News
7th December 2021
  • தொடர்
  • பேய் ரெஸ்டாரெண்ட் – 9 | முகில் தினகரன்

பேய் ரெஸ்டாரெண்ட் – 9 | முகில் தினகரன்

5 months ago
189
  • தொடர்
  • பேய் ரெஸ்டாரெண்ட் – 9 | முகில் தினகரன்

இரு இளைஞர்கள் முன்னே வர, அவர்களுக்குப் பின்னால் அந்தப் பெண்ணும் வருவதைப் பார்த்த ஆட்டோ டிரைவர் ரவி நிதானமாய் நடந்து அவர்களை நெருங்கி நின்றான்.

“கேளுங்கண்ணா…கேளுங்கண்ணா” என்று அந்த இளைஞர்களில் ஒருவனைப் பார்த்துச் சொன்னாள் சங்கீதா.

“பொறும்மா..கேட்கறேன்” என்ற அந்த இளைஞன், “ஏம்பா ஆட்டோ டிரைவர்…இந்தப் பொண்ணு கிட்ட என்னென்னமோ பேசினியாமே?…என்ன நெனச்சிட்டிருக்கே நீ?…உன்னையெல்லாம்…” என்று கத்தி விட்டு, உடனிருந்த இன்னொரு இளைஞனைப் பார்த்து, “தோஸ்த்து…போய் பைக்குல டேங்க் கவர்ல வெச்சிருக்கற அதை எடுத்திட்டு வா சொல்றேன்” என்று ஆணையிட்டான்.

அந்த இன்னொரு இளைஞன் ஓடினான்.

அவன் ஏதோ ஆயுதம் கொண்டு வருவான், அதை வைத்து அந்த ஆட்டோ டிரைவரை இவர்கள் தாக்கப் போகிறார்கள் என்று எண்ணியிருந்த சங்கீதாவை மேலும் அச்சமூட்டும் விதமாய், தான் கொண்டு வந்த குவாட்டர் பாட்டிலை அந்த ஆட்டோ டிரைவரை நோக்கி வீசினான் இளைஞன்.

“ரவி…இது உனக்கு…அப்படியே அந்தப் பக்கமா போய் அடிச்சிட்டு வெய்ட் பண்ணு…நாங்க கூப்பிடும் போது வா”

இவன் வீசியதை “லபக்”கென்று கேட்ச் செய்த ஆட்டோ டிரைவர், “தாங்க்ஸ்ப்பா” என்றபடி நகர,

இரண்டு இளைஞர்களும் ஒரு சேரப் பாய்ந்தனர் சங்கீதாவின் மீது.

டிஸ்கவரி சேனலில் இரண்டு சிறுத்தைகளிடம் மாட்டிக் கொண்ட ஒரு மான் குதறப்பட்டது.
வாயில் வடியும் குருதியுடன் அந்த சிறுத்தைகளிரண்டும் நகர, எங்கிருந்தோ பாய்ந்து வந்தது போதைஏற்றிக் கொண்ட புலி, அதுவும் வந்த வேகத்தில் மானைக் குதறியெடுத்து விட்டு, சிறுத்தைகளிடம் சென்றது.
“என்னப்பா…என்னாச்சு அந்தப் பொண்ணு நினைவோட இருக்காளா?…இல்லை மயங்கிக் கிடக்கறாளா?” ஒரு இளைஞன் கேட்க,

“தெரியலைப்பா…லேசா முனகிக்கிட்டுக் கிடக்கறா?” என்றான் ஆட்டோ டிரைவர்.

“சரி….இதுக்கு மேலே நாம் இங்க இருக்க வேண்டாம்!…ரவி…நீ ஆட்டோ எடுத்திட்டுக் கிளம்பு…நாங்க பைக்குல வந்திடறோம்”

முழு விருந்து உண்ட திருப்தியில் அந்த மூர்க்கர்கள் மூவரும் கிளம்பிச் சென்ற பிறகு, சுத்தமாய் அரை மணி நேரம் மயக்கத்தில் கிடந்த சங்கீதா மெல்லக் கண் விழித்தாள்.

சுற்றிலும் கும்மிருட்டு.

தட்டுத் தடுமாறி, கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்த்தாள்.

அது அரைகுறையாய்க் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டிடம், என்பதைப் புரிந்து கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள். மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் தெரிய, அதை நோக்கி நடந்தாள்.

