• கதை
  • அனுபவ பாடங்கள் | முகில் தினகரன்

அனுபவ பாடங்கள் | முகில் தினகரன்

1 year ago
238
  • கதை
  • அனுபவ பாடங்கள் | முகில் தினகரன்

ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் இதமான அதிர்வு உறக்கத்தை அள்ளி வீச, கண்களை மூடி அதைத் தழுவ முனைந்தேன்.

“அந்தக் கதை பெரிய கதை சாமி! அதை மட்டும் சினிமாவா எடுத்தா… சும்மா பிச்சுக்கிட்டுப் போவும்” சுற்றியிருப்பவர்களைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல், உரத்த குரலில் சொல்லி விட்டு ஓங்கிச் சிரித்தான் ஒரு முண்டாசுக்காரன்.

“எனக்கும் அரசல் புரசலாய்க் கொஞ்சம் தெரியும்! இருந்தாலும் உன்னோட வாயால தெரிஞ்சுக்கிட்டா தெளிவாய்ப் போயிடும்!னுதான் கேட்டேன்” கூட இருந்தவன் முண்டாசுக்காரனுக்கு நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல, என்பதைத் தன் தகரக் குரலில் நிரூபித்தான்.

ஏற்கனவே ஏகப்பட்ட மனக் குழப்பத்தோடு பயணம் செய்து கொண்டிருந்த எனக்கு அந்தப் பேச்சு எரிச்சலைத் தந்தது. அவர்களோ சிறிதும் லஜ்ஜையில்லாமல் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

வேறு வழியில்லாமல் தூங்கும் எண்ணத்தைக் கை விட்டு விட்டு அவர்களின் சம்பாஷனையைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினேன்.

“என்னோட புத்திதான் கெட்டுப் போச்சு ஆறுமுகம்!… இல்லேன்னா… தெனமும் மாமியார்க்காரி கிட்ட சண்டை போட்டுட்டு வந்து கண்ணைக் கசக்கிட்டு நின்ன தங்கச்சிக்கு நல்லவிதமா அறிவுரை சொல்லியனுப்பாம… “உன்னோட மாமியாரும் ஆச்சு… அவ வீடும் ஆச்சு… நீ பாட்டுக்கு உன்னோட புருஷனையும், புள்ளையையும் கூட்டிக்கிட்டு என்னோட வீட்டுக்கு வந்துடு புள்ள… நான் காப்பாத்தறேன் உங்களை?” ன்னு சொல்லியிருப்பேனா?” இது முண்டாசுக்காரனின் ஆதங்கம்.

“அது செரி… நீ நாலஞ்சு வீடு வாடகைக்கு விட்டிருக்கே… அந்த தைரியத்துல தங்கச்சி குடும்பத்தை வரச் சொல்லிட்டே”

“ஆமாம் ஆறுமுகம்… அதேதான்… அந்த தைரியத்துலதான் நானும் கூப்பிட்டேன்!… நான் கூப்பிட்டதும் என் தங்கச்சியும் மறுக்காம புருஷனையும் குழந்தையையும் தூக்கிட்டு வந்து… இறங்கிட்டா!… அப்புறம் என்ன பண்ண முடியும்?… ஒரு வாடகை வீட்டுக்காரங்களை காலி பண்ணி அனுப்பிச்சிட்டு… அதுல தங்கச்சி குடும்பத்தைக் குடி வெச்சேன்!… ”

“எப்படியோ மாமியாரோட கொடுமையிலிருந்து அவளைக் காப்பாத்தி… அவளுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் குடுத்திட்டே” என்றான் ஆறுமுகம்.

“க்கும்… ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போச்சு!… என் பொண்டாட்டியும்… என் தங்கச்சி நல்லா பாசமா… நேசமா இருந்தாங்க!..போகப் போகத்தான் ரெண்டு பேருக்குமே சனியன் பிடிக்க ஆரம்பிச்சுது” என்று சொல்லி விட்டு முண்டாசை இறுக்கினான் அவன்.

“பொம்பளைக சமாச்சாரம் தெரிஞ்சதுதானே?… எந்த ஊருல ரெண்டு பொம்பளைக சேர்ந்து ஒற்றுமையா இருந்திருக்காங்க?… பொறாமையும்… வயித்தெரிச்சலும் அவங்க கூடப் பொறந்த குணங்களாச்சே?” கூட இருந்த ஆறுமுகம் ஒத்து ஊதினான்.

“அந்தக் கருமம்தான் என் புத்திக்கு எட்டாமப் போயிடுச்சே?… தெனமும் சண்டைதான்!… வாய்ச் சண்டைல ஆரம்பிப்பாங்க… கடைசில குடுமிப் பிடிலதான் முடியும்!… நானும் இதுகளுக்கு பஞ்சாயத்து பண்ணிப் பண்ணி ஓய்ஞ்சு போனேன்” என்றான் முண்டாசுக்காரன் சற்றுத் தளர்ந்த குரலில்.

“அது செரி… நீதான் என்ன பண்ணுவே?… ஒரு பக்கம் கூடப் பொறந்தவ!… இன்னொரு பக்கம் தாலி கட்டினவ?”

“போகப் போக என் பொண்டாட்டி போட்ட தலகாணி மந்திரத்துல நானே புத்தி மாறிப் போயிட்டேன்னா பார்த்துக்கோயேன்?”

“அடடா… ”

“ஆமாம் ஆறுமுகம்… ஒரு கால கட்டத்திற்குப் பின்னாடி… நானே என் தங்கச்சி கூடவும்… தங்கச்சி புருஷன் கூடவும் சண்டை போட ஆரம்பிச்சேன்!… அது கடைசில எது வரைக்கும் போச்சு தெரியுமா?”

