5 வயசு பிஞ்சு.. பசியால் துடிதுடித்த…

1 year ago
188

5 வயசு பிஞ்சு.. பசியால் துடி துடித்தே இறந்த கொடுமை.. யோகி ஆளும் உபியில்தான் இந்த கொடூரம்!

சென்னை: “உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டாலே, அவரது மனித உரிமை மீறப்படுகிறது” என்று சொன்னார் பிரான்ஸ் நாட்டு ஜோசப் ரெசின்கி.. இங்கு, வறுமையையும் மீறி பசியால் துடித்து துடித்தே 5 வயது குழந்தை உயிரிழந்து இருக்கிறாள்.. இந்த கொடுமை உபியில் நடந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே நாக்ல விதிசந்த் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்திருக்கிறார்கள் பப்பு சிங் – ஷீலா தேவி தம்பதி.. இவர்களுக்கு சோனியா என்ற 5 வயது மகள் உள்ளிட்ட 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

வறுமையில் உழலும் குடும்பம் இது.. பட்டினியை பக்கத்திலேயே வைத்து கொண்ட குடும்பம் இது.. பல நேரங்களில் பசியை மட்டுமே அள்ளி அள்ளி சாப்பிட்ட குடும்பம் இது.. ஒருவேளை சாப்பாடு என்பது இவர்களுக்கு அரிது.. பசிக்கிறது என்று வாய் திறந்து கூட சொல்ல முடியாத அளவுக்கு காதடைத்து, கண்கள் சொருகி.. மயங்கி கிடந்த குழந்தை சோனியா, இறுதியில் உயிரையே விட்டுவிட்டாள். ஆசையாக பெற்ற குழந்தையின் சடலத்தை கண்டு, கதற அழ கூட தெம்பில்லாமல் அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.

சோனியா
இதற்கு பிறகு தகவலறிந்த மாவட்ட நிர்வாகமும், கிராம மக்களும், சோனியாவின் குடும்பத்துக்கு ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, உஜ்வாலா, கேஸ் இணைப்பு, 50 கிலோ கோதுமை, 40 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய், காய்கறிகள், பழங்கள் என பலவற்றை செய்ய முன் வந்து கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம்.. ஆனால் அந்த பிஞ்சு சோனியா!? பசியால் வாடி உயிரிழப்பது எவ்வளவு பெரிய கொடுமை? யார் யாருக்கோ சோறு போட்ட நாடு இது.. ஜீவகாருண்யம் நிறைந்த நாடு இது.. எத்தகைய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான உதாரணம் இது!

வன்முறைகள்
இப்போதெல்லாம் உபியை நினைத்தாலே குலை நடுங்குகிறது.. ஏற்கனவே அங்கு வன்முறைகள் பேயாட்டம் ஆடி கொண்டிருக்கிறது.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அளவுக்கு அதிகமாக நடந்து வருகிறது… பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்ற முழக்கம் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது… ஆனால் நிலைமை வேறு மாதிரியாக அங்கு சென்று கொண்டிருக்கிறது.

ஆஸ்பத்திரி
இப்படித்தான் சில மாதத்துக்கு முன்பு, அதாவது லாக்டவுன் போட்ட சில தினங்களிலேயே வறுமை காரணமாக தான் பெற்று வளர்த்த 5 குழந்தைகளையும் கங்கை ஆற்றில் வீசினாள் ஒரு பரிதாப தாய்… அதேபோல, ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு இடம் கிடைக்காமல், கிட்டத்தட்ட 13 மணிநேரம் போராடி ஆம்புலன்சிலேயே வலியுடன் போராடி போராடி, கடைசியில் அதே ஆம்புலன்ஸில் இறந்துவிட்டார் ஒரு கர்ப்பிணி.. அந்த குழந்தையை தன் வயிற்றுக்குள்ளேயே அடக்கமும் செய்து கொண்டாள் அந்த அபலை!