இடுப்பும், முழங்கால்கள் இரண்டு பேய் வலி வலிக்க, பற்களைக் கடித்துக் கொண்டு படியேறினாள்.

கைப்பிடிச் சுவர் இன்னும் கட்டப்படாத அந்த மொட்டை மாடியில் நின்று சுற்றிலும் பார்த்தாள்.

வடக்கு திசையில் கோவை மாநகரம் வெளிச்சப் புள்ளிகளோடு மின்னியது.

தெற்கு திசையில் உயரமான காற்றாலைகளின் தலை மேல் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சம் கொஞ்சமாய்த் தெரிந்தது.

வெகு சமீபத்தில் பொள்ளாச்சி ரோடு தெரிய, அவ்வப்போது ஏதோவொரு வாகனம் கடந்து கொண்டேயிருந்தது.

கால் வலி தாளாமல் அப்படியே அமர்ந்தாள். “என்ன செய்யலாம்?…காலை வரை இப்படியே அமர்ந்திருந்து விட்டு…விடிந்ததும் மெல்ல நடந்து போய்…பொள்ளாச்சி ரோட்டைத் தொட்டு…ஏதாவதொரு வாகனத்தில் ஏறி கிணத்துக்கடவு போய் விடலாமா?”

யோசித்தாள்.

“முட்டாள் பெண்ணே!…ஒரு ராத்திரி முழுவதும் வெளியில் இருந்தவளை… மூன்று காமுகர்களால் கெடுக்கப்பட்டவளை….உன் பொற்றோர்கள் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் தெரியுமா?” அவள் மனசாட்சி யதார்த்தத்தை அவளுக்கு எடுத்துரைத்தது.

“இல்லை…என் பெற்றோர் அப்படியில்லை…என்னை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்” நம்பிக்கையோடு வாய் விட்டுச் சொன்னாள்.

“ஹா…ஹா…ஹா” என்று சிரித்த மனசாட்சி, “உண்மையில் உன் பெற்றோர்களுக்கு உன்னை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தாலும்…இந்தச் சமுதாயத்திற்கும்…அக்கம் பக்கம் உள்ளவர்களின் அரசல் புரசல் பேச்சுக்கும் பயந்து உன்னைத் துரத்தியடித்து விடுவார்கள்” என்றது.

“அப்படியென்றால்…நான் உயிரை விடுவதைத் தவிர வேற வழியே இல்லையா?”

“………………………………………” மனசாட்சி மௌனம் சாதித்தது.

சுயமாய் யோசித்துப் பார்த்தாள். இதே நிலைமையில் தான் சென்றால் என்னென்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நிதானமாய் சிந்தித்துப் பார்த்தாள்.

தற்கொலை முடிவே, தனக்கான தீர்வு என்பதை உறுதிப் படுத்திக் கொண்டவள், கைப்பிடிச் சுவர் இல்லாத மொட்டை மாடியின் விளிம்பில் வந்து நின்றாள்.

கண்களை மூடிக் கொண்டு நின்றாள். வாழ்க்கையில் அவள் சந்தித்த அனைத்து நபர்களும் அவள் நினைவின் மேல் தட்டில் வந்து நின்று கை ஆட்டி “டாட்டா” சொல்ல,

அவளைக் கடைசியாக வந்து பெண் பார்த்து விட்டுச் சென்ற “திருமுருகன்” கவலை முகத்தோடு நின்றிருந்தான்.

அடுத்த விநாடி,

“தொபீர்”ரென்று மேலிருந்து குதித்தவள், கீழே கொட்டி வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பெருட்களுக்கு மத்தியில் விழுந்து, ரத்தச் சகதியில் உயிரை விட்டாள்.

—————————-

வள் கதையை முழுவதுமாய்க் கேட்டு முடித்த திருமுருகனின் கண்களில் கண்ணீர்த் திவலை.

அதைக் கண்ட சங்கீதாவின் ஆவி, “என்னய்யா…அழறியா?” கேட்க,

“சாவதற்கு முன் கடைசியாய் நீ நினைத்தது என்னைத்தான்”னு தெரிஞ்ச பின்னாடி என் மனசே கனத்துப் போச்சும்மா” என்று கரகரத்துச் சொன்ன திருமுருகன், “உன்னைக் கெடுத்த அந்த மூணு பேரையும் உனக்கு அடையாளம் தெரியுமா?…உன்னால் அவர்களை எனக்கு அடையாளம் காட்ட முடியுமா?” கேட்டான்.

