News
7th December 2021
  • தொடர்
  • படைத்திறல் பல்லவர்கோன் | 3 | பத்மா சந்திரசேகர்

படைத்திறல் பல்லவர்கோன் | 3 | பத்மா சந்திரசேகர்

6 months ago
845
  • தொடர்
  • படைத்திறல் பல்லவர்கோன் | 3 | பத்மா சந்திரசேகர்

3. சினம் கொண்ட சிங்கம்

போரைத் தவிர்க்கும் உபாயம் உள்ளதாக சாத்தனார் கூறியதும், போரைத் தவிர்க்கும் எண்ணம் இல்லாவிடினும், அந்த உபாயம் என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணி சாத்தனாரின் பேச்சை தொடரச் செய்தார் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர். எனினும் அவர் அந்தப் பெயரை உச்சரித்ததும் அவரது சினத்தை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை.

“என்ன கூறினீர் சாத்தனாரே..?” சினத்துடனேயே மீண்டும் கேட்டார் ஸ்ரீவல்லபர். பாண்டிய வேந்தரின் சினத்தை அவரது குரலிலும், முகத்திலும் கண்டுகொண்ட சாத்தனார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.

“மாறன்பாவையை பற்றித் தானே கூறினீர்..?” ஸ்ரீவல்லபர் மீண்டும் கேட்டார்.

“ஆம் வேந்தே…” சற்று மெல்லிய குரலில் கூறிய சாத்தனார் தொடர்ந்தார்.

“அமோகவர்ஷரைப் போல, நாமும் நமது பெண்ணை நந்திவர்மருக்கு மணமுடித்துத் தருவதன் மூலம், இந்த போரை வெல்லலாம். அத்துடனின்றி, இனி வருங்காலத்தில் நடைபெறும் போர்களில் நமக்குப் பல்லவர்களின் துணை கிடைக்கும்.”

“நான் சினம் கொண்டிருப்பது தெரிகிறதா சாத்தனாரே..?” ஸ்ரீவல்லபர் வினாவிற்கு பதில் சொல்லாமல் தலையைக் குனிந்தபடி நின்றிருந்தார் சாத்தனார்.

“நான் சினத்துடன் இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர். ஏனெனத் தெரிகிறதா சாத்தனாரே..?” மீண்டும் மிரட்டலாக வந்தது ஸ்ரீவல்லபர் குரல்.

“சாத்தனாரே. ஆணோ, பெண்ணோ, குழந்தைகள் பெற்றவர்களிடமிருந்து வந்தவர்கள் தான். ஆயினும் அவர்களுக்கென்று ஒரு தனித்துவம் உள்ளது. அவர்களுக்கென்று ஒரு மரியாதையைப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு பெற்றவர்களுக்கு உள்ளது.” சொல்லிவிட்டு வரகுணரைப் பார்த்தார்.

“இதோ என் மகன். இவனுக்காக எனக்குப் பிறகான பாண்டிய நாட்டின் சிம்மாதனமும், மணிமுடியும் காத்திருக்கின்றன.” சொல்லிவிட்டு மீண்டும் சாத்தனாரைப் பார்த்தார்.

“அந்த நந்திவர்மரை விவாகம் புரிந்தால், எனது மகளின் நிலை என்ன..?” -பேசிக்கொண்டே வந்த ஸ்ரீவல்லபரது குரல் சற்றுத் தழுதழுத்தது.

“பொதுவாக அரசகுடும்பத்தினர் செய்யும் தவறு ஒன்றுள்ளது. அது தான் பெற்ற மக்களை, இராஜ்ஜியத்தின் நன்மைக்காக பத்தோடு, பதினொன்றாவது மனைவியாக இன்னொரு அரசகுடும்பத்தில் மணமுடித்துக் கொடுப்பது. அந்த தவறை நானும் செய்ய விரும்பவில்லை. மாறன்பாவை ஒரு சாதாரண வீரனை மணமுடித்தாலும் கவலையில்லை. இப்போது நந்திவர்மரை விவாகம் புரிந்தால் என்னவாகும் என யோசிக்கக் கூட இயலவில்லை.” சாத்தனாரும், வரகுணரும் பாண்டிய வேந்தரின் பேச்சை இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“இராஷ்டிரகூட சக்கரவர்த்தி அமோகவர்ஷரின் மகளுக்கு அடங்கி, காஞ்சி அரண்மனையில் அடைபட்டுக் கிடக்கவேண்டும்.” இன்னமும் அவர் குரல் தழுதழுத்தே இருந்தது. சில கண நேரம் அமைதி நிலவியது அங்கே.

“சாத்தனாரே… எனது மகளை இராஷ்டிரகூடப் பெண்ணுக்கு அடிமையாக்குவதை விட, போரை எதிர்கொள்வதையே நான் உகந்ததாக எண்ணுவேன்.”

மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் வேந்தனாக இருந்தாலும், அவருக்குள்ளும் ஒரு தந்தை மனம் இருந்தது. இதயத்தில் வைத்துக் கொண்டாட தேவதை போன்ற பெண் குழந்தை இருந்தது. அந்தப் பெண் குழந்தையின் வாழ்வை எண்ணி, தந்தை மனம் துடித்து, அது வேந்தரின் வாய் மொழியாக வெளிவந்தது.

“எனில் போர் ஏற்பாடுகளைத் தொடங்கி விடவா தந்தையே..?” விளைநிலமாம் ஸ்ரீவல்லபரின் வீரத்திற்குச் சற்றும் குறையாத வரகுணர் கேட்க, சரி என்பது போலத் தலையை அசைத்தார் பாண்டிய வேந்தர். சரியாக அதே நேரம், அறை வாயிலில் நூபுரங்களின் ஓசை கேட்டது.

“தந்தையே…” அன்புடன் அழைத்தபடி உள்ளே நுழைந்தாள் மாறன்பாவை. அங்கு வரகுணவர்மரை கண்டதும் சற்று வியப்படைந்து, பின்னர் உற்சாகமாக பேசத்தொடங்கினாள்.

“நீ எப்போது வந்தாய் வரகுணா..?”

“சற்று முன்தான் வந்தேன் பாவை.”

“நல்லதாயிற்று. எனது தோழிகள் தொண்டை நாட்டை பார்த்ததே இல்லையாம். நானும் ஏகாம்பரநாதரை பார்த்ததில்லை. எங்களைக் காஞ்சிக்கு அழைத்துச் செல்கிறாயா..?” மாறன்பாவை கேட்க, வரகுணர் முகம் சினத்தில் சிவந்தது.


“நமக்குக் கட்டுப்பட்ட, பாண்டியர் ஆட்சிக்குட்பட்ட எவ்வளவோ இடங்கள் உள்ளன. எவ்வளவோ ஆலயங்களும் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டு, பல்லவ நாட்டிற்கு போக வேண்டுமென ஆசைப்படுவது அர்த்தமற்றது பாவை.” கண்டிப்பான குரலில் வந்தது வரகுணரின் குரல். கண்களில் கண்ணீர் மல்க ஸ்ரீவல்லபரைப் பார்த்தாள் மாறன்பாவை.

“தந்தையே… எனது ஜென்ம நட்சத்திரம் வருகிறது. அதற்கு எனக்கு என்ன பரிசு கேட்டாலும் தருவதாக கூறினீர்களல்லவா..? என்னை ஏகாம்பரர் ஆலயத்திற்கு அழைத்து செல்லுங்கள். இதுவே நான் கோரும் பரிசு.” தமையன் மறுக்க, தந்தையின் ஆதரவைப் பெற எண்ணி, அவர் பக்கம் திரும்பினாள் பாண்டிய இளவரசி மாறன்பாவை.

“இல்லை மகளே. இப்போது நிலைமை சரியில்லை. தற்போதைய சூழலில் நீ பல்லவ தேசம் செல்வது உனக்கு பாதுகாப்பாக அமையாது. எனவே, காஞ்சிபுரம் செல்லும் ஆசையைத் தவிர்த்து, வேறு ஏதேனும் பரிசு கேள்.” மகளின் மனதை மாற்ற விரும்பினார் பாண்டிய வேந்தர்.

“இல்லை தந்தையே. எனக்கு வேறு எந்தப் பரிசும் தேவையில்லை. நான் பிற பெண்களைப் போல, ஸ்வர்ணமும், வைரமுமா கேட்கிறேன்..? ஈசனின் பக்தை நான் என்பது உங்களுக்குத் தெரியும். தழுவக்குழைந்தநாதரை தரிசனம் செய்ய வேண்டுமென விரும்பிகிறேன். அதைக் கூட எனக்காக ஏற்பாடு செய்ய இயலாதா..?” கண்ணில் கண்ணீர் வழிந்தது மாறன்பாவைக்கு. மதலையின் விழியில் நீரைக் கண்டதும் வேந்தரின் மனம் கசிந்தது. மாறன்பாவையை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டார்.

“மகளே… உனக்கு ஸ்வர்ணமும், வைரமும் வேண்டுமா..? நான் தருகிறேன். ஆனால், என் விலைமதிப்பில்லா ஸ்வர்ணத்தை, ஜொலிக்கும் வைரத்தை என்னால் வேற்று தேசம் அனுப்ப இயலாது.” சற்று அழுத்தமாகக் கூறினார் ஸ்ரீவல்லபர்.

“இது தான் தங்கள் முடிவா தந்தையே..?”

“ஆம் பாவை. இது தான் எனது இறுதி முடிவு.”

