• தொடர்
  • பத்துமலை பந்தம் |16| காலச்சக்கரம் நரசிம்மா

பத்துமலை பந்தம் |16| காலச்சக்கரம் நரசிம்மா

5 months ago
412
  • தொடர்
  • பத்துமலை பந்தம் |16| காலச்சக்கரம் நரசிம்மா

16. புகை வளையத்தினுள் குடும்பம்.!

பால்கனியில் இருந்து கீழே பார்த்த நல்லமுத்துவுக்கு, கைகால்கள் போய், இதயம் வாய் வழியாக நழுவி, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விடுமோ என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பியவர், கைத்தடியை எடுத்துக்கொண்டு, சட்டையை அணிந்திராத தனது மார்பை மூடுமாறு ஒரு சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு கீழே நடந்தார்.

அவர் பால்கனியில் இருந்து பார்த்தபோது அவர் கண்களுக்குத் தென்பட்டது கடம்பனும் ஸ்ரீவள்ளியும். இவ்வளவு காலங்களுக்குப் பிறகு திடீர் என்று எங்கிருந்து தோன்றினார்கள்..? அவர்கள் போன இடத்தில் புல் முளைத்துவிட்டது என்று நினைத்திருக்க, இங்கே குறிஞ்சி இல்லத்தில் வந்து பழைய சம்பவங்களை நினைவுபடுத்துகின்றனரே. ஏற்கனவே நவபாஷாண சிலையின் கட்டுகள் தளர்ந்ததால், குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்க, புதிதாக வேறு பிரச்சனை வந்துள்ளதே..?

எப்படி மாடியில் இருந்து படி இறங்கி வந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. தன்னால் இயன்ற அளவுக்கு நடையில் வேகம் கொடுத்து போர்டிகோவுக்கு வந்தார். போர்டிகோவில் அனைவருமே அமைதியில் திளைத்திருந்தனர். தனது BMW- செடிகளின் மீது,மோதி, அதன் மீது அலங்கார விளக்கு கம்பம் விழுந்து முன்கண்ணாடியை நொறுக்கிய அதிர்ச்சியிலிருந்து கனிஷ்கா இன்னமும் விடுபட்டிருக்கவில்லை.

புதிதாக இருவரை அழைத்து வந்து, இனி அவர்கள் உங்களுக்கு உதவியாளர்கள் என்று மயூரி கூறியிருந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து, அஞ்சையாவும், ராஜகாந்தமும் மீண்டிருக்கவில்லை.

புதியவர்களான போதினியும், சுபாகரும், தாங்கள் வரும்போதே வீட்டில் பரபரப்பும் பிரச்னையும் தங்களை வரவேற்பதை கண்டு வியப்புடன் நின்றிருந்தனர்.

மயூரி மட்டும்தான், பதைபதைப்புடன் கனிஷ்காவின் காரை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

தன்னை நோக்கி மயூரி வருவதை கண்டதும், கனிஷ்காவின் உக்கிரம் அதிகமானது.

“கனிஷ்கா ! உனக்கு ஒண்ணும் ஆகலியே…?” — மயூரி சாதாரணமாகத்தான் கேட்டாள்.

“யூ… டர்ட்டி பிட்ச்..! என்னை துக்கமா கேட்கிறே..? உன்னாலதான என் காருக்கு இந்த நிலைமை..? அன்னைக்கு போன் செஞ்சு எனக்கு அறிவுரை சொன்னே இல்ல… என்னடி சொன்னே..? மிதுன் ரெட்டி என் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம், அவனை பத்திரமா பார்த்துக்கோனுதானே சொன்னே..? என்னோட லவ்வரை நான் பத்திரமா வச்சுப்பேன். கொலையும் செய்வேன். ! அதை கேட்க நீ யாரு..?” –கனிஷ்கா வீறிட்டாள்.

உண்மையிலேயே மயூரி அதிர்ந்துதான் போனாள்..! அவள் எங்கே கனிஷ்காவிடம் இதையெல்லாம் பேசினாள்..? தான் என்ன பேசினோம் என்பதை யோசித்தாள். ஒரு நிமிடம் மட்டுமேதான் மயூரி, கனிஷ்காவிடம பேசினாள்.

