News
7th December 2021
  • தொடர்
  • உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 21 | சுதா ரவி

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 21 | சுதா ரவி

1 year ago
402
  • தொடர்
  • உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 21 | சுதா ரவி

பத்திரிக்கைகாரன் வந்து இருக்கான். நம்ம ரெண்டு குரூப்பும் சந்திக்கிறதை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி செய்வான். அதனால ரொம்ப கவனமா இருக்கணும்.”

“சரி முடிச்சிடலாம். “

ஆர்ஜேவின் மனதில் கிஷோர் சொன்னதை ஒத்துக் கொண்டாலும் மனதின் ஓரத்தில் உத்ராவை தேடி தான் வந்து இருப்பானோ என்று உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. சரக்கை இங்கே வைத்து இருக்க மாட்டான் என்று எதிரணியினர் கண்டிப்பாக கணித்திருப்பார்கள். வந்தவன் உத்ராவை பற்றி அறிந்து கொள்ள தான் வந்து இருப்பான் என்று மூளை உரைத்தது. இறந்து போன ஹரியின் மூலம் தகவல் ஏதும் கசிந்திருக்குமோ என்ற எண்ணமும் தோன்றி மறைந்தது. ஆனால் ஹரி எதையும் வெளிபடுத்தும் முன் அவனை கொலை செய்தாயிற்று. பின் எந்த வகையில் உத்ராவின் விஷயம் வெளியே போகும் என்று யோசித்து தலைவலிக்க ஆரம்பித்தது. ஒரு வேலை அந்த பத்திரிகைகாரனா ? அவன் தான் மத்திய மந்திரி ராகேஷ் ஷர்மாவை வேறு சந்தித்து வந்திருக்கிறான். ஹரியும் அவனும் கூட்டாளிகளோ? என்று பல திசையிலும் தன் எண்ணங்களை சுழல விட்டான்.

அந்த கார்த்தி சிதம்பரம் வரும் முன்னரே அவனை பற்றிய தகவல்கள் சேகரித்ததில் அவன் ஒரு பத்திரிக்கையாளன் என்றும் பிச்சாவரம் சதுப்புநில காடுகளை பற்றியும் அதிலுள்ள பறவைகளை பற்றியும் எழுதுபவன் என்றும் தெரிந்தது. ஆனால் அவன் மேல் சந்தேகம் விழுந்தது உள்துறை மந்திரியை சந்தித்த போது. அவனுக்கு உத்ராவை பற்றி தெரிந்திருக்குமோ என்றே தோன்றியது……….இப்படி பல நினைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தவன் நேரம் போனதே தெரியாமல் அமர்ந்திருந்திருந்தான்……….

பட்டறைக்குச் சென்ற கார்த்தியும் ஆதியும் ஆர்ஜேவின் ஆட்களை விசாரித்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை சேகரித்துக் கொண்டனர். அதன் படி சேதுவை உள்ளே அனுப்புவது என்று தீர்மானித்துக் கொண்டனர். பின்னர் ஆர்ஜேவை பற்றி சேகரித்த தகவல்களை பற்றி கார்த்தி ஆதியிடம்

விசாரித்தான்.ஆதி தனக்கு கிடைத்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை எடுத்து கொடுத்தான். ஆர்ஜேவும், கிஷோரும் வடலூரில் இருக்கின்ற ஒரு அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ஜேவின் உண்மையான பெயர் ஜெயன் என்றும் தாய் தந்தையால் கை விடப்பட்டவன் என்றும் இருந்தது.

கிஷோர் ஒரு வடநாட்டு தம்பதிக்கு பிறந்தவன் . சிதம்பரத்துக்கு வந்தவர்கள் திரும்பும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இறந்து போய் விட, உறவுகளாலும் கைவிடப்பட்டு வடலூர் ஆசிரமத்துக்கு வந்தான். சிறு வயதில் இருந்தே கிஷோரும் ஜெயனும் நட்பாக இருந்ததுடன் அடிதடியிலும் ஒன்றாகவே ஈடுபட்டனர். அதற்காக பல முறை தண்டனை பெற்றாலும் இருவரும் மாறவே இல்லை. காலங்கள் ஓட ஜெயனின் அடாவடித்தனம் அதிகமாகி அவனை ரவுடி ஜெயன் என்று எல்லோரும் அழைக்க ஆரம்பித்தனர். பதினெட்டு வயதிலேயே ஆசிரமத்தை விட்டு வெளியில் சென்று பல விதமான ஏமாற்று வேளைகளில் இருவரும் ஈடுபட்டதாக சொல்லப்பட்டிருந்தது. அதன் பினர் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தது அந்த பைலில்.அதை மூடி வைத்த கார்த்தியின் மனதில், இந்த தகவல்கள் உண்மை தானா என்கிற சந்தேகம் எழுந்தது. அதை ஆதியிடம் கேட்கவும் செய்தான். “ ஏன் ஆதி இதுல இருக்கிறது உண்மை தானா?”