“எனில் தந்தையே. நானும் ஒரு முடிவெடுத்து விட்டேன்.” மாறன்பாவை கூற, ஸ்ரீவல்லபர் அவளை நிமிர்ந்து பார்த்தார். வரகுணர் இன்னமும் கோபம் குறையாத விழிகளால் தங்கையை முறைத்துக் கொண்டிருந்தார். சாத்தனாரோ பாண்டிய வேந்தர், இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோருக்கு நடுவே தாம் சிக்கிக்கொண்டதை எண்ணி தர்மசங்கடத்துடன் நின்றிருந்தார்.

“தந்தையே. நான் எனது ஜென்மதினத்தன்று காஞ்சியில் இருப்பேன். இதை தங்களால் தடுக்க இயலாது. தாங்களோ அல்லது தமையனோ அழைத்துச் சென்றால், தங்களுடன் வருவேன்.” சொல்லி ஒரு கணம் நிறுத்தி, தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரது முகத்தில் தெரிந்த சினம் அவளைச் சற்று அச்சப்படுத்தவே செய்தது. ஆயினும் அவளது மனதிலிருந்த உறுதி, முகத்தில் தெரிந்த அச்சரேகைகளைத் துடைத்தெறிந்தது.

“நான் தங்களை மீறிச் செல்ல இயலாது என்பதை உணர்ந்தேயுள்ளேன். எனவே, நான் இந்த ஆண்டு எனது ஜென்மதினத்தை கொண்டாட மாட்டேன். புத்தாடை உடுத்த மாட்டேன். அலங்கரித்துக் கொள்ள மாட்டேன். அவ்வளவு ஏன், தங்களை என் ஜென்ம நட்சத்திரத்தன்று சந்திக்கவும் மாட்டேன்.”

“விண்பிடிவாதம் பிடிக்காதே பாவை.” சற்றுத் தளர்ந்த குரலில் ஸ்ரீவல்லபர் கூற, தான் செய்த தந்திரம் பலிக்கவே செய்யுமென்ற எண்ணத்தில் தொடர்ந்து பேசினாள் மாறன்பாவை.

“நான் வீண்பிடிவாதம் பிடிக்கவில்லை தந்தையே. நான் ஜென்மதினத்தன்று ஏகாம்பரரைத் தரிசிக்க வருவதாக நேர்ந்துள்ளேன். அதனாலேயே கேட்டேன்.” கண்ணீர் பொங்கக் கூறினாள் மாறன்பாவை.

சில கண நேரம் எவரும் எதுவும் பேசவில்லை. மாறன்பாவையின் விசும்பல் ஓசை மட்டுமே அந்த அறை முழுவதும் விரவி, பரவியிருந்தது.

“சரி மகளே. நீ சென்று வா.” சொன்னவர் தொடர்ந்தார்.

“வரகுணா… பாவையை அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்து அழைத்து வரும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.” சொல்லிவிட்டு, மீண்டும் மாறன்பாவையிடம் திரும்பினார்.

“மகிழ்ச்சி தானே மகளே..?”

“மிக்க மகிழ்ச்சி தந்தையே.” சிரித்தபடி ஸ்ரீவல்லபரை அணைத்துக் கொண்டாள் மாறன்பாவை.

“வரகுணா. ஏகாம்பரர் ஆலயம் பல்லவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது, எனவே, தகுந்த பாதுகாப்புடன் செல்.”

“ஆலயம் செல்ல எவருக்கும் நந்திவர்மர் தடை விதிப்பதில்லை தந்தையே. அத்துடன், இப்போது காஞ்சிபுரம் செல்வது, ஒரு வகையில் நமக்கு நல்லதே. அவர்களின் போர் ஏற்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.” வரகுணவர்மர் கூறியதை தலையசைத்து ஏற்றுக் கொண்டார் ஸ்ரீவல்லபர்.

எதாவது வாக்கு கொடுக்கும் போது, யோசித்துக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அதனால் வரும் துன்பங்களைத் தவிர்க்க இயலாமல் போய்விடும். இதை உணராத ஸ்ரீவல்லபர் தனது ஆசை மகளுக்கு அவள் கேட்ட பரிசை வழங்க, அதன் விளைவுகள் என்னவாகுமெனக் காலமே பதில் கூற வேண்டும்.

–தொடரும்…

< இரண்டாம் பாகம் | நான்காவது பாகம் >

19 thoughts on “படைத்திறல் பல்லவர்கோன் | 3 | பத்மா சந்திரசேகர்

  1. ம்ம்..மிகவும் ஸ்வாரஸ்யமாக போகின்றதும்மா

  2. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கதாபாத்திரமாக வந்து கொண்டிருக்கிறது. காஞ்சியில் என்ன நடக்கும்? கதை எப்படி நகரும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

  3. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் 🔥🔥

  4. “அப்பா” அரசர் குல வேந்தர் ஆயினும் அப்பாவின் உணர்வுகள் தனியே.. புரளியின் வேகத்தை மிஞ்சிகிறது கதையின் வேகம் டியர்..

Leave a Reply to ஸ்ரீமதி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031