• அண்மை செய்திகள்
  • இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரி மீனாட்சியின் தன்னம்பிக்கை பயணம்

இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரி மீனாட்சியின் தன்னம்பிக்கை பயணம்

10 months ago
149
  • அண்மை செய்திகள்
  • இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரி மீனாட்சியின் தன்னம்பிக்கை பயணம்

‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்று சொன்ன காலம் மாறி, தற்போது வீட்டு சமையலறையில் நெருப்புடன் போரிடுவது மட்டுமல்லாமல் வீதியில் இறங்கி நெருப்புடன் போரிட்டு உயிர்களைக் காப்பாற்றும் உன்னத பணியிலும் பெண்கள் பங்காற்றி வருவது பெருமைக்குரியது. அந்த வகையில், சர்வதேச மகளிர் தினமான இன்று, நெருப்புக்கும் தனக்குமான நெருங்கிய உறவை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொள்கிறார் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரியும் தமிழருமான மீனாட்சி விஜயகுமார்.

”சென்னை திருவல்லிக்கேணியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து நொறுங்கி தரைமட்டமாகக் கிடந்தது. அங்கே இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஓர் தாய் மற்றும் மகனின் குரல் கேட்டது. ஆனால், அது மிகவும் சவாலான மீட்புப்பணி என்பதால் நாங்கள் எடுத்துச் சென்ற உபகரணங்கள் எதுவுமே பயன்படவில்லை.”

”ஆறு முதல் ஏழு மணி நேரம் கடுமையாகப் போராடி கைகளாலேயே தோண்டித் தோண்டி இருவரையும் காப்பாற்றினோம். அந்த நெகிழ்ச்சி சம்பவத்தை மறக்கவே முடியாது” என்று நினைவுகூர்ந்தார் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மத்திய மண்டலத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றி வரும் மீனாட்சி விஜயகுமார். இவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2013ஆம் ஆண்டில் தீரச்செயலுக்கான குடியரசு தலைவர் பதக்கத்தை அவர் பெற்றுள்ளார்.

சோதனைகளைக் கடந்த சாதனை மீனாட்சி விஜயகுமார்

தனது பெற்றோரின் தந்தைமார்கள் இருவரும் அரசு அதிகாரிகளாக பணியாற்றியதைப் பார்த்து, சிறு வயதிலேயே உந்துதல் பெற்றதாகவும் அப்போதிலிருந்தே காக்கிச் சட்டை மீது காதல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார், மீனாட்சி விஜயகுமார். இவர் காமராஜ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவரும் அந்த காலத்தில் மிகவும் எளிமையாகவும் அறியப்பட்ட அரசியல் தலைவரான கக்கனின் பேத்தி.

ஆனால், தீயணைப்புத் துறையில் இந்த நிலையை எளிதாக அடைந்துவிடவில்லை என்று கூறுகிறார் மீனாட்சி.

”விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட நான் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் வெறும் காலில் ஓடி பயிற்சி செய்வேன். காலணி வாங்க அப்போது போதிய பணம் இல்லை. வாழ்க்கையை எளிமையாக யார் வேண்டுமானாலும் வாழலாம், ஆனால் சிலரால் மட்டுமே கடினமாக உழைக்க முடியும்” என தன் தாயார் வழங்கிய அறிவுரையை மீனாட்சி நினைவுகூர்ந்தார்.

தனது பத்து வயதில் தந்தையை இழந்த மீனாட்சிக்கு, அடுத்தடுத்த சவால்கள் காத்திருந்தன.

”நான், எனது தாயார், சகோதரி என மூவரும் பெண்கள் என்பதால், பலரும் வாடகைக்கு வீடு தர மறுத்தனர். சில உறவினர்களும் கூட எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரபலமான நபர்களின் குடும்பம் என்பதால் நாங்கள் பெரிதாக என்ன துன்பங்களை அனுபவித்து விடப்போகிறோம் என சிலர் நினைத்தார்கள். ஆனால், எனது இரண்டு தாத்தாக்களும் அப்பாவும் மறைந்த பிறகு எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை” என்கிறார்.

