அலி பாட்ஷா | சிறப்பு நேர்முகம்

1 year ago
526

மதுமிதா : உங்களுக்கு ஏன் சமூக சேவையில் மேல ஆர்வம் வந்தது?

அலி பாட்ஷா : எனக்கு சமூக சேவையை தாண்டி சொல்லிக் கொடுக்கிறதில்தான் ஆர்வம் ரொம்ப வந்தது. நான் ஒரு ஆசிரியராக விருப்பப்பட்டேன். அது நிறைவேறாததால், ஆசிரியர் வேலைக்கு படிக்காததால் ஆசிரியராக வேலை கிடைக்கவில்லை. நான் ஒரு டியூசன் சென்டர் வைத்துவிட்டேன். கடவுள் முருகன் மாதிரி எனக்கான உலகத்தை நானே அமைத்துக் கொண்டேன். பிறகு இந்த சமூக சேவை ஆர்வம் அங்குதான் விதைக்கப்பட்டது.

படிப்பு சம்பந்தமாக செல்கின்ற நேரத்தில், சில தேவைப்பட்ட பொழுது, அதை சரி செய்வதற்காக மாற்று வழி இந்த சமூக சேவை என்று புரிந்துகொண்டேன். அப்படித்தான் இந்த சமூக சேவையை ஆரம்பித்தேன்.

நர்மதா : நீங்கள் முதல் முதலாக சமூக சேவை செய்ய ஆரம்பிக்கும் பொழுது அதற்கான தொகை எப்படி பெற்றீர்கள்?

அலி பாட்ஷா : சமூக சேவை செய்வதற்கு பணம் என்பது ஒரு முக்கியமான பொருட்டு அல்ல. ஆனால் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். பணம் தானாக வந்து சேர்ந்துவிடும். முயற்சி மட்டுமே காரணம். தவறான கண்ணோட்டமாக இப்போது வரை பார்க்கப்படுகிறது.

முதலில் செலவழித்தது என்னுடைய தனிப்பட்ட உழைப்பிலிருந்து கிடைத்த பணத்தை இதற்காக செலவு செய்தேன் என்பது ஒரு முக்கியமான விஷயம். எனது குடும்ப தொழிலான இறைச்சிக் கடையில் இருந்து நான் வருமானத்தை பெற்று இந்த சமூக சேவையை முதல் படியாக ஆரம்பித்து ஆரம்பித்தேன்.

நான் படித்து முடித்ததும் எங்களின் குடும்ப தொழிலில் நிறுத்தினார்கள். அதில் இறைச்சிக்கடைக்காக ஆடு மேய்ப்பதில்தான்; முதலில் வேலை. ஆடு மேய்த்துக் இருந்து கிடைத்த பணத்தை வைத்துதான் தொடங்கினேன்

சாருமதி : உங்களுக்கு சின்ன ஆசை என்று எதுவும் கிடையாதா?

அலி பாட்ஷா : ஆசை அல்ல பேராசை இருக்கிறது. வடசென்னை மக்கள் என்றால் இப்படி ஒரு சில முத்திரைகள் இருக்கிறது. அதையும் தாண்டி வடசென்னை மக்களைப்பற்றி இன்னும் பெரிதாக பெருமையாக பேசப்பட வேண்டும் என்ற பேராசை என்னுள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

நான்சி : நீங்கள் முதன் முதலில் இது போன்ற சமூக சேவை செய்ய வரும் பொழுது மற்றவர்களுடைய கருத்தும் ஊக்குவிப்பும் எவ்வாறு இருந்தது?

அலி பாட்ஷா : இது நான் பள்ளியில் காலத்திலிருந்தே தொடங்கியதுதான். என்னுடைய சக பள்ளி தோழி சித்ரா அவர்களும் இணைந்து தான் ஆரம்பித்தோம். எங்க வீட்டிலும் சரி அவர்கள் வீட்டில் சரி இதற்கு பெரிதாக ஒன்றும் ஊக்குவிக்கவில்லை. ஆனால் பத்து பதினைந்து நாட்கள் தாண்ட்டட்டும் பார்க்கலாம் என்று தான் சொன்னார்கள். அதை எல்லாம் தாண்டி 27 வருடங்கள் கடந்து இன்னமும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது என்பது பெருமையான விஷயமாக தோன்றுகிறது.