யூரி, கனிஷ்காவின் நம்பருக்கு போன் செய்ததும், உடனே அவள் தனது மொபைலை எடுத்து, “ஹலோ மயூரி.” என்றாள்

“என் பிரெண்டு ஒருத்தர் மலேசியாவில் நடத்த போற ஸ்டார் நைட் விஷயமா மிதுன் கிட்டே பேசப்போறாராம். அவரோட நம்பரைக் கொடுக்க முடியுமா..?” -என்று இவள் கேட்டதும், அவன் நம்பரை அவள் கொடுத்து விட, இவள் குகன்மணிக்கு டெக்ஸ்ட் செய்து விட்டாள். கனிஷ்கா கூறுவது போல, இவள் வேறு எதுவும் பேசவில்லையே..!

“ஹாவ் யூ கான் நட்ஸ்..? நான் உன்கிட்ட மிதுன் நம்பரை மட்டும்தானே கேட்டேன்..? வேற எதுவுமே பேசலையே..?” –மயூரி மறுக்க, கனிஷ்காவுக்குக் கோபம் பொங்கியது.

“பேசறதைப் பேசிட்டு இப்ப இல்லைனு சாதிக்கிறியா..? —“கனிஷ்கா..! மிதுன் ரெட்டி உன் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம். இப்போ நீ விளையாடிக் கொண்டிருக்கும் ஆபத்தான விளையாட்டை உடனே நிறுத்து.! அவனை நம்பி பலர் கோடிக்கணக்கான பணத்தை போட்டு இருக்காங்க. ! அவன் ஜாதகப்படி உன் கையால் அவன் கொலை செய்யப்படுவான்னு இருக்கச்சே, இப்படி ஒரு விபரீத விளையாட்டை நீ விளையாடினா, நம்ம குடும்ப நிலைமை என்னாகறது..? நீ போலீஸ் கேசுல மாட்டிகிட்டா, நம்ம குடும்ப மானம் கப்பல் ஏறாதா..?” — இந்த வார்த்தைகளை நீ ?” –கனிஷ்கா கேட்க, மயூரி மறுத்தாள் !

“இல்லவே இல்லை..! நான் இப்படி எல்லாம் பேசவே இல்லை..!” –மயூரி உறுதியுடன் தலையசைத்து மறுத்தாள்..!

“இப்படியெல்லாம் நீ சொல்லுவேன்னு தெரிஞ்சுதான், நான் உன் பேச்சை ரெகார்ட் செஞ்சிருக்கேன். எப்பவுமே சர்சைக்குரியவங்க பேச்சையெல்லாம் ரெகார்ட் செய்வேன். நீ பேசின அழகை நீயே கேட்டுக்கோ..” –தனது செல்போனை எடுத்து, மயூரியிடம் இருந்து தனக்கு வந்த போன் கால் பேச்சை, ஒலிக்கச்செய்தாள், கனிஷ்கா.

பெல் சத்தம் ஒலிக்க, கனிஷ்காவின் குரல் கேட்டது . “எஸ் மயூரி..!”

உடனே மயூரியின் குரல் கேட்டது. “ஹாய் கனிஷ்கா..! ஒரு முக்கியமான விஷயம்..! என்னோட பிரெண்டு ஒருத்தர் மலேசியாவுல் ஸ்டார் நைட் நடத்தறாரு..! அவருக்கு அது விஷயமா பேச, மிதுன் ரெட்டி நம்பர் வேணுமாம். அவர் நம்பரை கொடுக்க முடியுமா, ப்ளீஸ்..!” –மயூரி கேட்க, கனிஷ்கா சிரித்தாள்.

“என்னடி தங்கச்சி, இதுக்குப் போய் இவ்வளவு கெஞ்சல்..? பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கான். உன் நண்பரை பேசச் சொல்லு..!” –என்று கனிஷ்கா சிரித்தாள்..!

