உலகம் சுற்றும் வாலிபன் வெளியான தினம் இன்று.

2 years ago
392

47 வருடங்களுக்கு முன்பு
11-05-1973 அன்று வெளியான உலகம் சுற்றும் வாலிபன்

பிரமாண்டமான வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஓர் ஏக்கம் வரும்.

“இப்படிப் பிரமிக்கவைக்கும் வெளிப்புறக்காட்சி அமைப்புகளுடனும், தொழில் நுணுக்கத்துடனும் தமிழிலும் படம் வராதா?’ என்று.

அந்த ஏக்கத்தைத் தீர்ப்பதற்குக் கம்பீரமாக வெளி வந்திருக்கிறான் “உலகம் சுற்றும் வாலிபன்”

பயங்கர இடி, மின்னல்களுக்கு மத்தியில்
ஓர் இளம் விஞ்ஞானி (எம்.ஜி.ஆர்.) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை
நம்மை ஒரு புது உலகத்துக்கே அழைத்துச் சென்று, நிமிடத்துக்கு நிமிடம் கண்ணைக் கவரும் வெளிப்புறக்
காட்சிகளால் பிரமிக்க வைக்கிறார் தயாரிப்பாளரும் டைரக்டருமான எம்ஜிஆர்.

மகத்தான படங்களைத் தந்து புகழ்பெற்ற
ஸெஸில் பி டெமிலியின் முழுச்சாயலை எம்ஜிஆரிடம் கண்டு பெருமைப்படுகிறோம்.

படத்தின் பெரும்பகுதி கதை நிகழும் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர்,
மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் இவற்றிலேயே படமாக்கப் பட்டிருக்கிறது.

அதுவே நமக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது. தமிழில் இப்படிப் பெரிய
அளவில் அயல்நாட்டு வெளிப்புறக் காட்சிகள் அமைந்திருப்பது இதுவே முதல் படம்.

“பேராசை பிடித்திருக்கிறது” என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்,
இந்தப் படத்தில் உபயோகிக்கப் பட்டிருக்கும் காமிராவைத் தான் சொல்லவேண்டும்.

அப்படி ஒரு தாகத்துடனும் வேகத்துடனும் கிழக்காசிய நாடுகளின் அழகுகளையெல்லாம் ஒன்று விடாமல் வாரி வாரித் தன்னுள் அடக்கிக் கொண்ட இருக்கிறது. அந்தக் காட்சிகள் வெள்ளித்திரையில் வண்ண வண்ணமாக விரியும்போது, அந்த அழகுக் கொள்ளையில் நாம் மெய்சிலிர்த்துப் போகிறோம்.

சந்திரகலாவும் எம்.ஜி. ஆரும் காரில் போகும்போதும், படகில் டூயட் பாடிக்கொண்டு இருக்கும்போதும், அவர்களுக்கு மேலாகப் பறக்கும் விமானத்தைக் கூடப் புத்தி சாலித்தனத்துடன் அழகாகப் படமாக்கிப் பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.

வாலிபன் – இல்லை, வாலிபர்கள். (எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்) சந்திக்கும் பெண்கள் நால்வர். சந்திரகலா, மஞ்சுளா, லதா, தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத்.

தன் கள்ளமற்ற சிரிப்பு ஒன்றினாலேயே நம் மனத்தை வசீகரித்துக் கொள்பவர் தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத். அவருக்கு ஒரு சபாஷ்.

சந்திரகலாதான் மற்றவர்களுள் அதிக வாய்ப்புள்ள கதாநாயகி. அடக்கமும் உணர்ச்சியும் நிறைந்த நடிப்பு அவரிடமிருந்து வெளிப்படுகிறது. அவருக்கு ஒரு சபாஷ்.

லதாவுக்கு அழகான முகம். அவருடைய கச்சிதமான உடலமைப்புக்கு எடுப்பாக
ஆடை அணிவித்து முதல் படத்திலேயே
அவரை ரசிகர்களின் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள். புதிய நடிகை என்ற சாயல் துளிக்கூட இல்லாத இயற்கையான நடிப்பு. லதாவுக்கு ஒரு சபாஷ்.

மூத்த எம்ஜிஆரின் காதலியாக வரும் மஞ்சுளாவுக்கு கண்ணீர் வடிக்கவும்
சந்தர்ப்பம் கொடுத் திருக்கிறார்கள்.
அவருடைய நடிப்பைவிட, அசோகனால் கற்பழிக்க முயலப்படும் காட்சியில் அவர் துடிக்கும் துடிப்பு ரசிகர்களை அதிகமாகக் கவருகிறது.

பிரதான வில்லன் அசோகன் தான் என்றாலும், நம் பிரியத்தைச் சம்பாதித்துக்கொள்கிற வில்லன் நம்பியார்தான். அவருடைய பல்லழகே அழகு! எம்ஜிஆர் எறிந்த பெட்டியை எடுத்துக் கொள்வதற்கு அவர் நப்பாசையுடன் தயங்கித் தயங்கி விழிப்பது சுவையூட்டும் காட்சி.