இதையெல்லாம் விட்டுவிட்டு, “இந்த நாட்டில் ராமராஜ்ஜியம்தான் இருக்கவேண்டும்.. சோசியலிசம் இருக்கக்கூடாது..

ராம ராஜ்ஜியத்தை கொண்டுவருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது” என்று ஒரு மாநில முதல்வர் சொல்வதை எந்த அடிப்படையில் ஏற்பது? இத்தனை உயிர்கள் அநியாயமாக பறிபோன பின்பும், சரியான திட்டமிடல்கள் ஏன் உத்தரபிரதேசத்தில் எடுக்கப்படவில்லை என்பதே நம்முடைய கேள்வி!

கொடுமைகள்
அதேசமயம், தனி மனிதர்கள் செய்யும் எத்தனையோ கொடுமைகளுக்கு மாநில முதல்வரை பொத்தாம் பொதுவாக குறை சொல்ல முடியாதுதான்.. 2 நாளைக்கு முன்பு கூட, ஒரு ஏழை பெண்ணுக்கு சிகிச்சைக்காக முதல்வர் யோகி 9.90 லட்சம் நிதியுதவி தந்த குணத்தையும் இந்த நினைவுகூர வேண்டி உள்ளது.. ஆனால், நிறைகளைவிட குறைகளே அதிகமாக உள்ளது என்பதே நிஜம்.. பலாத்காரங்கள் ஒரு பக்கம், மாட்டுக்காக மனுஷனை அடித்து கொல்வதுமறுபக்கம், இப்போது வறுமையில் மரணம் என்பது இன்னொரு பக்கம் என இதயத்தை கிழித்து கொண்டிருக்கின்றன.

பசி மரணங்கள்
ஒருவேளை நிர்வாக திறமையின்மையால் நிகழ்ந்த கொடுமை என்று இதை சொல்வதா? எந்த ஒரு முன் திட்டமிடுதலும் இல்லை என்று சொல்வதா தெரியவில்லை.. கொரோனாவைவிட ரொம்ப ரொம்ப கொடுமையாக உள்ளது இந்த பசி மரணம்.. இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக தினமும் பசி பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது வேதனையை தருகிறது. ஒரு பிஞ்சு குழந்தை சாப்பாடு கிடைக்காமல் பரலோகம் போய் சேர்ந்து விட்டதை நினைத்து அழுவதா? அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமே சிதைந்து கொண்டிருப்பதை நினைத்து கவலைப்படுவதா தெரியவில்லை.

விகிதாச்சாரங்கள்
பொருளாதார ரீதியாகவும், வாழ்வுரிமை ரீதியாகவும் கடும் ஏற்றத்தாழ்வை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.. மக்கள் தொகையில், 10 சதவீத பிரிவினரிடமே 80 சதவீத சொத்துகள் குவிந்து கிடக்கின்றன.. இந்த விகிதாச்சாரமே நம் நாட்டை மீள முடியாத சுழலுக்குள் தள்ளியுள்ளது… இது தலைமுறை தலைமுறையாக தொடர்வதே மக்களை அடுத்தடுத்த வறுமையில் ஆழ்த்தி வருகிறது. இது உபியில் அதிகமாகவே உள்ளது.

ராமராஜ்ஜியம்
அங்கு வாழ்க்கைத் தரம் மிக மோசமாக உள்ளது… முறையற்ற கட்டமைப்புகளை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.. அம்மாநிலத்தின் தரத்தை பலவீனப்படுத்தும், அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்… 5 வயது குழந்தை பசியாலேயே இறந்துவிட்ட பிறகு, பொருளாதார ரீதியாக உலகில் 6-வது பெரிய நாடு என இந்தியா பெருமிதம் கொள்வதில் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.. ஒருவேளை யோகியின் ராமராஜ்ஜியம் வந்தால், அங்கேயாவது பசியால் குழந்தைகள் சாகாமல் இருந்தால் சரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31