மேலும் அவர், ”கணவரும் இல்லை, இரண்டும் பெண் பிள்ளைகள் என்பதால் விரைவில் திருமணம் செய்துவைக்க வேண்டும் என சமூகம் அழுத்தம் கொடுத்தபோதும், என் அம்மா இதை சவாலாக ஏற்று எங்களை சுதந்திரமான பெண்களாக வளர்த்தெடுப்பேன் என உறுதி பூண்டார்” என்று கூறும் மீனாட்சி விஜயகுமார், தாயாரின் வாக்கை காப்பாற்றி தற்போது இந்த துறையில் பல உச்சங்கள் தொட்டுள்ளார். தற்போது அவரது கட்டுப்பாட்டில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 95 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.

2000-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறைத் தேர்வு எழுதிய மீனாட்சி விஜயகுமார், பெண்கள் இந்த துறைக்கு அப்போதுவரை தேர்வுசெய்யப்படாததால், மூன்று ஆண்டுகள்வரை முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

பணியில் சேர்ந்த தொடக்க கால அனுபவம் குறித்து கேட்டபோது, ”ஆண்களுக்கு வழங்கப்படும் அதே பயிற்சிகள்தான் எனக்கு வழங்கப்பட்டன. ஏணி மீது ஏறுவது, சுமார் 230 லிட்டர் தண்ணீரை சுமந்துகொண்டு ஓடுவது, மிகப்பெரிய தீயணைப்பு வாகனத்தை ஓட்டுவது உள்ளிட்ட பல பயிற்சிகள் எனக்கும் வழங்கப்பட்டன. நான் கல்லூரி நாட்கள் முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் என்பதால், நீச்சல், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகளை தனிப்பட்ட முறையில் நானே எடுத்துக்கொண்டேன்,” என்றார் மீனாட்சி.

”தொடக்கத்தில், கேலி மற்றும் கிண்டல்கள் இருக்கவே செய்தன. திருமணமாகி குழந்தை பெற்ற என்னால், ஆண்களுக்குச் சமமாக பணியாற்ற முடியுமா? அழைப்பு வரும் நேரத்தில் எல்லாம் குடும்பத்தை விட்டு, விட்டு உடனடியாக வர முடியுமா? என்பன போன்ற சந்தேகங்களும் இருந்தன.

ஆனால் இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாத மீனாட்சி, ஆண் ஊழியர்களுக்கு முன்பே களத்தில் ஆஜராகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததாகக் கூறுகிறார். மேலும், இது குறித்து கேட்டபோது அவர், ”உங்கள் மீது நம்பிக்கை குறைவாக இருக்கும் இடத்தில் நீங்கள் 200 சதவிகித உழைப்பைக் கொடுங்கள். அப்போதுதான் உங்கள் வலிமை மற்றவர்களுக்குத் தெரியும்,” என்கிறார் மீனாட்சி.

சமூகத்தில் பெண்கள் உயர் நிலையை எட்டுவதற்கு தடையாக இருப்பவை எவை என்று மீனாட்சியிடம் கேட்டதற்கு, ”ஒரு பெண் என்றால் திருமணம் செய்து கொண்டு கணவருக்கும் குடும்பத்தினருக்கும் பணிவிடைகள் செய்து அவர் பெயரை தன் பெயருடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று போக்கு இன்றும் காணப்படுகிறது. ஆனால், நானும் என் சகோதரியும் எங்களுக்கென தனி அடையாத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அம்மா விரும்பினார்.”

இன்றும் அரசு பணியில் உயர் பொறுப்பில் தானும், லண்டனில் ஒரு மருத்துவராக தனது சகோதரியும் உயர்ந்திருக்கிறோம் என பெருமைபட கூறும் மீனாட்சி விஜயகுமார், சமூகம் பெண்களை அடிமைப்படுத்துகிறது, பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்றெல்லாம் பேசுவதற்கு பதிலாக வாழ்ந்து காட்டி உலகிற்கு உணர்த்த வேண்டும் என்கிறார்.

