வரலாற்றில் இன்று – 23.01.2021 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

 வரலாற்றில் இன்று – 23.01.2021 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒரிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் சண்டை ஏற்பட்டு கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.

பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Services) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை துறந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவர் 1941ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கெனத் தனிக்கொடியை அமைத்து, ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். இந்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திர போஸ் 1945ஆம் ஆண்டு மறைந்தார்.

ஹிடேகி யுகாவா

முதன்முதலாக ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவரான ஹிடேகி யுகாவா 1907ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிறந்தார்.

இவர் ஆதாரத் துகள்களுக்கு இடையே ஏற்படும் உள்வினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு, அதில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை விளக்கி,’மீஸான்’ (Meson) என்ற பொருள் வெளிப்படுவதை குறிப்பிட்டார்.

மேலும் இவர் அணுக்கரு ஆற்றல்களின் மீஸான் கோட்பாட்டை உருவாக்கினார். அணுக்கருவில் ஏற்படும் வலிமைமிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் எலக்ட்ரானைவிட பன்மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தார். இதற்காக இவருக்கு 1949ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞரான ஹிடேகி யுகாவா 1981ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1967ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி கர்நாடக இசை வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் மறைந்தார்.

1996ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஜாவா (Java) நிரலாக்க மொழியின் முதற்பதிப்பு வெளியானது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published.