வெகு நாட்களுக்குப் பின் பழைய நாகேஷைப் பார்க்கிறோம். பல காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார். தாய்லாந்துப் பாணியில் குச்சிகளால் சாப்பிட முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு ‘ஓஹோ’ என்று சிரிக்க வைக் கிறது. அவருக்கு ஒரு சபாஷ்!

வெளிப்புறக்காட்சிகளையும் உட்புறக் காட்சிகளையும் பேதம் கண்டுபிடிக்க முடியாதபடி இணைத்து, படத்துக்குக் கம்பீர வடிவம் தந்திருப்பது பெரிய சிறப்பு. அதற்குத் துணையாக, பிரமிக்கத்தக்க வெளிப்புறக் காட்சிகளுக்கு ஈடு கொடுக்கும்படி பொருத்தமாக உட்புறக் காட்சிகளை அமைத்திருக்கும் (உதாரணம்: புத்தர் கோயில்) ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவுக்கு ஒரு சபாஷ்.

எக்ஸ்போ 70′ காட்சிகளை, அங்கு நேரில் சென்றவர்கள் கூட இப்படித் தேர்ந்தெடுத்து ரசனையுடன் பார்த்திருப்பார்களா? என்று சந்தேகப்படும்படி அற்புதமாகப் படமாக்கியிருக் கிறார்கள்.

அதே போல, தண்ணீருக்குள் எம்ஜிஆர் – லதா சம்பந்தப்பட்ட பாலே காட்சியும், சறுக்கு விளையாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சியும்கூட மறக்க முடியாதவை. இப்படி காமிராவை அற்புதமாக இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராமமூர்த்திக்கு ஒரு சபாஷ்!

படம் வெளியாகுமுன்னே
பிரபலமாகிவிட்டவை,
இந்தப் படத்தின் பாடல்கள்.

‘சிரித்து வாழ வேண்டும்’
‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல்கள்
எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காதவை. பாடல்களுக்கான இசையமைப்பையும் மிஞ்சி நிற்கிறது ரீ-ரிக்கார்டிங்! மெல்லிசை மன்னர் விசுவநாதனுக்கு ஒரு சபாஷ்!

ஏற்கெனவே ‘நாடோடி மன்னன்’, ‘அடிமைப் பெண்’ போன்ற மகத்தான படங்களைத் தயாரித்தவர் தான் எம்ஜிஆர்.

ஆனால், அவற்றை யெல்லாம் மிஞ்சி இப்படத்தின் மூலம் இதுவரை யாருமே
எட்டாத உயரத்துக்கு எழுந்து நிற்கிறார் அவர்.

தமிழ்த்திரையுலகமே, ஏன் இந்தியத் திரையுலகமே பெருமைப்படத்தக்க தனிப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கும் எம்ஜிஆருக்கு எத்தனை ‘சபாஷ்’ வேண்டுமானாலும் போடலாம்.

உலகம் சுற்றும் வாலிப‌ன் ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளை எழுதிய‌வ‌ர்க‌ள் விவ‌ர‌ம்

க‌விஞ‌ர் க‌ண்ண‌தாச‌னின் கைவ‌ண்ண‌த்தில்..

 1. அவ‌ள் ஒரு ந‌வ‌ர‌ச‌ நாட‌க‌ம்.
 2. லில்லி மலருக்கு கொண்டாட்டம்
  3.உலகம் அழ‌குக‌லைக‌ளின் சுர‌ங்க‌ம்

க‌விஞ‌ர் வாலியின் வார்த்தை ஜாலத்தில்…

 1. ப‌ன்சாயி! காத‌ல் ப‌ற‌வைக‌ள்
  2, நிலவு ஒரு பெண்ணாகி
 2. ஓ! மை டார்லிங்
 3. ப‌ச்சைக்கிளி முத்துச்ச‌ர‌ம்
 4. த‌ங்க‌த்தோனியிலே
 5. நினைக்கும்போது த‌னக்குள் சிரிக்கும் மாது..

புலவ‌ர் புலமைப்பித்த‌னின் புக‌ழ்சேர்க்கும்…

 1. சிரித்து வாழ‌வேண்டும் பிற‌ர் சிரிக்க‌ வாழ்ந்திடாதே.

புலவ‌ர் வேதாவின் வேத‌வ‌ரிக‌ள்.

 1. ந‌மது வெற்றியை நாளை ச‌ரித்திர‌ம் சொல்லும்…

47 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த திரை விமர்சனத்தை இன்றைய இளம்தலைமுறையினர் பார்வைக்காக பதிவிடுவதில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் வானம்பாடிகளில் ஒருவன் என்ற முறையில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31