ஏராளமான சவால்கள், உடல் ரீதியான பிரச்னைகள், அறுவை சிகிச்சைகள் என இந்தப் பணியில் அவரை தொடரவிடாமல் பல தடைகள் வந்தபோதிலும் பின்வாங்காமல் இருப்பது எப்படி என்ற கேள்விக்கு, “பிரச்னைகளைத் தாங்கும் வலிமை உள்ளவர்களுக்கே மீண்டும் மீண்டும் அவை ஏற்படும்,” என சிரித்தபடி நம்மிடம் கூறினார் மீனாட்சி.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் தீயணைப்பு வீரர்களின் உடல் தகுதி, மன வலிமை உள்ளிட்ட பல அம்சங்களை பரிசோதனை செய்யும் உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பலமுறை தங்கம் வென்றிருக்கிறார் மீனாட்சி விஜயகுமார்.

ஒரு பதவிக்கு வந்து விட்டால், அது சார்ந்த பணிகளை மட்டும் செய்யாமல், உங்களுக்கு ஆர்வமுள்ள செயல்களையும் செய்ய வேண்டும் என்கிறார் அவர்.

செய்யும் தொழிலில் மற்றவர்களிடம் இருந்து எப்படி வேறுபடுவது என சிந்திக்க வேண்டும்; சாகும்வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையெனில் வாழும்போதே இறந்துவிட்டதற்கு சமம் என்றும் கூறுகிறார்.

”ஆசிரியர் பணியில் சேர்ந்து கொள்ளுமாறு கணவர் வீட்டார் சொன்னார்கள். ஆனால், அரசு அதிகாரி ஆக வேண்டும் என்பது என் கனவு. அதில் நான் உறுதியாக இருந்தேன்; நமக்கு ஒரு விடயம் தேவையென்றால் அதற்காக சண்டையிடக் கூடாது. அது மணமுறிவுக்கு வழிவகுக்கும். பிறகு, எவ்வளவு பெரிய அதிகாரியாகி என்ன பயன்?” என்கிறார் அவர்.

இதன் காரணமாகவே ஆங்கிலத்தில் முதுகலை பட்டம், இளங்கலை கல்வியியல் பட்டம் மற்றும் தீ பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பெற்றுள்ள மீனாட்சி, நெருப்புக்கும் இலக்கியங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து தற்போது முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்துவருகிறார்.

இருபத்து நான்கு மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய பணி, அதனுடன் தொடர்புடைய படிப்பு, இவற்றிற்கு நடுவில் ஒரு பெண்ணாக குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயம். இவை எல்லாவற்றிற்கும் முக்கியமான நேர மேலாண்மை குறித்து மீனாட்சி விஜயகுமாரிடம் கேட்டோம்.

அதற்கு அவர், ”என் கணவரும் மகனும் எனக்கு ஆதரவாக உள்ளனர். நான் அடிக்கடி பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். ஓரிரு நாட்களில் வீடு திரும்பிவிட முடியாது. சில மாதங்கள் ஆகலாம், ஏன் ஆண்டுக்கணக்கில் குடும்பத்தை பிரிந்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது.”

”நான்கு சுவற்றுக்குள் எவ்வளவு நேரம் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியம் கிடையாது. அப்படி பார்த்தால், ஒன்றாக ஒரே வீட்டில் வாழும் குடும்பத்தில் ஏன் சண்டைகள், பிளவுகள் ஏற்படுகின்றன? எவ்வளவு நேரம் ஒன்றாக இருக்கிறோம் என்பதைவிட தரமான நேரத்தை செலவிடுவதே முக்கியம். அதற்கு திட்டமிடல் மிக மிக அவசியம்” என்கிறார் மீனாட்சி.