“இல்லை..! என் பிரண்டு இங்கே இல்லை. மிதுன் நம்பரை கொடுத்தாப் போதும்னு சொன்னார்..! அவரு பிறகு பேசுவார்..!” –என்றதும், கனிஷ்கா நம்பரை கூற, மயூரி அதை குறித்துக்கொண்டு, “தாங்க் யூ.!” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

போன் ரெகார்டிங் உரையாடலை கேட்டு அதிர்ந்து போய் வாய் பிளந்து அமர்ந்திருந்தாள், கனிஷ்கா..! இல்லவே இல்லை..! இது அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலே இல்லை. போனை எடுத்த உடனேயே மலை விளிம்பில் மிதுன் ரெட்டி ஊசலாடிக்கொண்டிருக்க, ‘மிதுன் ரெட்டி உனது எதிர்காலத்திற்கு மிக முக்கியம். அவனை நீ கொலை செய்து விடுவாய் என்று உனது ஜாதகத்தில் இருக்க, இந்த ஆபத்தான விளையாட்டுகளை எல்லாம் விளையாடாதே’ என்று அறிவுரை தானே கூறினாள்..? அவள் என்னிடம் மிதுன் ரெட்டியின் நமபரை கேட்கவே இல்லையே.? அதற்குப்பின் நான்கு முறை அந்த உரையாடலை இவள் கேட்டு, மயூரியை சகட்டு மேனிக்குத் திட்டியிருந்தாளே..! இப்போது எப்படி உரையாடல் மாறி ஒலிக்கிறது..?

அதற்குப்பின் மயூரி சொன்ன வார்த்தைகள் கனிஷ்காவின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

“கனிஷ்கா..! நீ நல்ல டாக்டர் ஒருவரைப் பாரு..! நிறைய லைட்ஸ் முன்னாடி காமெராவுல நடிச்சு உனக்கு மன அழுத்தம் வந்திருக்கு னு நினைக்கிறேன். தூக்கம் வராம, நீயா எதோ ஹலூஸினேட் பண்ணிக்கிறே..!” — என்றதும், கனிஷ்கா வீறிட்டாள்..!

“நீதான் எதோ பிளாக் மாஜிக் கத்து வச்சுக்கிட்டு, குடும்பத்துல குழப்பம் செய்யறே..! எல்லாம் உன் வேலைதான்..!” –என்று கனிஷ்கா உறும, தனது பேத்திகளிடையே ஏதோ தகராறு என்பதை உணர்ந்து, நல்லமுத்து கனிஷ்காவின் கார் அருகே வந்தார்.

“என்னம்மா தகராறு இங்கே..?” –நல்லமுத்து கேட்டார்.

”தாத்தா..! நம்ம குடும்பத்துல யாரோ குழப்பம் செய்யறாங்க..! நடக்கிறது எல்லாமே விசித்திரமா இருக்கு. தேஜஸுக்கு கிரிக்கெட் டீம்ல ரெஸ்ட் செஞ்சுட்டாங்க. என்னோட, பெரிய பட்ஜெட் படம் கை நழுவி போச்சு, அப்பா ஷோ ரூம்ல தீ விபத்து. அம்மா மேல, மந்திரி கேஸ் போட்டிருக்காரு ! ஒரு சம்பவம் நடக்குது..! அதை REVISIT செஞ்சா, வேற மாதிரி இருக்கு..! எனக்கு ஒண்ணுமே புரியலை..! அன்னைக்கு மயூரிக்கும் எனக்கும் போன்ல ஒரு தகராறு. அந்த பேச்சை நான் ரெகார்ட் செஞ்சேன். இப்ப போட்டு பார்த்தா, உரையாடல் இப்ப அவ சொல்லுற மாதிரி இருக்கு. ஆனா நாங்க பேசினதே வேற..! எல்லாமே மர்மமா இருக்கு..!” –கனிஷ்கா கூற, நல்லமுடித்து திகைப்புடன் போதினியையும், சுபாகரனையும் நோக்கினார்.

கனிஷ்கா கூறியது இவரது நிலைக்கும் கச்சிதமாக பொருந்தியது. பால்கனியில் இருந்து பார்த்தபோது, கீழே கடம்பனும், ஸ்ரீ வள்ளியும் நிற்பதைப் பார்த்து திடுக்கிட்டுப் போய் அவசரமாகக் கீழே வந்திருந்ததார். ஆனால் கீழே வந்ததுமே, விளக்குக் கம்பம், கனிஷ்காவின் கார் மீது விழுந்திருக்க, அவளும், மயூரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து விரைந்து வந்திருந்தார்.

