• கதை
 • அந்தாதிக் கதைகள் – 3 | ஜே.செல்லம் ஜெரினா

அந்தாதிக் கதைகள் – 3 | ஜே.செல்லம் ஜெரினா

1 month ago
260
 • கதை
 • அந்தாதிக் கதைகள் – 3 | ஜே.செல்லம் ஜெரினா

அவன் சொன்ன கீதை…!

ஜே.செல்லம் ஜெரினா

நிம்மதியுடன் நடக்க ஆரம்பித்தேன். அருகில் தேனம்மை கையை

கோர்த்துக் கொண்டு, அழத்தயாரான விழிகளைச் சிமிட்டிக் கொண்டு, புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்தபடியே நடந்து வந்தாள்.

வரும் பொழுது இருந்ததை விட மனம் லேசாகியிருந்தது எனக்கு. என்னுடைய பயண லக்கேஜ் முன்பாகவே கோனார் வண்டியிலேறி போய்விட்டது. பெரிதாக ஏதுமில்லை. ஒரே ஒரு சூட்கேஸ்தான். முதுகில் பின்புறம் தொங்கும் பை அவ்வளவே. அருகில் தேனம்மை நடந்து வந்து கொண்டிருந்தாள். லீவு முடிந்து போகையில் தொண்டையை அடைக்கும் நெஞ்சு மூச்சுக்கு ஏங்கும். ஊரு உறவு சனம் என்னை வழியனுப்ப வேண்டி வந்திருந்தது. எங்களை பின்னால் விட்டு முன்னால் நடந்தது. இனி எப்போது விடுமுறை கிடைத்து… வந்து… ஒரு பெருமூச்செழுந்தது.

போனவாரம் இந்நேரம் நடந்ததெல்லாம் ஞாபகம் வந்தது. மூன்று வார லீவில் எல்லைப் பாதுகாப்பு பணியிலிருந்து ஊருக்கு வந்து சேர்ந்தேன். சொந்த மண்…  அதன் வாசனையே தனி…!

“தேனு! இது தங்கபாண்டியண்ணன் மனைவி வள்ளிக்கண்ணு தானே”

“ஆமாங்க. வள்ளி மதனிதான்.”

“என்னாச்சு! ஏன் ஒதுக்கமா நிக்கிறாப்பல…?”

“அது…அது வந்துங்க…”

“சொல்லுடி……”

“தங்கபாண்டியண்ணேன் யுத்தமுனையிலே காணாமப்போயிட்டதாவும் உடல் கிடைக்கவேயில்லைன்னும் போனவருசம் ஆபிசருங்க சொல்லிட்டு, அண்ணனோட சாமான்களை குடுத்துட்டு அவர் செத்துப் போயிருக்கலாம்னு நம்பறதா சொன்னாங்க.”

“………….”

“அப்போ வள்ளி மதனிக்கு அஞ்சு மாசம். அதனாலே குழந்தை பொறந்ததுமே சடங்கு பண்ணலாம்னு இருந்தாங்க. .பையன் பொறந்த மூணாம் மாசம்…. சடங்கு கழிக்க வந்தவங்ககிட்டே தாலியறுக்க மாட்டேன்னு சொல்லிடுச்சு மதனி? எல்லோருக்கும் ‘கொல்லு’ ன்னு ஆயிருச்சு. மதனி அவங்களைப்பார்த்து ஒரே கேள்விதான் கேட்டுது….”

ருநிமிசம் அத்தாச்சி.! நீங்களும் இந்த சடங்கை பண்ணிக்கிட்டவங்க தான்! எனக்கு பதில் சொல்லுங்க! உங்க மாங்கல்யத்தை யார் முன்னே இறக்குனீங்க? “

“இன்னாடி கேள்வியிது ‘என் ராசா உடல் முன்னமே கிடத்திருக்க… ராசன் கையால போட்டிருந்த… மங்கலத்தை நானழிச்சேன்.! பூவோடு பொட்டழிச்சேன்..! என் மவராசா கொண்டு போனாரு..!”

அடுத்தவர்களைப் பார்க்க, அவர்களும் ஆமோதிக்க, வள்ளிக்கண்ணுவின் குரல் உரத்துக் கேட்டது.