யோகநாத் : உங்களுக்கு எப்படி இப்படி ஒரு கற்றல் மையம் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது?

அலி பாட்ஷா : நல்ல கேள்வி. நம்முடைய கல்விமுறை சரி இல்லை என்று எனக்கு அப்போதே தோன்றியது. அதனால் பெரிய அளவில் மாற்றம் செய்ய முடியவில்லை என்றாலும் நம்ம அளவிலாவது அதை மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததுதான். படிப்பு என்பது வேறொரு பரிமாணத்தில் செய்ய வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் தான் இதற்கு காரணம்.

நமது ஜெனித் கற்றல் மையத்தில் படிப்பு மட்டுமல்ல யார் யாருக்கு என்னென்ன திறமைகள் இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் பல விஷயங்களையும் உள்ளடக்கிய தான் இந்த கற்றல் மையத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

சந்தியா : இந்தத் துறையில் நீங்கள் நுழைந்ததும் பல எதிர்ப்புகள் வந்திருக்கலாம். அதை எப்படி நீங்கள் சமாளித்து இத்தனை வருடங்களாக வெற்றிகரமாக இந்த கற்றல் மையத்தை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

அலி பாட்ஷா : நிச்சயமாக புதுமையாக எது நடந்தாலும் அதற்கு எதிர்ப்பு வந்தே தீரும். தட்டையாக இந்த உலகம் இருக்கிறது என்ற காலகட்டத்தில், இல்லை இது உருண்டையாக தான் இருக்கு என்று சொன்ன கலிலியோவை பைத்தியக்காரன் என்று ஒதுக்கி வைத்த உலகம்தான் இது.

விமர்சனம் இரண்டு வகையாகத் தான் வரும். ஒன்று உண்மையாக இருக்கும் மற்றொன்று பொய்யாக இருக்கும். பொய்யாக இருக்கும் பட்சத்தில் ஏற்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உண்மையாக இருக்கும் பொழுது ஏற்றுக்கொண்டு செல்ல வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் நாம் பதிலளித்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி நாம் எல்லாவற்றுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தால் நாம் செய்யவேண்டிய முக்கியமான வேலைகளுக்கு நேரமிருக்காது. எது முக்கியமோ அதை மட்டும் கவனித்து சென்று கொண்டிருந்ததால்தான் இந்த வளர்ச்சி.

அபிதா : இதையெல்லாம் நீங்கள் சின்ன சின்ன சந்தோசமாக பார்க்கிறீர்கள்

அலி பாட்ஷா : ஒவ்வொரு மாற்றங்கள் நிகழும் பொழுதும் சின்ன சின்ன இல்லை சின்ன சிறிய சந்தோஷம் நல்ல பெரிய பெரிய சந்தோஷமாக தான் தோன்றுகிறது நான் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற ஒவ்வொரு மாற்றங்களும் நிகழும் போது அது பெரிய சந்தோஷமாகத்தான் இருக்கிறது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அது பின்னர் சந்தோசமாக தோன்றலாம் ஆனால் எனக்கு எல்லாமே பெரிதாக தான் தோன்றுகிறது அதனால்தான் ஒவ்வொரு நிகழ்வையும் திருவிழாவாக நடத்திக் கொண்டிருக்கிறோம்

லாவண்யா : நீங்கள் எதனால் இந்த கற்றல் மையத்தை இன்னும் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?

