• கதை
  • இரண்டாவது வாழ்க்கை | வெ. ராம்குமார்

இரண்டாவது வாழ்க்கை | வெ. ராம்குமார்

1 year ago
294
  • கதை
  • இரண்டாவது வாழ்க்கை | வெ. ராம்குமார்

இரவு மணி பதினொன்று. அன்றைய வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அறைக்குள் நுழைந்தாள் கமலா. தன் மனைவியை கண்டதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த டிவி நியூஸ் சேனலை அணைத்தார் ராமசாமி.

“இன்னும் நீங்க தூங்கலையா?”

“தூக்கம் வரலை. உனக்காக காத்துகிட்டு இருந்தேன்.”

“நாம என்ன இளமைக் காதலர்களா என்ன? காத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்றீங்க? என கூறிவிட்டு, எதையோ அலமாரியில் தேடினாள்.

“இதையா தேடிக்கிட்டு இருக்க…” என கட்டிலில் கிடந்த தலைவலி தைலத்தை மனைவியிடம் காட்டினார்.

“அட…. ஆமாம்! தைலத்தை எடுத்து வச்சிட்டு நீங்க என்ன பண்றீங்க?”

“தலைவலி”

“உங்களுக்குமா?”

“குடும்பம்ன்னா பிரச்சனை வரும்ளூ தலையிருந்தால் தலைவலி வரும்ன்னு உனக்கு தெரியாதாடி… தலைவலி மட்டும்தானா அல்லது…” என தன் மனைவியின் கண்களை ஊடுருவி பார்த்தபடி கேட்டார்.

“மூட்டுவலியும்தான்…” என்று மெதுவாக முனுமுனுத்தாள்.

“சரி கட்டில்ல படு. நான் நெற்றியிலும், மூட்டுலேயேயும் தேய்ச்சு விடுறேன்.”

கணவனை வியப்போடு பார்த்து விட்டு சொன்னாள். “பேரன், பேத்தி எல்லாம் எடுத்த பிறகுதான் கிழவனுக்கு ஆசை அதிகமாகிறதோ? நக்கலாய் கேட்டாள்”.

“ஆசை இருக்கிறவன்தாண்டி மனுஷன். கல்யாணமான ஆண்களுக்கு அறுவது வயசுக்கு மேலதான் மனைவிகூட இரண்டாவது வாழ்க்கை தொடங்குது தெரியுமா? நான் என்ன தப்பு பண்ணிட்டா, உன் காலை பிடிக்கிறேன்னு சொன்னேன்?”

“இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? அறுபது வயசுக்கு மேலதான் ஆசையும் சபலமும் அதிகமாகும் தெரியுமா?”

“ஆசையும் சபலமும் கட்டின மனைவி மீது வர்றது தப்பேயில்லைடி.”

“ஆளை விடுங்க சாமி. உங்க கூட என்னால போட்டி போட்டு பேசி ஜெயிக்க முடியாது. இப்ப என்ன வேணும் உங்களுக்கு? இந்த தைலத்தை எனக்கு தடவி விடணும் அவ்வளவுதானே? இந்தாங்க… நான் கட்டில்ல படுத்துக்கிறேன். நீங்க தடவி விடுங்க.” என்றாள்.

மனைவியை கட்டிலில் போய் படுத்ததும், அவளது நெற்றியை தைலத்தால் தடவியபடியே மௌனமாக இருந்தார்.

கமலாவுக்கோ, தன் கணவனின் இன்றைய நடவடிக்கைகள் யாவும் வித்தியாசமாக தெரிந்தது. திருமணமான இந்த முப்பத்தைந்து வருடத்தில் ஒருமுறை கூட அன்பாக பேசி, தைலம் தடவிவிட்டதில்லை. கணவனை உற்றுநோக்கினாள். அவனது முகத்திலோ, கவலையின் ரேகைகள் அப்பட்டமாக தெரிந்தது.

“என்னங்க என்ன ஆச்சு ஏன் டல்லா இருக்கீங்க?”