“எம் புருசன் உடம்பை கொண்டு வாங்க. எம் புருசன் உடம்பு மேலதான் என் தாலிய நான் இறக்குவேன். அதுவரை இப்படித்தானிருப்பேன். என் பூவும் பொட்டையும் கலைக்க மாட்டேன்..! தாலியையும் இறக்க மாட்டேன்..!” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போய் கதவை சாத்திக் கிட்டாக.


ப்போதிலிருந்து இப்போது வரையும். ஊரு சனம் ஒதுக்கி வச்சாப்போல நடக்கிறாக… என்னத்தைச் சொல்ல… “

தேனம்மை கண்களைத் துடைத்துக் கொண்டாள். எனக்கு மனம் கசந்து போனது. என்ன சடங்கு சம்பிரதாயம்?? வள்ளி கேட்டதுலே என்ன தப்பு? மனுஷ மனசுக்கு மதிப்புத் தராம…. அதுமட்டுமா? லீவிலே வந்து பதினைஞ்சே நாள் கண்ணாலம் பண்ணி குடும்பம் நடத்திட்டு வேலைக்குப்போயி ராணுவத்திலிருந்து வெறும் சடலம் வந்து இறங்குகிற கோரமும் நடந்திருக்கே.? எத்தனை பேரு வாழ்க்கை தரிசா போயிருக்கு. எல்லையிலே வாழ்க்கை அநித்யம் தான். ஆனால்…. அதற்கு இந்த ஊர்ப் பெண்கள் தரும் விலை அவங்க வாழ்க்கையாயில்லே இருக்கு.?! இதற்கு ஏதாவது வழி செய்யனுமே?!….

அடுத்து வந்த நாளெல்லாம் இதே நினைப்புதான்.


சின்னமனூர்ப்பட்டி இருநூறு வீடு கொண்டது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ராணுவத்திலிருப்பர். சிறுவர்கள் வளரும் போதே ஊர்ப் பெரிசுகள் அடிப்படைத் தேவைகளான உடற்பயிற்சி, ஓட்டம், பளு தூக்கல், நீச்சல், மலையேறுவது, சிலம்பம் என்று ஆரம்பித்துவிடுவர். பாலூட்டும் போதே நாட்டுச்சேவையே மகத்தானசேவை என்பதும் இயல்பாக ஊட்டப்படும். குடியரசுத் தலைவரே பாராட்டுப் பத்திரம் தந்த ஊர் இது. ஆண்கள் எல்லோருமே ராணுவச்சேவை செய்தேயாக வேண்டுமென்பது எழுதப்படாத விதி. பிறகே விவசாயம் மற்ற தொழில்கள் எல்லாமே..!

முழுநிலவு நாளில் எல்லா ஜனமும் கருப்பன் கோயில் மைதானத்தில்….

இது இங்கே வழமைதான். லீவில் வந்திருக்கும் ஸோல்ஜர் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது இளையவர்களை உற்சாகப்படுத்தும் என்பதற்காகவும் அனுபவப் பட்டறிவுக்காகவும் நடைபெறுவதுதான்.

மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.

“என் அனுபவத்தைச் சொல்லத் துவங்குமுன்னாலே நம்ம ஊரிலே நான் சின்ன வயசாயிருந்தப்போ நடந்ததை சொல்ல விரும்புறேன்.
இதோ… இன்னிக்கு வள்ளிக்கண்ணு மயினி எப்படி முரண்டிட்டு நிக்கிறாகளோ அதே போல இருவத்தஞ்சு வருசம் முன்னே செங்கமலத்தாச்சியும் நின்னாக…”

கசமுசாவென எழுந்த பேச்சை நான் அமர்த்தி விட்டுத் தொடர்ந்தேன்.

“அன்னிக்கும் செங்கமலாத்தாச்சியோட கணவர் உடல் கிடைக்கலை. அரசாங்கம் இறந்ததாகவே சொல்லிட்டுது. உடனே நம்ம ஜனங்க ஒன்னு சேந்து அவங்களுக்கு சாங்கியம் பண்ணவர, அவங்க முரண்டுகிட்டு நின்னாங்க. என் மவராசன் உசிரோடு இருக்கார்ன்னு எம் மனசு சொல்லுதுன்னு அவர் கதறகதற அதைக் காதிலேயே வாங்காம நம்ம சாங்கியச் சடங்கை பண்ணி அவங்களை மூலையிலே உக்கார்த்தி வச்சோம். ஆனா…. இந்தக் கொடுமை நடந்து ரெண்டு மூணு வருசம் செண்டு செங்கமலத்தாச்சி புருசன் உசிரோட வந்து நின்னார்.

