில்லையா..? உச்சி வெயிலுல பிடிச்சிட்டுப் போக வேண்டிய குடையை, நள்ளிரவு பிடிப்பான். உச்சி வெயிலுல இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்குவான். வெயில் ஒளி உடம்புல படாம நாறிட்டு கிடப்பான்..! –அதுதான் இது.” –என்று சிரித்துக்கொண்டே போக, அவர்களது சிரிப்புச் சத்தம் கேட்டு, மாடிப்படிகளின் உச்சிக்கு வந்து நின்ற, அஞ்சையா உதட்டின் மீது விரல் வைத்து எச்சரித்தார்.

“மூச்சு விடக்கூடாது..! உள்ளே முக்கியமான மீட்டிங் நடக்குது..! வந்த சுவடு தெரியாமல், கொண்டு வந்ததை வச்சுகிட்டுக் கீழே போங்க..!” — என்று சொல்லிவிட்டு மேஜையின் பின்னே சென்று நிற்க, அறைக் கதவை திறந்து கொண்டு, கனிஷ்கா வந்தாள்.

“அஞ்சையா..! எனக்கு ஏலக்காய் டீ வேணும்.” என்று கூற, அவசரமாக டீயை தயாரிக்க தொடங்கினார், அஞ்சையா. அவளது பார்வை தற்செயலாக, அங்கே நொறுக்குத் தீனிகளை அடுக்கிக் கொண்டிருந்த போதினி மற்றும் சுபாகரின் மீது பதிந்தது.

“தன்னைவிட, ஏன் மயூரியைவிடக் கவர்ச்சியாகவும், அழகாகவும் தோற்றமளித்த போதினியை கண்டதும் அவளது முகம் சுருங்கியது. அவள் பார்ட் டைம் வேலைக்கு வந்திருக்கும், மாணவி என்று கனிஷ்கா மாலையில் அறிந்திருந்தாள். தனது காரின் மீது விளக்குக் கம்பம் விழுந்த பதட்டத்தில், அவர்களைக் கவனிக்கத் தோன்றவில்லை. அஞ்சையா டீ தயாரிக்கும் அந்த அவகாசத்தில் அவர்களை நோட்டம் விட்டாள்.

அசூயையுடன் போதினியை நோக்கியவளின் பார்வை, சுபாகரின் மீது பரவியதும், சட்டென்று முகத்தில் ஒருவித மாற்றம். ஒரு கல்லூரி மாணவனுக்கு இவ்வளவு ஆண்மையா..? மிதுனைவிடச் சற்று உயரம் கூடுதலாக இருந்தான். உடலில் வலிமை உருண்டு திரண்டிருந்தது. அவனது உடற்கூறு மொழியில் ஒருவித அலட்சியம். ஒரு அழகிய பெண், அதுவும் ஒரு சினிமா நடிகை தன் அருகில் இருப்பதைக்கூட லட்சியம் செய்யாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். தான் காரை விட்டு இறங்கினால் தன்னைச் சூழ்ந்து கொள்ளும் வாலிபர்களையே பார்த்து வந்த அவளுக்கு, சுபாகரின் பாராமுகம் ஏமாற்றத்தை அளித்தது.

“ஏய் மேன்..! கெட் மீ சம் குக்கீஸ்..!” –கனிஷ்கா கூற, அவளை சுபாகர் திரும்பிக்கூட பார்க்காமல், போதினியை பார்த்தான் .

“போதினி..! மேடம் என்னவோ கேட்கிறாங்க பார்..!” –என்றதும் அவள் கேஷ்யு குக்கீஸை பிளேட்டொன்றில் வைத்து அஞ்சையாவிடம் நீட்ட, அஞ்சையா அவளிடம் கொடுத்தார். எரிச்சலுடன் தட்டிலிருந்து ஒன்றை எடுத்து, அதைக் கொறித்தபடி, அவனையே நோட்டம் விட, சரியாக மயூரி வெளியே வந்தாள்.

“மேடம்..! ஏதாவது வேணுமா..?” –சுபாகர் அக்கறையுடன் மயூரியை நெருங்கி விசாரிக்க, ஜிவ்வென்று எரிச்சல் மூண்டது கனிஷ்காவுக்கு. நல்ல வேளையாக, அஞ்சையா டீ கப்பை நீட்ட, அதைப் பெற்றுக்கொண்டவள், “என்கிட்டே நீ தனியா மாட்டாமயா போகப் போறே..?” –என்றபடி அறைக்குள் நுழைந்தாள் கனிஷ்கா.

