10,000 மைல் பயணம் – 4 | வெ. இறையன்பு IAS

1 year ago
272

காலை எழுந்ததும் தேநீரோ, காபியோ அருந்தாவிட்டால் பலரால் காலைக்கடன்களைக் கூடக் கழிக்க முடியாது. உணவில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால், இவற்றைப் புறக்கணித்து வாழ முடியாது. பயணங்களால் பரவிய பயிர்கள் இவை.

தேநீரைப் பொருத்தவரை சுவையான புனையியல் கதையொன்று உண்டு. போதிதர்மர் சீனத்திற்குச் சென்றபோது இடைவிடாமல் தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது தூக்கம் வந்து தன் தவத்தைக் கலைத்துவிடக் கூடாதே என்று இமைகளைக் கிள்ளியெறிந்தார். அந்த இமை செடியாக வளர்ந்தது என்றும், அதுவே தேயிலையாக மாறியது என்றும் ஐதீகம். அதனால்தான், தேநீரை அருந்தினால் தூக்கம் தள்ளிப்போகிறது என்று புத்தத்துறவிகள் நம்புகிறார்கள்.

ஜென் பௌத்தத்தில் தேநீருக்குச் சிறப்பான இடமுண்டு. தேநீரைப் பருகுவது தியானமாகக் கருதப்படுகிறது. தோட்டத்தின் நடுவில், எட்டுக் கோணத்தில் அமைக்கப்பட்ட, நீர்சூழ்ந்த குடிலுக்குச் சென்று, கைகால்களைச் சுத்தம் செய்துகொண்டு, அங்கு பரிமாறப்படும் தேநீரை விழிகளை மூடிக்கொண்டு, யாரிடமும் பேசாமல் ஒவ்வொரு துளியாகப் பருகும்போது நம்மீது தெவீகம் படர்கிறது என்பதை அவர்கள் விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ளும் உபாயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இன்னொரு அறிவியல்பூர்வமான விவரிப்பும் உண்டு. ஷென்-நுங் என்கிற சீன அரசர் ஆணையொன்றைப் பிறப்பித்தார். தண்ணீரைக் காச்சித்தான் குடிக்க வேண்டும்; அப்போதுதான் நோ பரவாமல் இருக்கும் என்பது அவர் ஆணை. ஒருமுறை அவர் முகாம் செல்லும்போது, அவர் குடிப்பதற்காக தோட்டத்தில் கொதிக்க வைக்கப்பட்ட நீரில், மேலிருந்த செடியிலிருந்து இலையொன்று விழுந்துவிட்டது. கவனக்குறைவுடன் அரசருக்குப் பரிமாறப்பட்ட அந்த நீர், அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதை அவர், உடலை வலுவாக்கி, மனத்தைத் திருப்திப்படுத்தி, நோக்கத்தை திடப்படுத்தும் பானம் என்று வருணித்தார். அப்போது, எந்தச் செடியிலிருந்து அது விழுந்தது என்று கண்டுபிடித்து, அந்தத் தாவரத்தை அதிக அளவில் பயிரிட ஏற்பாடு செதார். அதுவே தேயிலை தோன்றக் காரணம்.

தேயிலை பற்றிய குறிப்பு கி.மு. 350ல் பதிப்பிக்கப்பட்ட ‘எர்யா’ என்கிற சீன அகராதியில் முதல்முறையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சீனா முழுவதும் தேநீர் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமான தேநீருக்கு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வரியும் விதிக்கப்பட்டது.

சீனத்திலிருந்து புத்தத் துறவிகள் மூலம் ஜப்பானுக்கு அது கொண்டு செல்லப்பட்டது. கி.பி. 729ஆம் ஆண்டு ஜப்பானியப் பேரரசர் ஷோ-மூ 100 புத்தத்துறவிகளை அழைத்துத் தேநீர் விருந்து கொடுத்தார்.

ஐரோப்பியப் பயணிகள் கிழக்கு நோக்கிப் பயணித்தபோது, சீனாவிலும் ஜப்பானிலும் தேநீர் தேசிய பானமாக மாறியிருப்பதைக் கண்டனர். அங்கிருந்து 1610ஆம் ஆண்டு முதல்முதலாகத் தேயிலை மூட்டை ஹாலந்து நாட்டிற்குச் சென்றது. அங்கிருந்து அது இங்கிலாந்திற்குச் சென்றது. கடல்வழிப் பயணத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட இங்கிலாந்துக்கு அதிக நிபுணத்துவம் இருந்ததால், தொடர்ந்து பெரிய அளவில் சீனாவிலிருந்து தேயிலையை அவர்கள் கொண்டு செல்ல முடிந்தது. சீனத்தூதர் ஒருவர் ரஷ்யாவில் தேநீரை அறிமுகப்படுத்தினார். தேயிலையை மட்டுமல்ல; தேநீரைத் தயாரிக்கும் பாத்திரங்களையும் சீனாவிலிருந்தே தருவித்தார்கள்.

