வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர்-இவர் தீர்க்காத நோய் இல்லை

1 year ago
1610

இன்று வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியனாக விளங்கி, உடற்பிணி மட்டுமல்ல, பிறவிப்பிணியையும் சேர்த்து நீக்கும் நம் ஈசனை ‘வைத்தியநாதர்’ என்கிற திருநாமத்தில் அவன் எழுந்தருளிருக்கும் புள்ளிருக்குவேளூர் என்கிற வைத்தீஸ்வரன் கோவில் மூலம் அறிந்துகொள்வோம்.

வைத்தீஸ்வரன் கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள புகழ்பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் தோஷம் நீங்க இங்கு அங்காரகனை வழிபடுகின்றனர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றவராவார். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16 வது தேவாரத்தலம் ஆகும்.

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு. புள் – சடாயு என்ற பறவையும், இருக்கு – ருக் என்ற வேதமும் வேள் – முருகப்பெருமானும், ஊர் – சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது. தேவார காலத்தில் இது திருப்புள்ளிருக்குவேளூர் என்றே அழைக்கப்பட்டுவந்தது.

வைத்தீஸ்வரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இங்குள்ள வைத்தியநாதர் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.

நவக்கிரகங்களுள் ஒன்றான செவ்வாய் என்னும் அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாதசுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் பரிகாரத்தலமாக விளங்குகின்றது. செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார்.

இக்கோயிலில் வைத்தீஸ்வர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர். நோய்தீர்ப்பதில் வல்லவரான தன்வந்திரி பகவானுக்கும் இங்கு தனிச்சன்னதி உள்ளது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு திருச்சாந்து’ எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

இவ்வூரில் நாடி ஜோதிடம் மிகவும் புகழ்பெற்றது. இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாதலால் அவரவர் நம்பிக்கைகேற்ப இங்கு நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது.

இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்னனான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தம்பி இலட்சுமணன் இருவரும் இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குண்டம் என்றழைக்கப்படுகின்றது. கோவிலுக்குள் இன்னும் ஜடாயு இடம் என்று ஒன்று உள்ளது.

வைத்தீஸ்வரன் கோவில், சித்தர்கள் பலரோடு நெருங்கிய தொடர்புடையது. வைத்தீஸ்வரனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன என்பது இத்தளத்தின் கூடுதல் சிறப்பு. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவபெருமான் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. நவக்கிரகங்கள் என்றாலே ஆளுக்கொரு திசையை பார்த்துக்கொண்டு தானே நிற்பார்கள். ஆனால் இங்கு மட்டும் தான் நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையில் காணப்படுகின்றன. ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை.

தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து சிவபெருமான் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர்.

உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இவரை வேண்டி உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.

செல்வமுத்துக்குமார சுவாமி சன்னதியில் அர்த்தஜாமபூஜையில் முருகனின் திருவடிகளில் பயன்படுத்தப்படும் சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது.

கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.

வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் ‘செல்வ முத்துக்குமார சுவாமி’ என அழைக்கப்படுகிறார்.

முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான்.

தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும். தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலதோஷம் நீங்கும்.

4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள், மருத்துவக் கல்வி பயில விரும்புகிறவர்கள் மற்றும் படிக்க விரும்புகிறவர்கள் பலர் இங்கு வழிபாடு செய்ய வருகின்றனர்.

முகவரி : அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் – 609 117. நாகப்பட்டினம் மாவட்டம்.

செல்வது எப்படி : நாகை மாவட்டம் மயிலாடுதுறை – சீர்காழி செல்லும் வழியில் மயிலாடுதுறையிலிருந்து (18 கி.மீ) வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ரயில் நிலையம் உள்ளது. உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இங்கு நின்று செல்கிறன.

நாட்பட்ட நோய்களாலும் தீராப் பிணிகளாலும் அவதியுறுவோர், வைத்தியநாதரை நினைத்து இப்பதிகத்தை தினசரி படித்து வந்தால் எப்பேற்பட்ட நோயும் விலகிப்போவது மட்டுமின்றி, ஈசனருள் பெற்று பிறப்பற்ற நிலைக்கு ஆளாவர்.

நோயுற்று பாடுவர்களுக்கு எளிமையாக இருக்கவேண்டும் என்று கருதியதாலோ என்னவோ இப்பதிகம் மிக அழகான சந்தச்சுவையோடு படித்தாலே பொருள் புரியும் வண்ணம் மிக மிக எளிமையாக சம்பந்தரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே’ என்று ஒரு இடத்தில் சம்பந்தர் கூறியிருபப்தை கவனியுங்கள்.

திருப்புள்ளிருக்குவேளூர் பதிகம்:

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

தையலா ளொருபாகஞ் சடைமேலா ளவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோ ரந்தணனா ருறையுமிடம்
மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக வுறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த வெரியாடி யுறையுமிடம்
ஆகாயந் தேரோடு மிராவணனை யமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

கீதத்தை மிகப்பாடு மடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரா னமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

அத்தியினீ ருரிமூடி யழகாக வனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன வகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரு மிலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.

ரா​ஜேஷ்வரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930