“தெரியும்… தெரியும்… மாமனும் மச்சினனும் வீச்சரிவாளைத் தூக்கிக்கிட்டு ரோட்டுல எறங்கி சண்டை போட்டதை ஊரே வேடிக்கை பார்த்திச்சே?” என்றான் ஆறுமுகம்.

“இன்னிக்கு நானும் அவளும் எலியும் பூனையாட்டமா ஆயிட்டோம்!… அவ மறுபடியும் மாமியார் வீட்டுக்கே போயி… அங்க ஒட்டிக்கிட்டா!… நல்ல பாடம்யா எனக்கு!… . “எங்கியோ… எப்படியோ போறா… நமக்கென்ன?” ன்னு விடாம கூடப் பொறநத பொறப்பாச்சே? ன்னு கூட்டிட்டு வந்து வெச்சு என்னத்தைக் கண்டேன்?… நல்லா இருந்த உறவு அறுந்து போச்சு!… இதே அவ அங்கியே இருந்திருந்தா அவளுக்கு எனக்கும் போக்குவரத்தாவது இருந்திருக்கும்!” அங்கலாய்ப்பாய்ச் சொன்னான் முண்டாசுக்காரன்.

“ஒண்ணு மட்டும் நெசம் சாமி!… எட்டி இருந்தாத்தான் உறவு உறவாயிருக்கும்!… கிட்ட வந்திச்சின்னா.. அவ்வளவுதான்… கூடவே சண்டையும் சங்கடமும் தானா வந்து சேர்ந்திடும்” என்றான் ஆறுமுகம் முண்டாசுக்காரனை ஆறுதல் படுத்தும் விதமாய்.

இதற்குள் நான் இறங்க வேண்டிய ஊர் வந்து சேர, தயக்கமாய் இறங்கினேன். மாலை நேர வெயில் நேராக முகத்திலடிக்க கண்களைச் சுருக்கியபடியே அந்தப் பழமுதிர் நிலையத்தை நோக்கி நடந்தேன்.

“சார்… திருபுவனம் போற பஸ் எத்தனை மணிக்கு?” கதறிக் கொண்டிருந்த ஜூஸ் மிக்ஸியின் மேல் மூடியைக் கையால் அழுத்திப் பிடித்தபடி நின்று கொண்டிருந்த கடைக்காரனிடம் கேட்டேன்.

சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, “இன்னும் கால் மணி நேரத்துல வந்திடும்” என்றவன், “சார்… இப்பத்தான் திருபுவனம் பஸ்ஸிலிருந்து இறங்குனீங்க போலிருக்கு, மறுபடியும் திருபுவனம் பஸ் எத்தனை மணிக்கு?ன்னு கேட்கறீங்களே?” என்னை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தபடியே கேட்டான்.

“அது… வந்து… ஒரு காரியமா ஊருக்கு வந்தேன்!… பஸ்ல வரும் போதுதான் புரிஞ்சுது… நான் செய்ய வந்த காரியம் அபத்தமானது!ன்னு… அதான் வந்த வழியிலேயே திரும்பறேன்” என்றேன் புதிராக.

சத்தமில்லாமல் தனக்குள் எதையோ முணுமுணுத்துக் கொண்டு, தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான் அவன்.

கால் மணி நேரத்தில் வந்து நின்ர திருபுவனம் பஸ்ஸில் ஏறி, ஊர் திரும்பிக் கொண்டிருந்த எனக்கு “அப்பாடா… தப்பிச்சோம்” என்றிருந்தது.

“அந்த கிராமத்தானுக ரெண்டு பேரோட உரையாடலைக் கேட்காம இருந்திருந்தா நானும் என் தங்கச்சியை குடும்பத்தோட கூட்டிக்கிட்டு வந்து… என் வீட்டுல வெச்சிருந்திருப்பேன்!… நாளாவட்டத்துல அவ உறவையே இழந்திருப்பேன்!… நல்லவேளை முண்டாசுக்காரன் தன்னோட அனுபவத்தை உளறினதுல நான் அனுபவிக்க இருந்த ஒரு மோசமான நிகழ்வுல இருந்து தப்பிச்சிட்டேன்”

வீட்டிற்குள் நான் நுழைந்ததும், வேக வேகமாக வந்த என் மனைவி, என் பின்னால் தேடினாள்.

“என்னங்க?… உங்க தங்கச்சியையும், அவ புருஷனையும் கையோட கூட்டிட்டு வர்றேன்னுட்டுப் போனீங்க… இப்ப நீங்க மட்டும் திரும்பி வர்றீங்க?… என்னாச்சு?… அந்த மாமியார்க் கிழவி விட மாட்டேன்!னு தகராறு பண்ணிட்டாளா?” பொங்கினாள் என் மனைவி.

பதிலேதும் பேசாமல் என் அறைக்குள் நான் நுழைய, என்னைத் தொடர்ந்து வந்தவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது? என்று யோசிக்கத் துவங்கினேன் நான்.

(முற்றும்)

1 thought on “அனுபவ பாடங்கள் | முகில் தினகரன்

  1. வள்ளுவப் பெருந்தகை மன்னனிடம் பழகும் முறையை அகலாது அனுகாது தீக்காய்வார் போலும் என்றார். அதேகருத்து உறவுக்கும் பொருந்தும் என்பதை பல முறை அனுபவித்திருந்தாலும் நெருங்கிய உறவுகளின் விசயத்தில் அஞ்ஞானமே மேலோங்குகிறது என்ன செய்ய. இன்னும் அனுபவிக்கிறேன்

Leave a Reply to வேலு பாலசுப்பிரமணியன் ஈரோடு Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930