“ஒன்னுமில்லை கமலா. நமக்கு கல்யாணமாகியும், ஊரிலிருந்து இந்த சென்னைக்கு வாழ வந்ததும் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருஷமாச்சு. இத்தனை வருஷத்துல, நான் உனக்காக ஒருநாள் கூட சந்தோசமா பேசி, நாளை கழிச்சதில்லை. சினிமா, பீச், பார்க்குன்னு வெளியே கூட்டிக்கிட்டு போனதில்லை. நீதான் நம்ம பசங்களையும் வளர்த்தே. நான் வேலை, ஓவர்டைம்ன்னு ஆபிஸ்லேயே என் வாழ்க்கையை கழிச்சுட்டேன். இத்தனை வருஷத்துல ஒருநாள் கூட நான் உன்னை பற்றி கவலைப்பட்டது கூடயில்லை தெரியுமா?”

கிட்டத்தட்ட தன் கணவர் என்ன சொல்ல விஷயத்துக்கு வருகிறார் என்பதை ஓரளவு யூகிக்க கமலா, “ஏங்க நான் உங்களை என்னைக்காவது குறை கூறியிருப்பேனா? கண்டதையும் நினைச்சு வீணா மனசை போட்டு குழப்பிக்காதீங்க.”

“இல்லை… இல்லை கமலா! நான் வேலையிலிருந்து ரிட்டையர்டாகி சரியாக ஒரு வருஷமாச்சு. இந்த ஒரு வருஷமாகதான் நான் உன்னை நல்லா கூர்ந்து கவனிக்கிறேன். வீட்ல எல்லா வேலையும் நீதான் செய்யறே. தனிக் குடுத்தனம்ன்னாலும் பரவாயில்லை. கூட்டுக் குடித்தனம். கல்யாணமான ரெண்டு பசங்க மூணு பேரன் பேத்திங்க. இதுவரை எந்த மருமகள்களும் வேலை செஞ்சே நான் பார்த்ததில்லை. எப்ப பாரு டிவி சீரியல்தான்.”

“பாவங்க சின்னஞ்சிறுசுக… சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே.”

“ஓஹோ.. வந்தவங்க எல்லாம் சந்தோஷமா இருக்கனும். ஆனா என் மனைவி கஷ்டப்படணுமா? இதாவது பரவாயில்லை. பேரன், பேத்திகளும் பாட்டி, தாத்தான்னு நம்மை சுத்தி சுத்தி வராங்க. நம்ம பசங்க செருப்பால அடிக்கணும்… மனைவிங்க பேச்சைக் கேட்டு பூம் பூம் மாடு மாதிரி இருக்காங்க பாரு! அவனுங்களுக்கு அவனுக்கு பொண்டாட்டி ராணின்னா, எனக்கு என் மனைவி என்ன அடிமையா?”

“கத்தி பேசாதீங்க. தூங்கிட்டிருக்ருக்கற நம்ம பசங்களும், மருமகளுங்களும், பேரப் பசங்களும் எழுந்திட போறாங்க. நான் என்ன மூணாவது மனுசனோட குடும்பத்திற்காகவா உழைக்கிறேன். நம்ம குடும்பம்பங்க இது. இதுல ஏன் பாகுபாடு பார்த்து பிரிக்கிறீங்க?”

“என் மனைவிக்கும் என் மருமகளோட வயசுன்னா, நான் ஏன் கேள்வி கேட்க போறேன். இந்த ஐம்பத்தேழு வயசுல வீட்ல படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டிய சமயத்தில, வீட்ல எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செஞ்சுட்டு இப்படி ராத்திரியில் வந்து தலைவலி, கால்வலின்னு; நீ அவஸ்தைப்படறதை பார்க்கும்போது எனக்கே கஷ்டமாயிருக்குடி.”

தன் மீது தன் புருஷன் வைத்த அன்பை முதன் முதலாக அவர் வாயினால் கேட்கும்போது மெய்சிலிர்த்துப் போனாள் கமலா. ஆனந்தத்தில் அவளது கண்கள் கலங்கியிருந்தது.

“இதையெல்லாம் பெரிசாக எடுத்துப்பீங்க. முதல்ல போய் தூங்குங்க.” என்றாள்.

“இல்லடி, என்னால நீ இங்கே அடிமை மாதிரி இருக்கிறதை என்னால ஜீரணிக்க முடியல. நீ இரண்டு மருமகள்களையும் சோம்பேறி ஆக்கி அவங்க மூளையை மழுங்கடித்து வைத்திருக்கே. பேரன் பேத்திகளுடய அன்பு வட்டத்தில வசமா சிக்கியிருக்கே. இதெல்லாம் போதும்.. நான் என் மனைவியை இரண்டாவது ஒரு வாழ்க்கையாவது நிம்மதியா, சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு எடுக்கவெடுக்கிறேன்.” என்று கூறிவிட்டு தைலம் தேய்ப்பதை நிறுத்திவிட்டு, விளக்கை அணைத்து விட்டு படுக்கச் சென்றார்.