“நிச்சயம் முடியும்”

“அப்படின்னா…ஒரு நாள் காட்டு…அவனுகளுக்கு சரியான தண்டனையை நான் தர்றேன்”

“நிச்சயம் காட்டறேன்!…அப்புறம் உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா…நான் மேலிருந்து குதித்து இறந்த கட்டிடத்தில்தான் நீங்க இப்ப ஹோட்டல் வெச்சிருக்கீங்க” என்றது சங்கீதாவின் ஆவி.

“ஓ…அப்ப நீ அங்கதான் வாழ்ந்திட்டிருக்கியா?…”

“ஆமாம்” என்ற ஆவி, “நீயும் அங்கியே என்னோட தங்கிடுய்யா” கெஞ்சியது.

“யோசிச்சுச் சொல்றேன்” என்றான் திருமுருகன்.

“ஆமாம்…அதென்னய்யா பேய் ரெஸ்டாரெண்ட்ன்னு பேரு வெச்சிருக்கீங்க?…வேற நல்ல பேரே கிடைக்கலையா?” சங்கீதாவின் ஆவி கேட்க,

“நல்ல பேரு வெச்சு நடத்தின பிசினஸெல்லாம்…நஷ்டத்துல மூழ்கிடுச்சு…அதான் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான பேர்ல…வித்தியாசமான டெக்கரேஷனோட ஹோட்டல் நடத்துறோம்”

“இதிலாவது லாபம் தெரியுதா?”

“இன்னும் தெரியலை” சோகமாய்ச் சொன்னான் திருமுருகன்.

“கவலைப்படாதே…உங்க பேய் ரெஸ்டாரெண்ட்டுக்கு நான் உதவி பண்றேன்” ஆவி சொல்ல,

வாய் விட்டுச் சிரித்தான் திருமுருகன்.

“என்னய்யா சிரிக்கறே?”

“பேய் ரெஸ்டாரெண்ட்டுக்கு…ஒரே பேயே வந்து உதவி செய்யறேன்!ன்னு சொன்னதை நெனச்சேன்…சிரிச்சேன்”

“ஆமாம்…ஒரு கேரளாக்கார மாந்த்ரீகனைச் சேர்த்திருக்கீங்களே….அது எதுக்கு?”

“அவன் கொஞ்சம் சித்து வேலையெல்லாம் செய்யறான்…அது நம்ம ஹோட்டலுக்கு நல்ல கலெக்ஷன் குடுக்குது…அதுக்குத்தான்” சொல்லியபடியே மெல்ல எழுந்து வந்து சங்கீதாவின் ஆவி அருகே நின்று அதன் தலையைத் தடவ முயற்சித்தான் திருமுருகன்.

வெறும் காற்றில்தான் கை அலைந்தது.

“என்னய்யா…என்னைத் தொட்டுப் பார்க்க ஆசையாயிருக்கா?” சோகமாய்க் கேட்டது சங்கீதா ஆவி.

வாய் பேசாமல் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினான் திருமுருகன்.,

“அன்னிக்கு மட்டும் அந்தச் சம்பவம் நடந்து நான் சாகாம இருந்திருந்தா…இன்னேரம் நீ என் கழுத்துல தாலி கட்டியிருப்பே…ஆசைதீர தொட்டு ரசிச்சிருப்பே!…ஹும்…அதுக்குத்தான் நானும் குடுத்து வைக்கலை…நீயும் குடுத்து வைக்கலை” ஆவியும் பெருமுச்சு விட்ட்து.

“இதுவரைக்கும் என் கண்ணில் தெரியாம இருந்த நீ…இப்ப என் கண்ணில் தெரிகிற மாதிரி…நான் உன்னைத் தொட்டுப் பார்க்கவும் ஏதாச்சும் ஒரு வழி பண்ணேன்?” கெஞ்சலாய்க் கேட்டான் திருமுருகன்.