றையின் உள்ளே…

மிதமான முனகலுடன் ஏசி ஓடிக்கொண்டிருக்க, நடுவில் ரோலிங் சேர் ஒன்றில் அமர்ந்திருந்தார் நல்லமுத்து. ஒரு சாம்பல்நிறச் சால்வையைப் போர்த்திக்கொண்டு, தனது கொடுவாள் மீசையுடன் ஒரு ஜமீன்தாரைப் போன்று அமர்ந்திருந்தார்.

சுற்றியுள்ள சோபாக்கள், சேர், திவான் என்று கிடைத்த இடத்தில் அனைவரும் அமர்ந்திருந்தனர். நல்லமுத்துவின் மகள் குணசுந்தரி, அவள் கணவன் சரவணப்பெருமாள், மகன் தேஜஸ், மகள் கனிஷ்கா, நல்லமுத்துவின் மகன் குடும்பம் பாண்டிமுத்து, மனைவி சத்தியதேவி, மகள் மயூரி, நல்லமுத்துவின் தங்கையின் மகன் கார்த்திக் ஆகியோர் அமர்ந்திருந்தனர். தங்கை தேவசேனா மட்டும்தான் மிஸ்ஸிங். மாடியில் இருந்து உருண்டிருந்த அவள், தலைக்கட்டுடனும், கால் கட்டுடனும், மருத்துவமனையில் கிடந்தாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்த நல்லமுத்து, ஒருமுறை தொண்டையைச் செருமிக்கொண்டு, பிறகு பேச ஆரம்பித்தார்.

“எல்லோரும் நான் சொல்லப் போறதைக் கவனமா கேளுங்க. ஏதாவது கேள்வி கேட்டேன்னா அதுக்கு பதிலைச் சொல்றதுக்கு மட்டும் வாயைத் திறங்க..!” என்றவர், சுற்றி எல்லோருடைய முகத்தையும் ஒரு முறை கவனித்தார். பிறகு ஒரு அந்த கேள்வியை கேட்டார்.

“நீங்க எல்லோரும் ஒரு விவிஐபி..! யார் யார் எந்தத் துறையில இருக்கீங்க..?”

அரசியல்வாதி, பள்ளி முதல்வர், விமானப் பணிப்பெண், தொழிலதிபர், பத்திரிகை ஆசிரியர், நடிகை, கிரிக்கெட் வீரர் என்றவுடன் கார்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மயூரியின் சானிடைசர் தொழிற்சாலையைப் பார்த்து கொண்டாலும், அதனை ஒரு பெரிய சாதனையாக சொல்ல முடியாதே. !

“நல்லமுத்துவின் பேரன்..! அவரது ராஜ்ஜியத்தை பார்த்து கொள்பவன்..!” –கார்த்திக் கையை உயர்த்திக் கூறினான். உண்மையில் நல்லமுத்துவின் மருத்துவமனை, அவரது திரண்ட சொத்துகள், மயூரியின் சானிடைசர் கம்பெனி என்று பல பொறுப்புகளைக் கவனித்து வந்தான். மயூரியின் கணவன் என்கிற பதவியையும் அடையத் துடிப்பவன்.

“நீங்க எல்லோரும் விவிஐபி தான்..! அவங்க அவங்க துறையில பெரிய நட்சத்திரமா ஜொலிக்கிறீங்க. பணம் நம்ம குடும்பத்துக்குனு கொட்டிக்கிட்டே இருக்கு. கொட்டகைப் பணத்தை வச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னு தெரியலை. நாம பணத்தை வாரி இறைச்சு ஏதாவது செலவழிச்சாக்கூட, நாம செலவழிச்சதுக்கு இரட்டிப்புப் பணம் திரும்பி வருது. இதுக்கெல்லாம் என்ன காரணம்னு நினைக்கறீங்க..?” –நல்லமுத்து கேட்க, பாண்டிமுத்து அனைவரையும் முந்திக்கொண்டு பதில் அளித்தான்.

“சந்தேகமே இல்லாம நீங்க செய்யற தைப்பூச பூஜைதான் காரணம். முருகனோட முழு அருள் பெற்றவர் நீங்க. போகரே ஆசிர்வாதம் செஞ்ச குடும்பத்தைச் சேர்ந்தவங்க. நீங்க. தைப்பூச பூஜை செஞ்சு நீங்க குடுக்கிற மூலிகைத் தீர்த்தத்தை குடிச்சதாலதான இப்ப நாங்க எல்லோருமே பெரிய ஆளுங்களா இருக்கோம்.” –பாண்டிமுத்து கூற, நல்லமுத்து மீண்டும் ஒரு முறை தனது குரலைச் செருமிக்கொண்டார்.