தன் கணவர் வில்லங்கமாக ஏதாவது செய்து விடுவாரோ, இந்த குடும்பத்தில் இருந்து தன்னை பிடித்து கூட்டிக் கூட்டிகிட்டு போய் விடுவாரோ… என்ற பயம் கமலாவை இப்பொழுது தூங்கவிடாமல் செய்தது.

“அப்பா” என்று தனது இரு மகன்களின் கோரஸான குரல்களை கேட்டதும், படித்துக் கொண்டிருந்த பேப்பரை சுருட்டி கீழே வைத்துவிட்டு,

“என்னப்பா என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“பசங்களுக்கு முழுப்பரீட்சை லீவு விட்டாச்சு. 45 நாள் ஸ்கூல் லீவு. அதனால மனைவியையும், குழந்தைகளையும் அவங்கம்மா வீட்டுல போய் விட்டுட்டு வந்திடறோம்ப்பா.” என்றான் மூத்தவன் ரகு.

“ஆமாம்ப்பா… என அண்ணன் கூறியதை அப்படியே வார்த்தைகளால் வழிமொழிந்தான் இளையவன் பாபு.

இருவரையும் அமைதியாக மாறி மாறி பார்த்தவர்,

“ஏன் வருஷா வருஷம் உங்க மனைவிகளுடைய பெத்தவங்க வீட்டுக்குத்தான் போகணுமா? ஒரு மாறுதலுக்காக, இந்த முறை உங்க பாட்டி, தாத்தா இருக்கிற நம்ம கிராமத்துக்கு போகக்கூடாதா?”

“பாவம்ப்பா.. தாத்தாக்கும் பாட்டிக்கும் ரொம்ப வயசாயிடுச்சி. வயசான காலத்துல அவங்களை போய் ஏன் தொல்லை பண்ணனும்ன்னு…” என இழுத்தான் ரகு.

“கவலைப்படாதேப்பா… அவங்க ரெண்டு பேருமே கிராமத்துல விவசாயம் செஞ்சு, இயற்கையோடு வாழ்ந்து எண்பது வயசுக்கு மேலலேயும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாத்தான் இருக்காங்க. நீங்க ஜாலியா மாமனார் வீட்டுக்கு போய்டுவீங்க. நானும் உங்க உங்கம்மாவும் இங்கே தனியா வீட்டுக்கு காவலுக்கு இருக்கனும் அப்படித்தானே?”

“அய்யோ… அப்படியில்லப்பா! நீங்களும் அம்மாவும் வேணுமின்னா, தாத்தா பாட்டியை போய் பார்த்துட்டு வாங்க.” என்றான் இனையவன் பாபு.

“வேண்டாம்.. வேண்டாம்ப்பா! நீங்க மட்டும் ஊருக்கு போங்க. அம்மா இங்கேயே இருக்கட்டும். நாங்க ரெண்டு மூணு நாள்ல இங்க வந்துடுவோம். ஹோட்டல் சாப்பாடு எங்களுக்கு ஒத்துக்காதுப்பா…” என அவசர அவசரமாக மறுத்தான் மூத்தவன் ரகு.

“சரியான சுயநலக்காரனுங்கடா நீங்க… உங்களை சொல்லி தப்பில்ல… அம்மா பிள்ளையா வளர்த்து வச்சிருக்காள் பாரு. அவளை சொல்லனும்.”

இப்போது இருவருமே பதிலேதும் பேசாமல் அமைதியாக தலை கவிழ்ந்து நின்றனர்…

நடக்கும் விவாதங்களையெல்லாம் தனது இரு மருமகள்களுடன் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் கமலா.

“ஓகே. நீங்க போகனும்ன்னு முடிவெடுத்துடீங்க. நல்லபடியா போய் வாங்க.”

இப்பொழுது மகன்கள், மருமகள்கள், கமலா முகத்திலும் அத்தனை சந்தோஷம், புன்னகைகளாக மின்னியது.