கனிஷ்கா, ‘எல்லாமே மர்மமாக இருக்கிறது’ என்று கூறியபின்தான், திரும்பி புதிதாக வந்த அந்த இருவரை நோக்கினார். அவர்களை இதுவரை முன் பின் பார்த்ததே இல்லை. வயதிலும் மிகவும் இளையவர்களாக இருந்தார்கள். குழப்பத்துடன் அவர்களை வெறித்தவர், மயூரியைப் பார்த்தார்.

“அம்மா மயூரி..! இங்கே இரண்டு பேர் நின்னுகிட்டு இருந்தார்களே. அவங்க பெயர் கடம்பன், ஸ்ரீவள்ளி..! அவங்களை இப்ப காணோமே..?” நல்லமுத்து கூற, மயூரி வியப்படைந்தாள்.

‘இந்த குடும்பத்துல எல்லாருமே இப்படித்தான் இஷ்டத்துக்கு கற்பனை செஞ்சுக்குவாங்களா..? ஹலூஸினேஷன், பரம்பரை வியாதியா இல்லே, இந்த குடும்பத்துல மட்டும் தொற்றுகிற வியாதியா.?’

“இல்லை தாத்தா..! வேற யாருமே இங்கே இல்லை..! அதோ நிக்கிறாங்களே..! அவங்களை நான்தான் அழைச்சுக்கிட்டு வந்தேன். அவங்க பெயர் போதினி, சுபாகர். நம்ம அஞ்சையா, ராஜகாந்தம் போலவே அவங்களும் அண்ணன் தங்கை..! இருங்க, அவங்களை அழைச்சுக்கிட்டு வந்து அறிமுகப்படுத்தறேன்..!” –மயூரி அவர்களை நோக்கி நடந்தாள்.

அந்த இடைவெளியில் கனிஷ்கா, தாத்தா நல்லமுத்துவிடம் கிசுகிசுத்தாள்.

“தாத்தா, மயூரி கிட்டே எதோ வில்லங்கம் இருக்கு..! குடும்பத்துல ஏற்படற குழப்பங்களுக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கும்னு நினைக்கிறேன். ஆக்சுவல்லி, நான் என்னோட BMW வை அவளோட கார் மேல மோதணும்னுதான் வேகமா வந்தேன். ஆனா போர்டிகோ உள்ளே நுழையறதுக்கு முன்னை என்னோட, கார் திடீர்னு லெப்ட்-ல திரும்பி, பூச்சாடி ஸ்டாண்டுல இடிச்சு, விளக்கு கம்பத்து மேல மோதி, என் கண்ணாடியை உடைச்சுடுச்சு. நம்ம குடும்பத்துல என்னவோ நடக்குது.” –கனிஷ்கா கூற, நல்லமுத்து கலவரத்துடன், மயூரியின் பக்கமாக திரும்பிப் பார்த்தார். அவரது கண்களில் அச்சமும், கலக்கமும் நிலவின்.

‘இனியும் தாமதிக்க கூடாது..! அவர்கள் சிறிது சிறிதாக நெருங்கி வந்து இவரது குடும்பத்தை சுற்றிக் கிடுக்கிப் பிடியைப் போடுகிறார்கள். கையில் நவபாஷாணச் சிலை இருந்ததால், அவர்களால் இதுவரையில் இவரை நெருங்க முடியவில்லை. இப்போது கட்டு தளர்ந்துவிட்ட நிலையில், அவர்கள் இவரது குடும்பத்தைச் சுற்றி ஒரு புகை வளையத்தைப் போட்டு வருகிறார்கள். இனியும் தாமதிக்கக் கூடாது. இன்று நள்ளிரவே வேலைகளைத் தொடங்க வேண்டும்…” –மனதினுள் தீர்மானித்தார், நல்லமுத்து.

-தொடரும்…

2 thoughts on “பத்துமலை பந்தம் |16| காலச்சக்கரம் நரசிம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31