“எனக்கு உண்மைதான்னு தோணுது .”

“ஆனா ரெண்டு பேருடைய போட்டோவும் இல்லையே. இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.”

அதற்கு மறுப்பாக தலையை ஆட்டி” கிஷோரை வேணா நாம கண்டுபிடிக்க முடியும் ஆனா ஆர்ஜேவை இதுவரை யாருமே பார்த்தது இல்ல அதனால போட்டோ கிடைச்சா கூட நம்மால முடிவு பண்ண முடியாது.”

“இல்ல ஆதி எனக்கு இந்த ஆசிரமத்துக்கு போய் அந்த நிர்வாகிகள் கிட்ட விசாரிக்கணும்….என்னால இந்த தகவல்களை நம்ப முடியல.”

“ம்ம்..சரி பண்ணிடலாம். ஏன் கார்த்தி நாளைக்கு ஆர்ஜே வருவானா?”

“என்னோட கணிப்பு படி அவன் நாளைக்கு வர மாட்டான். அதே மாதிரி தாண்டவத்து கிட்ட சரக்கையும் கை மாத்த மாட்டாங்க. நேரா கப்பலுக்கு கொண்டு போக தான் முயற்சி பண்ணுவாங்க. அதனால நமக்கு இன்னும் அதிகமா உதவி தேவைப்படும். எல்லாமே ரெடியா இருக்க சொல்லிடு ஆதி.”

பில்லுமேட்டில் இருந்து ஆர்ஜே சென்ற பிறகு அவன் பேசியவைகளை நினைத்து அப்படியே சுவரோரம் சாய்ந்து அமர்ந்திருந்த உத்ராவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. கால்கள் மரத்து போய் ரத்த ஓட்டத்தை நிறுத்திக் கொண்டதை கூட உணராமல் விழிகள் ஓரிடத்தில் நிலைத்திருக்க அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவன் எழுப்பி சென்ற நினைவு பேரலைகள் உத்ராவை தாக்க கடந்த காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் வீட்டு தோட்டத்தில் நிறைய மரங்கள் இருந்தது. விடுமுறை நாட்களில் இருக்கும் மரம் செடி, கொடிகளுக்கு நீர் பாய்ச்சி, உரமிட்டு களைகளை எடுத்து சுத்தம் செய்வது தான் அனைவருக்கும் வேலை. அதை செய்யும் போது மகிழ்ச்சியுடன் செய்வார்கள். மாலை நேரங்களில் அங்கு அமர்ந்திருப்பதற்கு தோதாக ஒரு சிறிய மேடையை கட்டி வைத்திருந்தார் உத்ராவின் அப்பா.

பல நாள் மாலை நேரங்கள் அக்கா தங்கை இருவரும் தோட்டத்தில் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்..

அன்றும் மாலை நேரம் ராஜி விஸ்வாவின் அம்மாவுடன் பேச வெளியில் போய் விட மித்ராவும் டியுஷனுக்கு சென்றதும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கதை புத்தகத்தை எடுத்து சென்று தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

மாலை நேர காற்று இதமாக மேனியை வருட கையில் இருந்த புத்தகத்தில் ஆழ்ந்திருக்கும் சமயம் மரக்கிளைகள் வேகமாக ஆடியது. என்னவென்று நிமிர்ந்து பார்த்தாள் ஒன்றும் தெரியவில்லை. ‘ நம்ம ஆளோ? மரத்துலே இருந்து எல்லாம் குதிக்க மாட்டாரே……..ஒரு வேளை அதையும் பழக்கிட்டாரோ” என்று கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