அலி பாட்ஷா : தெரிந்தோ தெரியாமலோ பலர் நாம் செய்கின்ற செயல்களை கவனித்து நம்மை பின்தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக விடக்கூடாது என்பதற்காக. ஒரு விஷயத்தை எடுத்தால் அதை முழுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படவேண்டும். எவ்வளவு செய்தாலும் போதாது என்று தான் தோன்றுமே தவிர இதற்கு ஒரு எல்லையே கிடையாது. முடிவே கிடையாது. அதைத்தாண்டி இதற்கு அடுத்த கட்டத்திற்கான சரியான நபர் கிடைக்கவில்லை என்ற ஒரு வேடிக்கையான விஷயம் இதில் உள்ளடக்கியிருக்கிறது.

அபிதா : இந்த காலகட்டத்தில் நிறைய பேருக்கு தாங்கள் உதவி செய்திருக்கிறீர்கள். அப்போது தாங்கள் சாப்பிட முடியாமல் சாப்பிடாமல் சோர்வால் துவண்ட தருணங்கள் உண்டா?

அலி பாட்ஷா : சாப்பிடாததால் சோர்வடைய வில்லை. நிறைய நேரங்களில் கோரிக்கைகள் வந்த பொழுது அதற்கு போதுமான நிதி உதவி கிடைக்காமல் அந்த கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றுவோம் என்று நினைத்த மாத்திரத்தில் சோர்ந்து போன தருணங்கள் நிறைய உண்டு.

நிறைய நேரங்களில் காலையில் ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் உணவருந்தி இருக்கும் அப்போதெல்லாம் சோர்வு ஏற்பட்டதே இல்லை. ஆனால் கோரிக்கைகளுக்கு அப்போது பணம் இல்லாத தருணத்தை பார்த்த பொழுது நிறைய துவண்டு போன தருணங்கள் இருந்தது.

எப்பொழுதும் உடல் சோர்வு ஏற்பட்டதில்லை. சாப்பிடாமல் நிறைய நாட்கள் இருந்த பொழுது கூட மனசோர்வு ஏற்பட்டதே தவிர உடல் சோர்வு ஏற்படவில்லை. ஆனாலும் அந்த சாப்பிடத் தோன்றும் போது அந்த நேரங்களில் தட்டை பார்க்கும் பொழுது இந்த நேரத்தில் எத்தனை பேர் சாப்பிடாமல் இருந்து கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற உணர்வு மட்டும் சோர்வு ஏற்படுத்தியது.

நூர் நிஷா : உங்களைப் போல எத்தனை பேரை உருவாக்கி இருக்கிறீர்கள்?

அலி பாட்ஷா : இதை நான் உருவாக்க முடியாது. யாரும் உருவாக்க முடியாது. அவர்கள் அவர்களாகவே எண்ணம் போல் தோன்ற வேண்டுமே தவிர இது சொல்லி உருவாவதில்லை. இது மனித இயல்பு. அப்படி உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் கூட நிச்சயமாக முடியாது என்பதுதான் உண்மை. அப்படி இருந்தாலும் கூட தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு சென்றுவிடுவார்களே தவிர உருவாக மாட்டார்கள். இது மனித இயல்பு.

ஆனால் இந்த என்னை பார்த்து நிறையப்பேர் உருவாகி இருக்கிறார்கள் என்பது இந்த கொரானா காலகட்டத்தில் தெரிந்து கொண்டேன். அறிமுகமாகும்போது உங்களைப் பார்த்து தான் நான் இது போன்ற செயல்கள் செய்கிறேன் என்று சொல்லி நீங்கள்தான் முன்னுதாரணம் என்று சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உங்களைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று சொல்லி தங்கள் செய்த சேவைகள் பற்றி சொல்லும் பொழுது, என்னை பார்த்து நிறைய பேர் உருவாகி இருக்கிறார்கள் என்று தோன்றியது. நிறைய பேர் உருவாவதற்கான முன்னுதாரணமாக மட்டுமே இருந்திருக்கிறேன்.

