விக்கிரமாதித்தன் கதைகள் – 2 – ஜீவிதா அரசி

1 year ago
708

வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன.

முதல் பகுதி

முதல் பகுதி போஜராஜன் என்பவனுக்கு ஒரு காட்டில் கனகமணி சிம்மாசனம் கிடைப்பதை விவரிக்கிறது. அந்த சிம்மாசனத்தில் 32 படிகள் இருக்கின்றன. அந்த சிம்மாசனத்தின் மீது ஏறி அமர்ந்து ஆட்சி செய்ய விரும்பும் போஜராஜன் அதன் மீது ஏறப் போகும் போது அந்தப் படிகளில் இருக்கும் பதுமைகள் கைகொட்டிச் சிரிக்கின்றன. “இந்த சிம்மாசனம் வீரமும் அறிவும் பராக்கிரமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த விக்கிரமாதித்ய மகாராஜா அமர்ந்திருந்தது. இதில் ஏறி அமர உனக்குத் தகுதி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்” என்று கேலி பேசுகின்றன. அந்தப் பதுமைகளில் முதல் பதுமை விக்கிரமாதித்ய ராஜா பற்றியும் அவனுடைய மதியூக மந்திரி பட்டி பற்றியும் இந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து அவனுக்குக் கிடைத்த கதையையும் சொல்கிறது.

இரண்டாம் பகுதி

முதல் தொகுதியின் தொடர்ச்சியாக ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதுமையாகச் சொல்கின்ற கதைகளின் தொகுப்பாக இருக்கிறது இரண்டாம் பகுதி.

கதைகள்

போஜராஜன் முதல்நாள் முதல் படியில் ஏறும் போது அந்தப் பதுமை சிரித்து சொல்கின்ற கதையுடன் அந்த நாள் முடிந்து போவதால் அவன் கீழே இறங்கி விடுகிறான். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படி கூடுதலாக மட்டுமே அவனால் ஏற முடிகிறது. முப்பத்திரண்டாம் நாள் கடைசிப் பதுமை விக்கிரமாதித்யனின் மரணம் நிகழ்ந்த விதத்தைச் சொல்லிய கையோடு, போஜ ராஜனிடம், தான் உள்பட அத்தனை பதுமைகளும் பார்வதி தேவியின் தோழியரே என்றும் போஜராஜனால் சாபவிமோசனம் அடையக் காத்திருந்தவர்கள் என்றும் சொல்லி உச்சக்கட்டப் புதிர் போடுகிறது.

அந்த புதிர் கதை

தோழியர் முப்பத்திரண்டு பேர் பார்வதி தேவியுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் சிவபெருமான் அங்கே வந்து விட்டாராம். அவர் ஆசை மிகுந்த கண்களுடன் முப்பத்திரண்டு பேரையும் பார்த்ததால் பார்வதி கோபம் கொண்டு தோழியரைச் சபித்தாராம். “என் கணவர் வருவது தெரிந்தும் அசையாமல் இருந்த நீங்கள் பதுமைகளாக மாறி இந்திரனின் சிம்மாசனத்தில் இருக்கக் கடவது” என்றாளாம் தேவி. சாபவிமோசனம் கேட்டு அவர்கள் அழுதபோது தேவி சொன்னாளாம்: “அந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து விக்கிரமாதித்யன் கைக்குச் செல்லும். அவன் இரண்டாயிரம் வருடம் ஆட்சி செய்த பிறகு மண்ணில் மூழ்கிக் கிடக்கும். பின்னொருநாளில் போஜராஜன் அதனைத் தோண்டி எடுத்து அதன் மீது அமரப் போவான்.

அவனுக்கு விக்கிரமாதித்யனின் அருமை பெருமைகளை நீங்கள் சொல்லி முடித்த பிறகு சாபவிமோசனம் அடைவீர்கள்” அதன்படி எங்களுக்கு விமோசனம் தாருங்கள் என்று வேண்டி நின்றனவாம் பதுமைகள். போஜராஜன் சிம்மாசனத்தின் படிகளில் இருந்து கீழே இறங்கி நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிவபெருமானின் தங்கச் சிலையை வரவழைத்து சிம்மாசனத்தில் அமர்த்தினான். அதற்கு பூஜை வகையறாக்கள் செய்ய, பதுமைப் பெண்கள் அவனை ஆசீர்வதிக்க, சிம்மாசனம் மெல்ல உயர்ந்து பறந்து வான்வெளியில் மறைந்தது என்று முடிகிறது விக்கிரமாதித்தன் கதை.

இந்த கதைகளை புத்தகத்தில் படிக்க தற்போது நேரம் இல்லை என்பதால், முகநூலில் பிரபலமான மன்னை ஜீவிதா அரசி அவர்கள் அம்மா, சித்தி, அத்தை போன்று அந்த கதையை சொல்லி மெறுகேற்றி இருக்கிறார். அந்த படைப்பு உங்களுக்காக….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031