ஒன்றும் இல்லை நினைத்து மீண்டும் புத்தகத்தை படிக்க போகும் போது குரங்கொன்று மரத்தில் இருந்து குதித்தது. அதை பார்த்ததும் அதிர்ந்து போய் உடல் நடுங்க அந்த இடத்தில் இருந்து துள்ளி எழுந்து கதவருகே ஓடி போய் நின்று கொண்டாள். இதுவரை அங்கே குரங்கு வந்ததில்லை என்பதால் பயமிருந்தாலும் உள்ளே செல்லாமல் அதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.அவள் ஒருத்தி அங்கிருப்பதை பற்றி கவலைபடாமல் சாப்பிட எதுவும் கிடைக்குமோ என்று அங்கிருந்தவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் ‘ஐயோ பாவம் பசிக்கிது போல இருக்கே’ என்று யோசித்து உள்ளே சென்று குரங்கிற்கு கொடுக்க ஏதாவது இருக்கிறதா என்று தேடினாள். அன்று பார்த்து சாப்பிட எதுவுமே இல்லை. என்ன செய்வது யோசித்துக் கொண்டிருக்கும் போது அம்மா குப்பையில் போட தந்த வடைகள் இருப்பது நியாபகம் வந்தது. ஆனால் ஊசி போன வடைகளை கொடுக்கலாமா என்று யோசித்து விட்டு, சரி குரங்கு தானே என்று எடுத்து சென்றாள்.

வடையை கண்டதும் பாய்ந்து வந்த குரங்கு இரண்டு கைகளிலும் வடையை எடுத்து கொண்டு போய் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டது. மெதுவாக ஒரு வடையை வாயருகில் கொண்டு செல்லும் நேரம் ஏதோ சந்தேகம் வந்தது போல் ஆராய்ச்சியுடன் அதை திருப்பித் திருப்பி பார்த்தது பின் உத்ராவை கோபத்துடன் முறைத்து ஈஈ….ஈஈ…என்று தன் பற்களை காட்டி மிரட்டி அந்த வடையை தூக்கி அவள் முகத்திலேயே போட்டது.

குரங்கு பற்களை காட்டியதுமே பயந்து போன உத்ரா மெல்ல பின்னாலேயே நடந்து கதவினருகில் சென்றாள். குரங்கோ அதற்கிருந்த பசியில் இப்படி ஊசி போன வடையை கொடுத்து விட்டாளே என்று ஆங்காரத்துடன் அவள் மேல்

பாய்ந்தது. ‘ஐயோ அம்மா’ என்று அலறி இறுக்கி கண்களை மூடிக் கொண்டாள்.

குரங்கு பாய்ந்து வந்து தன்னை கடிக்கப் போகிறது என்று எண்ணி கண்களை மூடியவளுக்கு தன்னை சுற்றி வளைத்த கைகளையும் கழுத்தருகே பட்ட சூடான மூச்சுக் காற்றும் ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்க தன்னவன் வந்து விட்டான் என்பதை அறிந்து கொண்டாள்.

அவன் வந்து விட்டான் என்று தெரிந்ததுமே மனதில் இருந்த பயம் அகன்று குறும்பு தலை தூக்கியது. அவன் தான் என்று தெரிந்தும் வேண்டும் என்றே கண்களை திறவாமல் “ ப்ளீஸ் குரங்கே என்னை கடிச்சிடாதே குரங்கே” என்றாள்..

அவளின் குறும்பை புரிந்து கொண்டவன் “கடிக்க தான் போறேன்..உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தியா போச்சு.முதல்ல என்னன்னா மரத்திலே இருந்து குதிப்பென்னு சொல்லிட்டு இருந்த இப்போ குரங்குன்ற” என்று சொல்லி அவள் நெற்றியில் தன் இதழை பதித்தான் கார்த்தி.

மெல்ல கண்ணை திறந்து அவனை பார்த்து சிரித்தவள்..” குரங்கை விட நீங்க வேகமா தாவுறீங்க. ஆமாம் நீங்க எப்படி வந்தீங்க?”

அவள் இடையை பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டு….”ம்ம்ம் நீ குரங்குக்கு வடையை கொடுத்தப்பவே வந்துட்டேன்…அது உன் முகத்துல தூக்கி போட்டதையும் பார்த்தேன்…ஏன் சின்னு நீ எப்பவுமே இப்படி தானா?” என்று சத்தமாக சிரித்தான்.

