News
7th December 2021

வாகினி – 8 | மோ. ரவிந்தர்

6 months ago
1239

நேற்று பொழிந்த மழையினால் இன்று புதுப் பொலிவு பெற்று விளங்கியது ஆவடி தெருவீதி எங்கும். சூரியன் வந்த பின்னும் மார்கழி பனி மூட்டத்தைப் போல் மழைத்துளிகளின் வாசமும் முருங்கை, தென்னை, நாவல் ஆலமரம் எனப் பல்வேறு செடி கொடிகள் மீது காதல் செய்து காவியம் பாடிக்கொண்டிருந்தது.

என்னதான் ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் அனைத்தும் நமது கண்ணெதிரே கடவுள் காட்டினாலும் அதை வாங்குவதற்கு இன்று பணம் என்ற பெரும் தொகை தேவையாகத் தான் உள்ளது. இயற்கை கொடுத்த சில இலவசமான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு இவை அனைத்தையும் கைக்குள் அடைக்கி ஆதிக்கம் செய்துவிட்டான். இருந்தும், ஆகாயத்தை மட்டும் இன்னும் மனிதன் விலை கொடுத்து வாங்க முடியாமல் கிடப்பில் கிடக்கிறது.

இதையும் ஒரு நாள் நிச்சயமாக விலைப்பட்டியலில் சேர்த்து விடுவான், இந்த மனிதன்.

நேற்று பொழிந்த மழையினால். கஸ்தூரி வீட்டின் முன் வாசல் பகுதியில் அங்காங்கே மழைத் தண்ணீர் தேங்கி நின்றது. அனுதினம் நடப்பதைப் போல் கஸ்தூரி, தனது கணவனையும் குழந்தையையும் வெளியே அனுப்பிவிட்டு. வீட்டு வாசலில் தேங்கி நின்ற மழைத் தண்ணீரை எல்லாம் சுத்தம் செய்யத் துடப்பத்துடன் வெளியே வந்தாள்.

வீட்டு வாசல், அங்கும் இங்குமாகக் குண்டும் குழியுமாகக் காட்சியளித்தது. அந்தக் குண்டும் குழியும் கொண்ட பள்ளத்தில் தண்ணீரும் அதிகமாகத் தேங்கி நின்றது. அதைச் சுத்தம் செய்வதே பெரும் சிரமமாக இருந்தது, அவளுக்கு.

என்ன செய்வது பெண்ணின் பிறப்பே ஒரு தேடலும் கடைசியில் முடிவுமாகத் தானே இருக்கிறது. இந்த வேலை மட்டும் என்ன அவளுக்கு எளிதாக முடிந்து விடுமா?. ஆனாலும், இவள் இதைப்பற்றி இப்போது பெரிதாக எண்ணவில்லை. ஒரு பெரிய சிந்தனையில் ஆழ்ந்து இருந்ததாள், கஸ்தூரி.

புத்தியில் ஒரு கற்பனை குதிரை மட்டும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

‘அவசர அவசரமாக அவரிடம் இப்படிக் கூறி விட்டேன் நானும் உங்களுக்கு உதவுகிறேன் என்று. அந்தப் பணத்துக்கு இனி என்ன செய்யப் போகிறேனோ மீனா வேற ஊர்ல இல்ல. அவ திரும்பி வர இன்னும் இரண்டு மூன்று நாளாவது ஆகும். இப்போ பணத்துக்கு என்ன செய்யலாம்? பேராசையைக் காட்டி இப்படி என்னைப் புலம்ப வச்சிட்டாரே, அந்தப் பாவி மனுஷன்…

சரி வீட்ல என்ன பொருள் இருக்கு? காது தோடு இரண்டு. அப்புறம், காசுமாலை இருக்கு இரண்டையும் அடகு வச்சா கூட ஒரு 17 ஆயிரத்தில் இருந்து 20 குள்ள தான் குடுப்பாங்க, நிச்சயமா அது நமக்குப் பத்தாது. அம்மா கிட்ட போய்க் கேட்டு பார்க்கலான்னு நினச்சா அவங்க வேலை இல்லாமல் வீட்ல இருக்காங்க ஒன்றும் இருக்காது. என்ன செய்யலாம்’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள், கஸ்தூரி.

இந்த நேரம் பார்த்து கஸ்தூரி வீட்டு வாசலில். ஒரு அம்பாஸிடர் கார் ஒன்று ஹாரன் அடித்துக் கொண்டே கம்பிரமாக வந்து நின்றது.

