​பொன்மகள்வந்தாள் விமர்சனம் – லதா சரவணன்

2 years ago
541

ஒருத்தரோடு வலியை உணர ரத்தபந்தம் தேவையில்லை பார்த்திபனின் கடைசி கேள்விக்கு ஜோதிகாவின் பதில் பொன்மகள் வந்தாள். அமேசானில் நேற்று வெளியான திரைப்படத்தை இரண்டாவது தடவையாக பார்த்து முடித்த போது நேரம் படம் முடியும் போது நேரம் 3,15 ஆனால் இன்றைய இரவு முழுவதும் மட்டுமல்ல இன்னும் பல நாட்களுக்கு அந்தத் தாக்கம் இருக்கும். முகம் தெரியாத பல நூறு கைகள் ஊறுகின்றதைப் போன்ற ஒரு இரவை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அந்த வலியையும் வேதனையையும் வெகு அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் ஜோதிகாவான வெண்பா.

வலி என்ற வார்த்தையின் விளக்கமாக வெண்பாவின் கேள்விகள்

உங்களுக்கு எல்லாம் ஏன் ? பொண்ணுங்க தன் பிரச்சனைகளுக்காக போராடுவது பைத்தியக்காரத்தனமாக தெரிகிறது எங்களுக்கு நடக்கிற பிரச்சனையை சொன்னா அது டிராமா, கண்ணீரை ஷேர் பண்ணிகிட்டா அது ஆக்டிங் வலிக்கு பின்னால் இருக்கும் உண்மைகள் எப்போதும் பொய்யாகவே தெரிகிறது. ஆணித்தரமான வார்த்தைகள் ஆசீபாக்களும், ஹாசினிகளுக்கும் நீதியே கிடைத்துவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு. நாங்க தோத்துட்டோன்னு சொல்ல இது கேம் இல்லை ஜஸ்டிஸ் என்று வார்த்தையை முடிக்கும்போது. வெண்பாவின் சீற்றத்தில் உண்மை தெரிக்கிறது.

ஒரு கைப்பிடி அரிசிக்காக கொல்லப்படும் தேசத்தில் பலநூறு “அண்ணா விட்டுடுங்க” என்ற அலறல் வீடியோவின் பின்னால் சந்தோஷமாய் சுற்றித்திரியும் பதர்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரம் அந்தக் கோபம், கண்களில் கசிந்துருகி கன்னத்தில் வழியும் நீரும், அதைத்தாண்டி துடிக்கும் வெண்பாவின் உதடுகளும் அதற்குள் அடைத்து வைத்திருக்கும் விம்மல்களும் வலிகள் தான் !

துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைக்கோ கொலையாளி என்ற பட்டத்துடன் ஜோதி, அக்கறையாய் விளக்கும் அதிகாரி, அதைவிடவும் ஆதாரம் என்று நம்பி சேகரிக்கும் ஊடகங்கள். பதட்டத்துடன் நகரும் முதற்கட்ட காட்சிக்குள் பாக்கியராஜ் வருகிறார் சில கலகலப்புடன் அவர்கள் எதற்கோ எதையோ தேடுகிறார்கள் என்பது மட்டும் ஜோதிகாவின் உணர்ச்சி துடைத்த விழிகளில் தெரிகிறது.

சென்சிடிவ்வான ஒரு கேஸ், எல்லார் முன்னிலையிலும் குற்றவாளி என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒரு பெண் கொலையாளிக்காக வாதாட முன்வரும் வெண்பாவின் மேல் செருப்பு பறக்கிறது அதை எடுத்து வந்து ஒரு கால் செருப்போடு எப்படி நடப்பீங்க என்று அவர் கேட்கும் போதே, அடுத்த சாடல்கள்.

ஆணவக்கொலை, குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறை என சமூகத்தின் முக்கியப் பிரச்சனைகளை சுமந்து வந்திருக்கிறாள் பொன்மகள் வந்தாள்.

பார்த்திபனின் ஸ்டைலான அதே குறும்பு கலந்த நடிப்பு படத்திற்கு இன்னொரு ப்ளஸ், பாக்கியராஜ் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

சோர்ந்து போகும் நேரங்களில் தோள் கொடுத்துவிட்டு, தன் மகளை எங்கே இழந்துவிடுமோ என்று வேண்டாம் விட்டுடலாம் என்று சொல்லும் இடங்களில் தந்தையின் உணர்வு மிளிர்கிறது. மிண்ணனுக்களோடு பேசும் வாழ்க்கையில் நாம் இன்னும் இழக்காதது நம் உணர்வுகளைத்தான் என்று கோமாளிப் படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனம் அந்த எமோஷனல் தான் கடைசியில் வரதராஜன் என்ற பெரியமனிதரின் வாயாலேயே உண்மையை வரவழைக்கும் உக்தி.

ஜோதிகாவின் உடல்மொழியும் டயலாக் டெலிவரியில் உள்ள வார்த்தைகளின் சீற்றமும் இன்னமும் தைரியமாக இதைப்போன்ற பல நூறு வெண்பாக்கள் வரவேண்டும் என்ற அவா பிறக்கிறது.

நேர்மையான நீதிபதியாக இருந்து கடைசியில் பணம் பெறும் பிரதாப்பை நினைத்து வெறுப்பான ஒரு உணர்வோடு என்னாகுமோ என்ற பதைப்பும் வருகிறது. ஆனால், எல்லாரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்று அவர் சொல்லும் போதே, அந்த நெருடல்கள் மறைகிறது.

முக்கியமாக அந்த இறுதிக் காட்சிகள் தனியான வீடு, பாதி எரியூட்டப்பட்ட நிலையில் புழுக்கள் மேலே ஊரும் நாய், அலமாரியின் அடுக்கில் ரத்தக் கறைகளோடு அந்தக் குழந்தை என அந்த காட்சியில் தாயின் கதறல்களையும், அந்தப் பிஞ்சுக்கு நேர்ந்திருக்கும் கொடூரம் மனதை பிசைகிறது. எந்த தாய்க்கும் அந்நிலை வரக்கூடாது.

அக்கம் பக்கம் இருக்கிறார்கள், உற்றார் உறவினர்கள் இருக்கிறார்கள் நம் பிள்ளைகளுக்கு அவர்கள் பாதுகாப்பு என்பதையெல்லாம் நம்பக் கூடாது . நம் பிள்ளைகளுக்கு நாமே பாதுகாப்பு நாம் மட்டுமே, சமூகத்தின் கோர கரங்களில் அவர்கள் சிக்காமல் காப்பாற்ற நம்மால் மட்டுமே முடியும்.

பொன்மகள் பொக்கிஷமாகத்தான் வந்திருக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31