ராஜா : நீங்கள் இது போன்ற உதவிகள் செய்யும் பொழுது, மிகவும் கஷ்டப்பட்டு, இதை விட்டுவிடலாம் என்று உங்களுக்கு தோன்றி இருக்கிறதா?

அலி பாட்ஷா : எப்பொழுதும் நான் இதை செய்வதாக நினைக்கவில்லை. சொன்னதுமில்லை. கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு இது கடவுள் செய்வதாக நினைத்துக் கொள்ளலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த பிரபஞ்சம் இதை செய்ததாக நினைத்துக் கொள்ளலாம். கொரானா காலகட்டத்தில் நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது.

இரவு லோகேஷ் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இவ்வளவு கோரிக்கைகள் இருக்கிறது எப்படி செய்யப் போறோம் என்று தெரியவில்லை என்று சொல்லும் பொழுது, இவ்வளவு நாள் எப்படி செய்தோமோ அப்படித்தான் செய்வோம். இதற்காக ஒன்றும் தனியாக போய் சம்பாதித்து கொண்டு வரவில்லை என்று சொல்வேன்.

நள்ளிரவு 12 மணி வரை எந்த செய்தியும் வந்திருக்காது. விடியற்காலை 4 மணிக்கு எழுந்திருக்கும் போது அந்த நேரத்தில் திடீரென யாராவது ஒருவர் 50,000 ரூபாய் போட்டு இருப்பார்கள் யாராவது ஒருவர் 25,000 ரூபாய் போட்டு இருப்பார்கள். உடனே அனைவரையும் வரவழைத்து பணம் வந்துடுச்சு தயாராகுங்குள் என்று சொல்லி உற்சாகமாக கிளம்புவோம்.

எது பண்ணாலும் நான் பண்ணேன் சொல்ல மாட்டேன். எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அது வந்த மாதிரியே திரும்பிப் போய்விடும்.

இப்ப வரைக்கும் கஸ்டங்களுடன் ஓடிகிட்டு இருக்கேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் 50,000 மற்றும் 25,000 அப்படின்னு அதிகமா பணம் கொடுத்து இந்த மக்களுக்கு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த மின் கைத்தடி வழியாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்தியா : உங்களுக்கு 50,000 ரூபாய் 25,000 ரூபாய் வாட்ஸ் அப்பில் வந்திருக்கும் தகவல்களை பார்த்து அந்த ஒரு நிமிடம் உங்களுக்கு எப்படி இருக்கும்?

அலி பாட்ஷா : எப்படா மணி 7 ஆகும் என காத்திருப்பேன். ஏழு மணிக்குதான் கடைகள் எல்லாம் திறப்பாங்க. பொருட்கள் வாங்கி அந்த கோரிக்கையை வைத்தவர்களுக்கு கொண்டு சேர்ப்போம் என்று இருக்கும். ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணிக் கொண்டே இருப்பேன். 7 மணி ஆயிடுச்சா ஏழு மணி ஆயிடுச்சு என்று கடைகளுக்கு கிளம்புவோம். அப்படிதான் இருந்துச்சு என்னோட மனநிலை.

சாருமதி : இந்த கொரானா காலகட்டத்தில் இவ்வளவு உதவிகள் செய்யும் பொழுது ஜெனித் கற்றல் மையத்தின் மாணவர்களாகிய உங்களது மாணவர்களின் பங்கு என்ன?

அலி பாட்ஷா : நல்ல கேள்வி. இதை பற்றி யாரும் கேட்கவில்லை என்றால் கடைசியில் நானே சொல்லி இருப்பேன். அவர்கள் வேறு நான் வேறு அல்ல. நம் உடல் உறுப்புகள் போல கைகள் போல கால்கள் போல. அதுவாக இயங்குவது போல. என்ன நடக்கும்னு நினைக்கிறோமோ அது எல்லாமே அவர்களே வந்து சேர்ந்ததும் நடந்துவிடும்.
நான் வேறு அவர்கள் வேறு என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நம் உடல் உறுப்புகள் எப்படி நாம் நினைத்ததை செய்கிறதோ அப்படி இந்த செயல்களில் அவர்களும் பகுதிதான். வேலை என்று சொல்லும் பொழுது அவர்கள் இல்லத்தில் இருந்தாலும் ஓடி வந்து விடுவார்கள் அதுதான் அவர்களுடைய சிறப்பு.