“ஆனால் ஒன்று… நான் கல்யாணமானதில் இருந்து இதுவரை உங்க அம்மாவை எங்கேயுமே கூட்டிட்டு போனதில்லை. அதனால உங்கம்மாவை கூட்டிட்டு தமிழகத்தில் இருக்கிற ராமேஸ்வரத்தில இருந்து வடக்கில் இருக்கின்ற காசி வரை ஒரு புண்ணிய யாத்திரை போகலாம்னு இருக்கேன். போய் வர எப்படியும் மூணு மாசம் ஆயிடும்.”

“எ… என்னது மூணு மாசமாவா? என்னப்பா இது. திடீர்னு சொல்லாமல், கொள்ளமல் இப்படி ஒரு முடிவெடுத்ததுட்டீங்க?” என்றான் ரகு.

“நீங்க ஊருக்கு போறதை என்கிட்ட சொல்லிட்டா, முடிவெடுத்தீங்க. நாங”க வர வரைக்கும் வீட்டையும் பேரக் குழந்தைகளையும் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. என்ன புரியுதா?” என்று கேட்டார் ராமசாமி.

இதுவரை அப்பாவின் பேச்சை தட்டாமல் வளர்ந்த பிள்ளைகள் இருவரும் மாறி, மாறி மறுப்பேதும் கூறாமல் தலையாட்டினார்கள்.

இதுவரை சிரித்துக் கொண்டிருந்த இரு மருமகள்களும் இப்பொழுது கமலாவின் பார்த்தபடி தங்களது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்கள்.

மெதுவாக கணவரிடம் வந்தவள், “ஏங்க இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க… எனக்கு இதில உடன்பாடில்லைங்க.”

“கமலா! உனக்கு இப்பவாவது விடுதலை கிடைச்சிருச்சுன்னு நினைச்சு சந்தோஷப்படு… நீ இவங்க திருப்திக்காக வாழ ஆரம்பிச்சா, கடைசி வரைக்கும் போராடிக்கிட்டேதான் இருக்கனும். இது நான் ஏற்கனவே எடுத்த முடிவுதான். ஆனால் பேச இன்னிக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சது. நாளை நாம புறப்புடறோம் துணிமணிகளை எல்லாம் எடுத்து வை.” என்றார்.

“நான் என்ன சொல்ல வர்றேன்னா…” என கமலா ஏதோ கூற முற்படவும்,

கோபத்துடன் மனைவியை பார்த்தவர், “இனி நான் சொல்றதை மட்டும் நீ கேளு அது போதும்.” என்றார்.

கணவனின் கோப வார்த்தைக்கு கட்டுப்பட்டவளாக அறைக்குள் நுழைந்தாள் கமலா.

கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் கழிந்த நிலையில் அன்றுதான் வீடு திரும்பினார்கள் ராமசாமியும் கமலாவும்.

வீட்டுக்குள் நுழைந்த ராமசாமியும் கமலாவும் பேரன் பேத்திகளை பார்த்ததும் கையில் தூக்கி எடுத்து கொஞ்சினார்கள்.

“என்னப்பா இது. கிட்டத்தட்ட நீங்கயில்லாத அந்த மூணு மாசத்துல நாங்க எல்லாம் ரொம்பத் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா?” என்றான் இளையவன்

“ஆமாம்! அம்மா ஏன் ரொம்ப டல்லாயிருக்காங்க?” என்று கேட்டான் மூத்தவன்.

“அவளுக்கு உடம்பு சரி இல்லைப்பா. க்ளைமேட் ஒத்துக்களை வேற ஒன்னுமில்ல. எல்லாமே இரண்டு மூணு நாள்ல சரியாயிடும்.” என்றார். கமலாவோ தனது பேரக் குழந்தைகளின் முகத்தை கண்டதும், புத்துயிர் பெற்றவளாக உணர்ந்தாள் இப்போது!

என்னது! நீங்களும், அம்மாவும் ஊர்ல போய் செட்டிலாகாப் போறீங்களா… ஏன்ப்பா, உங்களுக்கு இங்கே என்ன குறை வெச்சோம் சொல்லுங்க?” மூத்தவன் கேட்டான்.

“அம்மா! அப்பாவுக்கு நீங்களாவது எடுத்து செல்லக் கூடாதா? இப்ப என்ன அவசர பிரச்சினைன்னு ஊருக்கு கிளம்புறீங்க? என தன் தாயிடம் கேட்டான் இளையவன்.