அப்போ… அவங்க நிலைமை எப்படியிருந்திருக்கும்? யோசிச்சுப்பாருங்க. புருசன் உசிரோட இருக்க தாலியறுத்து நின்ன நிலைமையத் தாள மாட்டாம ஆச்சி என்ன செஞ்சது… தெரியுமா? சிறிசுங்களுக்கு தெரியாமப் போயிருக்கலாம். இளவட்டங்க மறந்து போயிருக்கலாம். பெரியவங்களுக்கு மறந்திருக்காதே…!”

நான் நிறுத்தியதுமே வயதானவர்கள் தலையைத் தொங்கப்போட்டுக்கொள்ள இளவட்டங்க கிசுகிசுக்க…

யாரோ பொடிசு குரல் தந்தது “என்னாச்சுண்ணா..?”

“என்னாச்சு..! ஆச்சி இதோ இந்தக் கருப்பன் முன்னே நின்னு… தலையால அடிச்சுக்கிட்டேனே கேக்கலையே… என் மங்கலத்தை குலைச்சுப் போட்டீகளே! நியாயமான்னு கேட்டுச்சு.. இனி நான் எப்படி வாழ்வேன்..? எம் புருசனை எந்த மொகத்தோட பார்ப்பேன்னு சொல்லிட்டு கதிர் அறுக்கிற அரிவாளாலே கழுத்தை அறுத்துகிட்டு உசுரை விட்டுது. ஆச்சியோட புருஷனும் இதை எதிர்பார்க்கலே… பொண்டாட்டிய மடியிலே போட்டுகிட்டு “இப்படி பண்ணிட்டியே ஆத்தான்னு” கதறுனவர் இந்த மண்ணு மேல சத்தியம் வச்சாரு. இனி இப்படி யாருமே செய்யக் கூடாதுன்னு… அப்புச்சி, நாஞ்சொல்றது நெசந்தானுங்களே… பெரியப்பு… சித்தப்பு… சொல்லுங்க…”

யாருமே தலை நிமிர்த்தவில்லை

“அப்போயிருந்த ஊர்த் தலைவர் கிட்டேயும் சத்தியம் வாங்கினார். சம்பந்தப்பட்ட பொண்ணு ஒத்துக்கிட்டாதான் வைதவ்யம் ஏற்கணும்னு… ஊரு நாட்டாமையும் ஆச்சி ரத்தத்திலே சத்தியம் வச்சார். சத்தியம் வாங்கின உடனே ஆச்சி புருஷன் மூச்சும் நின்னுடுச்சு. நம்ம கருப்பன் கோயிலு ஈசானத்துலே ரெண்டு பேருக்கும் சிலை வச்சோம். நிஜமாவே அவங்களை சிலையாக்கிட்டு அவங்களுக்கு குடுத்த வாக்கை காத்துல பறக்க விட்டுட்டோம்.”

“தங்கப்பாண்டியண்ணன் உடம்பு முன்னே தான் தாலியை இறக்குவேன்னு வள்ளிக்கண்ணு மயினி சொன்னதுலே என்ன தப்பு..? அவங்களை ஒதுக்கி வைக்கிறது என்ன நியாயம்..? இந்த மண்ணுலே இன்னொரு செங்கமலம் கழுத்தையறுத்துக்கிடணுமா…? சடங்கும் சம்பிரதாயமும் எதுக்கு..? நம்மளை வழிப்படுத்தி நடத்தத்தானே..? சடங்க பண்ணலைன்னு காரணங்காட்டி ஒதுக்குவது முறையா..? இங்க இருக்கவங்க எல்லாருமே ஒன்னுமன்னாத்தானே பழகி வரோம். எல்லாருமே உறமுறை வச்சுதானே பேசுறோம். நாட்டுக்காக சேவை செய்யப் போனவர் மனைவியை இப்படிப் படுத்துவதும் ஒதுக்குறதும் சரியா..? அவங்க நம்மள்ளே ஒருத்தர் இல்லியா..? பாராட்டுப்பத்திரம் வாங்கின ஊருதான் நம்ம ஊரு. வீட்டுக்கு ஒரு ராணுவத்தான் இருக்கிறாப்போலவே வீட்டுக்கு வீடு ஒரு விதவையாவது இருக்கிறாங்க. இதுலே இம்மாதிரி கொடுமையும் நடக்கணுமா? இதையுந்தான் யோசிங்க… விதவைகளாலேயே நம்ம ஊரு நிறையணுமா? விருப்பப்படறவங்களுக்கு வழி விடுங்க. விதவா திருமணம் அரசாங்கமே அனுமதிக்கிற விசயந்தானே… நான் எல்லோரையுமே வற்புறுத்தலை… விரும்புறவங்களுக்கு வழி விடுங்கங்கறேன்.