சந்தியா : அந்த சமயத்தில் தங்கள் இல்லத்தில் உறுப்பினர்கள் எப்படி சமாளிப்பீர்கள் எவ்வாறு தங்களுக்கு ஒரு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்?

அலி பாட்ஷா : கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களுக்கு பேக்கிங் செய்வது மற்றும் பேக்கிங் செய்பவர்களுக்கான உணவு தயாரிப்பது போன்ற வேலைகளை அவர்கள்தான் செய்தார்கள். சமாளிப்பதற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. என்னை பற்றி தெரியும் என்பதால் அனைவரும் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது.

அதையும் தாண்டி இந்த பசியின் கொடுமை அவர்களுக்கும் தெரியும் என்பதால் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் 5 மற்றும் 6 வயதுடைய என்னுடைய பேரன்கள் பேத்திகள் எல்லாம் இந்த வேலைக்கு உதவினார்கள் என்பது தான் முக்கியமான விஷயம். இது ஒரு சவாலாகவே இல்லை மிகவும் எளிதாக இருந்தது.

லாவண்யா : மின் கைத்தடி மின்னிதழ் வாயிலாக தங்களது மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அலி பாட்ஷா : என்னுடைய மாணவர்களுக்கு மட்டுமல்ல எல்லா மாணவர்களுக்கும் தான். முன்னாடி இருந்த மாணவர்களை விட தற்போது இருக்கும் தலைமுறை மிகவும் தாராளமாக ஒரு பரந்த மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். அதற்கு உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம்.

இன்னமும் உயிர்ப்போடு சமூகம் பற்றிய விழிப்புணர்வு வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்க வேண்டும். தேவையில்லாத செயல்களை விட்டுவிட்டு இது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் முன்னெடுக்க வேண்டும் அப்படி செய்தால் இன்னும் சந்தோஷம்.

மதுமிதா : தற்பொழுது பதினெண்ம பருவத்தில் இருப்பவர்கள் காதலை மிக எளிதாக கலந்து விட முடிகிறது அவர்களுக்கு தங்களது ஆலோசனை?

அலி பாட்ஷா : அந்த காதல் என்னும் சம்பவத்தினால் நிகழ்ந்த பல இருக்கின்றன. அதனால இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தங்கள் இலக்கை அடைய முடியாதவர்கள் பேர் இருக்கிறார்கள். ஒரு சிலர் சுதாரித்து காதலை கடந்து தங்கள் லட்சியத்தை தொட்டு இருக்கிறார்கள். காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி அது முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று நாம்தான் சரியான கோணத்தில் பார்த்து நம் வாழ்வின் வழி முறையை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

நம் இலக்கை அடைந்த பிறகு வரும் காதல் நிச்சயமாக நம் வாழ்வின் கடைசி வரை வரும். உண்மையான காதல் என்பது நாம் இலக்கை அடைவதற்கு உதவி செய்ய வேண்டுமே தவிர அதை தடை செய்ய இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து.

சாருமதி : கடைசியாக உங்களுடைய செய்தி…

அலி பாட்ஷா : நாங்கள் வடசென்னையில் ஏதோ ஒரு ஓரத்தில் இருக்கும் எங்களை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மின் கைத்தடியில் எங்கள் பற்றிய செய்தியை பதிவு செய்து எங்களையும் வெளிக்கொண்டு வந்ததற்கு உதவி செய்த மின் கைத்தடி பொறுப்பு ஆசிரியர்கள் லதா சரவணன் மற்றும் கமலக்கண்ணன் ஆகிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930