நியுயார்க்கிலிருந்து சீனத்திற்கு விரைவில் தேநீரைக் கொண்டுவர கப்பல்கள் கட்டப்பட்டன. ‘வானவில்’ என்கிற கப்பல், பிரத்தியேகமாக இதற்காகவே செய்யப்பட்டது. இது நாளடைவில் கடல்வழிப் பயணத்தை விரைவாக்கும் வழிக்கும் வித்திட்டது. இங்கிலாந்து ‘மின்னல்’ என்கிற பெயரில் விரைவுக்கப்பல் ஒன்றை உருவாக்கியது.

புதிய உலகம் என்று அறியப்படும் அமெரிக்கக் கண்டத்திற்கு பிரிட்டிஷ் மற்றும் டச்சுக் காலனியினர் தேநீரை அறிமுகப்படுத்தினார்கள். அதுவே அமெரிக்க விடுதலைக்கும் ஆதாரமானது. எந்தத் தேநீரும் பரிமாறப்படாத விருந்தை பாஸ்டன் தேநீர் விருந்து” என்று வரலாறு வாழ்த்துகிறது. இங்கிலாந்துப் பாராளுமன்றம், தேயிலை மீது கடுமையான வரி விதித்தது. அதை அமெரிக்கக் குடியினர் செலுத்த மறுத்து, பெட்டிப் பெட்டியாக வந்த தேயிலையை மூன்று கப்பல்களிலிருந்து எடுத்து, டிசம்பர் 6, 1773 அன்று கடலில் தூக்கியெறிந்தார்கள். அது நடந்த இடம் பாஸ்டன் துறைமுகம். மற்ற இடங்களிலும் மக்கள் வரிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினார்கள். அந்த எதிர்ப்பே விடுதலை வேட்கையாகத் திரண்டது. வரிப்பணத்திற்கு ஆசைப்பட்டு, தன்கீழ் இருந்த நாட்டையே இங்கிலாந்து இழக்க நேரிட்டது.

புதிய இடங்களில் தேயிலையைப் பயிரிடுவதற்காக எடுத்த நடவடிக்கைகளின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புதிய நாடுகளுக்குப் பயணப்பட்டார்கள். அப்படி இலங்கைக்கு பயணித்த தமிழர்கள் அதிகம். ஒரு பயிரில் ஏற்படுகிற சேதம் ஒரு தேசத்தின் பொருளாதாரத்தையே மாற்றிவிடக் கூடும். 1869ஆம் ஆண்டில் இலங்கையில் காபி பயிரில் ஏற்பட்ட கொள்ளை நோ, அவர்கள் தேயிலைக்கு மாறுகிற தேவையை ஏற்படுத்தியது. தமிழகத்திலிருந்து அங்கு சென்றவர்கள் பற்றிய வரலாற்றை நாம் அறிவோம்.

ஆரம்பத்தில் தேயிலை புறக்கணிக்கப்பட்ட பயிராக இலங்கையில் இருந்தது. காபித் தோட்டங்களில் தற்செய்யலாக வளர்ந்த தேயிலைப் பயிரை ஜேம்ஸ் டெலர் என்கிற ஸ்காட்லாந்துக்காரர் அசிங்கமான சின்னப் புதர்” என்று வருணித்தார். அப்போது ஏற்பட்ட கொள்ளை நோ காபித் தோட்டங்கள் முழுவதையும் சிதைத்துவிட்டது. ஆனால், அவற்றின் நடுவே முளைத்த தேயிலை மட்டும் தெம்பா இருந்தது. அதுவே அங்கு தேயிலைத் தோட்டங்களுக்கு வாயிலைத் திறந்தது.

சூயஸ் கால்வா தேயிலை ஏற்றுமதியில் முக்கியப் பங்கினை வகித்தது. அதற்குப் பிறகு ரயில் வண்டிகள் அதிக அளவில் தேயிலைப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தியது.

சீனர்கள் கண்டுபிடித்தவற்றை ரகசியமாகவே வெகுநாட்கள் வைத்திருந்தார்கள். இந்தியாவிற்கு வந்த சீன யாத்ரிகர்கள் இங்கிருந்து தகவல்களை அள்ளிச் சென்றார்களே தவிர, அங்கிருந்து தேயிலையைக் கிள்ளி வரவில்லை. பயணங்களின்போது தற்செய்யலாக இவை அறியப்பட்டன. புத்த பிக்குகள் அன்பையும், தியானத்தையும் உலகம் முழுவதும் பரப்ப முற்பட்டபோதுதான் தேநீர் உலக பானமாக உருவானது. தேநீர் பல் சிதைவைத் தடுக்கவும், வா துர்நாற்றத்தைப் போக்கவும் உறுதுணையாக உதவுகிறது. சீனர்கள் பால் கலக்காத தேநீரைக் கொப்பளித்தே பற்களைச் சுத்தம் செய்து விடுகிறார்கள். இதயத்தின் செய்யல்பாடு பச்சைத் தேயிலையால் சீராகிறது. வயிற்றுப்போக்கைத் தேநீர் கட்டுப்படுத்தும். அறுசுவைகளில் துவர்ப்பு ருசியைத் தேநீர்தான் இன்று வழங்குகிறது. மதுவைத் தவிர்க்க தேநீர் உதவியாக இருந்தது. மனத்தை மயக்கும் மதுவைத் தவிர்த்து தேநீரை மட்டும் அருந்துபவர்களே டீடோட்டலர்” என்று அழைக்கப்பட்டனர்.

(தொடரும்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930