2004-இல் சுனாமி ஏற்பட்டபோது, மீட்புப் பணிக்குச் சென்ற அவர், தன் மகனை தனியாக வீட்டில் பூட்டிவிட்டு, அவர் வீடு திரும்பவில்லையென்றால் மகனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான ஆபத்தை எதிர்கொள்ளும் பணிக்குச் செல்லும் முன்பு அவரது மனநிலை எப்படி இருக்கும் என அவரிடம் கேட்டபோது, ”ஒரு உயிரைப் பெற்றுடுக்கும் தாயைவிட வேறு யாருக்கு அதன் மதிப்பு பெரிதாகத் தெரியப்போகிறது? அதனால்தான் இந்த பணியை நான் மிகவும் நேசிக்கிறேன்.”

”கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடுவது இந்த பணியின்போது என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், எங்கள் மனதில் ஓடிக்கொண்டிருப்பதெல்லாம், அழைப்பு வந்தவுடன் எவ்வளவு விரைவாகச் செல்லமுடியுமோ செல்ல வேண்டும், விரைவாக முடிவெக்க வேண்டும், எப்படியாவது உயிர்களை மீட்க வேண்டும் என்பவை மட்டும்தான்” என கூறுகிறார்.

நேர்காணல் முழுவதும் பொறுமையாகவும், நிதானமாகவும் நம்மிடம் பேசிய மீனாட்சி, அலுவல் சார்ந்த விடயங்களிலும் பொறுமை காப்பவரா என அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், ”நான் ஒரு கடுமையான அதிகாரி என பலரும் சொல்வார்கள். இடத்தைப் பொறுத்து கோபமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வேன். நேராக நிற்கும் மரத்தை எளிதில் உடைத்துவிடலாம். எனவே, பெண்கள் நாணல் போல் வளைந்துகொடுத்தால் எந்த நிலையிலும் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்” என்று கூறினார்.

”என்னை வெளியில் இருந்து பார்ப்பவர்கள், நான் கடும் தீயில் இறங்கி உயிர்களை காக்கச் செல்லும்போது, ”பாருங்கள் அமைதியான அந்த பெண்ணே தீயில் இறங்குகிறார். நாமும் அவருக்கும் உதவலாம்” என்பார்கள். சில நேரங்களில் இளைஞர்கள், குழந்தைகள் எனக்கு பாதுகாப்பு வழங்குவதாக நினைத்து என்னை சூழ்ந்துகொள்வார்கள். அந்த நேரத்தில், நான் பெண்ணாக இருப்பதால்தானே இப்படிச் செய்கிறார்கள் என நினைக்க மாட்டேன். அதை எனக்குக் கிடைக்கும் அன்பாகவும், ஆதரவாகவும் கருதுவேன்” என்றார்.

மேலும் அவர், ”நிர்வாகம் மற்றும் களப்பணி என இரண்டையும் நான் செய்ய வேண்டும். மனரீதியான அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, நாள் முழுவதும் பிணங்களைத் தோண்டி எடுத்துவிட்டு வீடு திரும்பியபின் இயல்பு நிலைக்கு வருவது என்பது மிகவும் கடினம்” என்று கூறுகிறார்.

நான் ஒரு விழாவிற்கு சட்டை பேண்ட் அணிந்து கொண்டு சென்றபோது, பெண் என்றால் புடவை அணிந்தால்தான் நளினமாக இருக்கும் என்று ஒருவர் சொன்னார். ஆனால், எது வசதியாக உள்ளதோ அதை அணிந்திருக்கிறேன்; எப்போது வேண்டுமானாலும் எனக்கு அழைப்பு வரலாம். உடனடியாக நான் செல்ல நேரிடலாம்” என்று கூறிய மீனாட்சியின் பேச்சின் மூலம் அவர் தனது பணியில் எவ்வளவு ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருக்கிறார் என்பதை தெளிவாக காண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31