வேலை செய்வதை அப்படியே நிறுத்திவிட்டு அந்தக் காரை திரும்பி பார்த்தாள், கஸ்தூரி.

கார் கதவை திறந்து கொண்டு இருவர் வெளியே வந்தனர். இருவரும் வேறு யாரும் அல்ல. சென்னீர் குப்பம் சாலையில் பார்த்த தனஞ்செழியனும் கார் ஓட்டுனர் நல்ல தம்பியும் தான்.

கஸ்தூரி, அவர்களைப் பார்க்கும் பொழுது ஒரு பெரும் கட்சியின் தலைவர்கள் தங்க நகைக்கடை போல் விளம்பரமாக இருந்தனர்.

யார் இவர்கள்?’ என்று திருதிருவென முழித்தாள், கஸ்தூரி.

‘யாரோ பெரிய மனிதர்கள் வழிகேட்டு இங்கு வந்திருக்கிறார்களா என்ன?’ என்று பிரமித்து நின்றாள்.

“அம்மா வணக்கம்!, நான் மீனா கணவர். உங்ககிட்ட வீட்டுச்சாவியைத் கொடுத்திட்டுப் போறேன்னு மீனா சொல்லி இருந்தாள். சாவியைக் கொஞ்சம் கொடுக்க முடியுமா?” என்றார், தனஞ்செழியன்.

கஸ்தூரி கையில் வைத்திருந்த துடப்பத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு.

“ஆமாங்க… மீனா வீட்டு சாவிய கொடுத்துட்டு போய் இருக்கா. கொஞ்சம் இருங்க நான் உள்ள போய் எடுத்துட்டு வறேன்” என்று கூறிவிட்டு.

“அண்ணா, குடிக்க மோர், தண்ணீர் ஏதாவது கொண்டு வரட்டுமா ?” என்று கேள்வி எழுப்பினாள், கஸ்தூரி.

“கொஞ்சம் தண்ணிர் மட்டும் கொடுங்க போதும்” என்றார், தனஞ்செழியன்.

வீட்டுக்குள் சென்று அலமாரியில் வைத்திருந்த வீட்டுச் சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு. ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த குடத்து நீரை சொம்பில் எடுத்துக்கொண்டு வெளியே காத்திருந்த தனஞ்செழியன் கையில் முதலில் தண்ணீரை கொடுத்தாள், கஸ்தூரி.

தனஞ்செழியன் தண்ணீரை வாங்கிச் சிறிய அளவு குடித்துவிட்டு மீதி தண்ணீரை நல்லதம்பி கையில் கொடுத்தார்.

அவனும், தண்ணீரை குடித்து முடித்துவிட்டுச் சொம்பை கஸ்தூரியின் கையில் பவ்வியமாகக் கொடுத்தான்.

‘இவர்கள் என்ன, தங்க நகைகடையில வேலை செய்யுறாங்க?. இப்படி இருக்கிறார்கள்’ என்று முறைத்து பார்த்தாள், கஸ்தூரி.

“சரிம்மா, ரொம்ப நன்றி வெளியே கொஞ்சம் வேலையிருக்கு நாங்க கிளம்புறோம்” என்று கூறிவிட்டு சாவியைக் கஸ்தூரி கையிலிருந்து பெற்றுக்கொண்டு, இருவரும் காரில் ஏறி அந்த இடத்தை விட்டு புறப்பட்டனர்.

இருவரும் அங்கிருந்து செல்லும் வரை பெரும் பிரம்மிப்பாக அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள், கஸ்தூரி.

அவளின் கனவு மீண்டும் சிறகடிக்கத் தொடங்கியது.

‘ம்ம்… மீனா கொடுத்து வச்சவ. வசதியான வாழ்க்கை எந்த ஒரு தொல்லையும் இல்லாமல் நல்லா இருக்க… என் வாழ்க்கை பாரு இப்படி இருக்கே…’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டே பெரும் மூச்சு ஒன்றை விட்டுக்கொண்டாள், கஸ்தூரி.

–தொடரும்…

< ஏழாவது பகுதி

5 thoughts on “வாகினி – 8 | மோ. ரவிந்தர்

  1. கஸ்தூரி ஆசை நிறைவேறும் என்று எண்ணுகிறேன்…. மகிழ்ச்சி

Leave a Reply to Pennagadam pa.prathap Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031