மனுச உணர்வுகளுக்கு மதிப்பு குடுங்க. நெக்கு விட்ட நெலம் தான் வேர்பிடிச்சு துளிர் விடும். அர்த்தமில்லாத சடங்கைத் தூக்கிப்போட்டுட்டு தேவையானதைக் கடைபிடிப்போம்.

பெரியவங்க மன்னிக்கணும். மனசிலே இதை சொல்லனும் தோணியது. நீங்கள்ளாம் நல்லா பார்த்துக்கிடுவீங்க என்ற துணிவுலேதான் ஒவ்வொருத்தனுமே யுத்தத்துக்கு கிளம்புறோம். இதையெல்லாம் பார்த்தா அவனாலே மனசு வச்சு எதிரி முன்னே நிக்க முடியுமா? சொல்லுங்க…”

நான் நிறுத்தி விட்டு கூட்டத்தைப் பார்க்க… தலைவர் முன்னே வந்தார். என் கையைப்பிடித்துக் கொண்டவர் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“அய்யா..! வயசுல சின்னவனாயிருந்தாலும் பெரிசா யோசிச்சு பேசிட்ட சாமி. அந்த கிருஷ்ணனே இறங்கி வந்து கீதை படிச்சாப்பலே இருந்தது” என்று அவர் கண்ணீர் மல்க, எனக்குத்தான் சங்கோஜமாகி விட்டது. இளசுகளும் பொடிசுகளும் கைத்தட்ட எனக்கு இன்னும் வெட்கமாகிவிட வேகமாக நழுவினேன்.

செங்கமலத்தாச்சியின் மகன் என்னை கட்டிக் கொண்டு விம்மினார்.

எனக்கு புரிஞ்சு போச்சு! இனி சின்னமனூர்ப்பட்டி இம்மாதிரி விசயங்களிலும் முன்மாதிரியா நிற்கும்ன்னு…


ர் எல்லை வந்திடுச்சு. தேனம்மை கையை அழுத்தி விடுவித்தேன்.

மனசு சந்தோஷமாயிருந்தது. அய்யனாரு சிலைக்கு கீழேயிருந்த மண்ணெடுத்து நெத்திலே வச்சுகிட்டேன். தேனம்மைகிட்டே சிரிச்சுக்கிட்டே தலையாட்டினேன்.

தூரத்தே டவுன் பஸ் வரும் ஓசை கேட்டது.

ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த. கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது.

4 thoughts on “அந்தாதிக் கதைகள் – 3 | ஜே.செல்லம் ஜெரினா

 1. யதார்த்தமான கிராமியக்கதை.ஆனால் அழுத்தமான கதைக்கரு. எழுத்து நடை அருமை.
  வித்தியாசமான முடிச்சு…
  .”தாலியறுத்து சாங்கியமெல்லாம் செய்து முடித்தபின் கணவன் உயிரோடு வந்தால்..??”

  ஒரு நாவலே எழுதலாம்…
  வாழ்த்துகள்

 2. அருமை.நச்சுனு கேள்விகள்.மனசில் இறங்கி்சிந்திக்க வைக்கிறது.

 3. ஹப்பா. சிலிர்க்க சிந்திக்க வைத்த கதை. நேர்மையான முடிவு.
  வாழ்த்துகள்

 4. மிக அருமையான கதை! சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை! தேவைப்படுகையில் அதில் நெகிழ்ச்சியை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று சொன்னவிதம் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

June 2021
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930