இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர், “கல்கி”. தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி.
“கல்கி”யின் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899_ம் ஆண்டு செப்டம்பர் 9_ந்தேதி பிறந்தார். பெற்றோர் ராமசாமி அய்யர் _ தையல்நாயகி.
புத்தமங்கலத்தில் ஆரம்பக் கல்வி பயின்றபின், திருச்சி ஈ.ஆர். உயர்நிலைப்பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.
1921_ம் ஆண்டில், காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினார். நாட்டு விடுதலைப் போரில் பங்கு கொள்ள வேண்டு மென்று விரும்பிய கல்கி, படிப்பை விட்டு விட்டு, கரூரில் நாமக்கல் கவிஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தடையை மீறிப் பேசினார். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். அவருக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.
சிறையில் இருந்தபோது “விமலா” என்ற தமது முதல் நாவலை எழுதினார். இந்த நாவல் பிறகு “வ.ரா” நடத்திய “சுதந்திரன்” பத்திரிகையில் வெளியாகியது.
விடுதலையான பிறகு, திருச்சியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். அப்போது, காங்கிரசுக்காக அவர் எழுதிய துண்டுப் பிரசுரங்களில் அவருடைய எழுத்துத்திறமை வெளியாகியது.
“கல்கி”யின் திறமையைத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், திரு.வி.க.வின் “நவசக்தி” பத்திரிகையில் சேரும்படி ஆலோசனை கூறி, சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். கல்கியின் எளிய இனிய தமிழ்நடை திரு.வி.க. வுக்குப் பிடித்துப் போக, உடனே துணை ஆசிரியர் பதவி கொடுத்தார்.
“நவசக்தி”யில் பணி புரிந்தபோது, கல்கியின் எழுத்துக்களில் மேலும் மெருகேறியது. “தேனீ” என்ற பெயரில் உலகச் செய்திகளை திரட்டிக் கொடுத்தார். முக்கிய மாநாடுகளுக்கு நவசக்தியின் சிறப்பு நிருபராகச் சென்று, நிகழ்ச்சிகளை தொகுத்து எழுதினார். இவை எல்லாம் திரு.வி.க.வின் பாராட்டைப் பெற்றன.
இந்த சமயத்தில் கல்கிக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் ருக்மணி.
1928 பிப்ரவரியில், “ஆனந்த விகடன்” பத்திரிகை எஸ்.எஸ். வாசன் நிர்வாகத்தில் வெளிவரத் தொடங்கியது.
பாரதியாரின் நண்பரான பரலி.சு. நெல்லையப்பர், கல்கியை வாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, “இவர் நவசக்தியில் பணிபுரிகிறார். எழுத்தாற்றல் மிக்கவர். இவருடைய எழுத்துக்கள் விகடனுக்கு மிகவும் பொருந்தும்” என்றார். கல்கியை, ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்படி வாசன் கேட்டுக்கொண்டார். “ஏட்டிக்குப்போட்டி” என்ற நகைச்சுவை கட்டுரையை “கல்கி” எழுதி அனுப்பினார்.
வரிக்கு வரி நகைச்சுவை இழைந்தோட எழுதப்பட்டிருந்த அக்கட்டுரையைப் படித்து, விழுந்து விழுந்து சிரித்தார், வாசன். தன் தாயாருக்கும் படித்துக்காட்டினார். அவர் ரசித்து மகிழ்ந்தார்.
“கல்கி” என்ற புனைப்பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை இதுதான். தொடர்ந்து விகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதலானார்.
இந்த சமயத்தில், திருச்செங்கோட்டில் “காந்தி ஆசிரமம்” நடத்திக்கொண்டிருந்த ராஜாஜி, “விமோசனம்” என்ற பெயரில் மதுவிலக்கு பிரசாரத்துக்காக ஒரு பத்திரிகை நடத்தப்போவதாகத் தெரிவித்தார். “நவசக்தி”யில் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு வேலைகளையே கல்கி செய்ய வேண்டியிருந்தது. பல்சுவை கதை_ கட்டுரைகளை எழுத விரும்பிய கல்கி, திரு.வி.க.விடம் பிரியா விடை பெற்று, திருச்செங்கோடு சென்று, “விமோசனம்” பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
1930_ல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். அதில் பங்கு கொண்ட ராஜாஜி, வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சி சிறை சென்றார். ராஜாஜியின் அனுமதியுடன், “விமோசன”த்தை நிறுத்திவிட்டு, கோபிசெட்டிபாளையத்தில் தடையை மீறிப் பேசி `கல்கி’ கைதானார். அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப் பட்டது. தண்டனை முடிந்து வெளியே வந்த கல்கி, ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியர் ஆனார்.