சட்டென்று முகம் கவலையில் மூழ்கியது ஆவிக்கு. “அது…அது…” என்று இழுக்க,

“சொல்லு…”

“நீயும் செத்து ஆவியானால்தான் முடியும்…ஆனா நீ சாக நான் விட மாட்டேன்”

“நீ என் மேல் காட்டற அன்பைப் பார்க்கும் போது எனக்கே செத்துப் போய் உன்னோடு சேர்ந்து விடலாம்!னு தோணுது”

“சேச்சே…ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க…நாந்தான் அல்ப ஆயுசுல துர்மரணம் எய்தி ஆவியா அலையறேன்…நீங்க நல்ல வாழ்ந்து…முடிச்சிட்டு…வாங்க”

அப்போது வெளியே ஏதோ வாகனம் வந்து நிற்கும் ஓசையும், உடனே திரும்பிச் செல்லும் ஓசையும் கேட்க, சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான் திருமுருகன்.

மணி ஆறு.

“அடடே…மணி ஆறேகால் ஆயிடுச்சு…அப்ப அம்மாதான் ஆட்டோவுல வந்திருப்பாங்க” என்று ஆவியிடம் சொல்லி விட்டுச் சென்று கதவைத் திறந்தான்.

அம்மாதான்.

உள்ளே வந்த அம்மா அறைக்குள் தேடினாள்.

“என்னம்மா?…என்ன தேடுறே?” சோபாவில் அமர்ந்திருக்கும் சங்கீதாவின் ஆவியைப் பார்த்தவாறே கேட்டான் திருமுருகன்.

“இல்ல…கதவைத் திறப்பதற்கு முன்னாடி நீ யாரோ கிட்ட…என்னமோ பேசிட்டே வந்து திறந்த மாதிரி இருந்திச்சு…அதான் உன் ஃப்ரெண்டுக எவனாச்சும் இருக்கானுகளா?ன்னு தேடுறேன்” என்று சோபாவுக்கு அருகில் நின்றவாறே அம்மா கேட்க,

திருமுருகன் சங்கீதாவின் ஆவியைப் பார்த்தான். “கவலைப்படாதே…நான் இருப்பதும் அவங்க கண்ணுக்குத் தெரியாது…நான் பேசறதும் அவங்க காதுக்குக் கேட்காது” என்றது.

“அப்படின்னா சரி” என்று திருமுருகன் வாய் விட்டே சொல்லி விட,

அவனை வினோதமாகப் பார்த்த அம்மா, “என்னடா சொல்றே?” முகத்தைச் சுளித்தவாறு கேட்டாள்.

“இல்லே…என்னோட ஃப்ரெண்டுக யாரும் இல்லை!ன்னு சொல்ல வந்தேன்” திக்கித் திணறினான்.

அவன் தடுமாற்றத்தைப் பார்த்து ரசித்தபடியே எழுந்து அவனருகில் வந்த ஆவி, “நான் அங்க போய் ஹோட்டல் வெய்ட் பண்றேன்…நீ சீக்கிரம் கிளம்பி வந்திடு…இன்னிக்கு அங்க ஒரு பெரிய விளையாட்டு இருக்கு” என்று சொல்ல,

“என்ன?” கேட்டே விட்டான்.

அவன் தாய் அவன் முகத்தை அச்சத்தோடு பார்த்தாள்.

“வந்து பார்….தெரியும்” சொல்லி விட்டு “விஷ்ஷ்ஷ்ஷ்” என்று மறைந்தது ஆவி உருவம்.

“ஒரு பெரிய விளையாட்டு இருக்கு”ன்னு சொல்லிட்டுப் போகுதே ஆவி…என்னவாயிருக்கும்?” இப்போதே கலவரமானான் திருமுருகன்.

“டேய்…முருகா….என்னடா ஆச்சு உனக்கு?…ஏண்டா ஏதோ ஆவியை நேரில் கண்ட மாதிரி பேந்த பேந்த முழிக்கறே?”

அரண்டு போனான் அவன். “ஆஹா…அம்மா கண்டுபிடிச்சிட்டா போலிருக்கே?” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், “ஆவியா?…ஹே…ஹே…நீ இட்லி சுடும் போது வருமே நீராவி அதைத்தான் நான் பார்த்திருக்கேன்” என்று சொல்லி விட்டு மேற் கொண்டு பேச்சை வளர்த்த விரும்பாமல் அவசர அவசரமாய் பேஸ்டையும், பிரஷ்ஷையும் எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

–தொடரும்…

< எட்டாவது பகுதி | பத்தாவது பகுதி >

4 thoughts on “பேய் ரெஸ்டாரெண்ட் – 9 | முகில் தினகரன்

    1. நாளை வெளியாகும் இனி ஒவ்வொரு புதன் அன்றும் வெளியாகும்…

Leave a Reply to கமலகண்ணன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031