“எதுவா இருந்தாலும் அப்பா கிட்ட கேளுப்பா. கட்டின புருஷன் பேச்சை நான் மீற முடியுமா? நீயே சொல்லு?” என ஒதுங்கினாள் கமலா. அவளுக்கும் தன் குடும்பத்தை விட்டு பிரியும் ஏக்கம் விழிகளில் தெரிந்தது!

“பசங்களா பெத்தவங்க மேல நீங்க வச்சிசிருக்கிற பாசம் எனக்கு புரியுதுப்பா.. இந்த முடிவுக்கும், உங்கம்மாவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லைப்பா.. எனக்கு என் மனைவியோட உடல் நலமும் ரொம்ப முக்கியம். எனக்காகவும், இந்த குடும்பத்துக்கவும் இதுவரை மாடு போல உழைச்சவளுக்கு நாம யாராவது கைமாறு செஞ்சிருப்பமா? அட்லீஸ்ட் நீங்க யாராவது அவளிடம் போய் சாப்பிட்டீங்களா? உடம்பு எப்படியிருக்குன்னு கேட்பீர்களா.. இல்லவே இல்லை.. நானும் இதுவரை கேட்டதில்லை.. உடல் வலியால் அவள் தினமும் ராத்திரி படற அவஸ்தை எனக்குதான் தெரியும்.”

“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லப்பா.. நாங்க வேணும்னா அம்மாவை பெரிய ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் பண்ணி உடலை செக் பண்ணி, ட்ரீட்மெண்ட் எடுத்துக்களாம்ப்பா.” என்றான் பெரியவன்.

“அவள் உடலுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்திடுவே சரி. இந்த முப்பத்தைந்து வருஷமா வாழ்க்கையில் எவ்வளவு சந்தோஷமான விஷயம் விட்டுக் கொடுத்திருக்காள். அதை உன்னால் கொடுக்க முடியுமா? உண்மையை சொல்லனும்னா அவள் என்னோடு முழுசாய் இருந்ததே இந்த 100 நாள் புனித யாத்திரையில்தான்பா.

அப்ப கூட பையன்கள் பேரக்குழந்தைகளோட நினைப்புதான். இதுவரைக்கும் நான் ஒரு பொருளாக கணவனாக இருந்துட்டேன். இனி பொறுப்பானவனாக இருக்க விரும்பறேன்டா. இப்ப ஊர்லயிருந்து வந்த ஒரு வாரமா நானும் பார்த்தேன்.

உடல்நிலை சரியில்லாத என் மனைவியை நீங்க எப்படியிருக்குன்னு கேட்கலைன்னாலும், அவளை வேலை வாங்காமல் பாத்துட்டீங்க. உங்க மனைவிகளும் ஆள் இல்லைன்னதும் பொறுப்பா இந்த குடும்பத்தையும் உங்களையும், பேர பிள்ளைகளையும் கவனிச்சிக்கிட்டாங்க. இதைத்தான், இந்த மாற்றத்தைதான் எதிர்பார்த்தேன். உங்களுக்கு உங்க பெத்தவங்க எவ்வளவு முக்கியமோ, எங்களுக்கும் வயசான துணையில்லாமல் இருக்குற எங்க பெத்தவங்களும் முக்கியம். அதனால் கிளம்புகிறோம். நீங்களும் லீவு விட்டால், வந்து போய் இருங்க.. நாங்களும் வருகிறோம்.” என ராமசாமி கூறி முடிக்கவும்,

“எங்களை மன்னிச்சிடுங்கப்பா! எங்க சந்தோஷத்தை மட்டுமே யோசிச்சோம். உங்க மனசை புரிஞ்சுக்க தவறிட்டோம். உங்க முடிவு சரிதான்… உங்க இரண்டாவது வாழ்க்கை இனிதாக அமையட்டும்.” என ரகு வாழ்த்த… பாபுவும் வழக்கம் போல ஆமோதிக்க.. ‘ஆனந்த கண்ணீருடன்’ இருவரும் விடைபெற்று கிளம்பினார்கள்

1 thought on “இரண்டாவது வாழ்க்கை | வெ. ராம்குமார்

  1. ஒரு நல்ல கணவன் மனைவியின் நற்குணங்களை தெளிவாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள் நல்வாழ்த்துக்கள்

    வீரன்வயல் வீ.உதயக்குமாரன்

Leave a Reply to வீரன்வயல் வீ.உதயக்குமாரன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930