“கல்கி”யின் எழுத்தாற்றலும், வாசனின் நிர்வாகத் திறமையும் சேர்ந்ததால், விகடனின் விற்பனை பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது.
விகடனில் “கல்கி” எழுதிய முதல் தொடர்கதை “கள்வனின் காதலி”, தமிழ்நாடெங்கும் கல்கியின் புகழைப் பரப்பியது. பிறகு, திரைப்படத்திற்கென்றே கல்கி எழுதிய “தியாகபூமி” கதையை கே.சுப்பிரமணியம் படமாகத் தயாரிக்க, அந்த படத்தின் “ஸ்டில்” களுடன் விகடனில் “தியாகபூமி” தொடராக வெளிவந்தது.
புதுமையான அந்த முயற்சி, விகடனின் விற்பனையையும், கல்கியின் புகழையும் சிகரத்துக்கு கொண்டு போயிற்று.
அதுமட்டுமல்ல, “கர்நாடகம்” என்ற பெயரில் எழுதிய சினிமா விமர்சனங்களும், தலையங்கங்களும் விகடனை தமிழகத்தின் குடும்பப் பத்திரிகையாக்கின. இந்த நேரத்தில் கல்கி வாழ்க்கையிலும், விகடன் வரலாற்றிலும் எதிர்பாராத ஒரு திருப்பம்.
1940_ம் ஆண்டின் இறுதியில் தனிநபர் சத்தியாக்கிரகத்தை காந்தி தொடங்கினார். அதில் கலந்து கொள்ள விரும்புவதாக மகாத்மா காந்திக்கு கல்கி கடிதம் எழுதி, அதற்கு அனுமதியும் பெற்றார்.
இதை வாசனிடம் கல்கி தெரிவித்தபோது “காந்திஜியிடம் உங்கள் பெயரைக் கொடுத்தபோது, அதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும்” என்றார், வாசன். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்புடைய பத்திரிகைகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்த காலம் அது.
எனவே, போராட்டத்தில் இருந்து கல்கி விலகியிருக்கவேண்டும்; அல்லது ராஜினாமா செய்து விட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வாசன் கருதினார். அதன் விளைவாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கல்கி போராட்டத்தில் பங்கு கொண்டார். 3 மாதம் கடுங்காவல் தண்டனை அடைந்தார்.
சிறையில் இருந்து விடுதலையான “கல்கி”, தன் நண்பர் டி.சதா சிவத்துடன் சேர்ந்து, சொந்தப் பத்திரிகை நடத்தத் தீர்மானித்தார்.
காங்கிரஸ் போராட்டங்களில் கலந்து கொண்டபோதே கல்கியும், சதாசிவமும் நண்பர்கள். ஆனந்த விகடன் விளம்பர மானேஜராக 3 ஆண்டு பணியாற்றினார் சதாசிவம். பின்னர் சுயேச்சையான விளம்பர ஆலோசகராக இருந்தார்.
சங்கீத உலகில் புகழ் பெற்றிருந்த தன் மனைவி எம்.எஸ்.சுப்பு லட்சுமியை திரை உலகிலும் பிரகாசிக்கச் செய்ய “சகுந்தலை” படத்தை சதாசிவம் எடுத்தார். அடுத்து “சாவித்திரி” படத்தில் நடிக்க சுப்புலட்சுமிக்கு அழைப்பு வந்தது. ஆண் வேடத்தில் நடிக்க முடியாது என்று சுப்புலட்சுமி மறுத்துவிட்டார். ஆனால், “கல்கி” பத்திரிகையை தொடங்க பணம் தேவைப்பட்டதால், “சாவித்திரி” படத்தில் நடிக்க சம்மதித்து, அதில் கிடைத்த பணத்தைக் கொடுத்து உதவினார்.

சொந்தப் பத்திரிகை ஆரம்பிப்பதால் கல்கிக்கு கஷ்டங்கள் ஏற்படலாம் என்று ராஜாஜியும், ரசிகமணி டி.கே.சி.யும் கவலை அடைந்தனர். ஆனால் பத்திரிகை வெற்றிகரமாக அமைந்தது. கல்கியின் எழுத்துத் திறமையும், டி.சதாசிவத்தின் நிர்வாகத்திறனும் சேர்ந்து, “கல்கி”யின் விற்பனையை வெகு விரைவில் பல்லாயிரக்கணக்கில் உயரச்செய்தன.