அவனை பிடித்து தள்ளி தன் பிஞ்சு கைகளால் அவன் நெஞ்சில் குத்தினாள். “போங்க என்னை கிண்டல் பண்றீங்க இல்ல”…என்று செல்லமாக சிணுங்கவும்…மீண்டும் சத்தமாக சிரித்தவன்” அந்த குரங்குக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் சின்னு”என்றான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து “ என்ன சொல்றீங்க எதுக்கு குரங்குக்கு நன்றி சொல்லணும்?”

அவளின் முகவடிவை விரல்களால் அளந்து கொண்டே.”நான் இன்னைக்கு உன்னை பார்க்க முடியுமோ முடியாதோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இந்த குரங்கு வந்ததால எனக்கு இப்போ ஜாக்பாட்டே கிடைச்சிருச்சே”என்றான்.

அதை கேட்டு அவன் கைகளை பிடித்து தள்ளி தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தி விட்டு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவனை முறைத்தாள். “நானும் உங்களை கேட்கணும்னு நினைச்சேன். உங்களுக்கு வேலை எங்க வீட்டு மாடியிலேயும் தோட்டத்திலேயுமா இருக்கு. அடிக்கடி இங்கேயே எகிறி குதிக்கிறீங்களே” என்று லேசாக விழிகளில் குறும்பு கூத்தாட வினவினாள்.

அவள் நின்ற விதம் அவன் மனதை மயக்க அதுவரை இருந்த குறும்பு மாறி அவன் விழிகளில் தாபம் குடியேற அவளின் இடையை பிடித்து தன்னருகே இழுத்தவன்..” ம்ம்..என்னை இழுக்கிற காந்தம் இங்கே இருக்கும் போது எங்கே இருந்து வேணாலும் குதிப்பேன்” என்று சொன்னவன் தன் இதழ்களால் அவள் முகத்தில் கோலமிட அவளின் நிலையோப் பேச்சிழந்து போனது.

உணர்வின் பிடியில் சிக்கித் தவித்தவன் சிறிது நேரத்திலேயே தெளிந்து அவளை தன்னிடம் இருந்து பிரிக்கப் பார்த்தான்.ஆனால் அவளோ அவனிடம் இருந்து விலகுவதை விரும்பாமல் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

அந்தி சாயும் நேரம் மனதால் சங்கமித்த இரு நெஞ்சங்கள் தன்னிலை மறந்து ஒருவரின் மேல் மற்றவர் கொண்ட அன்பை உணர்த்தும் விதமாக இறுக தழுவி நின்றனர். அவர்களுக்குள் இருந்த காதலை கண்டு நீல வானமும் காற்றும் தாங்களும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டன .மரங்கள் தங்களின் உவகையை கொண்டாட இலைகளின் அசைவையே நடனமாக ஆடியது. இவர்களின் காதலில் வரவிருக்கும் இடையூறை எண்ணி கடந்து போகும் மேகங்கள் கண்ணீரை சிந்தி சென்றது.

மழைத் துளி பட்டதும் தாங்கள் இருந்த நிலையை உணர்தவர்கள் மெல்ல விலகினர். அவன் தன்னை நிதானபடுத்திக் கொண்டு சற்றே கரகரப்பான குரலில்” சின்னு நேரமாச்சுடா யாராவது வந்திட போறாங்க நீ உள்ளே போ” என்று சொல்லி அவள் கன்னங்களில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றான்.

அன்றைய நினைவுகளில் ஏற்படுத்திய தாக்கத்தில் உடலில் ஒரு வித சிலிர்ப்பு எழுந்தோடி மறைந்தது. கார்த்தியின் நியாபகங்களே தன்னை உயிருடன் வைத்திருக்கிறது என்று எண்ணியவளுக்கு, தன் காலம் இப்படியே கழிந்து விடுமோ, எந்த ஆபத்தும் என்னை நெருங்க விட மாட்டேன் என்று சொன்னவருக்கு நான் உயிருடன் இருப்பதே தெரியாமல் போனதே இதென்ன கொடுமை? கடவுளே இந்த உயிரை பிடித்து வைத்திருப்பதே அவரின் எண்ணங்கள் தானே…எப்படியாவது அவரிடம் என்னை சேர்த்து விடு என்று மனதிற்குள்ளேயே புலம்ப ஆரம்பித்தாள்.

(தொடரும்)

<பகுதி – 20

1 thought on “உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 21 | சுதா ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031