“ஆமா..! நம்ம கீர்த்திக்கும் செல்வாக்குக்கும், சுகபோகங்களுக்கும் காரணம், அந்த தைப்பூச பூஜை. நான் கொடுக்கிற மூலிகைத் தண்ணீர்தான் உங்களை இன்னைக்கு பெரிய விவிஐபியா மாத்தியிருக்கு. ஒரு குடும்பத்துல ஒருத்தர், ரெண்டு பேர் புகழோடு இருக்கலாம். ஆனால் இப்படி எல்லோருமே ஒரு விவிஐபியா இருக்கறதுக்குக் காரணம் அந்த மூலிகைத் தண்ணீர்தான். போகர் உருவாக்கிய இரண்டாவது நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செஞ்ச நீரைத்தான் உங்களுக்கெல்லாம் கொடுத்து வர்றேன்..! பழனி பஞ்சாமிர்தம் போல, வீர்யம் மிக்க அந்த நீர்தான் உங்க, நாடிச்சக்கரத்தை உந்த செய்து பல அரிய சாதனைகளைச் செய்ய வைக்குது.”

மயூரி ஆச்சரியத்துடன் பாட்டனை நோக்கினாள்.

“தாத்தா..! மொத்தம் போகர் மொத்தம் மூணு நவபாஷாண சிலைகளைத் தயார் செய்தார்னு படிச்சிருக்கேன். பழனி மலை மேல ஒண்ணு..! இரண்டாவது சிலையை பள்ளங்கியில தன்னோட சிஷ்யர் பொறுப்புள்ள ஒருத்தர் கிட்ட கொடுத்து வச்சிருக்கார்னு சொல்றாங்க..! அப்ப அந்த சிஷ்யர் குடும்பம் நாமதானா..?” –மயூரி கேட்டாள்.

பட்டென்று கண்களை மூடி உறங்கிவிட்டவர் போல அமைதிகாத்தார், நல்லமுத்து..!

திடீர் என்று கண்களைத் திறந்தவர், அனைவரையும் மீண்டும் ஒரு முறை வெறித்தார்.

“நான் யார்..?” –கேட்க குணசுந்தரி பதில் தந்தாள்.

“இதென்ன கேள்வி அப்பா..? நீங்கதான் பள்ளங்கி போகர் தலையாய சித்தர் மூலிகை சாலையின் தலைவர் நல்லமுத்து..”

மீண்டும் நீண்ட அமைதி..!

“எல்லோரும் கவனமா கேட்டுக்கங்க. இரண்டாவது நவபாஷாணச் சிலை கொடுக்கப்பட்டது, போகரின் சிஷ்ய பரம்பரைக்குத்தான். ஓரான் வழியா அந்த சிலையை ஆராதிச்சுக்கிட்டு வர்றது நல்லமுத்து குடும்பம்தான். ஆனால் நான் நல்லமுத்து கிடையாது..! நாம போகர் சுட்டிக்காட்டிய அந்த சீடரின் வாரிசுகள் இல்லை. நாம அந்தத் குடும்பம் கிடையாது. நாம் அவர்கள் இல்லை..! என்னோட நிஜப்பெயர் அஞ்சையா..! ஹாஸ்பிடலுல இருக்கிற என தங்கை தேவசேனா பெயர் அது இல்லை. அவள் பெயர் ராஜகாந்தம். நீங்கள் எல்லோரும் நல்லமுத்துவின் வாரிசுகள் இல்லை. இந்த அஞ்சையாவின் வாரிசுகள்.”

நல்லமுத்து வீசிய வெடிகுண்டு அங்கிருந்த வங்கக்கடலின் அலைகளையே ஒருகணம் அசையாமல் நிறுத்தியிருக்க வேண்டும். காரணம், அந்த அறையில் குழுமியிருந்த குடும்பத்தினர் அனைவருமே, ஆடாமல், அசையாமல், பிளந்த வாயுடன், அவரையே வெறித்துக் கொண்டிருந்தனர்.

-தொடரும்…

ganesh

3 Comments

  • உண்மை வெளாயாகி விட்டது.இனி என்னென்னவோ?

  • The story is catching to the next phase interestingly.

  • Wow… Nice twist

Leave a Reply

Your email address will not be published.