தமிழின் முதல் சரித்திர நாவலான “பார்த்திபன் கனவு” கல்கியில் தொடராக வெளியாயிற்று. அதனை அடுத்து வெளிவந்த “சிவகாமியின் சபதம்” கல்கிக்கு இணையற்ற புகழைத் தேடித்தந்தது.
சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு “கல்கி” தீட்டிய “அலை ஓசை”, அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது. தமது படைப்புகளில் இதுவே தலைசிறந்தது என்பது கல்கியின் கருத்து.

1952-53 ல் கல்கி எழுதத்தொடங்கிய “பொன்னியின் செல்வன்” மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. கதையின் முடிவு பலருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, கதாபாத்திரங்கள் பின்னர் என்ன ஆனார்கள் என்பதற்கு ஒரு முடிவுரையே எழுதினார், கல்கி. அத்தகைய நாவல், பின்னர் வாசகர்களின் பேராதரவைப் பெற்று “கல்கி”யில் பலமுறை மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் தன் பேனா மூலம் இலக்கிய உலகத்தை அரசாண்ட கல்கி, 1954 டிசம்பர் 5_ந்தேதி, தமது 55_வது வயதில் காலமானார்.
அப்போது அவர் “கல்கி”யில் “அமரதாரா” என்ற தொடர் கதையை எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக்கொண்டு, கதையை கல்கியின் மகள் ஆனந்தி எழுதி முடித்தார்.
மகன் ராஜேந்திரன் பின்னர் கல்கி ஆசிரியராகப் பொறுப் பேற்றார். இப்போது, பேத்தி சீதா ஆசிரியராக இருக்கிறார்.

“கல்கி” யின் நூற்றாண்டு விழா, தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஓராண்டு காலம் கொண்டாடப்பட்டு, 9 – 9 – 1999 ல் நிறைவடைந்தது. அப்போது கல்கி உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது. அடையாறு காந்தி நகரில் கல்கி வசித்த தெருவுக்கு அவர் பெயரைச் சூட்டினார், முதல் அமைச்சர் கருணாநிதி.
அந்த மாபெரும் எழுத்தாளரின் நினைவை போற்றுக்கிறது மின் கைத்தடி.காம்
Recent Posts
- தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி நினைவு நாள் May 19, 2022
- டான் – திரை விமர்சனம் May 18, 2022
- ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு -சர்ச்சை May 18, 2022
- தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 20 | தனுஜா ஜெயராமன் May 18, 2022
- தலம்தோறும் தலைவன் | 3 | ஜி.ஏ.பிரபா May 18, 2022
- உலக உயர் ரத்த அழுத்த தினம் சிறப்புக் கட்டுரை May 17, 2022
- தில்லி மாதிரிப் பள்ளியை உருவாக்கிய பெண் எம்.எல்.ஏ. May 17, 2022
- விஜய் மக்கள்இயக்கம் நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது! May 16, 2022
- நானும் கான்ஷிராமும்- பழைய நினைவுகள்! – மருத்துவர் ராமதாஸ் May 16, 2022
- தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன் May 16, 2022
- மீனாட்சி அம்மன் பக்தராகவே மாறிப் போன மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர் May 16, 2022
- பங்குச்சந்தையில் ஏன் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன? May 15, 2022
- சர்வதேச குடும்ப தினம் – 2022 செய்திக் கட்டுரை May 15, 2022
- கருந்துளையைக் கண்டறிந்த அபாஸ் மித்ரா யார்? May 14, 2022
- இந்திய நம்பிக்கை நட்சத்திரம் மஹுவா மொய்த்ரா May 14, 2022
post by date
- May 2022 (51)
- April 2022 (90)
- March 2022 (87)
- February 2022 (109)
- January 2022 (87)
- December 2021 (83)
- November 2021 (92)
- October 2021 (83)
- September 2021 (34)
- August 2021 (45)
- July 2021 (76)
- June 2021 (112)
- May 2021 (92)
- April 2021 (32)
- March 2021 (40)
- February 2021 (5)
- January 2021 (58)
- November 2020 (91)
- October 2020 (90)
- September 2020 (47)
- August 2020 (104)
- July 2020 (102)
- June 2020 (160)
- May 2020 (105)
- April 2020 (7)
- March 2020 (15)
- February 2020 (215)
- January 2020 (357)
- December 2019 (514)
- November 2019 (475)
- October 2019 (328)
- September 2019 (214)
- March 2019 (1)
- September 2018 (1)